Date: Thursday, 3 March, 2011, 4:09 AM

சொல்லைக் கல்லாக்கி...

கவிதையைக் கவண் ஆக்கி...

வாணியம்பாடி மேடையைக் களம் ஆக்கி

கடந்த சனிக்கிழமை அன்று வாலி வாசித்தது கவிதை..

இல்லை..

வெடித்து கிளம்பிய வெந்நீர் ஊற்று..அது இது...

[கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு

கண்ணீர் அஞ்சலி...]ஒரு

புலிப் போத்தை ஈன்று

புறந்தந்து-

பின் போய்ச் சேர்ந்த

பிரபாகரன் தாய்க்கு; அந்தப்

பெருமாட்டியைப் பாடுதலின்றி

வேறு வேறுண்டோ எனது வாய்க்கு?மாமனிதனின்

மாதாவே ! - நீ

மணமுடித்தது வேலுப்பிள்ளை ;

மடி சுமந்தது நாலு பிள்ளை !

நாலில் ஒன்று - உன்

சூலில் நின்று - அன்றே

தமிழ் ஈழம்

தமிழ் ஈழம் என்றது ; உன் -

பன்னீர்க் குடம்

உடைத்துவந்த பிள்ளை - ஈழத்தமிழரின்

கண்ணீர்க் குடம்

உடைத்துக் காட்டுவேன் என்று...

சூளுரைத்து - சின்னஞ்சிறு

தோளுயர்த்தி நின்றது ;

நீல இரவில் - அது

நிலாச் சோறு தின்னாமல் -

உன் இடுப்பில்

உட்கார்ந்து உச்சி வெயிலில் -

சூடும் சொரணையும் வர

சூரியச் சோறு தின்றது;அம்மா !

அதற்கு நீயும் -

அம்புலியைக் காட்டாமல்

வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,

தினச் சோறு கூடவே

இனச் சோறும் ஊட்டினாய்;

நாட்பட -

நாட்பட - உன்

கடைக்குட்டி புலியானது;

காடையர்க்கு கிலியானது !'தம்பி !

தம்பி !' என

நானிலம் விளிக்க நின்றான் -

அந்த

நம்பி;

யாழ்

வாழ் -

இனம்

இருந்தது - அந்த...

நம்பியை

நம்பி;

அம்மா !

அத்தகு -

நம்பி குடியிருந்த கோயிலல்லவா -

உன்

கும்பி !சோழத் தமிழர்களாம்

ஈழத் தமிழர்களை...

ஓர் அடிமைக்கு

ஒப்பாக்கி; அவர்களது

உழைப்பைத் தம் உணவுக்கு

உப்பாக்கி;

செம்பொன்னாய் இருந்தோரை -

செப்பாக்கி; அவர்கள் வாழ்வை

வெட்டவெளியினில் நிறுத்தி

வெப்பாக்கி;

மான உணர்வுகளை

மப்பாக்கி;

தரும நெறிகளைத்

தப்பாக்கி -

வைத்த காடையரை

வீழ்த்த...

தாயே உன்

தனயன் தானே -

தந்தான்

துப்பாக்கி !'இருக்கிறானா ?

இல்லையா ?'

எனும் அய்யத்தை

எழுப்புவது இருவர் ;

ஒன்று -

பரம்பொருள் ஆன பராபரன்;

இன்னொன்று

ஈழத்தமிழர்க்கு -

அரும்பொருள் ஆன

பிரபாகரன் !அம்மா ! இந்த

அவல நிலையில் - நீ...

சேயைப் பிரிந்த

தாயானாய்; அதனால் -

பாயைப் பிரியாத

நோயானாய் !

வியாதிக்கு மருந்து தேடி

விமானம் ஏறி -

வந்தாய் சென்னை; அது -

வரவேற்கவில்லை உன்னை !

வந்த

வழிபார்த்தே -

விமானம் திரும்பியது; விமானத்தின்

விழிகளிலும் நீர் அரும்பியது !இனி

அழுது என்ன ? தொழுது என்ன ?

கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்

கன்ன வயல்களை உழுது என்ன ?

பார்வதித்தாயே ! - இன்றுனைப்

புசித்துவிட்டது தீயே !

நீ -

நிரந்தரமாய்

மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்

தங்க இடம்தராத - எங்கள்

தமிழ்மண் -

நிரந்தரமாய்த்

தேடிக்கொண்டது பழி !- கவிஞர் வாலி


 

 

பார்வதியம்மாள் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் ஒரு நாடகமே: சிவாஜிலிங்கம்

22 June, 2010 by admin

கருணாநிதியின் அரசு தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய பின்னர், அவர் மலேசியாவில் தங்கியிருந்த நாட்களில் அவரிடம் பயண அனுமதிக்காக நாம் கையெழுத்து வாங்கவேண்டும், என்று வந்த நபர் ஒருவர் இரண்டு வெற்றுத் தாள்களில் கைநாட்டை பெற்றுச் சென்றனர் என்றும் பின்னர் அது கடிதமாகத் தயாரிக்கப்பட்டு, கருணாநிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்துள்ளார். பார்வதி அம்மாள் சுயநினைவு இல்லாத நிலையில் அவரிடம் இருந்து பிறிதொரு காரணத்திற்காகப் பெறப்பட்ட, கைரேகைப் பதிவுகளை பாவித்து கனடாவில் இயங்கிவரும் அரசியல் அமைப்பு ஒன்று கருணாநிதிக்கு, பார்வதி அம்மாள் எழுதுவது போல கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யூன் 22,2010

கனடா

பார்வதியம்மாள் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் நாடகம் அல்ல

"பார்வதியம்மாள் கருணாநிதிக்கு எழுதிய கடிதம்" ஒரு நாடகமே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  சிவாஜிலிங்கம் அதிர்வு இணைதளத்துக்கு செவ்வி கொடுத்திருப்பதைப் பார்த்து நாம் வியப்படைந்தோம்.

பார்வதி அம்மா முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தை நாமே எழுதி அம்மாவின் பெருவிரல் அடையாளத்தைப் பெற்று முதல்வர் கருணாநிதிக்கு மின்னஞ்சல் மூலமும் தொலைப்படி மூலமும் அனுப்பி வைத்தோம்.

ஆனால் எமக்குக் கிடைத்த பதிலில் இந்திய அரசு அநேக நிபந்தனைகளை விதித்திருந்தது.  அவை எமது விருப்பத்துக்கு மாறாக இருந்தன. முக்கியமாக அம்மாவுக்கு முன்னர் மருத்துவம் பார்த்த முசிறி மருத்துவர் இராஜேந்திரம் அவர்களிடமே அவர் மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற எமது வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எமது மனமாற்றத்துக்கு இதுவே பேரளவு காரணம் ஆகும்.  இப்போது தளர்த்தப்பட்டுள்ள நிபந்தனைகள் அப்போதே இல்லாது இருந்திருந்தால் அம்மவை ா இந்தியாவுக்கு அனுப்பி வைததிருந்திருப்போம்.

வினோதினி இராஜேந்திரம்

 

 


இக் கடிதத்தை தமிழ் நாடு அரசு பரிசீலித்து, கடும் நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியது. இதனைப் பெரிதுபடுத்தி, தமிழ் நாட்டில் ஈழ ஆதரவாளர் என தம்மை அடையாளப்படுத்தி வரும் அக்னி சுப்பிரமணியம் என்பவர் தனது "மனிதம்" அமைப்பினூடாக வெளியிட்டிருந்தார். கருணாநிதியின் பல அறிக்கைகள் இவர் கைகளுக்கு முதலில் எப்படி வந்து சேர்கிறது என்பதில் பெரும் ஜயப்பாடு நிலவுகிறது. இவர் மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் எவ்வாறான தொடர்புகளைக் கொண்டிருக்கிறார் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. ஈழ ஆதரவாளர் என தம்மைக் கூறிக்கொண்டு, பல புலம்பெயர் தமிழ் மக்களிடையே இவர் ஊடுருவி இருக்கிறார் என்பது ஒருபுறம் இருக்க,

