யாழ்ப்பாண வைபவ கௌமுதி இரண்டு நூல்களுக்கு மறுவாழ்வு!
நக்கீரன்
 

(கனடா கந்தசுவாமி கோவிலில் சிறப்பாக நடந்தேறிய இயற்றமிழ் போதகாசிரியர் ச. வயித்தியலிங்கபிள்ளை நூற்றாண்டு விழாபற்றிய திறனாய்வு)

மக்களுக்குமட்டுமல்ல மறுவாழ்வு, நூல்களுக்கும் மறு வாழ்வு கொடுக்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஏட்டுச் சுவடிகளில் செல்லரித்துப் போய்க்கிடந்த சங்க இலக்கியங்களை ஊர் ஊராகத் தேடி அலைந்து அச்சுவாகனம் ஏற்றி அவற்றுக்கு மறுவாழ்வு கொடுத்தவர்கள் இருவர்.

ஒருவர் தமிழ்த் தாத்தா என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் திரு. உ.வே. சுவாமிநாதர். மற்றவர் திரு. சி.வை. தாமோதரனார் (1832-1901). திரு. சாமிநாதர் தமிழுக்கு ஆற்றிய பணிக்காக அவர் பெரிதும் மகிமைப் படுத்தப்பட்டுள்ளார். திரு. தாமோதரனார்பற்றி அவ்வாறு கூறமுடியாது. அவரது பணி குடத்தில் இட்ட விளக்காகவே இருந்து வருகிறது. திரு. தாமோதரனார் தனது வாழ்நாளில் பதிப்பித்த நூல்கள் பின்வருமாறு,

நீதி நெறி விளக்கம்                                                   1854
தொல் சேனாவரையம்                                             1868
வீரசோழியம் பெருந்தேவனார் உரையுடன்         1881
இறையனார் களவியல்                                           1883
தொல்பொருள் (நச்சினார்க்கினியர்)                     1885
கலித்தொகை                                                           1887
இலக்கணவிளக்கம்                                                1889
சூளாமணி                                                                1889
தொல் எழுத்ததிகாரம்                                            1891
தொல் சொல் (நச்சினார்க்கினியர்)                       1892

இவற்றில் கற்றோர் ஏற்றும் கலித்தொகைப் பதிப்பே அவருக்குப் புகழைத் தேடிக் கொடுத்தது.

செல்லரித்துப்போன ஏட்டுச் சுவடிகளைத் தேடிப் பிடித்து அவற்றைப் பதிப்பிக்க வேண்டும் என்ற ஆசை தாமோதரனாருக்கு எப்படி வந்தது? அதனை அவரே விளக்குகிறார்.

"நல்ல தமிழ் நூல்களுக்கு வந்த விதியையும் கையெழுத்துப் பிரதிகளுக்கு வந்த கதியையும் அவை அடைந்திருக்கும் ஸ்திதியையும் பார்த்துச் சகிக்க மாட்டாமை ஒன்றே என்னை இத்தொழிலில் வலிப்பது.

"என் சிறு பிராயத்தில் எனது தந்தையார் எனக்குக் கற்பித்த நூல்கள் இப்போது நாடெங்கும் தேடியும் அகப்படவில்லை. ஒட்டித் தப்பியிருக்கும் புத்தகங்களும் கெட்டுச் சிதைந்திருக்கும் தலைமையை தொட்டுப் பார்த்தாலன்றோ தெரியவரும். ஏடெடுக்கும் போது ஓரம் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும் போது இதழி முரிகிறது. ஒற்றை புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலும் தலையுமின்றி நாலுபுறமும் பாணக்கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கிறது."

அழியுந்தறுவாயில் இருந்த சங்க நூல்களை சாமிநாதர், தாமோதரனார் போன்றோர் மீட்டுத்தராதிருந்தால் தமிழர்களுக்குத் தங்கள் வரலாறுபற்றியும், நாகரிகச் சிறப்புப்பற்றிப் பேசுவதற்கும் ஒன்றும் இருந்திராது.

அப்படி இருந்தும் தமிழர்கள் நீருக்கும் நெருப்புக்கும் எண்ணிறந்த நூல்களைப் பலிகொடுத்துள்ளார்கள். அதற்கு ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.

ஆடிப்பெருக்கன்று காவிரியில் ஏடுகளை எறிந்தால் போற இடத்துக்குப் புண்ணியம் என்று எத்தர்கள் சொல்லிய பேச்சை நம்பி வீட்டில் இருந்த ஓலைச் சுவடிகளை ஆற்றில் எறிந்த இழித்தவாய்த் தமிழர்கள் ஏராளமானோர் எங்களுக்குள் இருந்திருக்கிறார்கள்.

இன்னுமொரு சாரார் சமயக் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒருவர் நூலை மற்றவர் அழித்தார்கள். பல பவுத்த, சமண நூல்கள் பிற்காலத்தில் சைவ சமயத்தவர்களால் அழிக்கப்பட்டன.

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான வளையாபதி இன்று இல்லை. அதன் ஏட்டுப் படியை திருவாவடுதுறை ஆதீன நூலகத்தில் அங்கு பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களிடம் தமிழ் படித்துக் கொண்டிருந்த சாமிநாதர் கண்டிருக்கிறார். அப்போது அவருக்கு அதன் அருமை தெரியவில்லை. பின்னர் சங்க நூல்களைப் பதிப்பிக்க ஆரம்பித்தபோது அந்த ஏட்டுச் சுவடியைத் தேடி அங்கு போனார். ஆனால் அந்தச் சுவடி அங்கு இருக்கவில்லை.

மேற்கு நாட்டவர்கள் எங்கள் மண்ணைப் பிடித்து எங்களை அடிமைப்படுத்தி ஆண்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் வந்தபின்னர்தான் கடதாசியில் மையில் எழுதும் வழக்கம் வந்தது. அச்சுயந்திரம் பழக்கத்தில் வந்தது. இந்தக் கருவிகள் இருக்கவில்லை என்றால் இன்று ஒரு ஓலைச் சுவடிகூட மிஞ்சியிருந்திருக்குமா என்பது ஐயப்பாடு.

தமிழர்களுக்கு நூல்களைத் தேடிப்பிடித்துப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு குறைவாகவே இருந்திருக்கிறது. இப்போது கூட எண்ணிப் பத்துப் புத்தகங்கள் (பாடப் புத்தகங்கள் நீங்காலாக!) உள்ள தமிழ் வீட்டைப் பார்ப்பது கடினம். அதிலும் வீட்டில் ஒரு நூலகம் என்று வைத்திருப்போர் தொகையை விரல்விட்டு எண்ணிவிடலாம். உடுப்புக்கும் நகைக்கும் செலவழிக்கும் தொகையில் நூறில் ஒரு பங்குதானும் நூல்களுக்கு நாம் செலவழிப்பதில்லை.

கடந்த மே திங்கள் 4ம் நாள் வல்வை இயற்றமிழ் போதகாசிரியர் சு.வயித்தியலிங்கபிள்ளை அவர்களின் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக கனடா கந்தசுவாமி ஆலய திருமண அரங்கில் நடந்தேறியது.

இந்த விழாவின்போது இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. ஒன்று "வயாவிளான் சுதேசநாட்டிய மனேசர் மெஸ். க. வேலுப்பிள்ளை என்பவராறியற்றப்பட்டு தமது ஜயசறீ சாரதா பீடேந்திர சாலையில் 1918ல் முத்திரகரணஞ் செய்விக்கப்பட்ட யாழ்ப்பாண வைபவ கௌமுதி"(நூலில் சொல்லப்பட்டிருப்பதை அப்படியே கொடுத்துள்ளேன்).

மற்றது வல்வை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச.வயித்தியலிங்கபிள்ளை அவர்கள் செய்த கந்தரலங்கார உரை. கந்தரலங்காரம் கருணைக்கோர் அருணகிரிநாதரால் பாடப்பெற்றது என்பது தெரிந்ததே.

யாழ்ப்பாண வைபவ கௌமுதி 1918ம் ஆண்டு பதிக்கப்பட்ட பின்னர் அதனை யாரும் மீள்பதிவு செய்யவில்லை. அப்படி ஒரு நூல் இருப்பதே பலருக்குத் தெரியாமல் இருந்தது. காலவெள்ளத்தில் அழிந்துகொண்டிருந்த அந்த நூலின் ஒரு பழைய படி எப்படியோ பொன். சிவகுமாரன் கையில் கிடைக்கஇ அதனை வல்வெட்டித்துறை ஆவணக் காப்பக நிறுவனர் வல்வை. ந. நகுலசிகாமணி அவர்களுக்குக் கொடுத்துதவ அந்த நூலை அவர் மறுபதிப்புச் செய்து வெளியிட்டுள்ளார்.

"நூலை மறுபதிப்புச் செய்து வெளியிட்டுள்ளார்" என்று நான் சுலபமாக சொல்லி விட்டாலும் அதற்காக நகுலசிகாமணி இரவு பகல் என்று பாராது மிகவும் பாடுபட்டுஇ கருமமே கண்ணாயிருந்து அதனை வெளியிட்டுள்ளார் என்பதே உண்மையாகும். மூல நூலை நான் பார்த்தபோது பக்கங்கள் சிதைந்து கையோடு வந்துகொண்டிருந்தன. இதை எப்படி மனிதர் மீள் பதிப்புச் செய்யப்போகிறார் என்று எனக்குள்ளே நினைத்ததுண்டு.

இப்போது "கண்டனக் கீறக் கல்லடியான்" என்றும் "ஆசு கவி கல்லடி வேலுப்பிள்ளை"(1860-1944) என்றும் போற்றப்பட்ட நூலாசிரியர் எழுதிய "யாழ்ப'பாண வைபவ கௌமுதி"யை அழகாக மறுபதிப்புச் செய்து வெளியிட்டதன் மூலம் திரு.நகுலசிகாமணி தமிழ் மொழிக்கு நல்ல தொண்டினைச் செய்துள்ளார்.

விழா மேடையில் பேசிய அத்தனை பேரும் அவரது பணியை வானளாவப் புகழ்ந்து பேசினார்கள். அந்தப் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் அவர் முற்றிலும் தகுதியுடையவர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கல்லடி வேலன் கொடுத்து வைத்தவர். முந்நூற்று முப்பத்து இரண்டு பக்கங்கள் கொண்ட தனது நூலில் வல்வெட்டித்துறைபற்றியும்இ அங்கு குடியிருந்த மக்களைப் பற்றியும் ஆங்காங்கு (பக்கங்கள் 66,67, 177,178,179) குறிப்பிட்டு வைத்த காரணத்தாலேயே "யாழ்ப்பாண வைபவ கௌமுதி" மறு பிறப்பு எடுத்துள்ளதது. இல்லாவிட்டால் இந்த வரலாற்று நூல் இயற்கை எய்தியிருக்கும்! நூலாசிரியரின் சந்ததியினருக்கே இப்படி ஒரு நூல் இருக்கும் சங்கதி இப்போதுதான் தெரியவந்துள்ளது!

யாழ்ப்பாண வைபவ கௌமுதி போலல்லாது கந்தரலங்கால மூலமும் உரையும் மூன்றாவது பதிப்பாக வெளிவந்துள்ளது. முதல் பதிப்பின் காலம் தெரியவில்லை. இரண்டாம் பதிப்பு 1912ம் ஆண்டு வெளிவந்தது. எனவே மூன்றாவது பதிப்பு 89 ஆண்டுகள் கழித்து வெளிவந்துள்ளது.

வல்வையில் இயற்றமிழ்ப் போதகாசிரியர் பிறந்த காரணத்தாலோ என்னவோ அவரைப்பற்றிய நினைவுகள் அவ்வப்போது மீட்கப்பட்டு வந்துள்ளது. நல்லூர் நாவலரைப்பற்றி அறிந்தவர்களுக்கு வல்வை வயித்தியலிங்கபிள்ளை நினைவும் கூடவே வரும். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று ஆறுமுகநாவரும் வயித்தியலிங்கபிள்ளையும் சம காலத்தவர்கள். இரண்டு இவர்கள் இருவரும் தமிழும் சைவ சமயமும் பிறமொழி, சமய பண்பாட்டுப் படையெடுப்புக் காரணமாக அழிந்தொழிந்து போகாது காப்பாற்றப் பாடுபட்டவர்கள்.

இருவருக்கும் இடையில் 'சாதி'பற்றி மாறுபட்ட கருத்து இருந்தாலும் அது அவர்களது மொழிஇ சமயப் பணிக்குத் தடையாக இருந்ததில்லை.

இருந்தும் நாவலர் மீது வல்வைவாசிகள் கடுங் கோபத்தில் இருந்தார்கள் என்பது என்னவோ உண்மைதான். அறுபதுக் கடைசியில் ஆறுமுக நாவலரின் வெண்கலச் சிலையை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் கொண்டுவந்து அதனை ஊர் ஊராக ஊர்வலமாகக் கொண்டு திரிந்தபோது நாவலரால் வல்வைக்குள் புகமுடியவில்லை! கல்லெறி பலமாக இருந்ததால் தொண்டமானாற்றோடு நாவலர் ஊர்வலம் திரும்பிச் சென்றுவிட்டது. அந்தச் சிலை நல்லூர் தெற்கு வீதியில் நிறுவப்பட்டது. (தொடரும்)யாழ்ப்பாணத்தைப் படம் பிடித்துக் காட்டும் கௌமுதி!
(2)
 

நல்லூர் நாவலரின் சமயப் பணி போற்றப்படுவதுபோல அவரது தமிழ்ப் பணி ஏற்றிப் போற்றப்படுவதில்லை. ஏராளமான ஏட்டுச் சுவடிகளைத் தேடி எடுத்து, தூசி துடைத்துப் பதிப்பித்தார். பல நூல்களுக்கு உரை எழுதினார். அவரது நண்பர்கள், மாணாக்கர்கள் எழுதிய நூல்களையும் பரிசோதித்துப் பதிப்பித்தார். அல்லது பதிப்பிக்க உதவினார். நாவலரது உழைப்பால் வெளிவந்த நூல்களுக்கு அளவில்லை.

