குரு - சீடன்

புலம் பெயர் தமிழர்கள் ஒரு டொலரைக் கூடக் கொடுப்பதில்லை அவர்களுக்குத் தமிழும் தெரியாது!

திருமகள்

குரு - கொக்காவில் தொலைத்தொடர்புக் கோபுரப் பணியைத் தொடக்கி  வைத்து உரையாடிய  ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே "இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என வெளிநாடுகளில் இருந்தவாறு கூச்சலிடும் புலம்பெயர் தமிழர்களில் ஒருவரேனும் தமிழ் மக்களின் நலனுக்காக ஒரு டொலரை கூட அன்பளிப்பு செய்ததில்லை" எனக் கூறியுள்ளாரே?

சீடன் - ஆமாம். நானும் அந்தச் செய்தியைப் படித்தேன். பாவம் ஆட்சித்தலைவர். அந்தக் காலத்திலும் மாதம் மூன்று முறை மழை பெய்கிறதா இல்லையா என்பதைத் தனது அமைச்சரிடம்தான் அரசர் கேட்டுத் தெரிந்து கொள்வார்.  மாளிகையில் குடியிருக்கும் அரசருக்கு மழை பெய்வது, பெய்யாமல் விடுவது தெரிவதில்லை. மகிந்தா இராசபக்சேயும் இந்த அரசரைப் போன்றவர்தான்.

குரு - கொஞ்சம் விளக்கமாகச் சொல்லு?

சீடன் - புலம்பெயர் தமிழர்கள் தங்களால் இயன்றளவு உதவி செய்கிறார்கள். இந்த ஆண்டு சனவரி மாதத்தில் தென்தமிழீழத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக 5 இலட்சம் மக்கள் இடம்பெயர நேரிட்டது. 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (5000 கோடி ரூபாய்) பொருள் இழப்பு ஏற்பட்டது. இதையிட்டு சிங்கள அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து கொண்டது. மகிந்த இராசபக்சே வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட திருகோணமலை, அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குப் போகவில்லை. ஆனால் சிங்கள மாவட்டங்களான அனுராதபுரம் மற்றம் பொலநறுவைக்குப் போயிருந்தார்.  பாதிக்கப்பட்டட தமிழ்மக்களுக்குப் புலம்பெயர் தமிழர்கள் தான் ஓடோடிச் சென்று பொருள் உதவி செய்தார்கள். இலண்டனில் உள்ள சைவத் திருக்கோயில்கள் 58,000 பவுண்ட்ஸ் (ரூபா 1  கோடி)  அனுப்பியது.  திருகோணமலை நலன்புரி சங்கம் 33 ஆயிரம் டொலர்களை  (ரூபா 36 இலட்சம்)  உரூபாய்களைத் திரட்டி அனுப்பியது. கனடாவில் இயங்கும் தமிழர்களுக்கான மருத்துவ அமைப்பு (MIFT) 14,000 டொலர்களை (ரூபா 15 இலட்சம்)  அன்பளிப்பாகக் கொடுத்தது. அமெரிக்காவில் இயங்கும் பன்னாட்டு மருத்துவ அமைப்பு பெருந்தொகை பெறுமதியான மருந்து, மருத்துவ கருவிகளை கொடுத்து உதவியது. இந்த நிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்த பரிந்துரையின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை, மட்டக்களப்பு மாவட்ட அமைதிக்கான பல்சமய அமைப்பு மற்றும் திருகோணமலை அன்னை சாரதா இல்ல அறக்கட்டளை ஆகிய அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குரு - யாழ்ப்பாணத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பத்துக்கும் அதிகமான காப்பகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இது எதனைக் காட்டுகிறது?

சீடன் - புலம்பெயர் தமிழர்கள் அமெரிக்க டொலர்களை, பிரித்தானிய பவுண்ட்ஸ், யூரோ டொலர்களை அனுப்பி வைக்கிறர்கள் என்பதைக் காட்டுகிறது!