விழுப்புரம் ரயில் தண்டவாளத் தகர்ப்பு, தமிழ் நாட்டில் பல ஈழத் தமிழர்கள் கைது, செம்மொழி மாநாட்டிற்கு போராளிகள் எதிர்ப்பு, தமிழ் நாட்டில் புலிகள் ஊடுருவியுள்ளனர் என்று பல பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டது கலைஞர் அரசு. இதனை முறியடிக்க சமீபத்தில் இம் மாநாட்டிற்கு தாம் எதிரானவர்கள் அல்ல என சம்மந்தப்பட்ட தரப்பு அறிக்கை ஒன்றை மிகச் சாதூரியமாக விட்டது. அதனால் மூக்குடைந்த கருணாநிதி, பூட்டியிருந்த தமிழ் நாடு தலைமைச் செயலகமூடாக ஞாயிற்றுக்கிழமை என்று கூடப் பாராமல் நன்றி பாராட்டி அறிக்கை வெளியிட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். ஆனால் அவர் அரசியல் லாபத்துக்காகவே அதனைப் பயன்படுத்துகிறார் என்று சிலர் கூறுவதையும் மறுப்பதற்கு இல்லை.

கருணாநிதி விட்ட அறிக்கையை உடனே புலம்பெயர் சமூகங்களுக்கு அனுப்பி கருணாநிதியின் கரங்களை வலுப்பெறச் செய்ய தமிழ் நாட்டில் மீண்டும் மும்மரமாக இயங்கி வருகிறார் அக்கினி சுப்பிரமணியன் அவர்கள். எனவே தமிழ் நாட்டில் கருணாநிதியின் கரங்களைப் பலப்படுத்தும் முயற்சியில் தற்போது சிலர் இறங்கியுள்ளனர். அத்தோடு தம்மை ஈழ விடுதலை ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு, இரண்டு பக்கமும் பாட்டுப்பாடித் திரிவோரிடம் புலம்பெயர் மக்கள் மிக ஆவதானமாக இருக்கவேண்டும். மேற்குறிப்பிட்ட நபரின் செயற்பாடுகளைக் கவனித்து நாம் செயல்படுவது நல்லது.

 

 

பிரபாகரன் தாயாருக்கு அரசு செலவில் சிகிச்சை
தமிழக அரசுக்கு சுப.வீரபாண்டியன் பாராட்டு

 

சென்னை, மே 6_ தமிழீழ விடுதலைப் புலிக-ளின் தலைவர் பிரபாகர-னின் தாயார் இந்தியாவில் நுழைவதற்கு உள்ள தடையை நீக்கி, மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகத் தமிழகம் வர அவரை அனுமதிக்கக் கோரி மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளதன் மூலம், சட்ட-மன்றத்தில் தான் கூறிய உறுதிமொழியை நம் முதல்வர் அவர்கள் நிறை-வேற்றியுள்ளார். அத்-தோடு நிற்காமல் அவரு-டைய சிகிச்சைக்கான முழு ஏற்பாடுகளையும் அரசே செய்யும் எனவும், செலவுகளை அரசே ஏற்-றுக்கொள்ளும் எனவும் அவர் கூறியிருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. பார்வதி அம்மையார் அவர்-களுக்குத் தேவையான பாதுகாப்பைக் கொடுக்-கவும், சிகிச்சை அளிக்-கவும் முன்வந்துள்ள தமி-ழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களையும், துணை முதல்வர் அவர்-களையும், தமிழக அர-சையும் திராவிட இயக்க தமிழர் பேரவை நெஞ்-சாரப்பாராட்டித் தன் நன்றியைத் தெரிவித்துக்-கொள்கிறது.