நன்னூல் விருத்தியுரை
நன்னூல் காண்டிகையுரை
நைடதவுரை
சூடாமணி நிகண்டுரை
திருமுருகாற்றுப்படை உரை
இலக்கணக் கொத்து
திருவிளையாடற புராணம்
சிவ பூசாவிதி
பால பாடம் (1.2.3.4)
ஆத்திசூடி உரை
கொன்றை வேந்தன் உரை
மருதூரந்தாதியுரை
கோயிற்புராண உரை
சைவ சமயநெறி உரை
கந்தபுராணம்
பெரியபுராணம் (உரைநடை)
திருக்குறள் (பரிமேலழகர் உரை)
திருக்கோவையாருரை
தொல்காப்பியம்
சவுந்தரிய லகரி
சைவ எல்லப்ப நாவலர்
பாரதம்
கொலை மறுத்தல்
வைராக்கிய தீபம்
வைராக்கிய சதகம்
திருவுந்தியார்
தாயுமானவ சுவாமிகள் பாடல்கள்

நாவலர் சாதியைக் கெட்டியாகப் பிடித்தவர் என்று அவர் மீது வீசப்படும் குற்றச்சாட்டு வலுவற்றது. பொருத்தமற்றது. நாவலரைக் குறை கூறுவோர் அவரை விட்டு விட்டு சிவாகமங்களைக் குறை கூறவேண்டும். காரணம் சிவாகமங்கள்தான் யார் யார் திருக்கோயில்களுக்குள் போகலாம், யார் யார் போகக் கூடாது என வரையறைந்துள்ளது. நாவலர் ஆகமத்தின் மீது அளவற்ற பக்தி வைத்திருந்தார். எனவே தீண்டாமை பாராட்டினார். ஆகம விதிப்படியே சைவாலயங்களில் பூசை முதலியன நடைபெற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதற்காகவே சிவ பூசாவிதி என்ற நூலை எழுதினார். சிறு தெய்வ வழிபாட்டைக் கண்டித்தார். கண்ணகி வழிபாட்டைக் கண்டித்து "செட்டிச்சி மகளுக்குக் கோவிலா" என்று காட்டமாகக் கேட்டார்! ஆகம விதிப்படி பூசை செய்யாத அர்ச்சகர்களைக் கடிந்து கொண்டார். அவர்கள் கையால் திருநீறு வாங்கிப் பூசுவதை மறுத்தார்.

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நாவலர் ஒரு சமூக சீர்திருத்தவாதி அல்ல. அதற்கு அவருக்கு நேரம் இருக்கவில்லை. நினைப்பும் இருக்கவில்லை. பிற சமயஇ மொழி, பண்பாடு இவற்றின் படையெடுப்பில் இருந்து தமிழினத்தைக் காப்பாற்றுவதே அவரது ஒரே நோக்கமாகவும் உடனடிக் குறிக்கோளாகவும் இருந்தது. அதனால் வயலில் உள்ள களையைப்பற்றிக் கவலைப்படாது பரசமய வெள்ளம் உள்ளே வராது சைவசமயம் என்ற வயலுக்கு வரம்பு கட்டினார். இதனைத் தவறென்று சொல்ல முடியாது. காலத்தின் கட்டாயம்.
நாவலர்இ தாமோதரனார்இ விபுலானந்த அடிகள் தங்கள் தமிழ்ப் பணியால் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு புகழ் சேர்த்தவர்கள். தமிழ்நாட்டுத் தமிழர்களால் பாராட்டப் பட்டவர்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் பதவி விபுலானந்தர் அடிகளுக்குக் கொடுக்கப்பட்டது எங்களுக்கு பெருமைதரும் செயலாகும்.

நல்லைநகர் நாவலரைப்பற்றியும் அவரது தந்தையார் கந்தப்பு, பாட்டனார் பூதத்தம்பி முதலியார் பற்றியும் (பக்கம் 222-223) கௌமுதி நூலாசிரியர் விரிவாக எழுதியுள்ளார். பின்னர் தனியே நாவலரைப்பற்றி (பக்கம் 291-292) எழுதியுள்ளார். நாவலரைப்பற்றி நூலாசிரியர் எழுதியிருப்பதன் ஒரு பகுதியை அதன் முக்கியத்துவம் கருதி அப்படியே தருகிறேன்.

"இக் காலத்தில் யாழ்ப்பாணத்திலே செந்தமிழ்ப் பாஷை விருத்தியாக விசேஷ முயற்சி செய்தவர் ஆறுமுகநாவலராம். யாழ்ப்பாணம் நல்லூரிலேஇ கார்காத்த வேளாளர் மரபிலே, பாண்டிமழவர் குடியிலே, அரசாட்சியாரிடம் ஆராச்சி உத்தியோகத்தில் அமர்ந்திருந்த கந்தப்பிள்ளை என்பவருக்குப் புத்திரராய் 1822 ம் ஆண்டு மார்கழி மீ 18உ பிறந்த இவர், ஐந்து வயசிலே வித்தியாரம்பஞ் செய்து ஆரம்ப தமிழ்க்கல்வி கற்றுஇ வேலாயுதமுதலியார், சேனாதிராயமுதலியார்இ சரவணமுத்துப்புலவர் என்பவர்களிடம் இலக்கண இலக்கியங்களைக் கசடறக்கற்றுத்இ தமிழ்ப் பாஷையில் விசேஷ பாண்டித்தியம் அடைந்து, சமஸ்கிருதத்திலும் பயிற்சியடைந்துஇ உலெஸ்லியன்மிஷன் பாடசாலையில் (இன்றைய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) ஆங்கில பாஷையும் கற்று, 20 வயதில் அப்பாடசாலைத் தலைவரான பீற்றர் பேர்சிவல் தேசிகருக்குத் தமிழ்ப்பண்டிதராகி வேதாகமமொழிபெயர்ப்பில் அவருக்கு நல்ல உபயோகமாகி அவருடன் கூடிச் சென்னைபுரிக்குச் சென்று திரும்பிஇ 1845ம் ஆண்டு வரையிலும் அவருக்குத் துணைசெய்து அப்பால் அவரது வேலையை விட்டு செந்தமிழ்ப் பாஷையைப் பரிபாலிக்கவும் சைவசமயத்தை வளர்க்கவும் கருத்துட் கொண்டு முப்பத்திரண்டு வருடங்களாய் விசேஷ முயற்சிகள் புரிந்து 1879ம் ஆண்டு 5 உ தேகவியோகமானார்.

இவர் செந்தமிழ்ப் பரிபாலனத்துக்கு உதவியாய் வண்ணார்பண்ணையிலும் சிதம்பரத்திலும் இரண்டு சைவப்பிரகாசவித்தியாலங்களை ஸ்தாபித்துஇ அனேக மாணாக்கருக்குச் செந்தமிழ்க் கல்வியைக் கற்பிக்கவேண்டிய ஒழுங்கு செய்து பல மாணாக்கருக்கு இலக்கண இலக்கியங்களைக் கற்பித்தும்இ கந்தபுராணம் பாரதம்இ சேதுபுராணம், பிரயோகவிவேகஉரை, திருவள்ளுவர் பரிமேலழகருரைஇ திருக்கோவையுரை, தொல்காப்பியம் சேனாவரையருரைஇ நன்னூற் காண்டிகையுரைஇ விருத்தியுரைஇ நிகண்டு சூடாமணியுரை, இலக்கணக்கொத்து, இலக்கணவிளக்கச் சூறாவளி கோயிற்புராணவுரை, இலக்கணச் சுருக்கம், திருவிளையாடற் புராண வசனம், தருக்கசங்கிரகம் முதலாம் அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை திருத்தி அச்சிட்டுப் பிரசுரித்து வெளிப்படுத்தினர்."

தனது 20வது அகவையில் பாடசாலைத் தலைவரான பீற்றர் பேர்சிவல் தேசிகருக்கு ஆறுமுக நாவலர் தமிழ்ப்பண்டிதராகி கிறித்துவ வேதாகம மொழிபெயர்ப்பில் அவருக்கு உதவினார் என்பதைப் படிக்க மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இது தெரிந்த செய்தி என்றாலும் கௌமுதி ஆசிரியர் சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

யாழ்ப்பாண வைபவ கௌமுதியின் சிறப்பு என்னவென்றால் குறைந்தது இரண்டு நூற்றாண்டு கால வரலாற்றை எழுத்து வடிவத்தில் நூலாசிரியர் பதிவு செய்து வைத்து வருங்கால சந்ததியினருக்கு விட்டுப் போனதுதான்.

நூலின் உரைநடை பெரும்பாலும் பேச்சுத் தமிழில் இருக்கிறது. வடமொழி மற்றும் ஆங்கிலச் சொற்கள் அதிகளவு காணப்படுகிறது. "நடை சரித்திரத்துக்கேற்ற இலவித நடையில் எழுதப்படவில்லை" என்பதை நூலாசிரியர் அடக்கத்தோடு ஒப்புக்கொள்கிறார்.

இருந்தும் அன்றைய தமிழ் உரைநடையை வாசிக்கும்போது அதிலும் ஒரு சுவை இருக்கிறது. ஒரு காலத்தில் பெருவழக்கில் இருந்து இப்போது வழக்கொழிந்து போன அல்லது போய்க் கொண்டிருக்கும் சொற்கள் நூல் முழுதும் ஆங்காங்கே காணப்படுகிறது.

எடுத்துக்காட்டாக 'சிறுப்பம்' 'சிணி' 'சண்டைசள்ளு' 'கிலமாய்ப் போய்விட்டன' 'சட்டம்பி' 'நாட்டாண்மை' 'வமிசம்' 'மரபு' 'குலம்' 'குடி' 'ஓய்' 'மட்டிடல்' 'மலைத்தல்' 'கட்டாக்காலி' 'சட்டென' 'சம்பந்தம்' 'மன்றல்' (திருமணம்) 'நிலம்புலம்' 'கைமாச்சு' (விலங்கு) 'பரவணி' 'காகதாலியம்' (காகம் இருக்கப் பனம்பழம் விழுவதுபோல்) 'வள்ளன்மை' 'மாந்தீரிகம்' 'கிஞ்சித்தும்' 'வரிசை' போன்ற சொற்களைச் சொல்லலாம்.

கௌமுதி யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றை ஒரு கோர்வையாக, ஆண்டு வாரியாக தகுந்த சான்றுகளோடு எழுதிய வரலாற்று நூல் என்று எதிர்பார்த்து அதனைப் படிக்க முனைந்தால் படிப்போர் ஏமாற்றம் அடைவார்கள். மொத்தம் 332 பக்கங்கங்கள் (இடப்பெயர்கள் பற்றி எழுதப்பட்ட மேலும் 131 பக்கங்கள் மீள் பதிப்பில் இடம்பெறவில்லை) கொண்ட நூல் துண்டு துண்டாக எழுதப்பட்டிருக்கிறது. நூலுக்கு அத்தியாயங்கள் கொடுபடவில்லை. முதல் 158ப் பக்கங்களில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவிய ஆட்சிமுறை, சமூகக் கட்டமைப்பு, பொருள்நிலை, சமயநிலை பற்றி மிகவும் விபரமாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

அடுத்த 102 பக்கங்களில் யாழ்ப்பாணத்தில் "குலம், பிரபுத்துவம், கல்வி, செல்வம், உத்தியோகம், நாட்டாண்மை, குணச்சிறப்பு, அடிமை குடிமை, வண்மை, புத்தி, நேர்மை" போன்ற சிறப்புக்கள் வாய்ந்த முதலிமார்கள், புலவர்கள், வணிகர்கள் போன்றவர்களது வமிச வரலாறு சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. இன்னும் பலரது தரவுகள் காலம் கடந்து கிடைத்தால் நூலில் சேர்க்க முடியாது போயிற்று என்று நூலாசிரியரே குறித்துள்ளார். தங்களது வேரைத் தேட விரும்புவோருக்கு அந்தக் குறிப்புக்கள் பயனுள்ளதாக இருக்கும்.

பக்கம் 261 தொடங்கி முடிவுவரை ஆங்கிலேயர் ஆட்சியில் யாழ்ப்பாணம் கல்வி வளர்ச்சி, பெண்கல்வி விருத்தி, தமிழ்க் கல்வி வளர்ச்சி, மருத்துவ வசதி, பிரயாண வசதி, பண்டமாற்று வசதி, வேளாண்மை விருத்தி விரித்து எழுதப்பட்டுள்ளன. ஆசிரியர் பரங்கியர் (போர்த்துக்கேயர்) ஒல்லாந்தர் ஆட்சிகளை ஆங்கில ஆட்சியோடு ஒப்பிட்டு எழுதும்போது ஆங்கில ஆட்சியை மிகவும் சிலாகித்து எழுதியிருக்கிறார்!

பொதுவாக வரலாறு என்றால் அரசர்கள், போர்கள், படையெடுப்புக்கள் பற்றிய பதிவாகவே இருக்கும். அதையும் பண்டைய தமிழர்கள் என்ன காரணத்தாலோ ஒழுங்காக, தொடர்ச்சியாக ஆண்டுவாரியாக எழுதி வைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் வரலாறுபற்றிய உணர்வே அவர்களுக்கு இருக்கவில்லை. தமிழர்களுக்கு மட்டுமல்ல பொதுவாக இந்தியர்களுக்கும் இந்த உணர்வு இருக்கவில்லை.

