வானியலும் சோதிடமும்

ஆய்வுரை

(ஆசிரியர் கந்தர் சிவநாதன் எழுதிய காலங்காட்டி என்ற வானியல் நூலுக்கு எழுதிய ஆய்வுரை. இந்த  நூலின் வெளியீட்டு விழா ஸ்காபரோ பொதுமக்கள் மையத்தில் எதிர்வரும் செப்தெம்பர் 10, 2011  (சனிக்கிழமை) அன்று நடைபெற இருக்கிறது)

மிழர்களிடம் றிவியல் மனப்போக்கு (Scientific Temperament) ல்லாத காரணத்தால் அறிவியல் பற்றிய தேடலில் தமிழர்களுக்கு அவ்வளவு ஈடுபாடில்லை எனலாம். பள்ளியிலும் பல்கலைக் கழகத்திலும்  அறிவியலை ஒரு பாடமாகப் படித்துவிட்டுப் பட்டம் பெற்று வெளியேறிவிட்டால் போதும் எனப் பலர் நினைக்கிறார்கள். ஆசிரியத் தொழில் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம்.  அறிவியல் பட்டம்பெற்ற ஆசிரியர்கள் அறிவியலை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் கட்டாயத்தில் உள்ளார்கள்.

அறிவியலை ஒரு பாடமாகப் படித்தவர்கள் அறிவியலை விட சோதிடம் போன்ற சாத்திரங்களில் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.  அப்படிப்பட்டவர்கள் திருமணம் என வரும்போது பத்தாம் வகுப்பு  மட்டும் படித்த சோதிடரிடம் தங்களது பிள்ளைகளின் சாதகத்தைக் காட்டிப் பொருத்தம் பார்க்கிறார்கள். சோதிடர் பொருத்தம் இல்லை என்று சொல்லிவிட்டால் திருமணப் பேச்சு உடனே முறிந்து விடுகிறது.  ஒரு சிலர் வேறொரு சோதிடரிடம் சாதகத்தைக் காட்டி முதல் சோதிடர் சொன்னது சரியா, பிழையா எனச் சரிபார்க்கிறார்கள். 

இயற்பியல், வேத்தியல், கணிதம், வானியல், இலத்திரனியல்,  தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் வளர்ச்சி இன்று மக்களது வாழ்க்கை முறையைத் தலைகீழாக மாற்றி அமைத்துள்ளன.   இவற்றுள் பழைமை வாயய்ந்தது வானியல் ஆகும். அறிவியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆண்டாண்டு காலமாக வேதவாக்காக நம்பி வந்த பல நம்பிக்கைகளை ஆட்டம் காண வைத்துள்ளன.

ஞாயிறு, மதி, கோள்கள் (கிரகங்கள்)  விண்மீன்கள் (நட்சத்திரங்கள்),  மறைப்பு (கிரகணம்)  அண்டம்,  இடி, மின்னல், காற்று, புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம், எரிமலை, கடற்கொந்தளிப்பு ஆகிய இயற்கைச் சீற்றங்களைக் கண்டு ஆதி மனிதன் பயந்து நடுங்கினான்.  வானத்தில் அரிதாகக் காட்சியளிக்கும்  வால்வெள்ளி அவனுக்குப் பெரும் கிலியை உண்டு பண்ணியது. அவற்றால் தனக்கோ நாட்டிற்கோ கெடுதல் நேரிடும் என அஞ்சினான்.  அவற்றைத் திருப்திப்படுத்தப் பொங்கல், படையல், உயிர்ப்பலி கொடுத்து வழிபட்டான். காலப்போக்கில் இந்த அச்சம் தரும் இயற்கையை ஆட்டுவிக்க சகல வல்லமை படைத்த உலகியற்றியான் (கருத்தா) ஒருவன் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து அதற்குக் கடவுள், இறைவன், தெய்வம், தேவன், பிரம்மம் எனப் பலவாறு பெயரிட்டான்.

அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக அறிவு அடிபடையில் அறிவதாகும். இயற்கையைப் பற்றி அடிப்படையான பகுத்தறிவு நோக்கிலான அறிவு பெறும் முறையையும் அம்முறையில் பெறப்பட்ட அறிவையும் உள்ளியக்கத்தைப் புரிந்துகொள்ளுதலையும் குறிக்கிறது. ஒன்றைப் பற்றிய ஒரு கருதுகோளை (hypothesis)  முன்வைத்து, நேர்பட நிகழ்வுகளைக் கூர்ந்து அவதானித்து துல்லியமாய்ப் பார்த்து, தரவுகளைப் பெற்று,  ஆய்வு செய்து  முடிவுகளைக் கண்டுபிடித்து அதனை ஒரு கோட்பாடாக (theory) நிறுவுவதே அறிவியல் வழிமுறை ஆகும்.  இதன் அடிப்படையில்  அறிவியலாளர்கள் தனியாகவும் கூட்டாகவும் நீண்ட காலம் ஒரு பொருளையோ நிகழ்வையோ கூர்ந்து அவதானித்து முறைப்படி ஆய்வு செய்து நம்பத்தகுந்த, முரண்படாத, விதிக்கட்டுப்பாடுள்ள ஒரு கோட்பாட்டை அல்லது விதியைப் பெரும்பாலும் கணித அடிப்படையில் உருவாக்குகிறார்கள்.  கூர்ந்து அவதானித்தல் என்பது ஒரு பொருளையோ அல்லது நிகழ்ச்சியையோ விருப்பு வெறுப்பின்றித் திறந்த மனதோடு ஆழ்ந்து பார்த்து ஏதுக்களின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுப்பதாகும். வேறு விதத்தில் சொல்வதென்றால் அறிவியல் என்னும் சொல் அறிவின் அடிப்படையில் ஏதொன்றையும் ஆய்ந்து அதுபற்றிய உண்மைகளை முறைப்படி கண்டு நிறுவும் ஒரு பெரும் இயல்  அல்லது துறை ஆகும்.  வானியல் என்பது வானில் வலம் வரும் கோள்கள், விண்மீன்கள், பால்மண்டலங்கள் (galaxies)  பேரண்டம்  (universe)  போன்றவற்றின் இருப்பு (position) அசைவு (motion) கட்டமைப்புப் (structure) பற்றிய அறிவியல் கற்கையாகும்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதிசய வானில் ஒரு பஞ்சாங்க உண்மை விளக்கம் என்ற வானியல் நூலை எழுதிய ஆசிரியர் திரு கந்தர் சிவநாதன் இப்போது காலங்காட்டி (Calendar)  என்ற நூலை பாடுபட்டு நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளார்.  இது அவர் படித்துப் பட்டம் பெற்ற பின்னரும் அறிவியல் தேடலில் ஈடுபாடு கொண்டிருப்பதைக் காட்டுகிறது. 