பிரபாகரனின் பெற்-றோர் இந்திய மண்ணில் கால் வைக்கவே அனும-திக்கக் கூடாது, அவர்-களைக் கருப்புப் பட்டி-யலில் வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும், அவர் தமிழகம் வர அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளதோடு, அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ள இன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் உள்ள மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டை தமிழின உணர்வாளர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்-வோர் இப்போதேனும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறோம்.

இவ்வாறு திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரி-வித்துள்ளார்.

 
பிரபாகரன் தாயாருக்கு நிபந்தனைகள் : கருணாநிதி விளக்கம்

புதுடெல்லி, மே 4,2010

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை தருவதற்கு பெரிய நிபந்தனைகள் ஏதும் விதிக்குமாறு தமிழக அரசு பரிந்துரைக்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பார்வதி அம்மாளின் பாதுகாப்பு கருதி -அரசின் மேற்பார்வையில் அவர் சிகிச்சை பெற வேண்டும் என்றும்,"சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அரசு செய்யும் என்றும் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இதைத்தான் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்து,அரசு சார்பில் அதற்கு பதில் அளிக்கப்பட்டு,"தீர்ப்பு வந்ததின் தொடர்ச்சியாக பார்வதி அம்மாளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம்.

அவருடைய பாதுகாப்பு கருதி,"அரசின் அரவணைப்பில் நாங்கள் குறிப்பிடும் மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அரசு செலவில் சிகிச்சை பெற வேண்டும் என்பதுதான் நாங்கள் கூறியுள்ள நிபந்தனைகள். இது ஒன்றும் கடுமையானது அல்ல," என்றார் முதல்வர்.

முன்னதாக, சட்டப்பேரவையில் நேற்று துணை முதல்வர் தாக்கல் செய்த அறிக்கையில், 'முதல்வர் கருணாநிதி ஏற்கனவே சட்டசபையில் அறிவித்ததற்கு இணங்க பார்வதி அம்மாள் அனுப்பியுள்ள கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளபடி மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்கு அவர் வந்து செல்ல சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆராய்ந்து அனுமதி அளிக்கலாம் என்ற பரிந்துரை கடிதம் மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பார்வதி அம்மாள் சிகிச்சைக்கு தமிழக அரசு பரிந்துரை :  ஸ்டாலின் தகவல்

சென்னை, மே 3, 2010

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சென்னையில் தங்கி மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்திருப்பதாக, சட்டப்பேரவையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று விதி 110ன் கீழ் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

'மலேசியாவில் இருந்து சென்னைக்கு சிகிச்சைக்காக வந்த விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் திருப்பி அனுப்பிய நிகழ்வு குறித்து கடந்த மாதம் 19 ஆம் தேதி சட்டசபையில் விவாதிக்கப்பட்டது.

அன்று அதற்கு பதில் கூறிய முதல்வர் கருணாநிதி, இந்த செய்தி முறையாக உரிய வகையில் தமக்கு சொல்லப்படவில்லை என்றும் அரசில் யாருக்கும் சொல்லப்படவில்லை என்றும் அதன் காரணமாக அவர் திருப்பி அனுப்பப்பட்டார் என்றும்; அப்படி திருப்பி அனுப்பப்பட்டவர் மலேசியாவுக்கு அதாவது கோலாலம்பூருக்கு திரும்ப சென்று அங்கு வைத்திய வசதிகள் பெறுவதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கின்றன. மீண்டும் தமிழகம் சென்று வைத்திய வசதிகள் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று பார்வதி அம்மாள் அறிவித்தால் அதனை பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு அதை பற்றி எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது என்றும் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நீதி பேராணை விண்ணப்பம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது தமிழக அரசின் வக்கீல், மாநில அரசுக்கு மருத்துவ சிகிச்சை கோரி பார்வதி அம்மாள் மனு அளித்தால் மனிதாபிமான அடிப்படையில் பரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு தக்க முன் முடிவுகள் அனுப்பப்படும் என்ற கருத்தை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் மீது கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், பார்வதி அம்மாள் மருத்துவ சிகிச்சை முறையீட்டை மனுதாரரோ அல்லது அவரது தரப்பிலோ கொடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு கொடுக்கப்படும் மனுவை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டனர். 