குரு -  போர் முடிந்து 2 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இருந்தும் 2011 ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவுக்கு மகிந்த இராசபக்சே ரூபா 215.21 பில்லியன் ( 21521 கோடி) ஒதுக்கியுள்ளார். ஆனால் இடம்பெயர்ந்த மக்களது மீள்குடியமர்வுக்கு வெறுமனே  ரூபா 1.74 பில்லியன் (174 கோடி) மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அழகில் மக்களை மீள் குடியமர்த்துவதற்கு ஏன் புலம்பெயர்  தமிழ்மக்கள் உதவ வேண்டும் என்று கேட்கிறார்?

சீடன் - அப்படிக் கேளுங்கள் குருவே! வடக்கில் உள்ள இராணுவத்துக்கு சொகுசு பங்களாக்கள் கட்டப்படுகிறது.  உல்லாச விடுதிகளும் கட்டப்பட்டுள்ளது. அதுவும் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளில்  கட்டப்பட்டுள்ளன. ஆனால் போரினால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து கையறு நிலையில் உள்ள எங்கள் சொந்தங்கள் தகரக் கொட்டைகைகளில் படுத்துறங்கக் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளார்கள்.  சரி போகட்டும். புலம்பெயர் தமிழர்கள் தமிழ்மக்களுக்கு உதவ அணியமாக உள்ளார்கள். புலம்பெயர் தமிழ்மக்கள் மட்டுமல்ல உள்ளுர் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள், அய்யன்னா அமைப்புக்கள் உதவி வழங்கக் காத்திருக்கிறார்கள். ஆனால் சிங்கள அரசு அவற்றை சுதந்திரமாக இயங்க அனுமதிக்குதில்லை. புலிகளுக்கு உதவுகிறார்கள் என்ற குற்றச்சாட்டில் அவற்றுக்கு பாதுகாப்பு அமைச்சு தடை விதித்துள்ளது.

குரு - போர்தான் முடிந்து விட்டதே? பின் ஏன் இந்தக் கெடுபிடிகள்? நெருக்குவாரங்கள்?

சீடன் - போர் முடிந்துவிட்டது புலிகளை அழித்தவீட்டோம் என்று வெளியில் சொன்னாலும் உள்ளுர அரசுக்குப் புலிப் பயம் இருக்கிறது. உண்மையில் புலம்பெயர் தமிழர்கள் மக்களது மறுவாழ்வுக்கு உதவ வேண்டும் என்றால் சிங்கள அரசு சில நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

குரு - என்ன நடவடிக்கை?

சீடன் -  கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    1) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மீதான தடை நீக்கப்பட வேண்டும்.

    2) சிங்கள இராணுவத்தை வட - கிழக்கில் இருந்து விலத்த வேண்டும்.

    3) பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகால சட்ட விதிகள் நீக்கப் படவேண்டும்.

    4) வி.புலிகளுக்குத் தேநீர் கொடுத்தார்கள், இடியப்பம் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆண்டு பலவாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் (தோராயமாக 900) விதுதலை செய்யப்பட வேண்டும்.

     5) சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும்.

    6) தமிழ்மக்கள் தன்னாட்சி உரிமை கேட்கிறார்களா என்பதைக் கண்டறிய ஒரு நேரடி வாக்கெடுப்பு எடுக்க வேண்டும்.

இவற்றைச் செய்தால் புலம்பெயர் தமிழர்கள் இடம்பெயர்ந்த மக்களை அல்லாமல் முழு வட - கிழக்கு பொருளாதார மேம்பாட்டைப் பொறுப்பெடுக்க அணியமாக உள்ளார்கள்.

குரு - அது சரி "புலம்பெயர் தமிழர்களில்  பலர் தமிழில் பேசுவதில்லை. எனக்குத் தெரிந்த தமிழ் கூட அவர்களில் பலருக்கு தெரியாது" என மகிந்தர்  ஒரு போடு போட்டுள்ளாரே?