இயக்கத்தின் அளவீடு காலம். போன விநாடி, இந்த விநாடி, அடுத்த விநாடி என காலத்தைக் குறிக்கலாம். ஒரு விதை செடியாகி மரமாகி பூவாகி காயாகி விதையாகிறது.  இது ஒரு காலச் சுற்று எனலாம். 

மாந்த நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் காலத்தை அளக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்கள்.  விண்ணை அண்ணாந்து பார்த்த ஆதி மனிதன் வானில் கண் சிமிட்டும்  கோடிக்கணக்கான விண்மீன்கள் (stars)  கோள்மீன்கள் (planets)   ஞாயிறு, மதி போன்றவற்றைப் பார்த்து வியப்படைந்தான்.  விண்மீன்கள் ஓர் இடத்தில் நிற்பது போலவும் கோள்மீன்கள், ஞாயிறு மற்றும் மதி  தான் வாழும் புவியைச் சுற்றி வெவ்வேறு தொலைவில் வெவ்வேறு வேகத்தில் வலம்  வருவதைப் பார்த்தான்.

காலத்தை அளப்பதற்குக் காலையில் தோன்றி மாலையில் மறையும் ஞாயிறும்  தேய்ந்தும் வளரும் மதியும் உதவின.  ஞாயிறு கிழக்கே தோன்றி மறைந்து மறுபடி தோன்றுவதை ஒரு நாள் என்றும் மதி  தேய்வதையும் வளர்வதையும் ஒரு திங்கள் என்றும்  ஞாயிறு புவியை ஒரு சுற்றுச் சுற்றிவரும் காலத்தை ஓர் ஆண்டென்றும் கணித்தான்.  இந்தக் கணிப்புக்கள் பெரும்பாலும் கமக்காரர்கள் விதைப்பதற்குரிய காலத்தைக் கணிக்க உதவின.

அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய  எகிப்தியர்கள் யூன் 25 இல்  அழல்மீன் (Sirius) ஞாயிறு உதிக்குமுன் தோன்றுவதை அவதானித்தார்கள். அதை வைத்து  நைல் நதி பெருக்கெடுக்கப் போகிறது என எதிர்கூறல் கூறினார்கள்.  அந்த விண்மீனுக்கு நைல் மீன்  (Star of Isis) என்று பெயர் வைத்து அதற்குக் கோயில் கட்டி வழிபட்டார்கள். அந்த நாண்மீன் (நட்சத்திரம்) உதிக்கும் நேரத்தைப் பூசாரிகள் புத்தாண்டின் தொடக்கமாக அறிவித்தார்கள். இது  கோடை உச்சத்தை (Summer Solstice) ஒட்டியிருந்தது. எனவே இவர்கள்தான் விண்மீனைக் குறியாகக் கொண்டு ஒரு ஆண்டில் 12 மாதங்கள் 360  நாள்கள் இருக்கும் காலங்காட்டியைக் கண்டுபிடித்தார்கள் எனலாம். அழல்மீன் மீள்தோற்றத்தை வைத்து 5 நாள்கள் கூட்டப்பட்டு ஆண்டில் 365 நாள்கள் இருப்பதாகக் கணித்தார்கள்.

காலக் கணிப்பில் சுமேரியர்கள், அசீரியர்கள் பின்னர் பபிலோனியர்களே முன்னோடிகள். இவர்கள் இன்றைய Euphrates மற்றும் Tigris river ஆகிய நதிகள் பாய்ந்த பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள். கிரேக்கர்கள் இவர்களை மெசெத்தோமியர் என அழைத்தனர். கிரேக்கர்கள் பபிலோனியரிடம் இருந்தே வானியல் பற்றிய தரவுகளைக் கற்றுக் கொண்டார்கள்.

நூலாசிரியர் வெவ்வேறு நாகரிகங்களின்  காலங்காட்டிகள் பற்றிய தரவை இந்த நூலில் விரிவாக எழுதியுள்ளார். இன்று நாம் பயன்படுத்தும் காலங்காட்டி முழுமைபெற பல ஆயிரம் ஆண்டுகள் எடுத்தன.

திராவிட - இந்தியா  உடு ஆண்டுக் காலங்காட்டி (sidereal calendar) என்ற அத்தியாயத்தில் தமிழர்கள் பின்பற்றிய வாரம், ஆண்டு, ஓரைகள் பற்றிய தரவுகள் தரப்பட்டுள்ளன.   மாதங்கள், ஓரைகள் ஆகியவற்றின் கால அளவுகள் மற்றும் அவற்றுக்குரிய பெயர்கள் தரப்பட்டுள்ளன.

ஒரு நாள் வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என ஆறு சிறு பொழுதுகளாகப் பகுக்கப்பட்டது. இந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பை 60 நாழிகைகள் எனவும் ஒவ்வொரு நாழியும் 60 நாடிகளாகப் பிரித்து ஒவ்வொரு நாடியும் 60  நொடிகளாகப் பிரிக்கப்பட்டது. ஒரு நாழிகை 24 மணித்துளிகள். அறுபது  நாழிகை 1440 மணித்துளிகள் அல்லது ஒரு நாள். பெரும்பொழுதும் 6 பருவங்களாகப் பிரிக்கப்பட்டன.