இதற்கிடையே பார்வதி அம்மாள் பெருவிரல் ரேகை பதித்த கடிதம் ஒன்று தனது வைத்திய வசதிக்காக கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வருவதற்கு மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக ஏற்பாடு செய்து தரும்படி தமிழக முதல்வர் கருணாநிதியை வேண்டி கடந்த 30 ஆம் தேதி முதல்வரின் தனிப்பிரிவில் இயங்கும் கணிப்பொறியியல் மின் அஞ்சல் மூலம் பெறப்பட்டது.

முதல்வர் ஏற்கனவே சட்டசபையில் அறிவித்ததற்கு இணங்க பார்வதி அம்மாள் அனுப்பியுள்ள கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளபடி மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்கு அவர் வந்து செல்ல சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆராய்ந்து அனுமதி அளிக்கலாம் என்ற பரிந்துரை கடிதம் மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.'

இவ்வாறு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த அறிக்கையில், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 


சென்னை: இந்தியாவில் வந்தேறிகள் எல்லாம் சுகவாழ்வு வாழ்கிறார்கள். பாகிஸ்தான் சிறுவனுக்கு சிகிச்சை தருகிறார்கள். ஆனால் ஒரு வயதான தமிழ்த் தாய்க்கு அனுமதி மறுக்கிறார்கள். தமிழர் மீதான துவேஷம் இது" என இயக்குநரும் நாம் தமிழர் அமைப்பின் தலைவருமான சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கை:

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் [^] தாய் பார்வதி அம்மாள் தனது உடல் நலம் குன்றியதால் சிகிச்சை பெறுவதற்காக முறைப்படி விசா பெற்று இந்தியாவிற்கு வந்தவரை கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் ஈவிரக்கமின்றி மத்திய மாநில அரசுகள் திருப்பி அனுப்பியுள்ளன.

உரிய அனுமதி பெற்று வந்த ஒருவரை தடுத்த இது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல சட்ட விரோத செயலுமாகும்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிறுவனுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய இந்தியா உதவியது என்று புகைப்படம் எடுத்து உலகுக்கு தங்கள் மனிதாபிமானத்தை வெளிச்சமிட்டுக்காட்டுபவர்கள் இதில் இரட்டை வேடம் இடுவது ஏன்?

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகுக்கெல்லாம் பாடிச்சென்ற எம் பாட்டன் வாழ்ந்த மண்னில் இன்று இந்த மண்ணிற்குத் தொடர்பில்லாத இத்தாலியர் தொடங்கி மார்வாடி குஜராத்தி,மலையாளி,தெலுங்கர்கள் வரை அனைவரும் உல்லாச வாழ்வு வாழ்கையிலும் அதிகாரத்தில் இருக்கையிலும் எங்கள் அன்னையின் உடல் நலத்திற்கு சிகிச்சை பெற இந்த மண்ணில் அனுமதி மறுக்கப்படுகின்றது என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான ஒன்று?

உலகெமெல்லாம் வாழும் தமிழரின் ஒப்பற்ற தலைவனாம் எங்கள் அண்ணன் பிரபாகரனின் தாயாரை மனிதாபிமானமற்று திருப்பி அனுப்பியதன் மூலம் மத்திய மாநில அரசுகள் தமிழருக்கு எதிரான தங்கள் செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கின்றன என்று மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனிதாபிமானமற்ற சட்ட விரோத செயலுக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..." என்று கூறியுள்ளார்.

சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்திற்குள் நுழைய அனுமதி இல்லையென்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்ற தாயார் பார்வதி அம்மையார் உடல் நலம் குன்றிய நிலையில் மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்காக மலேசியாவில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து 6 மாத காலத்திற்கு விசா பெற்று இந்தியாவுக்கு நேற்று இரவு 10:45 மணிக்கு விமானத்தில் வந்தார்.