சீடன் -  அப்படிப் பார்த்தால் மகிந்தரின் கொச்சைத் தமிழை விட சற்று நல்ல தமிழ் பேசியவர் முன்னாள் ஆட்சித்தலைவர்  இரணசிங்க பிரேமதாச. சரி அதை விடுவோம்.  மகிந்தர் சொல்வதில் பாதி உண்மை இருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்களது இரண்டாவது பரம்பரை தமிழை வேகமாக மறந்து வருகிறது. மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியே தமிழை ஒரு பாடமாகப் படிக்கிறார்கள்.  இசை, நடனம், தண்ணுமை, வயலின் போன்ற நுண்கலைகளைப் படிப்போர் தமிழ் உருப்படிகளையும் பாடல்களையும் ஆங்கிலத்தில் எழுதிப் படிக்கிறார்கள். அவர்களுக்கு இசை ஆசிரியர்கள் இசையின் நுணுக்கத்தை ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள்.  தேவாரம், திருப்புகழின் அருமை பெருமை கூட ஆங்கிலத்தில்தான்  சொல்லப்படுகிறது. உங்களுக்கு நல்ல voice இருக்கிறது. ஆனால் நிறைய practice பண்ண வேண்டும். Nervous ஆக இருக்க் கூடாது.  Low pitch  இல் இருந்து   high pitch க்குப் போகும் போது  smooth தா போகணும். இங்குள்ள தமிழ்த் தொலைக் காட்சியில் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர்கள் நடிகைகள் பற்றிய நேர்காணல் தமிங்கிலத்தில்தான் இடம்பெறுகிறது. இப்போது வருகிற குத்துப் பாடல்களும் தமிங்கிலத்தில்தான் பாடப்படுகிறது. தமிழ் மெல்ல அல்ல வேகமாகச் சாகிறது!

குரு - இதற்கு என்ன காரணம்?

சீடன் - பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம் அடிமை மனப்பான்மை. தமிழில் என்ன இருக்கிறது என்ற ஆற்றாமை.   வழிபாட்டில் தமிழ் இல்லை. கோயில்களில் தமிழ் புறக்கணிக்கப்படுவதையிட்டு சைவச் சான்றோர்கள் துளியும் கவலைப்படுவதில்லை.  கோயில் அறிவித்தல்களில்  மஹா கும்பாவிஷேகம், பிரம்மோற்ஸவ விஞ்ஞாபனம், துவஜாரோகணம்,  உற்சவம், திருக்கலியாணம், சாயரட்சை என வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்.  தமிழர்களுக்கு தங்கள் மொழி தாழ்த்தப்படுகிறது ஒதுக்கப்படுகிறது என்று துளியும் கவலை இல்லை! சைவமும் தமிழும் ஒன்று, ஒன்றில்லையேல் மற்றில்லை என்று சொல்லும் சைவர்களுக்கு சூடு, சொரணை, தன்மானம் கொஞ்சமேனும் இல்லை.
 

குரு -  சீனாவில் பத்திரிக்கை, வலைதளம், பதிப்பகங்கள், புத்தகங்கள் போன்றவற்றில் எல்லாம் சீனமொழியோடு ஆங்கிலம் கலந்தால் மூன்றாண்டு சிறைத்  தண்டனை என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறார்களாமே?

சீடன் - ஆம் குருவே! சென்ற ஆண்டு மார்கழி 23 (2010) இல் அப்படியொரு சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார்கள்.  பிரெஞ்சு மொழியில் ஆங்கிலமோ பிற மொழிச் சொற்களோ கலக்கக் கூடாது என்று பிரெஞ்சு நாட்டு அதிபரான ஏனாதி டிக்காலே என்பவர் ஒரு விதி முறையைக் கொண்டு வந்தார். அந்த விதிமுறை அரசாங்க அதிகாரிகளுக்கு மட்டும்தான். ஆனால் அந்த நாட்டு எழுத்தாளர்கள், கவிஞர்கள் அந்த விதிமுறைக்குத் தங்களையும் உட்படுத்திக் கொண்டு அயல்மொழிச் சொற்களைக் கலக்காமல் தூய பிரெஞ்சு மொழியிலேயே எழுதினார்கள். அதே போல துருக்கி நாட்டு அதிபராக கமால் பாட்சா வந்தபோது "துருக்கி மொழியில் அரேபியச் சொற்களும் பல்வேறு மொழிச் சொற்களும் கலந்திருக்கின்றன; அப்படிப்பட்ட கலப்படச் சொற்களை அகற்றி விட்டுத் தூய துருக்கி மொழிச் சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என்று கூறினார். கூறியதோடு நின்றுவிடாமல், மொழி அறிஞர்களைக் கொண்டு துருக்கி மொழியில் புழக்கத்திலிருந்த இருபதாயிரம் அரபுச் சொற்களையும் பாரசீகச் சொற்களையும் நீக்கிவிட்டு, ஒரு இலட்சத்து 58 ஆயிரம் தூய துருக்கி மொழிச் சொற்களை உருவாக்கிப் புழக்கத்திற்குக் கொண்டு வந்தார். உலகம் அறிந்த ஊர்ப்பெயரான "கான்ஸ்டான்டி நோபிள்' என்ற பெயரை மாற்றிவிட்டு, "இஸ்தான்புல்' என்று துருக்கி மொழியில் அந்த நகரத்திற்குப் பெயர் வைத்தார். இஸ்தான்புல்தான் அந்நாட்டின் இன்றைய தலைநகர்.