                                                                                                                                                                     பெரும்பொழுது

 

 பருவம்

வழக்கத்தில் உள்ள மாதங்கள்

1

இளவேனில்

தை - மாசி

2

முதுவேனில்

பங்குனி - சித்திரை

3

கார்

வைகாசி ஆனி

4

கூதிர்

ஆடி - ஆவணி

5

முன்பனி

புரட்டாசி அய்ப்பசி

6

பின்பனி

கார்த்திகை - மார்கழி

இப்பொழுது கார் காலம் அய்ப்பசி - கார்த்திகைத் திங்கள்களில் இடம்பெறுகிறது. அவ்வாறே ஏனைய பெரும் பொழுதுகளின் காலமும் மாறுபடுகின்றன. இதற்குத் திசைமாறு இயக்கமே (precession of equinoxes) காரணமாகும்.

தமிழர் காலத்தை மர்த்திரை,  நாழிகை, நாள், பக்கம், கிழமை, திங்கள், இருது, அநயம், ஆண்டு, ஊழி என வகுத்தனர். கிழமை (வாரம்) என்பது ஏழு நாள்கள் கொண்ட ஒரு கால அளவு. கிழமை என்றால் உரிமை என்று பொருள். இந்த ஏழு நாள்களும் வானத்தில் தெரியும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு ஒளிதரும் பொருட்களுக்கு உரிய  நாளாக பன்னெடுங்காலமாக அறியப்படுகின்றது. இந்த ஏழு பெயர்களும் சுழற்சி முறையில் திரும்பத் திரும்ப வருகின்றன. ஞாயிறு ஒரு நாள்மீன்.  எனவே ஞாயிற்றுக்கிழமை கதிரவனுக்கு உரிய நாளாகக் கொள்ளப்படுகின்றது. திங்கள் என்பது நிலாவின் பெயர்களில் ஒன்று.  திங்கட்கிழமை நிலாவுக்கு உரிய நாள். இப்படியே ஏனைய  நாள்களும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி அய்ந்தும் ஞாயிறைச் சுற்றி வரும் கோள்மீன்களுக்கு  உரியவை ஆகும்.  கிழமையின் பெயர்கள் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் பாடிய கோளறு பதிகத்தில் முதன் முறையாக இடம்பெற்றுள்ளது. மேற்கத்திய காலக் கணிப்பு முறைகளிலும் இந்திய முறைகளிலும் கிழமை என்னும் இந்தக் கால அலகு இதே வரிசையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

                                                                                                                                                விண்மீன் கூட்டங்கள் (ஓரைகள்)

வான மண்டலத்தை 12  ஆகப் பகுத்து  ஒவ்வொரு பிரிவிலும் உள்ள துலக்கமான விண்மீன் கூட்டத்தைத் (constellations)  தேர்ந்தெடுத்து அதற்கு ஒரு வடிவத்தைக் கற்பனை செய்து அந்த வடிவப் பெயர்களை சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை என்ற 12 ஓரை (இராசி) கள் எனப் பெயரிட்டனர்.  ஓரையின் பெயர்களையே திங்கள்களுக்கும் (மாதங்களுக்கும்) வழங்கினார்கள். ஒரு நிறைமதி நாளில் நிலவுக்கு அப்பால் இருக்கும் விண்மீன் அடுத்த நிறைமதி நாளில் இருப்பதில்லை. ஏறக்குறைய 12 மாதங்களுக்குப் பின்பே மீண்டும் அவ்வாறு நிகழ்கிறது. எனவே 12 மாதங்கள் கொண்ட ஒரு காலச் சுழற்சியை ஆண்டு எனக் கொண்டனர். அதில் ஞாயிறு  மற்றும் திங்களின் நகர்வுகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அதனால்தான் அம்மாதத்தின் முழுநிலா நாளன்று அம்மாதத்தின் ஓரையில் ஞாயிறு  காணப்படும். இவைகளைக் கடந்து வரும் காலத்தை அந்த நாண்மீன் சார்ந்த மாதம் என்பர். ஞாயிறைச் சுற்றி நீள்வட்ட வரைகோட்டில் புவி சுற்றிவர சரியாக 365.25 நாள்கள் ஆகின்றன. நீள்வட்டம் சமமான பகுதிகளைக் கொண்டது அல்ல. எனவேதான் மாதங்களின் கால அளவுகள் வேறுபடுகிறது. குறைந்தது 29 இல் இருந்து மிகுதியாக 32 வரை நாள்களை மாதங்கள் கொண்டுள்ளன.

ஓரை என்ற சொல் நேரம் எனப் பொருட்படும் ஹோரா (Hora) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் தமிழில் ஓரை என்பதற்கு மகளிர் விளையாட்டு,  மகளிர் சேர்ந்து தங்குமிடம், மகளிர் கூட்டம் (ஓரையாயத் தொண்டொடி மகளிர் (புறநானூறு . 176, 1)என்ற பொருள் இருக்கின்றது.   விண்மீன் கூட்டங்களாக இருப்பதால் தான் அவற்றை ஓரைகள் என்றனர்.  ஓரை என்பதற்கு Team என்ற ஆங்கிலச் சொல் பொருத்தமாக இருக்கும். ஓரை முதலில் கூட்டத்தையும், பின்னர் விண்மீன் கூட்டத்தையும், பின்னர் அவ்விண்மீன் கூட்டம் காட்டும் நேரத்தைக் குறிப்பதாகி அந்த வடிவத்தில் கிரேக்கத்துக்குச் சென்றது எனலாம்.