படுத்த படுக்கையில் பயணம் செய்த அவருக்குத் துணையாக விஜயலட்சுமி என்ற பெண்ணும் வந்தார். அவர்கள் இருவரும் விமானத்தை விட்டுக் கூட இறங்க அனுமதிக்கப்படாமல் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 80 வயதை எட்டிவிட்ட மூதாட்டி அவர். ஏற்கனவே பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்டவர். இத்துடன் தனது கணவரை இழந்த பெரும் சோகத்திற்கு ஆளானவர். சிங்களச் சிறையில் கணவரோடு பல மாதங்கள் அடைக்கப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்.

பெரும்பாலான நேரங்களில் சுய நினைவை இழந்த நிலையிலே இருப்பவர். சிகிச்சைக்காக அவர் இங்கு வருவதைத் தடுத்துத் திருப்பி அனுப்பியதைப் போன்ற மனித நேயமற்ற கொடுமை வேறு இருக்க முடியாது.

இந்திய அரசு 6 மாத காலத்திற்குரிய விசாவை நேற்று காலையில்தான் அவருக்கு அளித்துள்ளது. ஆனால் அவர் சென்னையில் வந்து இறங்கியவுடன் இரவோடு இரவாக அவரைத் திருப்பி அனுப்பியதற்கு யார் காரணம்?. அவர் வருவதை இந்திய அரசு விரும்பவில்லை என்றுச் சொன்னால் விசா வழங்காமலேயே இருந்திருக்க வேண்டும்.

காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்புவது என்பது அடாத செயலாகும். மீண்டும் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ளுவதன் மூலம் அவருக்கு ஏதேனும் நேருமானால் அதற்கு இந்திய அரசே பொறுப்பாகும்.

பிரபாகரன் தாயார் அவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல நானும் வைகோ அவர்களும் சென்றிருந்தோம். அவர் வருகையை நாங்கள் யாருக்கும் தெரிவிக்கவில்லை. அவரது உடல்நலம் மட்டுமே எங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது.

வெளியில் தெரிந்தால் கூட்டம் கூடும். அது அவரது உடல் நலனுக்குக் கேடாக முடியும் என்ற காரணத்தினால் அவர் வருகையை வெளியிடவில்லை.

விமான நிலையத்திற்கு வைகோவும் நானும் சென்றபோது நாங்கள் வருவதற்கு முன்பே அங்கு குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான காவல் படையினர் பாய்ந்தோடி வந்து எங்களை வழிமறித்துத் தடுத்தார்கள்.

விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட எல்லை வரை நாங்கள் செல்வதற்குரிய அனுமதிச் சீட்டுகள் எங்களிடம் இருந்தன. ஆனால் எங்களைப் பிடிவாதமாக அனுமதிக்க மறுத்து பிடித்துத் தள்ளும் அளவிற்கு காவல்துறையினர் அட்டூழியம் புரிந்தனர். தொடர்ந்த தள்ளு முள்ளுக்கு நடுவேதான் நாங்கள் விமான நிலையத்தின் பார்வையாளர் பகுதியையே அடைய முடிந்தது.

விமான நிலையத்தில் தனியான பாதுகாப்புப் படையினர் இருக்கிறார்கள். ஆனால் சென்னை புறநகர் காவல்படையினர் அத்துமீறி செயல்பட்டு எங்களைத் தடுத்தார்கள்.

முதலவருக்குத் தெரியாமல் இது ஒரு போதும் நடந்திருக்க முடியாது. இந்திய அரசு விசா வழங்கிய பிறகு ஏன் அவர் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்.