மகா அலெக்சான்டர் (கிமு 356 - கிமு 323) எகிப்து, பாரசீகம், ஆப்கனிஸ்தான், இந்தியா மீது படையெடுத்துச் சென்றபோது தன்னோடு அரண்மனை வரலாற்று ஆசிரியர் கலிஸ்தீன்ஸ் (Callisthenes of Olynthus,  (born c. 360 bcódied c. 327), ) என்பவரை தன்னோடு கூடவே கூட்டிச் சென்றார். அதனால் அந்தப் படையெடுப்பைப்பற்றிய விரிவான தகவல்களைப் பதிவு செய்து வைத்திருக்கிறார். இன்னும் கிரேக்க வரலாற்று ஆசிரியர் மெகஸ்தீனஸ் (கிமு 340-கிமு 282) அவர்களை கிரேக்க அரசன் முதலாவது செலூக்கஸ் (Seleucus I) தனது நாட்டுத் தூதுவராக மவுரிய அரசன் சந்திரகுப்தனது அரண்மனைக்கு அனுப்பி வைத்தான். மெகஸ்தீனஸ் இந்தியாவின் பண்பாடு, கலாசாரம், சமயம் பற்றி எழுதியவையே மேற்குலகம் இந்தியாவைப்பற்றி அறிவதற்கு உதவியாக இருந்தது. அதுமட்டும் அல்லாது இந்திய வரலாற்றை எழுதுவதற்கும் உதவியுள்ளது.

சிந்தனையாளர் சோக்கிறட்டிஸ்பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிப்பார்கள். உலக வரலாற்றில் மிகச் சிறந்த சிந்தனையாளர். அவர் நூல் எதுவும் எழுதவில்லை. ஆனால் அவரது மாணாக்கர் பிளட்டோ தனது ஆசிரியர் கற்பித்ததைஇ அவர் பேசியதை ஒன்றுவிடாமல் 15 தொகுதிகளில் பதித்துள்ளார். சொக்கிறட்டீஸ் பக்கத்து வீட்டுக்காரனிடம் ஒரு கோழிக் குஞ்சைக் கடன் வாங்கியதையும் அதனை மறவாமல் தன்னைச் சிறையில் சந்தித்த தனது நண்பன் கிரிட்டோவிடம் சொல்லியதும் பதிவாகியுள்ளது.

ஆனால் நாமோ கிபி 13ம் நூற்றாண்டு தொடங்கி கிபி 17ம் நூற்றாண்டுவரை நீடித்திருந்த யாழ்ப்பாண இராச்சியம்பற்றிய வரலாற்றை ஒழுங்கா எழுதி வைக்கவில்லை! எழுதி வைத்த பரராசசேகரனுலா இராசமுறை என்ற இரண்டு நூலையும் தொலைத்து விட்டோம். இந்த நூல் இரண்டும் கௌமுதி நூல் ஆசிரியர் காலத்தில் இருந்திருக்கிறது. அவர் குறிப்பிட்டுள்ள மொத்தம் 63 துணைநூல் பட்டியலில் இவை இரண்டும் 3வது 4வது இடத்தில் உள்ளன.

கௌமுதி நூலின் ஒரு சிறப்பு அம்சம், அது சாதாரண மக்களின் சமூக, அரசியல். சமய, பொருளாதார நிலைகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இது போற்றப்பட வேண்டிய ஒன்றாகும். (வளரும்)ஒல்லாந்தர் காலத்தில் எழுதப் படிக்கத் தெரிந்த பெண்கள் இருவர் மட்டுமே!
(3)
 

கௌமுதி சமூக ஆய்வாளர்களுக்கு நல்லதோர் கருவூலம். ஆசிரியர் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த "குலம், பிரபுத்துவம், கல்வி, செல்வம்இ உத்தியோகம்இ நாட்டாண்மை, குணச்சிறப்பு, அடிமை குடிமை, வண்மை, புத்தி, நேர்மை" போன்ற சிறப்புக்கள் வாய்ந்த முதலிமார்கள், புலவர்கள், வணிகர்கள் போன்றவர்களது வமிச வரலாற்றோடு அன்றைய 'சாதி' அமைப்பைப்பற்றியும் எழுதியுள்ளார்.

சங்ககாலத் தமிழனுக்கு 'சாதி' இருக்கவில்லை. குலங்களும் குடிகளும் மட்டுமே இருந்தன. சங்ககாலப் புலவர்கள் எல்லாக் குடிகளிலிருந்தும் தோன்றியிருக்கிறார்கள். தங்கள் பெயரோடு தங்கள் குடிப்பெயரையும் பெருமையோடு இணைத்து வைத்திருந்தார்கள்.

தமிழரின் பொற்காலம் என எல்லோராலும் போற்றப்படும் சங்க காலத்தில் கல்வி எல்லோருக்கும் பொதுவாக இருந்தது. ஒரு குலத்துக்குரியதாக மட்டும் கல்வி இருக்கவில்லை. பிற்காலத்தில் சமூகப் படிக்கட்டில் மிகவும் கீழே தள்ளப்பட்ட குயவர், குறத்தியர் குலத்தில் புலவர்கள், அதுவும் பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது தமிழினம் வாழ்ந்த வாழ்வும் பின்னர் வீழ்ந்த வீழ்ச்சியும் புரியும்.

சங்க காலத்துப் புலவர்கள் ஒரு காலத்திரல்லர், ஒரு தேயத்தாரல்லர், ஒரு 'சாதியாரல்லர்', ஒரு குலத்தார் அல்லர், ஒரு தொழிலினரல்லர், ஒரு மதத்தினரல்லர், தமிழ் நாட்டில் முதலில் தாம் இருந்த இடத்திலேயே இருந்து அங்குள்ள பெரியோரிடம் முறையே நூல்களைக்கற்று அப்பால் மதுரைக்கு வந்து,

"பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆய
சாலார் சாலார் ஆகுபவவே"
                   (புறம் 218)

பொன்னும் பவளமும் முத்தும் மணியும் ஒவ்வொரு இடத்திலே பிறக்கிறது. இவைகள் எல்லாவற்றையும் இணைத்து, நல்ல அணி செய்யப்படும்போது இணைந்து பெரும் அழகைத் தரும் இயல்பைக் கொண்டன. இதைப்போல அறிவு சான்றோர் எப்போதுமே சான்றோர் பக்கமே சேர்ந்து நிற்பர். சால்பு அற்றவர்களோ தம்மைப் போன்ற சால்பு அற்றவர்களுடன் சேர்ந்து நிற்பர்.

புலவர்களும் புலவர்களோடு நட்புற்று அளவளாவி நூல்களை ஆய்ந்து தாமும் நல்லிசைப்புலவர்களாகித் தத்தம்மிடம் சென்றார்கள்.

அன்றைய புலவர்கள் மருத்துவம், கணிதம், சிற்பம், இசை, கூலவாணிகம் முதலிய பல கலைகளில் தத்தமக்கு இயன்றளவில் நல்ல பயிற்சியுள்ளவர்காக இருந்திருக்கிறார்கள். பொருள் ஈட்டத்தைக் கருதி மட்டும் கற்றவர்கள் அல்லவென்றும் தாங்கள் வாழ்வதற்குரிய தொழில் பெரும்பாலோர்க்கு இருந்ததென்றும் சங்கப் பாடல்களில் இருந்து தெரியவருகிறது.
சங்கப் புலவர்களில் அவர்கள் செய்த தொழிலாற் பெயர் பெற்றோர் பலர் இருந்திருக்கிறார்கள். பாலைபாடிய பெருங்கடுங்கோ, கோப்பெருஞ் சோழன், ஓல்லையூர் தந்த பூதப்பாண்டியன், தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், பாண்டியன் அறிவுடைநம்பி, கோப்பெரும்பெண்டு, பூதபாண்டியன் தேவியார், பாரிமகளிர், ஆதிமந்தியார், தமிழரசர் அரசியர் ஆவர்.

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், மதுரைக் கணக்காயர், மதுரைக் கணக்காயர் மகன் நக்கீரனார், பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார், கடியலூர் உருத்திரங்கண்ணனார், கௌதமனார், கபிலர், வேம்பத்தூர்க் குமரனார் முதலியோர் அந்தணர்.

அம்பர்கிழான் நாகர், வல்லங்கிளான் மாறன், அரிசில்கிழார், ஆவூர்க்கிழார், நல்லாவூர்க்கிழார், நொச்சிநியமங்கிழார் ஆகியோர் உழவர்கள். காவிரிப்பூம்பட்டினத்து காரிக்கண்ணனார், மதுரை அறுவைவாணிகன் இளவேட்டனார், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் முதலியோர் வணிகர்கள்.

பித்தாமத்தர், நல்லச்சுதனார், கண்ணகனார், தமிழ்க்கூத்தனார், முதுகூத்தனார் போன்றவர்கள் பாணர்கள். மருத்துவன் தாமோதரனார், மருத்துவன் நல்லச்சுதனார் முதலியோர் மருத்துவர்கள். கணியன் பூங்குன்றன், கணிமேதாவியார் கணித ஆசிரியர்கள்.
காக்கைபாடினியார், பொன்முடியார், வெண்ணிக்குயத்தியார், ஒளவையார் போன்றோர் பெண்பாற் புலவர்கள் ஆவர்,

மனுதர்ம சாத்திரம் கல்வியை ஒரு குறிப்பிட்ட வர்ணத்தாருக்கு மட்டும் உரிமையாக்குகிறது. மனுதர்ம சாத்திரம் பெண்களை முழு அடிமையாகவே சித்தரிக்கிறது. நான்காம் தரத்தாராகச் சூத்திரரைக் குறிப்பிடும் மனுதர்மம் பெண்களை சூத்திரரோடு இணையாகக் கருதித் தாழ்த்தியது.

ஆரிய தர்மத்தையும், மனுதர்ம சாத்திரத்தையும் ஒப்புக்கொண்ட தமிழர்களிடையே பொதுக் கல்வி வற்புறுத்தப்படவில்லை. பெண் கல்வி வற்புறுத்தப் படவில்லை. கல்வியை அக்கால வேதப் பிராமணர்களுக்கு மட்டுமே இன்றும் தமிழர்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடும் நால்வேதங்களும் மனுதர்ம சாத்திரமும் ஒதுக்கியிருந்தது.

மனுதர்ம சாத்திரத்துக்கு நேர்மாறாக திருக்குறள் கல்வி எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது. வாழும் உயிர் அத்தனைக்கும் எண்ணும் எழுத்தும் கண்ணென்ப என்று வள்ளுவர் அறிவுறுத்துகிறார். கல்வி அறிவில்லாதவர்களது முகத்தில் கண்களுக்குப் பதில் இரண்டு புண்கள் இருப்பதாகப் பழிக்கிறார்.

பிற்காலத்தில்தான் தமிழ்ச் சமூகம் ஆரியமயப்படுத்தப்பட்டு சமயத்தின் பெயரால் ஓராயிரம் சாதிகள் உருவாக்கப்பட்டு மக்களில் சரிபாதிப்பேருக்கு கல்வி மறுக்கப்பட்டது. மீதிப்பேரில் கல்வி சமூகத்தின் மேல்த்தட்டு மக்களோடு நின்றுவிட்டது. இதனால் சமூகம் துண்டாடப்பட்டு, நோய்வாய்ப்பட்டு முடமாக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் சைவமும் தமிழும் வளர்த்த ஆறுமுகநாவலாரால் உருவாக்கப்பட்ட பள்ளிக்கூடங்களில் உயர்சாதி சைவர்களே சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். ஏனையவர்களுக்கு கல்விக் கோவில்களின் கதவுகள் அடைக்கப்பட்டன.

பெண்களுக்குக் கல்வி முற்றாக மறுக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாண மக்களது கல்வி வளர்ச்சி, குறிப்பாகப் பெண்களது கல்வி வளர்ச்சி எப்படிப்பட்ட நிலையில் இருந்ததென்பதை கௌமுதி ஆசிரியர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

"இவர்கள் (இருபாலை சேனாதிராசா முதலியார், உடுப்பிட்டி அருளம்பல முதலியார் போன்றோர்...) முயற்சியினால் சிவர் தமிழ் இலக்கண இலக்கியங்களைக்கற்று வல்ல புலவராய் விளங்கினாலும்  சாதாரண தமிழ்க்கல்வி தேசத்தில் மிகக் குறைவாகவே இருந்தது. இம் மிஷரிமார் முயற்சியினால்தான் இத் தேசத்தில் அனேகர் கல்வி கற்கும் பெருஞ் சலாக்கியம் பெற்றனர். இம்மிஷரிமார் யாழ்ப்பாணம் வந்தபொழுது கல்வியில் நாட்டமில்லாதவர்களுக்குக் கரும்பு தின்னக் கூலி கொடுத்தவாறு, இளைஞருக்கு வாழைப்பழம் முதலிய உபகாரங்களைக் காட்டி, சிறுவரைக்கூட்டி, கல்விகற்கும் ஆசையை மூட்டி, கல்வியறிவையூட்டி, சுவிசேஷ அறிவைப் புகட்டி நாட்டினர்.