பண்டைக் காலத்தில் தமிழர்கள் வானியல் பற்றித் தனியான நூல்கள் எதுவும் எழுதிவைத்ததாகத்  தெரியவில்லை. தமிழர்களுக்கு இருந்த வானியல் அறிவுபற்றி சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலம் இரண்டிலும் எழுதப்பட்ட இலக்கியங்கள் மூலமே அறியக் கிடக்கிறது. கோள்கள், விண்மீன்கள், திங்கள் மறைப்பு, பற்றி அக்காலத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள். வானியலிலும் அதன் அடிப்படையிலும் எழுந்த ஆரூடத்திலும் வல்லவர்கள் அறிவர், அறிவோர், கணி, கணியன் என அழைக்கப்பட்டனர். கணியன் பூங்குன்றன், பல்குடுக்கை நன்கணியார், கணி மேதாவியார் என்ற பெயர்கள் இவர்கள் வானியலிலும் ஆரூடத்திலும் புலமை பெற்று இருந்ததைக் காட்டுகின்றன.

அரசர்களது அவையில் பெருங்கணிகன் இருந்ததைச் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகள் குறிப்பிடுகிறார். காலத்தைக் கணிக்க நாழிகை வட்டில் பயன்படுத்தப் பட்டதை சிலப்பதிகாரம் எடுத்துச் சொல்கிறது. இந்த நாழிகை வட்டில் யவனரிடம் (கிரேக்கர்) இருந்து பெறப்பட்டது.  காலத்தைக் கணிப்பவர் நாழிகைக் கணக்கர் என அழைக்கப்பட்டார். 

கோள்களை கோள்மீன்கள் என்றும்,  மீன்கூட்டத்தை விண்மீன் என்றும், தனி மீனை நாண்மீன் என்றும் செவ்வாயை செம்மீன் என்றும் வெள்ளியை வெண்மீன் என்றும் சனியை மைம்மீன் என்றும் பெயரிட்டு அழைத்தனர். உரோகிணி, அருந்ததி, ஓணம்(திருவோணம்) ஆதிரை (திருவாதிரை) அறுமீன் எனக்  கார்த்திகையும் வேழம் எனப் பரணியும் முடப்பனை என அவிட்டமும்  அழைக்கப்பட்டன.

புறநானூற்றில் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் பாடியுள்ள பாடல் பண்டைய நாளில் வான்நூலோர் இருந்ததற்குச் சான்று பகருகிறது.

செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்று இவை
சென்று அளந்து அறிந்தோர் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே! 
................ (புறநானூறு 30)

சோழன் நலங்கிள்ளி என்ற மன்னன்பாற் காணப்படும் அடக்கமாகிய பண்பு கண்டு வியந்த முதுகண்ணன் சாத்தனார் "வேந்தே! செஞ்ஞாயிற்றின் வீதியும் அஞ்ஞாயிற்றினது இயக்கமும் அவ்வியக்கத்தாற் சூழப்படும் பார் வட்டமும் காற்றியங்கும் திக்கும் ஓர் ஆதாரமுமின்றித் தானே நிற்கிற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றின் அளவை நேரிற் சென்று கண்டவரைப் போல் அறிவால் ஆராய்ந்து உரைப்போரும் உளர்!"

வலவன் இல்லா வானவூர்தி என்ற சீவகசிந்தாமணி வரிகள்  ஆளில்லாத விமானத்தையே குறிப்பதாக உள்ளது. உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் சோழன் நலங்கிள்ளியை விளித்து "புலவர்பாடும் புகழுடையார் வானவூர்தி எய்துவர் (புறநூனூறு 27) என்கிறார்.

பால்வழி எனப்படும் விண்மீன் தொகுதியை (Galaxy)த் தாண்டிச் செல்லும்போது ஏற்படும் நிலையைக் குறிப்பிடும் புறநானூற்று பாடல்,

மயங்கிருங் கருவிய விசும்புமுக னாக
இயங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்
  
              (புறம் 365: 1 - 3)

இவற்றுள் திசை என்னும் பகுதியில் காற்று இருக்கும். ஆகாயம் நீத்தம் என்னும் பகுதிகளில் எதுவும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. நீத்தம் என்பது இன்றைய அறிவியலாளர் கூறும் வெறுமை (Nothingness)  என்னும் பகுதி.

தமிழர்கள் வான மண்டலத்தை 27 ஆகப் பிரித்து ஒவ்வொரு பிரிவிலும் உள்ள துலக்கமான விண்மீன் கூட்டத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கு ஒரு வடிவம் கொடுத்து அந்த வடிவப் பெயர்களை அந்த 27 விண்மீன்களுக்கும் இட்டனர். தனி மீனை விண்மீன் என்றனர். சமற்கிருதத்தில் நாண்மீன் விண்மீன் இரண்டையும் நட்சத்திரம் ( நாள் + சத்திரம்)  நாள் இருக்குமிடம் என்றே அழைக்கின்றனர்.  தமிழர்கள் உரோமர், பபிலோனியரைப் போன்று  ஞாயிறு ஆண்டைக் (365 1/4) கொண்ட நாள்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.

நமது பூமிக்கு மேல்  வான்  ஒரு கோளம்போல் தோற்றமளிக்கிறது. அதாவது வான் கோளத்திற்கு நடுவில் புவி இருக்கிறது. இதனை ஆங்கிலத்தில் Concentric Circle என்றழைப்பார்கள். இந்த வான்  கோளத்தின் நடுக்கோடும் புவியை ஞாயிறு சுற்றும் பாதையும் சந்திக்கும் இடம்தான் "Vernal Equinox"  என்ற மேழ ஓரையின் தொடக்க இடம்.