உலகத் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசியத் தலைவரான பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்தத் தாயாரை, தாய் தமிழகத்தை உரிமையோடு நம்பி வந்த தமிழ் மகளை கொஞ்சமும் இரக்கமில்லாமல் விரட்டியடித்ததை உலகத் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் நெடுமாறன்


எச்சரிக்கைப் பட்டியலில் பார்வதி அம்மாள் பெயர் இருந்த்தால் அனுமதிக்கவில்லை- குடியேற்றப் பிரிவு

சென்னை: கடந்த ஜெயல்லிதா தலைமையிலான தமிழக அரசின் கோரிக்கையின் பேரில் பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை மற்றும் பார்வதி அம்மாள் ஆகியோர் இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு விதித்துள்ளது. இதன் பேரில்தான் பார்வதி அம்மாளின் பெயர் எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கப்பட்டு குடியேற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால்தான் பார்வதி அம்மாளை விமானத்திலிருந்து இறங்கக் கூட அனுமதிக்காமல் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிரி நாடுகளைச் சேர்ந்தவர்கள் கூட இந்தியாவுக்குள் வந்து சர்வ சாதாரணமாக சிகிச்சை பெற்றுச் செல்லும் நிலையில் யாருக்கும் எந்தவித பாதகத்தையும் ஏற்படுத்த இயலாத ஒரு மூதாட்டியான பார்வதி அம்மாளை விமானத்திலிருந்து இறங்கக் கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மும்பையில் வெறியாட்டம் நடத்தி, நூற்றுக்கணக்கானோரின் உயிரைப் பறித்த கசாப்புக்கு சிறையில் ராஜ உபச்சாரம் நடந்து வரும் நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக வந்த பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாளை மனித நேயம் சிறிதும் இல்லாமல் திருப்பிய அனுப்பிய செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்தியத் தூதரகம் விசா அளித்தும் கூட பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பார்வதி அம்மாளின் பெயர் மத்திய அரசின் எச்சரிக்கை பட்டியலில் இடம் பெற்றுள்ளதாம். அதாவது இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளோர் இந்தியாவுக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள் விசா கோரி விண்ணப்பித்தால் அது குறித்து சம்பந்தப்பட்ட தூதரக அதாகரிகள், உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னரே விசா வழங்க வேண்டும்.

பார்வதி அம்மாளின் பெயர் எச்சரிக்கைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில் அவருக்கு மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மருத்துவ விசாவை வழங்கியுள்ளது. அப்படியானால் விசா வழங்குவதற்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அது ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்.

பார்வதி அம்மாளுக்கு விசா தரப்பட்டிருப்பதால், உள்துறை அமைச்சகத்திடம், மலேசிய இந்தியத் தூதரகம் ஆலோசித்திருக்க வேண்டும் என்று கருத வேண்டியுள்ளது.

அப்படி இருந்தால், ஏன் சென்னைக்கு வந்த பார்வதி அம்மாளை இறங்க அனுமதிக்காமல் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் திருப்பி அனுப்பினார்கள் என்று புரியவில்லை.

இதுகுறித்து குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், பார்வதி அம்மாளும், வேலுப்பிள்ளையும் 2003ம் ஆண்டு வரை திருச்சியில் தங்கியிருந்தனர். பின்னர் கொழும்பு திரும்பி விட்டனர்.

அதைத் தொடர்ந்து இருவரையும் மீண்டும் இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டாம் என அப்போதைய தமிழக அரசு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.

இதையடுத்து இருவரும் இந்தியாவுக்குள் நுழைய தடை விதித்த இந்திய அரசு அவர்களின் பெயர்களை எச்சரிக்கைப் பட்டியலில் சேர்த்தது. இன்று வரை பார்வதி அம்மாளின் பெயர் எச்சரிக்கைப் பட்டியலில் நீடிக்கிறது. இதன் பேரிலேயே அவர் திருப்பி அனுப்பப்பட்டார் என்று கூறுகின்றனர்.
2003ம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

சென்னை வானூர்தி நிலையத்தில் சென்னை காவல்துறை உட்பட மேலதிக பாதுகாப்பு அதிகாரிகள் எதற்காக நிறுத்தப்பட்டார்கள்? ஏழு ஆண்டகளுக்கு முன்னர் ஜெயலலிதா கொடுத்த பட்டியலை ஏன் கருணாநிதி ஆட்சி திருத்தவில்லை? வி.புலிகளைப் பொறுத்தளவில் அதிமுக வின் நிலைப்பாடே திமுகவின் நிலைப்பாடு இரண்ட கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில் நிற்கின்றன என கருணாநிதி எப்போதோ ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்ததை இப்போது நினைவு கூருவது நல்லது. அந்தப் பின்னணியில் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதில் வியப்பேதும் இல்லை.