மிஷரிமார் வந்தகாலத்தில் படித்த ஆடவர், ஆங்காங்கு காணப்பட்டாலும், படித்த ஸ்திரீகளைக் காண்பது அரிதாம். ஆதி அமெரிக்க மிஷனாரிமார் யாழ்ப்பாணம் வந்தபொழுது (1816) யாழ்ப்பாணநாட்டுக் கோவில்களில் பாடி நடனம் செய்யும் நாட்டியப் பெண்களைவிட இரண்டு சுதேசப் பெண்களுக்கு மாத்திரம் வாசிக்க எழுதத் தெரியுமென்று அம் மிஷரிமாருள் ஒருவர் எழுதியிருக்கின்றர். அக் காலத்தில் பெண்பிள்ளைகள் படித்தல் மரபன்று என எண்ணப்பட்டது." (பக்கம் 276-277)

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இனம், இமயத்தில் புலிக்கொடி பொறித்த இனம், "சிங்களம் புட்பகம் சாவக-மாகிய தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று சால்புறக் கண்ட இனம்", ஆண் புலவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு பாடல்கள் இயற்றிய பெண் புலவர்கள் வாழ்ந்த இனத்தில் கைவிரல் விட்டு எண்ணக்கூடிய பெண்களுக்கே எழுதப் படிக்கத் தெரிந்திருந்தது என்பது தமிழன் இடையில் வீழ்ந்துபட்டுத் தாழ்ந்துபோன கதையை எடுத்துச் சொல்கிறது!

சங்க காலத்தின் பின்னர் தமிழகத்தை ஆண்ட வேந்தர்களில் ஒருவனேனும் தமிழ்ப் பள்ளிக் கூடங்களைக் கட்டுவித்து தமிழ்க் கல்வியைப் பரப்பினார் இல்லை. வேதப் பள்ளிக் கூடங்கள் கட்டி வேதம் படிப்பிக்கவே அரச கருவூலத்தைப் பயன்படுத்தினார்கள்.

நூற்றுக்கணக்கான கோவில்களைக் கட்டி, வேதப் பிராமணர்களை வங்கம், கஷ்மீர், காசி போன்ற இடங்களில் இருந்து வருவித்து குடமுழுக்குச் செய்த மும்முடிச் சோழன் முதலாம் இராசராச சோழனுக்கும் (கிபி 985-1014) ஈழம் கொண்டான், கடாரங் கொண்டான, கங்கை கொண்டான் எனப் போற்றப்படும் முதலாம் இராசேந்திர சோழனுக்கும் (கி.பி 1012-1044) தமிழ்நாட்டில் ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்ற நினைப்பே இல்லாது போயிற்று.

மேற்கு நாட்டு மிஷனரிமார் யாழ்ப்பாணம் வந்திராவிட்டால் நாங்கள் இன்னமும் தற்குறிகளாக இருந்திருப்போம் என்பதில் ஐயமில்லை!

"அமெரிக்க மிஷரிமார் யாழ்ப்பாணம் வந்து மிஷனாரியூழியத்தையாரம்பித்து இருபது வருடங்களின் பின் யாழ்ப்பாணத்திலே அமெரிக்க மிஷன்கீழ் 155 பாடசாலைகள் நடைபெற்றன. அவற்றில் 6000 ஆண்பிள்ளைகளும் 1000 பெண்பிள்ளைகளும் படித்தனர். (பக்கம் 277)

வரலாற்றை உள்ளது உள்ளவாறு பதிவு செய்தல் வேண்டும். நிறைகளை மட்டும் பதிவு செய்வது வரலாறு அல்ல. குறைகள், கறைகள் போன்றவற்றையும் பதிவு செய்வதே வரலாறு. இந்த அளவு கோலுக்கு இணங்க கௌமுதி நூலை ஆசிரியல் ஆசு கவி கல்லடி வேலுப்பிள்ளை (1890-1944) எழுதியிருப்பது பாராட்டத்தக்கது.

யாழ்ப்பாண வைபமாலையில் காணப்பட்ட வரலாற்றையும் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் (1658-1796) தொமஸ் வன்றீ எனும் ஒல்லாந்த கொம்மாண்டோர் 1697 ல் எழுதி வைத்த விரிவான சாதி வரலாற்றையும் அவ்வவற்றின் ஊழியத்தையும் திரட்டி (பக்கம் 107-112) கௌமுதி ஆசிரியர் எழுதியிருக்கிறார். அப்போது மொத்தம் 40 சாதிகள் இருந்ததாகத் தெரிகிறது. அவைபற்றிக் குறிப்பிடுவது "அக்காலத்திருந்த சாதிப்பிரிவுகளையும் ஊழியமாதியவற்றையும் இங்கு எடுத்தோதியது தமிழ்ச் சாதிகளின் உயர்வு தாழ்வுகளைக் காட்டும் பொருட்டன்று" என்று (பக்கம் 112) ஆசிரியர் குறிப்பிடுவது மெச்சத்தக்கது. நால்வர்ணம் நாலாயிரம் சாதியாக வளர்ந்ததை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் தன்கூற்றாக இல்லாமல் பிறர் கூற்றாக எடுத்துரைக்கிறார். (வளரும்) (நம்நாடு - மே23, 2002)வல்வெட்டித்துறை திருமேனியார் வம்சம்
நக்கீரன்
(4)

 

சாதிப்பிரிவுகள் தொழில் காரணமாகவே உற்பத்தியாகின. எத்தனை தொழில்கள் இருந்தனவோ அத்தனை பிரிவுகள் இருந்திருக்கின்றன.

கௌமுதியில் சொல்லப்பட்டுள்ள நாற்பது சாதிகளில் சோனகர் அல்லது முகமதியர் ஒரு பிரிவாகும்! யாழ்ப்பாண வைபவ மாலை சிங்களவரையும் ஒரு சாதியாகப் பட்டியல் இடுகிறது.

செய்யும் தொழிலே பின்னர் ஒரு பிரிவாக தோன்றியது. எடுத்துக் காட்டாக சாயக்காரர் என்ற பெயர் சீலைக்கு சாயம் போடுபவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அது போலவே மடப்பள்ளி, எண்ணெய்க்காரர், நெசவுக்காரர், பெட்டிசெய்வோர் போன்ற பிரிவுகள் தொழில் அடிப்படையில் பிறந்த பெயர்களாகும்.

மாந்தைப்பா என்ற நூல் கைவினைஞர் ஐவகையினர் என்று சொல்கிறது. கொல்லர், தச்சர், கன்னார், சிற்பி, தட்டார் இவர்களே அந்த ஐவகையினர். இவர்கள் நாகவம்சத்தின் ஒரு பிரிவினரான ஓவியர் குலத்தவர்கள் என முதலியார் இராசநாயகம் 'தொன்மை யாழ்ப்பாணம்' என்ற நூலில் (பக்கம் 15) குறிப்பிடுகிறார். அவர்களின் தலைவன் விஸ்வகர்மா என்னும் தேவதச்சன் ஆவான். புராணங்கள் இவனை பிரமாவின் பிள்ளை என வர்ணிக்கின்றன. தொழிற்பிரிவு பின்னர் சமூகப் பிரிவாக உருவாகியதற்கு இது நல்ல எடுத்துக் காட்டாகும்.
சங்க காலத்து குலப்பிரிவுகள் ஐவகை நிலத்தின் அடிப்படையில், அங்கு உற்பத்தியாகும் உணவின் அடிப்படையில் (பாலை நீங்கலாக)அமைந்திருந்தன.

மருதம் - உழவர்,
முல்லை - ஆயர்,
குறிஞ்சி - வேட்டுவர்,
நெய்தல் - நுளையர்.
பாலை - எயினர், மறவர், கள்ளர்

இந்தக் குலப் பிரிவுகள் மேலும் பல பிரிவுகளாக விரிந்தன. மன்னர் மாளிகையில் அகம்படித் தொண்டு (இல்லப்பணி) செய்தவர்கள் அகம்படியர் என்று அழைக்கப்பட்டனர். இடையர் ஆடு மாடு மேய்ப்பவர்கள். குசவர் மட்கலம் வனைபவர்கள். கைக்கோளன் (தமிழ்நாட்டில் வடபாகம் செங்குந்தன்) கையில் கோல் (நெசவுக் குழல்) கொண்டவன். செட்டி வணிகர்கள். அரசர்கள் காலத்தில் வணிகருக்கு எட்டி என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. அதுவே பின்னாளில் செட்டி என மருவியது. பின்னர் நாட்டுக்கோட்டைச் செட்டி, நகரத்துச் செட்டி, காசுக்காரச் செட்டி என மேலும் பெருகின.

குலப்பெயர்கள் பின்னர் பட்டப் பெயர்கள் (முதலியார், பிள்ளை) ஆகின. ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்தவர்கள் பிற்காலத்தில் தொழிலை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக கள்ளர் முன்னர் போர்த்தொழிலில் (மறவர்) ஈடுபட்டார்கள். அரசுகள் மறைந்த பின்னர் அவர்கள் பயிர்த்தொழிலில் ஈடுபட்டார்கள். அது போலவே பாணர் சங்க காலத்தில் மிகுந்த செல்வாக்கோடு விளங்கினார்கள். இன்று அவர்கள் மறைந்தே போனார்கள்.

தொல்காப்பியம் குல அடிப்படையில் நால்வகைக் குலத்தைக் குறிப்பிடுகிறது. அவையாவன அந்தணர், அரசர், வைசிகர், வேளாளர். இது ஆரிய நால்வர்ணப் பாகுபாடு தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்துக்குள் மெள்ளப் புகுந்துவிட்டதைக் காட்டுகிறது. இந்த நால்வகுப்பிலும் அந்தணர்க்கு நூல், கமண்டலம், முக்கோல், இருக்கைப் பலகை சொந்தம். அரசர்க்கு படை, கொடி, முடி, வெண்கொற்றக் குடை, செங்கோல், முரசு, குதிரை, யானை, தேர். மாலை, அரசர்க்கு உரியன. அந்தணர்க்கு உரியன அரசருக்கும் பொருந்தும். ஆனால் அரசர்க்குப் பொருந்துவன அந்தணர்க்குப் பொருந்தாது. வைசியன் வாணிகம் செய்து வாழ்வான். வேளாளருக்கு உழுதுண்பதே சிறந்த தொழிலாகும். இந்த நான்கு வகுப்பாருள்ளும் நான்காவது வகுப்பார் ஏனைய மூவர்க்கும் தொண்டு செய்து வாழவேண்டும்.

தொல்காப்பிய மரபியலில் காணப்படும் மேற்கூறிய சூத்திரங்கள் இடைச் செருக்கல் என நம்பப்படுகிறது. மரபியலில் சூத்திரங்கள் 1 - 69 இளமைப் பெயர்கள், ஆண்பால் பெண் பால், உயிர்ப்பாகுபாடு பற்றிப் பேசுகின்றன. பின்னர் சூத்திரங்கள் 70 - 84 இந்த நால்வகைக் குலத்தைப்பற்றிப் பேசுகின்றன. பின்னர் மீண்டும் 85 ஓரறிவுயிரில் வேறுபாடுபற்றிப் பேசத் தொடங்கி 110ல் முடிகிறது. இவ்வாறு தொடர்பு இடையில் அறுந்து பின் தொடர்வது சூத்திரங்கள் 70-84 இடைச்செருக்கலாக இருக்கலாம் என்ற வலுவான எண்ணத்தைத் தருகிறது. மேலும் வைசியர் என்ற வடமொழிச் சொல் தொல்காப்பியர் காலத்தில் வழக்கில் இருந்திருக்க முடியாது என்பதும் இந்த இடைச்செருக்கல் கோட்பாட்டுக்கு அரண் சேர்க்கிறது.

புறநானூற்றில் காணப்படும் ஒரு பாடல் (335) ஒரு சிற்றூரில் நிலவும் துடியன்குடி, பாணன்குடி, பறையன்குடி, கடம்பன்குடி அல்லாது வேறு சிறந்த குடிகள் இல்லை என்கிறது. இந்தப் பாடலைப் பாடிய புலவர் பெயர் மாங்குடி கிழார். பாடலின் தொடக்கம் சிதைந்து விட்டது. இதே பாடலில் இன்னொரு புரட்சிகரமான செய்தியும் சொல்லப்படுகிறது. கடவுள் வழிபாட்டில் பகைவர் முன்னே அஞ்சாது நின்று விழுப்புண்பட்டு இறந்தவர்களது புகழை எழுதி நட்ட கல்லைக் கடவுளாகக் கருதி வழிபடுவது அல்லாது நெல்லைச் சொரிந்து வழிபடும் கடவுள் வேறு இல்லை என்கிறார்.

எது எவ்வாறாயிருப்பினும் பழங்காலத் தமிழர்கள் பிறப்பில் வேற்றுமை காட்டாவிட்டாலும் செய்தொழிலில் வேற்றுமை காட்டியது தெரிகிறது. வள்ளுவர்கூட பிறப்பு எல்லா உயிர்க்கும் ஒரு தன்மையானது. ஆனால் அவற்றிடையே பெருமை சிறுமை என்ற சிறப்பியல்புகள் ஒத்திராது. ஏனெனில் அவை அவரவர் செய்யும் நல்லன தீயெனவாகிய தொழில்களது வேறுபாட்டால் (பெருமை சிறுமை) ஒத்திருக்காவாம் என்கிறார்.