புவி ஞாயிறைச் சுற்றி வரும் தோற்றப்பாதை (ecliptic) வட்ட வடிவமாக இல்லாமல் முட்டை வடிவில் ஒரு நீள்வட்டமாக (eliptic) ஆக இருக்கிறது. மேலும் அதன் அச்சு விண் நடுக்கோட்டுக்கு  32.5 பாகை ஒருக்களித்து  (The ecliptic is tilted 23.5 degree relative to  the celestial equator) காணப்படுகிறது.  இந்த விண் நடுக்கோடும் ஞாயிறின் (புவியின்) சுற்றுப்பாதையும் மேலும் கீழுமாக வெட்டும் இடமே முறையே வேனில் சமயிரவு (spring equinox - March 21)  என்றும் கூதிர் (summer equinox - September 21)  சமயிரவு என்றும் அழைக்கப்படுகிறது.  புவியின் ஒருக்களிப்புத்தான் பருவங்கள் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கிறது. இவை  போதாதென்று புவியின் அச்சு ஞாயிறு, மதி இரண்டின் ஈர்ப்புக் காரணமாகவும் அது தனது அச்சில் சுற்றும் போது ஏற்படும் தளம்பல்  (wobble) காரணமாகவும்  தனது சுற்றுப் பாதையில் பின்னோக்கிப் போகிறது. இதனை திசைமாறு இயக்கம் அல்லது அச்சு திசைமாற்றம்  அல்லது  இரவுபகல் இயக்கம் (precession of equinoxes) என வானியலாளர்கள் அழைக்கிறார்கள்.  இந்திய சோதிடம் (Sidereal Astrology)   இந்த திசைமாறு இயக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை.

 நீள்வட்டத்தில் செல்லும் புவியில் இருந்து ஞாயிற்றின்  தொலைவை அளந்தால் மேலே கூறிய இரண்டு  சமயிரவு மட்டும் நடுவார்ந்த தூரம் (median distance) மமாக இருக்கும். மற்ற நாள்களில் எல்லாம் புவிக்கும்  ஞாயிறுக்கும் இடையே உள்ள  தொலைவு  கூடியோ, குறைந்தோ வரும். இப்படிக் கூடிக் குறைந்து  வரும் போது  ஓரை வட்டத்தில்  கூடிய தொலைவில் புவியும் ஞாயிறும் அமையும் நாளைப் பனி முடங்கல் என்றும் (winter solstice - December 21/22)  அண்மைத்  தொலைவில் புவியும்  ஞாயிறும்  அமையும் நாளை வேனில் முடங்கல் என்றும் (summer solstice - June 20/21) அழைக்கிறார்கள். 

மேலே சொன்ன மார்ச்சு 20/21, திசெம்பர் 21/22 என்பவை இந்தக் காலத்துக் காலக் கணிப்பு. ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்னால் அல்லது 1,000  ஆண்டுகளுக்கு முன்னால் அவை இதே நாள்களில் நிகழவில்லை.

இந்தக் காலத்தில்  வேனில் சமயிரவு என்பது மீன (pisces) ஓரையில் ஏற்படுகிறது. கூடிய விரைவில் இன்னும்  5 ஆண்டுகளில் கிபி 2012  ல்  கும்ப ஓரையின்  (aquarius)  தொடக்கத்தில் வந்து விழும். அப்படி விழும் போது  புதிய  யுகம் பிறக்கும் என வரலாற்றாசிரியர்கள் சொல்லுகிறார்கள். அதே போல, ஒரு காலத்தில் ஏப்ரல் 13/14  இல்  ஆடு  ஒரையின் தொடக்கத்தில் (மேட இராசி)  இந்த வேனில் சமயிரவுநாள்  விழுந்திருக்கும். அதாவது ஒரு காலத்தில் ஆடு (சித்திரையில்) விழுந்த வேனில் மயிரவுநாள் இன்று 24 நாள்கள் முன்னமே மீனத்தில் மார்ச்சு 20/21 ல் நிகழ்கிறது. இது போலே திசைமாறு இயக்கத்தால்  கூதிர் சமயிரவுநாள், பனி முடங்கல், வேனில் முடங்கல் ஆகிய மற்றவையும் 24 நாள்கள் முன்தள்ளிப் போகின்றன. அதாவது  ஒக்தோபர்  15/16 இல் விழ வேண்டிய கூதிர் சமயிரவு நாள் செப்தெம்பர்  21/22 இல் இடம்பெறுகிறது.  சனவரி 14/15 இல் நடக்க வேண்டிய பனிமுடங்கல்  டிசெம்பர் 21/22 இலும் யூலை 14/15 இல் விழ  வேண்டிய வேனில் முடங்கல் யூன் 20/21  இலும் இடம்பெறுகின்றன.   ஒவ்வொரு ஆண்டும் அச்சு திசைமாற்றம் காரணமாக ஒரு ஆண்டில் 6  மணித்தியாலம் பிந்துகிறது. இதனைச்  சரிசெய்யவே நாலு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாள் கூட்டப்படுகிறது.  இதுவே மிகுநா் ஆண்டு (leap year) என்று அழைக்கப்படுகிறது. இது காரணமாகவே சமயிரவு மற்றும் முடங்கல் நான்கு ஆண்டுகளுக்கு ஓருமுறை ஒரு நாள் பிந்தி இடம்பெறுகிறது.

புவியின் இந்த அசைவுகள் காலத்தைக் கணிப்பதில் ஏகப்பட்ட சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இந்த அசைவுகள் காரணமாக காலங்காட்டிகள் பல தடவை திருத்தி அமைக்கப்பட வேண்டியிருந்தது. இந்த அசைவுகள் பற்றி விரிவாக நூலாசிரியர் வரை படங்களுடன் விளக்குவது இந்த நூலின்  சிறப்பாகும்.

பஞ்சாங்கத்தில் குறிக்கப்படும் புண்ணிய காலங்கள் இன்று புண்ணிய காலங்களே அல்ல. திருமணத்துக்கு ஏற்ற 'சுபயோக சுப முகூர்த்த நாள்' நல்வேளையே அல்ல.  இந்த உண்மை நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மகாகவி பாரதியாருக்குத் தெரிந்திருந்தது.