திகதி

மலேசியா முகவரி

முதல்வர் கலைஞர் திரு. மு. கருணாநிதி அவர்கட்கு! 

எனது மரியாதைக்கும் மதிப்புக்குமுரிய தமிழக முதல்வர் கலைஞர் திரு. மு. கருணாநிதி அவர்கட்கு மறைந்த
திருவேங்கடம்
வேலுப்பிள்ளை அவர்களின் துணைவியார் பார்வதி வேலுப்பிள்ளை எழுதும் அன்பு  மடல். 

நான் நீண்ட காலமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வலது காலும் கையும் செயலற்ற நிலையில் இருந்து வருகிறேன். நான் தமிழ்நாட்டில் இருந்த காலத்தில்  முசிறியிலுள்ள டாக்டர் ராஜேந்திரனிடம் வைத்தியம் பெற்று வந்தேன்.  ஆனால் 2003ம் ஆண்டு மே மாதம் இலங்கைக்குச் சென்றபடியால் தொடர்ந்து வைத்தியம் செய்ய முடியாமல் போய்விட்டது. வன்னியிலும் இராணுவ முகாமிலும் சரியான மருத்துவ வசதிகள் இல்லாதபடியால் எனது உடல்நிலை மேலும்  பாதிக்கப்பட்டு விட்டது.

கொழும்பில் எளிதில் விசா எடுக்க முடியாத சூழ்நிலையில் எனது மகள் விநோதினி இராஜேந்திரம் என்னை மலேசியாவிற்கு வரவழைத்து அங்கு இந்திய விசா பெற்று என்னை சென்னைக்கு ஒரு பெண்ணின் உதவியுடன் அனுப்பி வைத்தார். கனடிய குடிமகளான எனது மகளுக்கு  மலேசியாவில் இருந்து கொண்டு இந்திய விசாவுக்கு விண்ணப்பித்தும் அதனை உரிய நேரத்தில் எடுக்க முடியாமல் போய்விட்டது. . 

ஆனால் எங்கோ ஒரு தவறு ஏற்பட்டு இருக்க வேண்டும். இல்லாவிடின் உரிய கடவுச் சீட்டு, ஆறுமாத விசா அனைத்தும் இருந்தும் சென்னையில் நான்  விமானத்தை விட்டு இறங்க முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டு என்னையும் என்னுடன்  துணைக்கு வந்த  பெண்மணியையும் அதே விமானத்தில் மலேசியாவிற்குத் திருப்பி அனுப்பி விட்டார்கள். 

எனது வைத்தியத்திற்கு டாக்டர் இராஜேந்திரன் வேறு தகுதி வாய்ந்த மருத்துவர்களையும் ஏற்பாடு செய்வார் என்பதால் தயவு செய்து நான் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வருவதற்கு  மலேசியாவிலுள்ள இந்தியத் தூதகரத்தினூடாக ஏற்பாடு செய்து தரும்படி அன்போடு வேண்டுகின்றேன்.  

நான் சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப் பட்டது தொடர்பாக தமிழக சட்ட சபையில் நடந்த விவாதத்திற்குப் பதில் அளித்த நீங்கள் நான் தமிழகத்தில் மீண்டும் சிகிச்சை பெற விரும்பினால், அதைப்பற்றி பரிசீலித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதத் தயார் என தெரிவித்திருந்தீர்கள். உங்களது உறுதிமொழி  எனக்கு மன ஆறுதலைத் தந்துள்ளது.

தங்கள் உதவியினை என்றும் மறக்க மாட்டேன். . நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகின்றேன்.

 

நன்றியுடன் தங்கள் உடன்பிறப்பு

 

திருவேங்கடம் வேலுப்பிள்ளை பார்வதி