மேற்கு நாட்டவர்போல் தொழில் மகத்துவத்துவத்தை (Dignity of Labour)  தமிழர்கள் பேணவில்லை என்பது பெரிய குறையே. மேற்கு நாட்டவர்கள் தங்கள் தொழிற்பெயரை இப்போதும் பெருமையோடு தங்கள் குடும்பப் பெயராக வைத்திருக்கிறார்கள். Baker, Smith, Farmer, Gardener, Taylor, Butcher,   Stoneman,  Constable, Cook, Stone, Wood, Bishop, Butler, Carpenter, Duke, Merchant, Goldsmith, Painter, Pope போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

கௌமுதி ஆசிரியர் பரங்கியர், ஒல்லாந்தர் காலத்தில் நெல், அரிசி முதலியவகைகளில் வாணிகம் செய்வதுபோல அடிமை வியாபாரம் செய்ததாகக் (பக்கம் 142) குறிப்பிடுகிறார். கோடிக்கரையில் நெல் ஒறுத்து அடிமைகள் மலிந்து இருந்தனராம். "ஒரு பிடி அரிசிக்கு ஒரு அடிமை" வாங்கக் கூடியதாக இருந்ததாம்! பரங்கியர், ஒல்லாந்தர் காலத்துக்கு முன்னைய யாழ்ப்பாண மன்னர்கள் காலத்தில் தமிழ் நாட்டில் இருந்து குடித்தலைவர்கள் ஆளடிமைகளோடு வந்து யாழ்ப்பாணத்தில் குடியேறி இருக்கிறார்கள்.

"அக்காலம் நமது செல்வநாட்டில் விளங்கிய கல்விமான்கள் பிரபுக்கள் ஆகியோரின்" வரலாற்றில் தேசியத் தலைவரது குடும்பமும் அடங்குகிறது. கௌமுதி ஆசிரியர் எழுதியிருப்பதை சுருக்கிக் கீழே தருகிறேன்.

ஐயம்பெருமாள் வேலாயுதர் - இவர் வல்வெட்டித்துறையிலுள்ளவர். இவற்குப் புத்திரர்:

1) வர்த்தகராக இருந்த ஞானமூர்த்தியார்.
2) பகுதிப்பராபத்திய மணியமாயிருந்த புண்ணிய மூர்த்தியார்.
3) ஆறுமுகத்தார்.
4) கமத்தொழில் வர்த்தகமாதியவற்றில் சிறந்து விளங்கிய திருமேனியார்.

இவர்களின் தாயாருடன் கூடிப்பிறந்த பொன்னம்பலம் என்பவர் ஒல்லாந்தரசினர் காலத்தில் முதலிப் பட்டம் பெற்றிருந்ததும், இலங்கை இந்தியா ஆதியாமிடங்களிலுள்ள பலராலும் நன்கறியப்பட்ட வர்த்தகராகவுமிருந்தனர்.

திருமேனியாரின் புத்திரர்: 1. வேங்கடாசலம் என்னும் நாமத்தால் அறியப்பட்ட பெரியதம்பியார். இவரே தந்தையின் எண்ணப்படி மேற்படியூரில் தற்காலம் விளங்கும் சிவாலாயத்தை 1867ம் ஆண்டு ஆரம்பித்து 1883ம் ஆண்டு வைகாசி மாதம் பிரதிட்டை அபிஷேகம் செய்வித்தவர். இவர் அவ்வூரில் கீலடைந்திருந்த வைகுந்தபிள்ளiயார் புட்டணிப்பிள்ளையார் என்னுமிரு ஆலையங்களின் திருப்பiணிகளை நிறைவேற்றியவர். முல்லைத்தீவில் கடற்கரையோரத்தில் விளங்கும் பெரியமடாலயமும், ஒவ்வொருவரினதும் வருணாச்சிரமங்களுக்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும் வீடுகள் கூடங்களும் இவர் பெயரில் ஆரம்பிக்கப்பட்டனவே."

(திருமேனியார் வேங்கடாசலம் அவர்களின் மகனே திருவேங்கடம். திருவேங்கடம் அவர்களின் மகன் வேலுப்பிள்ளை ஆவார். அவர் திருமணம் செய்தது பருத்தித்துறையில் மெத்தை வீட்டு நாகலிங்கம் வழித்தோன்றிய பார்வதி ஆவார். அவர்களுக்குப் பிறந்த கடைசிக் பிள்ளையே தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆவார். அவருக்கு இரண்டு அக்காமாரும் ஒரு அண்ணனும் இருக்கிறார்கள்.

இவர்களில் திருமதி வினோதினி இராசேந்திரம் அவர்களே இயற்றமிழ் போதகாசிரியர் ச. வயித்தியலிங்கம் அவர்களின் நூற்றாண்டு விழாவில் சிறப்புப் படிகளை மேடையில் வைத்துப் பெற்றுக் கொண்டவர்.)

அக்காலத்தில் கல்வி, செல்வம் ,ரண்டிலும் புகழ் பெற்று வாழ்ந்த மேலும் பல குடும்பங்களது "விர்த்தாத்தங்களை" கௌமுதி ஆசிரியர் தன்கூற்றாகவும் பிறர்கூற்றாகவும் பதிவு செய்துள்ளார். அவற்றுள் சில பின்வருமாறு.

(1) மயில்வாகனப் புலவர். இவரே யாழ்ப்பாண வைபவமாலையை இயற்றிய புலவராவர். மெக்கெறூஉ என்ற ஒல்லாந்து அதிகாரி கேட்டுக் கொண்டதற்கு இணங்க யாழ்ப்பாண வைபவமாலையை மயில்வாகனப் புலவர் இயற்றினார் என நூலின் சிறப்புப் பாயிரம் நவில்கிறது.

(2) கணேசையர். கொச்சிக் கணேசையர் என்று அழைக்கப்பட்ட இவர் ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணம் வந்து வண்ணார்பண்ணையில் வாழ்ந்தவர். தென்னிந்தியாவில் இருந்து வந்த தமிழ்ப் புலவர்களை ஆதரித்ததோடு தமிழைச் சொல்லிக் கொடுத்தவர். பல பிரபந்தங்கள் இயற்றி இருக்கிறார்.

(3) கூழங்கைத்தம்பிரான். காஞ்சியில் இருந்து வந்து குடியேறியவர். தமிழ் வித்துவான். பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூலுக்கு உரை எழுதியவர். யோசேப்பு புராணம் என்ற நூலை 21 காண்டங்களில் 1,023 விருத்தற்பாட்டில் இயற்றியவர்.

(4) இரகுநாத மாப்பாண முதலியார். யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலைப் புதிப்பித்துக் கட்டியவர். (அவரது பரம்பரையினரே இன்றும் இக் கோவிலின் அறங்காவலர்களாக இருந்து வருகிறார்கள்.)

(5) சின்னத்தம்பிப் புலவர். இவர் தேசவழமைச் சட்டத்தை சரிபார்த்து பதிப்பிக்க நியமிக்கப்பட்ட வில்லவராயர் என்பவரது மகனாவார். வில்வராயர் முதலியார் வீடு எங்கே இருக்கிறது என்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த புலவரிடம் கேட்டபோது "பொன்பூச்சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்....." என்ற பாடல் மூலம் பதிலிறுத்தவர்.

(6) பூதநாத ஆராச்சியார். ஒல்லாந்தருக்கு எதிராகப் போராடிய மரியைசெம்பாத்தை என்னும் வன்னிச்சியை சாமவுபாயத்தைக் கையாண்டு கைது செய்து ஒல்லாந்தரிடம் ஒப்படைத்தவர். இவரது மகன் லோறன்ஸ் சமரசேகரா என்பவர். சமரசேகரரின் மகள் அனந்தாசிப்பிள்ளை நீக்கொலஸ் சந்திரசேகரரை மணந்து யுவக்கிம் சந்திரசேகரரையும் செந்தமிழ் பிரசங்க சாதுரிய கத்தோலிக்க குருவான சந்திரசேகர சுவாமியைப் பெற்றார். முன்னையவரின் புத்திரன் இலங்கை இராசதானியில் புகழ்படைத்திலங்கும் அத்வக்காத் எச்.ஏ.பி. சந்திரசேகரா. (வளரும்)
 
பரங்கியர் சங்கிலியை பட்டுமெத்தையில் வைத்து சிரங் கொய்தனர்
(5)

யாழ்ப்பாண இராச்சியத்தை போர்த்துக்கேயர் 38 ஆண்டுகள் (கிபி 1620-1658) ஆட்சி செய்து இருக்கிறார்கள். போர்த்துக்கேயர் ஆட்சியைப் பிடித்த பின்னரும் யாழ்ப்பாண இராச்சியம் என்ற பெயர் தொடர்ந்து இருந்து வந்தது.

ஒல்லாந்தர் 138 ஆண்டுகளும் (கிபி 1658-1796). ஆங்கிலேயர் 153 ஆண்டுகளும் (கிபி 1796-1948) யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சி செய்தார்கள்.

இதில் 138 ஆண்டுகள் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தர் மொழியும் அவர்களது பழக்க வழக்கங்களும் மறைந்துபோக 37 ஆண்டுகள் மட்டும் ஆட்சி செய்த பரங்கியர் (போர்த்துக்கேயர்) மொழி, பழக்க வழக்கங்களுமே நிலைத்து விட்டது.

கௌமுதி ஆசிரியர் ஆரியசக்கரவர்த்திகள், பரங்கியர், ஒல்லாந்தர் காலத்து 'வரலாற்றை' நூல் முழுதும் ஆங்காங்கே பதிவு செய்து வைத்திருக்கிறார். அதில் சில மைல்கற்களை மட்டும் நூலாசிரியர் உரைநடையில் கீழே தரப்படுகிறது.

யாழ்ப்பாணத்துக்கு வழங்கிய பழம் பெயர்கள்: புண்ணியபுரம், காந்தருவநகரம், வீணாகானபுரம், எருமைமுல்லைத்தீவு, நாகத்தீவு, மணற்றிடர்.

பழுதுற்றிருந்த திருக்கோணேசர் ஆலயத்தை யாத்திரைக்கு வந்த குளக்கோட்டரசன் புதுப்பித்து திருப்பணி செய்தான்.

வன்னியர் ஆண்ட பகுதி வன்னிநாடு எனப் பட்டது. இவ்வன்னிநாடு முற்காலத்தில் மிகச் செழிப்புற்ற நெல்வயல்களையுடையதாய் நீர்வளம் பொருந்தியதாய்ச் செந்நெல் விளைந்திட அதிக ஐசுவரியத்தைக் கொடுத்தது. அதனால் வன்னியர் மிகச் செருக்குற்று வாழ்ந்தனர்.

யாழ்ப்பாணர் என்பவர்கள் மூவகைப் பாணருள் ஒருவர். இப்பாணர் தமிழகத்துப் பழங்குடிகளுள் வைத்து எண்ணப்படுவோர் என்பதை ''துடியன் பாணன் பறையன் கடம்பன் என்றிந்நான்கல்லது குடியுமில்லை'' என்னும் புறச்செய்யுளாற் (325) காணலாம். பாணருடைய பொதுத் தொழில் மீன்பிடித்தல். இப்பாணர்கள் குடியிருந்தவிடம் யாழ்ப்பாணம் எனப்பட்டதென்பதே பொருந்தும் போலும்.

பொன்பற்றியூர் வேளாளன் பாண்டிமளவனே சிங்கையாரியன் என்னும் சூரியகுலத் தோன்றலையும், மந்திரி புவனேகவாகு, ராஜகுரு கெங்காதர ஐயரையும், அரசனது பரிவாரத்தையும் அழைத்து வந்து நல்லூரைத் தலைநகராக்கி அரசிருக்கையை ஸ்தாபித்தான்.
செயவீரசிங்கை ஆரியச்சக்கரவர்த்தி ஆறாம் புவனேகவாகுவுடன் யுத்தம்பண்ணி அவன் சேனையை அடக்கி வெற்றியடைந்து கிபி 1458இல் இலங்கை முழுவதையும் ஒரு குடைக்கீழ் பன்னிரண்டு வருஷகாலமாய் அரசு புரிந்தான்.

யாழ்ப்பாணநாடு முழுதும் அன்னியர்கைப்பட்டகாலம் 1620ம் ஆண்டேயாயினும் அதற்கு ஒரு நூறாண்டுக்கு முன்னரே பறங்கியர் நம்நாட்டின் அரசுநிலையோடு சம்பந்தப்படத் தொடங்கி விட்டனர். கிபி 1560ம் ஆண்டு பரங்கியர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற கொச்சியில் இருந்து 99 கப்பல்களோடு மன்னார் வந்து சேர்ந்தனர். பின்னர் பூநகரி வழியாக கொழும்புத்துறை வந்து நல்லூர் மீது படையெடுத்தனர். வன்னிக்குப் பின்வாங்கிய சங்கிலி பரங்கியருடன் சமாதான உடன்படிக்கை எழுதி ஆண்டுதோறும் 12 கொம்பன் யானைகளையும், 1200 ''பதக்க''மும் திறைகொடுக்கவும் கிறித்தவர்களை ஒடுக்காதிருக்கவும், பட்டத்துக்குமாரனை அவனது முதலிமார் இருவரோடும் பிணையாகப் பறங்கியரிடம் ஒப்புவிக்கவும் ஒழுங்கு செய்யப்பட்டது.

1590ல் பெரியபிள்ளை இறக்க ''ராசராசதேசமகாராசசேகரம்" அரசனானான். இவன் சங்கிலியின் மகன் போலும். 1591ல் பரங்கியர் இரண்டாவது முறையாக படையெடுத்து வந்து கொழும்புத்துறையில் வந்திறங்கினர். பின் நடந்த போரில் அரசன் சிறைபிடிக்கப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்டான். அவன் தலையை ஒரு தண்டத்தில் தொங்க வைத்தனர். மனைவி மக்கள் சிறைபிடிக்கப்பட்டனர். 1591இல் பரராசசேகரபண்டாரத்தை பரங்கியர் யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனாக பரங்கியர் முடிசூட்டி வைத்தனர்.