"ஒரு காலத்தில் வசந்த் விஷுவானது கார்த்திகை நஷத்திரத்தில் இருந்ததாகவே வேதத்தினால் தெரிகிறது. அப்போது உத்தராயணம் மாக மாசத்திற்கு பிறந்திருக்கும். அதற்கு இரண்டாயிரம் - இரண்டாயிரத்து அய்நூறு வருஷங்களுக்கப்பால் அந்த விஷு அசுவினி நட்சத்திரத்தில் மேஷராசியின் ஆரம்பத்திலிருந்தது. இங்ஙனம், வசந்த விஷுவானது (ஆண்டுப்பிறப்பானது) மேஷராசியின் தொடக்கத்தில் (இளவேனிற் சமஇரவு நாள்) இருந்த காலத்தில் உத்தராயணம் தைமாதப் பிறப்பன்று தொடங்கிற்று. அதற்கப்பால் கணக்குத் தவறிப் போய்விட்டது. அயனவிஷுக்களின் சலனத்தை (இயக்கத்தை) அறியாமலோ அறிந்திருந்தும் கவனியாமலோ ஸம்வத்சரத்தின் பரிமாணத்தை 20 நிமிஷம் ஜாஸ்தியாக (அதிகமாக) கணித்து விட்டபடியால், அயன விஷு காலங்கள் வருஷம் ஒன்றுக்கு 20 நிமிஷம் பிந்தி வருகின்றன. 80 வருஷத்தில் ஒரு முழுநாள் பிந்திவிடும். மேற்குறித்த நியமங்கள் ஏற்பட்டு இப்போது அநேக நூற்றாண்டுகளாய் விட்டபடியால் புண்ய காலங்கள் 20, 22 நாள் பிந்திப்போய் நியமங்கள் பிரத்தியஷத்துக்கு விரோதமாகியிருக்கின்றன. (பாரதியார் கட்டுரைகள் - பக்கம் 210-211)

உரோம பேரரசர்  யூலியஸ் சீசர்  கிமு 45 ஆம் ஆண்டு ஒரு புதிய காலங்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன் நாள்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாள்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாள்காட்டியில் உள்ள நாள்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள்! யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாள்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கிமு 45 ஆம் ஆண்டில் நாள்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாள்களைக் கொண்டிருந்தது.

யூலியன் நாள்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாள்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை ஒரு நாள் பெப்ரவரி மாதத்துக்குரிய நாள்களோடு (leap year)  கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாள்கள், 5 மணி, 49 வினாடி  12 நொடியைக் (365.242199) கொண்டது. இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது.

கிபி 1563 யூலியன் நாள்காட்டி அடிப்படையில் வேனில் சமயிரவு (vernal equinox) மார்ச்சு 10 இல் இடம்பெற்றது. ஆனால் வேனில் சமயிரவு 21 க்கு முந்தி வரக்கூடாது என போப்பாண்டவர் கிறெகோறி முடிவு செய்தார். எனவே போப்பாண்டவர் 1582 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதத்தில் 10 நாள்களைக் குறுக்குமாறு ஆணை பிறப்பித்தார். அதனால் ஒக்தோபர் 4, 1582 (யூலியன்) அடுத்து ஒக்தோபர் 15 (வெள்ளிக்கிழமை) தொடர்ந்தது. அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் (1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000 இல் கூட்டப்படவில்லை.

அப்படியும் கிபி 4,000 அல்லது 5,000 ஆண்டளவில் 12 நாள்கள் வேறுபாடு ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972 ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.

இப்படிக் காலம்  காட்டித் திருத்தப்பட்டதற்குக் காரணம் பருவங்களைப் புவியின் அசைவுக்கு ஒத்தவாறு வைத்திருப்பதற்கு ஆகும்.  அப்படி ஒத்தவாறு வைத்திருக்காவிட்டால் பருவ காலங்களின் சுழற்சி பிழைத்துவிடும்.  வேனில் காலம் 10 நாள்கள் முன் கூட்டி வந்த காரணத்தாலேயே போப் கிரிகோறியன் 10 நாள்களைக் குறைத்தார்.  இது வெப்ப ஆண்டு (Tropical Year) முறையாகும்.

உடு ஆண்டுமுறையில் (Sidereal Year) பருவங்கள் தவறிப் போகின்றன.  உடு ஆண்டில் சித்திரை மாதப் பிறப்பு ஞாயிறு முதல் ஓரையான மேடத்தில்  (Aries) புகும்போது (April 13/14) பிறக்கிறது.  ஆனால் வேனில் காலம் பங்குனி மாதத்திலேயே (March, 20/21) தொடங்கிவிடுகிறது.  அன்றுதான் வட கோளத்தில் பகல் -  இரவு சமமாக இருக்கும்.                                                                                                                                                                                                                                                                                                               பேரண்டம்

வெப்பமண்டல சோதிட முறைக்கும் உடுமண்டல சோதிடமுறைக்கும் 20 - 01 - 01 இல் 24-00-57  பாகை (லஹிரி)  வேறுபாடு காணப்படுகிறது. இதனை அயனாம்சம் எனச் சோதிடம் கூறுகிறது.   கிரகேறியன் (ஆங்கில)  காலங்காட்டிப்படி  2011-01-01 இல் பிறந்த ஒருவருக்கு ஞாயிறு மீன இராசியில் 25 பாகையில் நின்றால் 2011-01-01 க்கு உரிய அயனாம்ச வேறுபாடான 24-00-57 பாகையை அதிலிருந்து கழிக்க வேண்டும். அப்படி கழிக்கும் போது 00-59-03 பாகை பெறுமதி வருகிறது. எனவே இந்திய சோதிட சாதகத்தில் ஞாயிறு மீன இராசியில் 00-59-03 பாகையில் நிற்கும். இவ்வாறே கோள், விண்மீன் இருப்பும் மாறுபடும். அயனாம்சத்தை கழிக்கும் போது குழந்தை பிறந்த நொடியில் பேரண்டத்தில் (universe)  காணப்படும்  கோள் நிலையையும் இலக்கினத்தையும் ஓரைகளையும் விண்மீன்களையும்  சாதகத்தில் இறக்கலாம். லஹிரி அயனாம்சத்தின் அடிப்படையிலேயே திருக்கணித பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது.