குரு - பக்கத்தில் கியூபெக் மாகாணத்தில் பிரஞ்சுமொழிப் பயன்பாட்டைக் கண்காணிக்கத் தனியாக ஒரு மொழிக் காவல்துறையை வைத்திருக்கிறார்கள்.

 


 

புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு சவால் விடும் மஹிந்த

[ செவ்வாய்க்கிழமை, 07 யூன் 2011, 01:52.36 AM GMT ]

இலங்கை தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட புலம்பெயர் தமிழர்கள் இருப்பார்களாயின் ஒரு டொலரையேனும் அவர்களுக்கான அன்பளிப்பாக வழங்கட்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.

அவர்களுக்கு கொழும்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் எல்லாம் வீடுகள் உண்டு. ஐரோப்பா, கனடா, அமெரிக்காவிலும் கூட வீடுகள் உண்டு. அவர்கள் ஆங்கிலம் பேசி தமக்கான நிதிகளைச் சேகரித்துக்கொள்கின்றனர்.

இவர்களில் பலர் தமிழில் பேசுவதில்லை. எனக்கு தெரிந்த தமிழ் கூட அவர்களில் பலருக்கு தெரியாது. ஆனால் அவர்கள் தங்களுக்கான நிதி சேகரிப்பதில் மிகவும் திறமைசாலிகள்.

எவ்வாறெனினும் புலம்பெயர்ந்த தமிழர்களால் சேகரிக்கப்படும் நிதிகள் இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு உதவ பயன்படுத்தப்படுவதில்லை.

ஆனால் தமிழர்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய பிழையான தகவல்களையும் பொய்யையும் பரப்பவே அந்த நிதியைப் பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் மறைந்து போன தமது ஈழக் கோரிக்கையை மீண்டும் தோண்டியெடுக்க முயற்சி செய்கின்றனர்.

ஆனால் இலங்கைத் தமிழ் மக்கள் இவர்களின் கபட நடவடிக்கைகளை விளங்கிக்கொள்ளும் அளவுக்கு விவேகம் உள்ளவர்களாக காணப்படுகின்றனர்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார். (செய்தி)


 


குரு - சீடன்

 

பாலுக்குப் பாலகன் வேண்டி அழும்போது .....?

 

திருமகள்

 

சீடன் - தமிழினத்தின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பது இந்து மதந்தான்.  தமிழினத்தின் முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் தடையாக இருப்பது இந்து மதந்தான். இந்து மதம் மூடநம்பிக்கையைப் பரப்புகிறது.

 

குரு - இல்லையே! சைவம் இன்றேல் தமிழ் இல்லை, தமிழ் இன்றேல் சைவம் இல்லை என்றல்லவா சைவர்கள் முழங்குகிறார்கள்?

 

சீடன் - ஆமாம் அப்படித்தான் முழங்குகிறார்கள்.  அந்த முழக்கம் தேவார காலத்துக்குப் பொருத்தமாக இருக்கலாம்.  இன்றைய காலத்துக்கு பொருத்தமாக இல்லை.

 

குரு - சற்று விளக்கமாகச் சொல்?