பரராசசேகரன் இறக்க. அவனது மூன்று வயசு மகன் அரசுரிமைக்காரனானான். அவன் வயசு காரணமாக அனது மாமன் (அல்லது சிறியதந்தை) அரசகேசரியைப் பறங்கியர் பரிபாலகனாக்கினர். காக்கோ இளவரசனின் மகன் சங்கிலிகுமாரன் அவனைக் கொன்று இளவரசனைத் தன்னோடு வைத்துக் கொண்டு பிரதி காவலனாய் அரசாண்டான். அவனுக்கு எதிராக கலகங்கள் இடம்பெற்றன. சங்கிலிகுமாரன் பறங்கியருக்குச் சிறை கொடுக்க மறுக்கவே அவனுக்கு எதிராய் 1618ம் ஆண்டு பிலிப்பெ ஒலிவேறா தலைமையில் 150 பறங்கியரும் 3000 ''லஸ்கறீன்'' களும் கொண்ட படை கரைமார்க்கமாய்ச் சென்று பூநகரியைச் சேர்ந்து யாழ்ப்பாணத்தினின்றும் சங்கிலி தானே அனுப்பிய (பரங்கியர் தன்னைக் கொல்ல வரவில்லை திறைகொள்ள வருகிறான் என்று சங்கிலி எண்ணினான்) தோணிகளில் ஏறிக் கடல்கடந்து பண்ணைததுறையிருந்த பறங்கியரின் குடியேற்றத்தை அடைந்தான்.

போரில் தோற்கடிக்கப்பட்ட சங்கிலியும் மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு கோவாவுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு விசாரிக்கப்பட்டு கொலைத் தண்டனைக்கு ஆளானான். கொலை செய்யப்படு முன்னர் அவன் கிறித்தவனாகி டொன் பிலிப் என்ற நாமம் சூட்டப்பட்டான். அவன் மனைவியும் டோனா மகறிடா தெ அஸ்திரியா என்னும் பெயர் சூடி ஞானஸ்நானம் பெற்றாள். அதன் பின் சங்கிலியை சந்தை வீதியில் இரத்தினக் கம்பளத்தின் நடுவே சிவந்த பட்டுமெத்தையொன்றிட்டு அதன் மேலே அவனை வைத்து சிரங் கொய்தனர்.

(யாழ்ப்பாணத்து கடைசி அரச தோன்றல்களுக்கு ஏற்பட்ட கதியை நூலின் 70-75 பக்கங்களில் காண்க)

தஞ்சாவூர் நாயக்கன் யாழ்ப்பாணத்தை செயிக்க இன்னுமொரு கடைசிப் பிரயத்தனம் செய்வானாயினான். தஞ்சாவூர் சேனை வல்வெட்டித்துறையில் தரையிறங்கி ஓர் குளக்கரையிலுள்ள பனந்தோப்பில் பாளையமிட்டு இருக்கிறதென அறிந்து தேமோற்றா இரகசியமாய் சென்று மூன்றாம் சாமத்தில் போர்ப்பறை அறைந்து கூக்குரலிட தமிழர் திகிலடிபட்டுக் குதிரையிலேறிப் போவோரும், திசைதப்பி அலைவோருமாய் களைப்புற பறங்கியர் பின்தொடர்ந்து 1200 பேரைச் சிரங்கொய்தனர்.

1627ம் ஆண்டு மாசிமாசம் பெரும் புயலொன்று வீச கடல் பொங்கி கரைப்பட்டணங்களுட் புகுந்து வீடுகளை வீழ்த்தியும் உயிர்ச்சேதம் விளைத்தும் பயங்கர விபத்துண்டாக்கியது.
ஒலிவேறா யாழ்ப்பாணத்தை பறங்கியருக்காக்கின நாள் முதல் கத்தோலிக்கவேதம் இங்கு முன்னிலும் அதிக விரைவாய்ப் பரவுவதாயிற்று.

தங்கள் சமய போதனையின்படி சுதேசிகள் சகலரையும் சமயவிஷயத்தளவில் தங்களோடு ஒரு படியில் வைத்து நோக்கினர். சுதேசிகளோடு விவாகசம்பந்தம் கலக்கவும் பின்னிட்டாரில்லை. பெரிய உத்தியோகஸ்தரான பறங்கியர் சிலர் யாழ்ப்பாண உயர்குலவேளாளருட் பெண்ணெடுத்ததுண்டு. உயர்குல வேளாளரும் பறங்கியர் பெண்களை வதுவை செய்து கொண்டனர்.

பரங்கியர் தாம் ஓர் பட்டணத்தைப் பிடித்துக்கொண்டவுடன், அதற்கு ஓர் எல்லை குறித்து, அவ்வெல்லைக்குள் 'மகமதியர்' ''விக்கிரகராதனைக்காரர்' ஆதியோருள் ஒருவரும் இருக்கப்படாதென்று பறைசாற்றுவிப்பர். எல்லைக்குளிருக்க விரும்புவோர் கிறீஸ்தவர்களேயாகவேண்டியது.

ஒலிவேறா யாழ்ப்பாணத்தில் பெரிதும் சிறிதுமான 500 சைவ ஆலயங்களை இடிப்பித்தானென்றதை அவனுக்கோர் புகழ்ச் செய்தியாக பரங்கியர் எழுதி வைத்திருக்கின்றனர்.

ஒல்லாந்தர் காலப் பழங்கதைகளிலும் பறங்கியர்காலத்துப் பழங்கதைகளே இன்றைக்கும் வீடுகளில் பெண்பேதையர்கள் சிறுவர்களாலும் சொல்லப்படக் கேட்கின்றோம்.

சுண்ணாகச் சந்தையிலே -பறங்கியர்
சுங்கானைப் போட்டுவிட்டார்
பார்த்தெடுத்தவர்க்குப் - பறங்கியர்
பாதிச்சுங்கான் கொடுப்பர் என்றும்
மாட்டிறைச்சியாம் -பறங்கிக்கு
மானுமிணங்காதாம்
சுட்டகருவாடாம் -பறங்கிக்குச்
சோறுமிணங்காதாம் என்றும்
என்னபிடிக்கிறாய் அந்தோனி - நானும்
எலிப்பிடிக்கிறேன்சிஞ்ஞோரே
பொத்திப்பொத்திப்பிடி அந்தோனி -அது
பிட்டுப்போட்டோடுதுசிஞ்ஞோரே

என்றும் வரும் மழலைப்பாட்டுக்களையும் காண்க. கிஞ்ஞோர் என்றது 'நயினார்' என்றது போலக் கீழானோர் மேலோரைவிழிக்கும் பரங்கிச் சொல்லு.

யாழ்ப்பாணக் கோட்டை 1624ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1632ம் ஆண்டு முடிவுற்றது. 1658 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தைப் பிடிக்க ஒல்லாந்தர் படை மன்னார் வழியாக வன்னியை ஊடறுத்து பூநகரியைச் சேர்ந்து அங்கிருந்து தோணிகளில் சாவகச்சேரியை அடைந்தனர். பங்குனி மாதம் 20 ந் திகதி யாழ்ப்பாணக் கோட்டையை ஒல்லாந்தர் முற்றுகையிட்டனர். கோட்டைக்குள் போர்வீரரும் கிரகஸ்தருமாய் 3000 சனங்கள் அடைக்கலம் புகுந்திருந்தார்கள்.

ஓயாமற் சொரிந்து கொண்டிருந்த குண்டுமாரியால் காயம்பட்டோரும், மடிந்தோரும், பட்டினியால் வாடி இறந்தோருமாய் வெகு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தனர். இறந்தோர் தொகை 1100 எனக் கணக்கேற்றப்பட்டது. மூன்றரை மாத முற்றுகையின்பின் சனங்கள் அப்பால் போசனத்துக்கு வழியின்றி அம்பாயப்பட்டனர். பழுதுபட்ட அரிசியே மீந்திருந்தது. உப்பு இல்லாமற் போய்விட்டது. பட்டினியாற் சனங்கள் நாய்களையும் பூனைகளையும் பிடித்துத் தின்றார்கள். கொள்ளை நோயும் தலைகாட்டிற்று. பறங்கியர் ஆனிமாசம் 21ந் திகதி தென்கிழக்கு அலங்கத்திலே வெண்கொடியுயர்த்திக் சமாதானங்கேட்டனர்.

சனங்கள் வெளியேறிய பின் ஒருநாள் இராணுவ உத்தியோகஸ்தர் கோட்டையைக் கொள்ளையடிக்க விடப்பட்டார்கள். மறுநாள் போர்வீரர்கள் அங்கு எடுக்க விரும்பிய பொருட்களை எடுக்க விடப்பட்டனர். (வளரும்)முப்பத்திமூன்று அகவையில் சிந்தாமணி நிகண்டு இயற்றிய போதாகாசிரியர்
(6)
 

ஓல்லாந்தர் யாழ்ப்பாணத்தைப் பிடித்த பின்னர் அவர்களுக்கு எதிராக பூதத்தம்பி முதலியும் மன்னாரில் ஒரு தலைவனும் பரங்கியர் ஐவரும் சதி செய்தார்கள் என்று மனுவேல் அந்திராடோ என்ற சிங்கள முதலி செய்த முறைப்பாட்டை அடுத்து ''குற்றவாளிகள் நெஞ்சந் திடுக்கிடத்தக்க மகா கொடூரமாய்க் கொலை செய்யப்பட்டனர். குற்றவாளிகள் சிலுவைகளிற்கட்டி நெஞ்சைப்பிளந்து ஈரலைப் பிடுங்கி அவர்கள் முகத்தில் எறிந்து விடப்பட்டது.'' பூதத்தம்பி கொலை செய்யப்பட்டதை யாழ்ப்பாண வைபமாலை மாறுபாடாக வரைந்துள்ளது என கௌமுதி ஆசிரியர் குறிப்பிடுகிறார். மெஸ். முத்துத்தம்பிப்பிள்ளை அதனை மேலும் கற்பனாலங்காரமாய் விரித்து எழுதினார் என்றும் குறிப்பிடுகிறார். இந்தக் கதைகள் பின்னால் பூதத்தம்பி நாட்டுக் கூத்தாக நடிக்கப்பட்டு வந்தன.

வடபகுதியில் சிங்கள இராணுவம் முகாம்கள் அமைப்பதற்கு ஒரு இலட்சம் பனைகளைத் தறித்துப் போட்டார்கள். ஒல்லாந்தர் காலத்திலும் பனைகள் தறிக்கப்பட்டு கொழும்பு, நாகபட்டினம் போன்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்தனர். 1677ம் ஆண்டுக் கணக்குப்படி 50,687 கைமரம் முதலியவைகளும், 26,040 சலாகைகளும் ஏற்றப்பட்டன.

தலைவரி, நிலவரி, தானியவரி (பத்திலொன்று), தென்னைவரி, புகையிலைவரி, சீலைவரி, ஆபரணவரி, மீன்வரி, ஆயவரி, சந்தைவரி, தவறணைவரி, தரகுவரி, கல்யாணவரி ஒல்லாந்தரால் விதிக்கப்பட்டன. கல்யாணவரியில் இருந்து தப்ப ஏழைகள் பிள்ளையாரைப் பிடித்து தேங்காய் உடைத்து கற்பூர தீபங்காட்டி நெருங்கிய பந்துக்களை மாத்திரம் அழைத்து அவர்கள் முன்பாக கூறைகொடுத்து தாலி கட்டி விவாகத்தை முடித்துக் கொள்வார்கள்.

தாலி கட்டும் உரிமை எல்லா சமூகங்களுக்கும் இருந்தது. ஆனால் சமூக ஏணியில் அடிமட்டத்தில் இருந்தவர்கள் விடிய ஐந்து நாளிகை யுண்டென்னுமளவில் விவாகத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

ஆண்களெல்லாம் பெண்களை கீழாக மதித்து நடத்துவதினால் பெண்கள் அருமையாகவே ஆண்களோடு கூட ஒரு பந்தியிலிருந்து சாப்பிட விடப்பட்டார்கள்.

பரங்கியர் காலத்தில் புறத்தே கிறிஸ்தவர்களாக பாசாங்கு பண்ணிக்கொண்டு அகத்தே சைவராக இருந்த சிலர் தாம் தமது சமயத்தைப் பிரசித்தமாய் அநுசரிக்க இடந்தரவேண்டுமென ஒல்லாந்த கொமாண்டோருக்கு விண்ணப்பம் செய்தனர். அது மறுக்கப்படவே அந்தரங்கத்திலே தமது சமய வழிபாடுகளைச் செய்ய வேண்டியவராயினர். 'சைவச்' சடங்குகளைப் பயிலுவோர் கண்டு பிடிக்கப்பட்டபோதெல்லாம் கடுந்தண்டனை விதிக்கப்பெற்றனர். பின்னர் சற்றுச் சற்றாக இக்கட்டுப்பாடுகளை நெகிழவிட்டார்கள்.

1877ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் கொடிய கொள்ளை நோயும் கொடிய பஞ்சமும் ஏற்பட்டது. பஞ்சத்தின் கொடுமையால் சிலர் தங்கள் அருமைப் பிள்ளைகளை விற்று உண்டனர். இறந்த ஒருவரின் உடலை வெட்டிப் பார்த்தபோது வைத்தியர் அவரது வயிற்றில் புல்லுக்கத்தை இருக்கக் கண்டார். உணவில்லாக் கொடுமையால் புல்லைச் சாப்பிட்டு மரித்ததாக எண்ணப்படுகிறது.

வண்ணார்பண்ணையில் கஞ்சித் தொட்டி வைத்து பஞ்சத்தினால் வருந்தியவர்களுக்கு நாடோறும் கஞ்சி வார்த்தனர்.