எனவே சோதிட சாத்திரத்தில் நம்பிக்கை உடையவர்கள் மணப் பொருத்தம் பார்ப்பதற்கு முன்னர் சாதகத்தில் இந்த அயனாம்சம் கணக்கில் எடுக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படிச்  செய்தால் சாதகம் சரியாகக் கணிக்கப்பட்டுள்ளதாகக் கொள்ள முடியாது.  அயனாம்சம் சோதிடருக்குச் சோதிடர் வேறுபடுகிறது.  மேலும் வெட்பமண்டல சோதிடர்களும் இந்திய சோதிடர்களும் வானியலாளர்களும் வானத்தில் ஞாயிறின் நிலையைக் கணிப்பதில் நாள்கணக்கில் வேறுபாடு உள்ளது. எடுத்துக்காட்டாக ஒக்தோபர் 24  இல் பிறந்த குழந்தையின் சாதகத்தில் ஞாயிறு வானியல் அடிப்படையில் கன்னி ஓரையிலும், வெட்பமண்டல சோதிடத்தில் தேள் ஓரையிலும்  இந்திய சோதிடத்தில் துலா ஓரையிலும் காணப்படும்!

விருச்சிக இராசி (தேள் ஓரை) 

இது மட்டுமா? சோதிடர்கள் ஓரை வட்டத்தை ஒவ்வொன்றும் 30 பாகை கொண்ட வீடுகளாகப் பிரித்துள்ளார்கள். ஆனால் உண்மையில் ஓரைகளின் அளவு அப்படியில்லை. கன்னி ஓரையை ஞாயிறு கடக்க 45 நாள்கள் ஆகின்றன. ஆனால் தேள் ஓரையைக் கடக்க 7 நாள்களே ஆகின்றன. எனவே சோதிடர் சாதகத்தில் ஞாயிறு நிற்கும் ஓரையை நாலில் மூன்று பங்கு பிழையாகவே இருக்கும். இதனை ஓரவட்டம் அதன் உருமாற்றங்கள் என்ற அத்தியாயத்தில் நூலாசிரியர் வரைபடங்களின் வாயிலாக நன்கு விளக்கியுள்ளார். 

இந்த நூலில் சோதிடர்கள் பயன்படுத்தும் ஓரைகள் (constellations)   கோள்களின் ஓட்டங்கள்  பற்றி நூலாசிரியர் விரிவாக விளக்கியுள்ளார். 

முன்னர் மறைப்பு (கிரகணம்)  இராகு, கேது என்ற இரண்டு பாம்புகள் ஞாயிறைக் கவ்வுவதால் ஏற்படுகிறது என நம்பப்பட்டது. அதனால் கிரகணத்தைக் கண்டு மக்கள் அஞ்சினார்கள். இப்போது அது இயற்கையான நிகழ்ச்சி என்பது தெரிந்திருக்கிறது. ாயிறு - புவி - மதி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது மதி மறைப்பு ஏற்படுகிறது.  மதி மறைப்பு முழுமதி (பவுர்ணமி)  அன்றுதான் இடம்பெறும். ஞாயிறு - மதி  -புவி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது ஞாயிறு மறைப்பு  ஏற்படுகிறது.    ஞாயிறு மறைப்பு  மறைமதி (அமாவாசை) அன்றுதான் இடம்பெறும்.

தமிழ்ப் புத்தாண்டு தொடக்கத்தைச் சித்திரையில் இருந்து தைக்குத் தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது. அதற்கான சட்டம் சனவரி 2008 இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில்  ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம், திருவள்ளுவர் பிறந்த நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழர்களுக்குத் திருவள்ளுவர் பெயரில் ஒரு தொடராண்டு முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது.

உலகத்தில் இயற்கை என்று ஒன்று இருக்கின்றது. அது இயங்கிக்கொண்டே இருக்கிறது. இயற்கையின் இயக்கத்திற்கு Diagram: Eclipse Alignmentஏற்பவே உலகத்தின் அனைத்து நடப்புகளும் அமைகின்றன. அந்தவகையில், இயற்கைக்கும் தைப் பிறப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தைத்திங்கள் அதாவது சுறவ மாதம் முதல் நாளில் சூரியன் தனது வடதிசைப் பயணத்தில் தனு ஓரையில் பட்டு சுறவம் ஓரையில் தன்னுடைய செலவை (அயணம்) தொடங்குகிறது. இதனைத் தமிழில் வடசெலவு எனவும் வடமொழியில் உத்தராயணம் என்றும் கூறுவர். ஆக, ஞாயிறு  வடதிசை நோக்கிச்  செலவைத் (பயணத்தைத்) தொடங்கும் நாளில் தமிழர்கள் பொங்கல் வைப்பதும் அதனை ஞாயிறு  பொங்கல் என்று வழங்குவதும் மிகப் பொருந்த அமைந்துள்ளன. ஆகவே,   சுறவம் (தை)  முதல் நாள்  தமிழ் புத்தாண்டுத் தொடக்கமாகக் கொண்டது இயற்கையின் சட்டத்திற்கும் உட்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

ஓரை வட்டத்தில் ஆடு முதல் ஓரையாகக் குறிக்கப்பட்டுள்ளது.  அதனால் ஞாயிறு ஆடு ஓரையில் (இராசியில்) அசுவனி  நாண்மீனில் (நட்சத்திரத்தில்) புகும் நாளே  சித்திரை ஆண்டுப் பிறப்பு என முன்னர் கொள்ளப்பட்டது.  வான் மண்டலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் அதன் செயல்களும் வட்டத்தின் அடிப்படையாகவே இருக்கிறது. வட்டம் வளரும்பொழுது கோளம், உருளை என முப்பரிமாணமாக மாற்றமடையும். ஒரு வட்டத்துக்கு தொடக்கம் முடிவு இல்லை. வட்டத்தின் எந்தப் புள்ளியும் அதன்தொடக்கமாக இருக்கலாம்.