1879ம் ஆண்டு வைகாசி 3ம் நாள் இரவு வடமராட்சியிலுள்ள கரவெட்டி வல்லனிற் பிள்ளையார் கோவிலிற் தீ விபத்து சம்பவித்தது. சாமியார் உள்வீதியுலாவித் தெருவீதியெழுந்தருளுவதற்காகக் கோபுரவாசலைச் சமீபிக்கா முன்னே சூலவிளக்கொன்றிலிருந்துதவக்கினி பந்தலிற்றூக்கிய வாகைமாலையொன்றிற்றாவி, விசுவரூபங்கொள்ளப் பந்தர்ச்சோடினைகள் கடதாசிகளும் சீலைகளுமானதால் அந்த அக்கினிதேவனுக்கு எளிதாக உணவாயிருக்கவே........... இந்த விபத்தில் நாற்பதுக்கு மேற்பட்டோர் பிரேதமானார்கள். இன்னும் முக்கால் வேக்காடு அரை கால் வேக்காடாய் அபாயப்பட்டோர் அநேகர்.

யாழ்ப்பாணத்திலே வடமராட்சியிலே வல்வெட்டித்துறைக்குக் கிழக்கே திக்கம் என்ற இடத்திற் சீனி செய்வதற்குப் பெரிய தொழிற்சாலை கட்டப்பட்டது.

முதலாவது உலக யுத்தத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணிகள் பலர் வேலை இழந்தனர். யுத்தத்தினால் கப்பல் போக்கு வரத்துக் குறைந்தபடியால் அரிசி, நெல், புடவைகள் வரத்துக் குறைந்துபோக அரிசி ஒரு படி 30 சதத்திற்கு மேற்படவும், ஒரு யார் காரிக்கன் ஒரு ரூபாயாகவும் (முன்னர் 25 சதம்) ஒரு ரூபாய்க்கு விலைப்படவும், ஒன்றரை ரூபாவிற்கு விற்ற மல்வேட்டி 6 ரூபாவரையில் விலைப்படவும் ஏதுவாயிற்று.

யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் சிங்கையாரியன் அல்லது கூழங்கைச் சக்கரவர்த்தி தொடக்கம் (கிபி 950) சிங்க பரராசசேகரன் காலம்வரை (கிபி 1530) 13 அரசர்கள் 580 ஆண்டுகள் ஆண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (பக்கம் 18). இதன் அடிப்படையில் ஒரு அரசனது சராசரி ஆட்சிக் காலம் 45 ஆண்டுகள் நீடித்திருக்கிறது. இது பொருத்தமாகப் படவில்லை. ஆரியச் சக்கரவர்த்திகள் மொத்தம் 18 பேர் (செண்பகப் பெருமாள் நீங்கலாக) கிபி 1215 தொடக்கம் கிபி 1619 வரை 404 ஆண்டுகள் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்டார்கள் என்பதே இன்றைய வரலாற்று ஆசிரியர்களது முடிவாகும்.

எனவே யாழ்ப்பாண வைபவமாலை, யாழ்ப்பாணச் சரித்திரம் போன்றவற்றில் காணப்படும் கால மயக்கம் கௌமுதியிலும் இடம்பெற்றுள்ளது. இன்றைய கண்ணோட்டத்தில் இவர்கள் வரலாற்று ஆசிரியர்களாகக் கருத முடியாமல் இருப்பதே இந்த கால மயக்கத்துக்குக் காரணமாகும்.

இருந்தும் யாழ்ப்பாண வைபவமாலையைவிட கௌமுதி நிறைய வரலாற்றுச் செய்திகளைப் பதிவு செய்துள்ளது.

தற்செயலாக அன்றைய நாள் வெளியிடப்பட்ட மற்றைய நூலான கந்தரலங்கார உரையாசிரியர் இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச. வயித்தியலிங்கபிள்ளை (1843-1901) பற்றி கௌமுதி ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார் (பக்கம் 222). யாழ்ப்பாணத்து ''விஷேச மனுஷர்'' பட்டியலின் கீழ் வல்வை வயித்திலிங்கபிள்ளையின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச. வயித்தியலிங்கம்பிள்ளளை பற்றி ஓர் அறிமுகக் கைந்நூல் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களால் எழுதப்பட்டு 1975ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுருக்கமாகவும் காய்தல் உவத்தல் இல்லாமலும் இயற்றமிழ் போதாகாசிரியர் வயித்தியலிங்கப்பிள்ளை அவர்களது தமிழ்ப் பணியும் சைவப் பணியும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

இயற்றமிழ் போதாகாசிரியர் வயித்திலிங்கம்பிள்ளை அவர்களை நாவலரோடு ஒப்பு நோக்கி ஆராயும்பொழுது, போதாகாசிரியர் நாவலர் வழியை இலக்கிய நூற்பதிப்பிலும், அச்சுயந்திரசாலை, பிறமத கண்டனம், சைவாசார வாழ்க்கை நடத்துதல் வரை பல விடயங்களிற் பின்பற்றியுள்ளது தெரியவருகிறது எனப் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளது சரியான மதிப்பீடாகும்.

நாவலரிடம் காணப்பட்ட சமூக, பொருளியற் பன்முக செயற்பாட்டை போதாகாசிரியரிடம் காணமுடியாதிருக்கிறது அவர் "சைவத்தையும் தமிழையும்" மட்டும் போற்றிய இலக்கிய அறிஞர் எனச் சொல்லியிருப்பதும் சரியே.

போதகாசிரியர் பெரும்பாலும் புராணங்களுக்கு உரை எழுதுவதிலேயே அதிக ஈடுபாடு கொண்டிருந்திருக்கிறார். கந்தரலங்காரம் உட்பட நம்பியகப்பொருள் விளக்கவுரை, கந்தபுராணம் வள்ளியம்மை தெய்வயானை திருமணப்படலம், சூரபன்மன் வதைபடலம் போன்றவற்றிற்கு உரை எழுதியுள்ளார். கந்தபுராணம் அண்டகோசப் படலததுக்கு கந்தரோடை வி. சிவசுப்பிரமணிய ஐயர் எழுதிய உரையை 1885ம் ஆண்டு திருத்தி வெளியிட்டார். சிவராத்திரி புராணம், சீமந்தளிபுராணம், கஞ்சனமாலை புராணம் முதலியனவும் அவரால் பதிப்பித்து வெளியிடப்பட்டவை ஆகும்.

தொல்காப்பியம், வீரசோழியம் பதிப்பித்த சி.வை. தாமோதரனார் முயற்சியாலேயே வயித்தியலிங்கம்பிள்ளை அவர்களுக்கு 'இயற்றமிழ்ப் போதகாசிரியர்' என்ற பட்டம் மதுரையில் வழங்கப்பட்டது. போதாகாசிரியருக்குப் புகழைத் தேடிக் கொடுத்தது அவர் இயற்றிய சிந்தாமணி நிகண்டாகும். இக்கால அகராதியை ஒத்த நிகண்டு அன்றைய பாரம்பரிய கல்விபயில்வோருக்கு மிகவும் பயன்பட்டது. இலக்கிய இலக்கண அறிவு நிரம்பிய ஒருவராலேயே நிகண்டினை இயற்ற முடியும். அதனை இயற்றியபோது அவருக்கு முப்பத்து மூன்று அகவையே ஆகியிருந்தது.

'சாதிநிர்ணய புராணம்' அவர் இயற்றி வேறொருவர் பெயரில் வெளியிட்டதாகத் தெரிகிறது. புராணம் என்றதும் நூறு, ஆயிரம் பாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்ப்பவர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாவார்கள். காரணம் இதில் காணப்படும் பாடல்கள் 17 மட்டுமே. 'பண்டைய நூலிற் கூறும் பன்னிருஞ் சாதி பேதத் தொண்டுள பெயர்கள் இந்நாட்டு உன்றுதல் இன்மையாலே கண்டுள சிலவற்றைத்தாங் கருத்தினில் உணர்ந்து உரைத்தார் மண்டிலம் அனைத்தும் யாரே வகுத்திட வல்லாரன்றே" என்ற பாடலுடன் புராணம் முற்றுப்பெறுகிறது!
இயற்றமிழ்ப் போதகாசிரியர் வயித்திலிங்கபிள்ளை இயற்றிய கந்தரலங்கார உரைக்கு அவரது ஆசிரியர் அ.சிவசம்புப்புலவர் நீண்ட உரைச்சிறப்புப்பாயிரம் பாடியுள்ளார். இஃது மாணவன் மீது ஆசிரியர் வைத்திருந்த மதிப்பை எடுத்துக் காட்டுகிறது.

கருணைக்கு ஒரு அருணகிரியார் பாடிய கந்தரலங்கார மூலமும் வல்வை இயற்றமிழ்ப் போதாகாசிரியர் இயற்றிய உரையும் முதன் முதல் பதித்து வெளியிட்ட ஆண்டு தெரியவில்லை. இரண்டாவது பதிப்பு 1912ம் ஆண்டு வெளிவந்தது. இப்போது மூன்றாம் பதிப்பு 90 ஆண்டுகள் கழித்து வெளிவந்துள்ளது. பதிப்பு நன்றாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் கூடிய கவனம் எடுத்திருக்கலாம்.

உரை தெளிவாக தடித்த எழுத்தில் பதியப்பட்டதுபோல் பாடல்கள் பதியப்படவில்லை. எழுத்துக்கள் மிகவும் மங்கலாகத் தெரிகிறது. பாடல்களின் எழுத்துருவத்தை மாற்றியதோடு நில்லாமல் அதனை தடித்த (Bold) எழுத்தில் மாற்றியிருந்தால் பாடல்கள் கண்ணுக்கு பளிச்சிடுகிறமாதிரி இருந்திருக்கும்.

போதகாசிரியர் எழுதிய ஏனைய நூல்களையும் தேடிப்பிடித்து அவற்றை மறுபதிப்புச் செய்ய வேண்டும். குறிப்பாக அவர் எழுதிய சிந்தாமணி நிகண்டை மறுபதிப்புச் செய்ய வேண்டும். தமிழறிஞர்களுக்கும் மற்றும் தமிழ் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் அது மிகவும் பயன் உடையதாக இருக்கும். (அடுத்த கிழமை நிறைவுறும்)


 

'சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச்....'
(7)
 

ரொரன்றோ பெரு நகரத்தில் கிழமை தோறும் குறைந்தது இரண்டு மூன்று கலை விழாக்களாவது நடைபெறுகிறது. இதில் பெரும்பாலானவை இசைஇ நடனம், நாட்டிய நாடகம் போன்ற மென்கலைகளுக்கே முதலிடம் கொடுக்கின்றன. அப்படிச் செய்தால்தான் கூட்டம் கூடும் என்பது விழா அமைப்பாளர்களின் எதிர்பார்ப்பு.

இல்லாவிட்டால் கூட்டத்தைச் சொர்க்க தமிழக திரையுலகில் இருந்து யாரையாவது அழைத்து வரவேண்டும். குறைந்தபட்சம் குமரிமுத்தையாவது அழைத்து வரவேண்டும்! குமரிமுத்து குறைந்தவர் அல்ல. அதிமுக மேடைப் பேச்சாளர்! அவரது முகத்துக்கு வாக்குப் போடுகிறவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.

தனியே இலக்கியக் கூட்டம் என்றாலும் கூட்டம் சேராது. இயலை, இசையை, நாடகத்தை சுவைக்க கலையுணர்வு இருந்தால் போதும். ஆனால் இலக்கியம் அப்படியில்லை. அதற்கு இலக்கிய அறிவு வேண்டும். இலக்கிய உணர்வு வேண்டும்.

பொதுவாகக் கூறினால் நூல் வெளியீடு என்றால் கூட்டம் சேருவதில்லை. திருமணத்துக்குச் சொல்வதுபோல வெற்றிலை வைத்து அழைத்து பின்னர் நேரிலும் தொலைபேசியிலும் அழைத்து ஞாபகத்படுத்தி வருந்திக் கூப்பிட்டால்தான் கூட்டம் சேருகிறது.

இயற்றமிழ் போதகாசிரியர் ச.வயித்தியலிங்கபிள்ளை அவர்களின் நூற்றாண்டு விழாவென்று அறிவிக்கப்பட்டாலும் கருணைக்கு அருணகிரிநாதர் இயற்றிய கந்தரலங்கார மூலத்துக்கு எழுதிய உரை நூலையும் க. வேலுப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாண வைபவ கௌமுதி நூலின் இரண்டாம் பதிப்பையும் வெயியீடு செய்து வைப்பதே விழாவின் உண்மையான நோக்கமாக இருந்தது.

விழா நிகழ்ச்சிகள் மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகும் என்று போட்டிருந்தாலும் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்க 7.00 மணிக்கு மேலாகிவிட்டது. 6.00 மணி என்று போட்டால் தமிழ் நேரத்தின்படி 7.00 மணிக்கே தொடங்குவார்கள் என்று கணித்து நேரங் கழித்து வருபவர்கள் இருக்கிறார்கள்.

வழமையான நிகழ்ச்சிகளோடு விழா ஆரம்பமானது. கனடா நாட்டுப் பண் பாடப்பெற்றது. ஆனால் தமிழீழ நாட்டுப்பண் பாடப்பெறவில்லை. காரணம் பாட இருந்தவர்கள் வருகை தரவில்லை.

பொதுவாக இப்படியான நிகழ்சிகளை தமிழ்மொழி வாழ்த்தோடு ஆரம்பிப்பதே நல்லது. பாரதியாரின் வாழ்க நிரந்தரம் வாழ்க் தமிழ் மொழி வாழிய வாழியவே எனத் தொடங்கும் தமிழ்மொழி வாழ்த்து அல்லது மனோன்மணியம் சுந்தரனார் பாடிய பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு என்று தொடங்கும் தமிழ்த் தெய்வ வணக்கப் பாட்டை பாடினாலே போதுமானது.

உண்மையில் பாரதியாரின் தமிழ்மொழி வாழ்த்துப் பாடல்தான் எல்லோரும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பாடுவதற்கு எளிமையானது. இனிமையானது. ஆனால் இப்போது புதிய புதிய ''தேசிய கீதங்கள்'' பாடப்பெறுகின்றன. அவை தேவைதானா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

'ஆசி' யுரையை சிவதிரு குமாரசுவாமிக் குருக்கள் ஆற்றினார். முந்திய காலங்களில் இப்போதுள்ள வணக்கம் நடைமுறையில் இருக்கவில்லை. பள்ளிக்கூட வாத்தியார் வகுப்பறைக்குள் நுளைந்ததும் 'நமஸ்காரம்' என்று சொல்லித்தான் (மனதுக்குள் மெல்ல சவர்க்காரம் என்று சொல்லிக் கொண்டு) தமிழ்ப் பள்ளிக் கூடத்தில் வரவேற்போம். பின்னர் அது வணக்கமாக மாறியது. அதேபோல் ஸ்ரீ, ஸ்ரீலஸ்ரீ, ஸ்ரீமஸ்து, சுபமஸ்து திருவாக மாற்றப்பட்டது. அதற்குப் பெரும் போராட்டமே நடத்தப்பட்டதென்பது வேறு கதை. அதே போல் 'விவாஹ சுப முகூர்த்தப் பத்திரிகை' அல்லது 'கல்யாண விஞ்ஞாபனம்' இன்று திருமண அழைப்பிதழ் என்றோ மன்றல் மடல் என்றோ வந்து விட்டது. கும்பாவிஷேகம் தனித் தமிழில் குடமுழுக்காக மாறிவிட்டது.

மேலும் 'ஸஷ்டியப்த பூர்த்தி' மணிவிழா என்றும், 'ருதுமங்கள ஸ்நானம்' பூப்பு நீராட்டு விழா என்றும் 'கிருஹப்பிரவேசம்' புதுமனை புகுவிழா என்றும் தூய தமிழாக மாற்றப்பட்டு விட்டன. இருந்தும் 'ஆசி' என்ற வடசொல் போக மாட்டேன் என்கிறது.

ஒரு பழைய திரைப்படத்தில் மறைந்த கலைவாணர் கிருஷணனைப் பார்த்து ஒரு ஐயர் 'உங்களுக்கு என் ஆசீர்வாதம்' என்பார். உடனே கலைவாணர் 'ஆசி' எனக்கு 'வாதம்' உமக்கு என்று கிண்டல் அடிப்பார்! ஆசியுரையை வாழ்த்துரை என்று போடுவதே சரியானது. மற்றப்படி கனக மனோகரன் கைவண்ணம் போலும் நிகழ்ச்சி நிரலில் தமிழ் 95 விழுக்காடு பளிச்சிட்டது!

தலைமை உரையாற்றிய கனக மனோகரன் (அது என்னமோ அவரைப் பார்க்கும் போதெல்லாம் அகத்தியரின் நினைவு வருகிறது) வழக்கம் போல ஆங்கிலக் கவிதைகளையும் மேற்கோள் காட்டிப் பேசினார். அவர் பேசிய பேச்சு பல நாட்கள் ஆயத்தம் செய்து பேசியதுபோலத் தெரிந்தது. காரணம் கையில் கத்தை கத்தையாகக் குறிப்புகள் வைத்திருந்தார். 'எனக்கு 15 நிமிடங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எனது பேச்சை 3 நிமிடங்களில் முடித்து விடுகிறேன்' என்று சொன்னபோது 'அப்பாடா' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

அப்புறம் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு முன்னரும் பின்னரும் நீண்ட அறிமுக அல்லது நன்றிவுரை ஆற்றி, மிச்சம் பிடித்த 12 நிமிடங்களுக்கு வட்டி போட்டு இரண்டு மடங்கு நேரத்தை எடுத்துக் கொண்டார்! அது சரி கனடா நாட்டுப் பண்ணுக்கும் (தேசிய கீதத்துக்கும்) மூன்று நிமிட அறிமுகவுரை தேவைதானா?

பேராசிரியர் வண. யோசேப் சந்திரகாந்தன் பெயரைத் தலைவர் பேராசிரியர் யோர்ஜ் சந்திரகாந்தன் என்று சொன்னார் (நிகழ்ச்சி நிரலிலும் அப்படித்தான் பிழையாகப் போடப்பட்டிருந்தது). எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த அடிகளார் இருக்கையில் கொஞ்சம் நெழிந்ததுபோல எனக்குப் பட்டது! சரி அந்த விடுபாட்டைப் பின்னர் திருத்திய தலைவர் பேராசிரியர் வண. யோசேப் சந்திரகாசன் என்று பிழைக்கு மேல் பிழையை விட்டார். அதே போலத்தான் உதயன் ஏட்டின் ஆசிரியர் லோகேந்திரலிங்கத்தின் பெயரை லோகேந்திரன் என்று சரிபாதியாக ஈன இரக்கமின்றி வெட்டிப் போட்டார்!

பட்டினப்பாலையையும் தலைவர் விட்டு வைக்கவில்லை. அதிலிருந்தும் ஒரு மேற்கோள் காட்டினார். பட்டினப்பாலை காலத்தில் வல்வெட்டித்துறை பெரிய துறைமுகமாக இருந்ததற்கு (?) அந்த மேற்கோள் சான்றாகக் காட்டப்பட்டது.

வரவேற்புரை நிகழ்த்திய செல்வம் சுருக்கமாக அதே நேரம் பொருளோடு சொல்லி முடித்தார். தலைவரை அறிவிப்பாளராகத் தரம் இறக்காமல் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க இன்னொருவரை அமர்த்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

உதயன் லோகேந்திரலிங்கம கௌமுதி நூலைப்பற்றி எந்தக் கருத்துமே கூறவில்லை. வழமைபோல அவசரத்தில் நகுலசிகாமணியை வானளாவப் பாராட்டி விட்டு வாய்ப்புக்கு நன்றிகூறி தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார். ஒரு சடங்குக்கு அவரைப் பேச அழைத்தது போல எனக்குப் பட்டது.

அடுத்து பேராசிரியர் வண. யோசேப் சந்திரகாந்தன் சிறப்புரை வழங்கினார். அவர் கலந்து கொள்ளாத நூல் வெளியீட்டு விழாக்கள் இல்லை என்பதுபோல எல்லா விழாக்களிலும் அவரது முன்னிலை வந்துவிட்டது. எப்போதும் சொல்ல வேண்டிய கருத்துக்களை உணர்ச்சிக்கு இடங்கொடாது அறிவியல் தளத்தில் நின்று கொண்டு இரத்தினச் சுருக்கமாகச் சொல்லிஇ கொடுத்த நேரத்துக்குள் பேச்சை முடித்துக் கொள்ளும் திறமை அவரிடம் உண்டு. தமிழர்கள் எழுதும் வரலாற்று நூல்கள் பல்கலைக் கழக நெறிகளுக்கும் வரலாற்று அளவுகோலுக்கும் அமைய எழுதப்பட வேண்டும் என்ற கருத்தை அவர் எல்லா மேடைகளிலும் வலியுறுத்தி வருகிறார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எஸ். சூசைதாசன் நன்றாகப் பேசினார். ஆனால் நேரத்தின் அருமை தெரியாமல் நீண்ட நேரம் பேசினார். அந்தகக் கவி வீரராகவன் கதிரமலையை ஆண்ட செயதுங்கவரராசன் பெயரில் ஒரு பிரபந்தம் பாடினான். அதனைக் கேட்டு மகிழந்த அரசன் அவனுக்கு மணற்றிடல் என்னும் நாட்டைப் பரிசாகக் கொடுத்தான். யாழ்பாடிப் பரிசாகப் பெற்றதால் அதற்கு யாழ்ப்பாணம் எனப் பெயரிட்டான். இந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்த கதை. ஆனால் பொருத்தமில்லாத கதை. யாழிசைத்துப் பெற்றால் யாழ்ப்பாடி என்று மட்டும் பெயர் வந்திருக்க வேண்டும். மேலதிகமாகப் பாணன் என்ற பெயர் எங்கிருந்து வந்தது? இவற்றை நன்றாக ஆய்ந்து யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்ததிற்குரிய காரணிகளை விளக்கி இருந்தால் பயனுடையதாக இருந்திருக்கும்.

கவின் கலாலயா வழங்கிய கிராமிய இசை கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக இருந்தது. வயிரமுத்து திவ்வியராசன் நல்ல கம்பீரத்தோடு பாடினார். பக்க வாத்தியக்காரர்கள் எல்லோரும் நன்றாகச் செய்தார்கள்.

இப்படியான கிராமிய இசை மேலும் மேலும் வளர்வதற்கு தமிழ் உணர்வாளர்கள் ஆதரவு வழங்க வேண்டும். கிராமிய இசை எங்களது பரம்பரைச் சொத்துக்களில் ஒன்று. இப்போது தமிழிசை தமிழ் உணர்வு அடியோடு இல்லாத திரையுலக இசையமைப்பாளர்கள் பாடலாசிரியர்களிடம் சிக்கி மெத்தவும் சீரழிந்து வருகிறது.

இந்த இசை நிகழ்ச்சியை இன்னும் வெகுவாகச் சுவைத்திருக்கலாம். ஆனால் அதற்கு இடையூறாக ஒலிபெருக்கி யமனாக வந்துநின்று தொல்லை கொடுத்தது. கேட்பவர்களது காதுகள் இரும்புக் காதுகள் என்ற நினைப்பில் ஒலியமைப்பாளர் தொனியின் கன அளவை மிகவும் கூட்டி அவையோரது உயிரை வாங்கினார். திருமண விழாக்களிலும் இதே கதைதான். பொதுவாக ஒலி அமைப்பாளர்களுக்கு இசை எது, இரைச்சல் எது என்ற வேற்றுமை தெரியாமல் இருக்கிறது. அதனால் இந்த வதை நடக்கிறது!

நடன நிகழ்ச்சிகள் அனைத்தும் நன்றாக இருந்தன. இந்திரமஹா நடன கலாலயம் திருஞானசுந்தர் ஸ்ரீ ரமணன் வழங்கிய ''நாதவினோதங்கள்'', செல்வி. சொர்ணலதா சொர்ணவடிவேல் வழங்கிய ''எங்கள் தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்'', செல்வி சுபாசினி நடராசா வழங்கிய ''முருகன் பதம்'' வெகு நேர்த்தியாக இருந்தன.

இந்த விழாவில் எனக்குப் பிடித்த நிகழ்ச்சி சிவதிரு குமாரசுவாமிக் குருக்கள் நூல் பதிப்பாளர் நகுலசிகாமணி அவர்களுக்கு வழக்கமான பொன்னாடைக்குப் பதில் அசல் பட்டாடை போர்த்தி மேன்மைப் படுத்தியதுதான். நூறு டொலர் பெறுமதியான பட்டாடையைப் போர்த்துவதில் அழகும் இருக்கிறது. பயனும் இருக்கிறது.

பின்னர் அதே மேடையில் கௌமுதி நூலின் சீரமைப்புக்கு உழைத்த சாவையம்பதி ,. சுப்பிரமணியம் அவர்கட்கு நகுலசிகாமணி பட்டாடை போர்த்தி கனம் செய்தார். இந்த எடுத்துக்காட்டை பொன்னாடை போர்த்தத் துடிக்கிறவர்கள் பின்பற்றினால் நலமாக இருக்கும்!

சிறிபதி பேச மேடைக்கு வந்தபோது நேரம் 11 மணியை எட்டி விட்டது. நாற்காலிகளில் சரி பாதி வெறிச்சோடிக் கிடந்தன. சிறிபதியை நல்ல மேடைப் பேச்சாளர் என்றுதான் இதுவரை நான் எண்ணி இருந்தேன். அது தவறு என்பதை சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை என்ற அருணகிரியாரின் கந்தரலங்காரப் பாட்டை சீர்காழியை நினைவுபடுத்துவதுபோல் மிக அழகாகப் பாடி எண்பித்தார்.

அருணகிரியார் சந்தம் நிறைந்த திருப்புகழ் பாடல்கள் மூலம் தமிழுக்கு புதிய பொலிவும், வனப்பும் கொடுத்தவர். அவற்றில் வடமொழி அதிகமாகக் கலந்திருப்பது அவர் குற்றம் இல்லை. அது காலத்தின் குற்றம். அவர் பாடிய முதல் திருப்புகழில் சந்தம் கொஞ்சி விளையாடுவதைப் பார்க்கலாம்.

"முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்திக் குருபரன் எனவோதும்
.........................................................................."
அது மட்டும் அல்லாது தித்திக்கும் செந்தமிழை உளமாரக் காதலித்தவர். திருப்புகழ் கடவுள் வாழ்த்தில் அருணகிரிநாதர்-

"முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடி செய்த ............

எனக் குறிப்பிடுகிறார். முத்தமிழடைவு என்பது எல்லா மொழிகளுக்கும் முற்படுமாறு இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை அகத்தியர் கூற விநாயகர் எழுதினார் என்பது புராணம்.

இந்த விழாவினை பெருத்த முயற்சி எடுத்து வெற்றிகரமாக ஒப்பேற்றிய திருவாளர்கள் நகுலசிகாமணி, கனக மனோகரன், சித் பத்மநாதன். இந்திரசிகாமணி. சிறீதரன், திருமதி. நகுலசிகாமணி முதலியோர் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியவர்கள். இந்த விழா ஈழத்தமிழர் தங்கள் ஊர்பற்றியும் வேர்பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் ஒரு வரலாற்றுணர்வை, சிந்தனையை ஏற்படுத்தியிருக்கும் என நம்புகிறேன்.
(முற்றும்)