ஞாயிறு ஆடு ஓரையில் புகும் நாளே சித்திரை ஆண்டுப் பிறப்பு என்றும்  அதுவே வேனில் காலத்தின் தொடக்கம் எனப்படுகிறது.   ஆனால்  இன்று வேனில் காலம் மார்ச்சு 20-21  இல் தொடங்குகிறது. காரணம் புவி தனது சுற்றுப்பாதையில் ஞாயிறு - திங்கள் ஈர்ப்பினால் பின்னோக்கி (precession of equinoxes) நகர்கிறது. அண்ணளவாக 71.6 ஆண்டுகளில் ஒரு பாகை (ஒரு நாள்) பின்நோக்கி நகர்கிறது. ஆயிரம் ஆண்டுகளில் 14 பாகை  நகர்ந்து விடுகிறது. இன்று இந்திய சோதிடக் கணிப்புக்கும் கிரகேறியன் காலக் கணிப்புக்கும் 24  பாகை  வேறுபாடு காணப்படுகிறது. இன்னும் 11,230 ஆண்டுகளில் இளவேனில் காலத்தில் சூரியன் ஆடு (மேடம்)  ஓரைக்குப் பதில் துலா ஓரையில் புகுவார்! அதாவது ஆடு ஓரை எதிர்ப்புறம் துலா ஓரை 180 பாகையில் காணப்படும்.

வானியல் பற்றிய அறிவு வளரும் போது கோள்கள், ஓரைகள், விண்மீன்கள் பற்றிச் சோதிடம் சொல்வது  பொய் என்பது புலப்படும்.

ஒரைகளை சரம், ஸ்திரம், உபயம் என்றும் ஆண், பெண் என்றும் பகல் இரவு ஓரைகள் என்றும்,  உச்ச நீச்சம் என்றும் சோதிடர்கள் பிரிப்பதற்கு அறிவியல் அல்லது வானியல் அடிப்படை அடியோடு இல்லை.

விண்மீன்களைப் பெண்களுக்கு மட்டும் ஆகாத விண்மீன்களாப் பிரிப்பதும் அவற்றால் முதல்தர தோசம், இரண்டாம்தர தோசம் இருக்கிறதென்பதும் அவற்றைத் தேவ கணம், மனித கணம், இராட்சத கணம் என்று பிரிப்பதும் அவை ஒன்றுக்கு ஒன்று பொருந்தாது என்று கூறுவதும்  மூலம் மாமனாருக்கு ஆகாது, ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது, கேட்டை மூத்த மைத்துனருக்கு ஆகாது, விசாகம் இளைய மைத்துனருக்கு ஆகாது என்று சித்திரிப்பதற்கும் வானியல் அடிப்படை கிடையாது. இந்த 27 விண்மீன் கூட்டத்தை ற்பனையாக உருவமைப்பை (pattern)  வரைந்து அவற்றுக்குப் பெயர் வைத்ததே  மனிதன்தான்.

                                                      இராசி வட்டம்

ஞாயிறு, மதி உட்பட கோள்களுக்கு ஆட்சி, உச்ச, நீச்ச, பகை, சம, நட்பு வீடுகள் இருக்கிறது என்றும்,  கோள்கள் ஆண், பெண், பிராமணன், சத்திரியன், வைசிகன், சூத்திரன், சத்துரு - மித்திரு, நிலம், நீர், காற்று, நெருப்பு, வான் என பகுப்பதற்கும் வானியல் அடிப்படை அடியோடு கிடையாது.

இந்த நூலை ஊன்றிப் படிப்பவர்கள் இந்த உண்மையை உணர்ந்து கொள்வார்கள்.                                   

இந்தக் காலங்காட்டி வானியல் படிக்கும் மாணவர்களுக்குப் பாடநூலாக வைப்பதற்குத் தகுதியுடையது. முன்னர் குறிப்பிட்டது போல நூலாசிரியர்  ஓரைகள், கோள்கள், உடுக்குகள்  போன்றவற்றின் அசைவுகள் பற்றி அநேக வரைபடங்களுடன் விளக்குவது புரிதலை எளிதாக்குகிறது.   இந்த வரைபடங்களுக்குத் தமிழ் - ஆங்கிலம் என இருமொழியிலும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

நூலாசிரியர் முடிந்த மட்டும் தனித் தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தியுள்ளார்.  விதிவிலக்கு   ெட்டாங்கம் (longitude  - நிரைக்கோடு)     அகலாங்கம் (latitude - குறுக்குக்கோடு ) கிரகணி (ecliptic - கதிர்வீதி)  போன்றவை. 

இந்த நூலை எல்லோரும் ஒருமுறைக்குப் பலமுறை பொருளுணர்ந்து படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது  வானியல் குறிப்பிடும் நாள், கோள்,  உடு,  ஓரை ஆகியவற்றின் இருப்பு, இயக்கம், கட்டமைப்பு பற்றி  வானியல் தரும் விளக்கத்தை நன்கு புரிந்து கொள்ளலாம். அப்படியான புரிதல் இந்த நாள், கோள் பற்றிய மூட நம்பிக்கைகளை நீக்கி மக்களிடையே ஒரு அறிவியல் மனப்போக்கை வளர்க்கத் துணை செய்யும்.  அப்படியான அறிவியல் மனப்போக்கு எமது குமுகாயத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லும்.

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.                   ( அதிகாரம் அறிவுடமை - குறள் 430) 

 

நக்கீரன்
தலைவர் படைப்பாளிகள் கழகம்
யூன் 21, 2011