 

சீடன் - முதலில் மூடநம்பிக்கையை எடுத்துக் கொள்வோம். அருச்சனை, அபிசேகம், தேர், தீர்த்தம், திருவிழா,  ஓமம் எல்லாமே மூடநம்பிக்கைதான். ஆரியர்கள் நாகரிகம் அடையாத காலத்தில் மனிதர்களைப் படைத்து, அழித்து, காக்கிற தெய்வம் ஒன்று இருக்கிறது.  அவருக்கு அருச்சனை, அபிசேகம், தேர், தீர்த்தம், திருவிழா,  ஓமம் எனப் பல சடங்குகளைச் செய்தால் மனிதருக்கு நன்மை உண்டாகும் புண்ணியம் கிடைக்கும் சொர்க்கத்துக்குப் போகலாம் என நினைத்தார்கள். தெய்வம்  கோபிப்பதால்தான் இடி, மின்னல், நிலநடுக்கம், எரிமலை, புயல், வெள்ளம் எல்லாம் இடம்பெறுகின்றன. எனவே தெய்வத்தைத்  திருப்திப்படுத்த பொங்கல், பூசை எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். வேதகாலத்தில மழை/நீர் - வருணன் மின்னல் - இந்திரன், நெருப்பு - அக்னி, காற்று - வாயு, மண் - பூமாதேவி. சந்திரன், சூரியன் ஆகியவை தெய்வங்களாக வணங்கப்பட்டன.  நால் வேதங்களில் உருத்ரன்,விஷ்ணு, பிரம்மா எல்லாம் கிடையாது.  உருத்திரன், விஷ்ணு, பிரம்மா இடைச் செருகல்கள். வேதகாலத்தில் சிவன் சிசுனதேவர் என்று பழிக்கப்பட்டார். வேதகாலத்தில் வேள்வி செய்வதே வழிபாடாக இருந்தது. இந்த வேள்வியில் விலங்குகள் பலிகொடுக்கப்பட்டன. அதன் மாமிசத்தை வேதியர் உண்டனர்.

 

குரு - இந்து மதத்தில் இரண்டு பிரிவுகள் இருக்கிறதாகச் சொல்கிறார்களே?

 

சீடன் - இரண்டல்ல.  பல பிரிவுகள் காணப்படுகின்றன.  அவற்றை ஆதி சங்கரர் என்பவர்தான் தொன்று தொட்டு நிலவி வந்த சிவனை வழிபடும் சைவம், திருமாலை வழிபடும் வைணவம், சத்தியை (சக்தியை_) வழிபடும் சாக்தம், வினாயகரை வழிபடும் காணபத்யம், முருகனை வழிபடும் கௌமாரம், சூரியனை வழிபடும் சௌரம் முதலியவற்றை முறைப் படுத்தி ஆறு சமயங்களாக (ஷண்மதங்கள்) வகுத்தளித்தார். அவர் குமுகத்திற்கு (சமூகத்திற்கு) ஒவ்வாத ஆதாரமற்ற, தேவையற்ற சமயப் பழக்க வழக்கங்களாக கருதியவைகளைச் சாடவும் செய்தார். சங்கரர் இயற்றிய நூல்கள் பிரகரணக் கிரந்தங்கள் எனப்படும். அவையாவன:


1.
விவேகசூடாமணி
2.
அபரேஷானுபூதி
3.
தட்சணாமூர்த்தி தோத்திரம்
4.
ஆனந்தலகரி
5.
சொளந்தரியலகரி
6.
ஆரியாசதகம்
7.
பஜகோவிந்தம்
8.
விவேக சூடாமணி
9.
உபதேச சாயஸ்ரி
10.
சிவானந்தலகரி
 

பகவத் கீதை, உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், ஆகியவற்றிற்கு ஒப்பற்ற விளக்கவுரைகள் (பாஷ்யங்கள்) எழுதிய பெருமையும் ஆதி சங்கரரைச் சாரும்.

 

குரு அமைப்பு அடிப்படையில் இந்த சமயங்களை ஒன்றுபடுத்தியது சரி. ஆனால் மத்வரின் துவைதக் கோட்பாட்டை தள்ளிவிட்டு அத்துவைத கோட்பாட்டை சங்கரர் முன்வைத்ததால் சனாதன மதத்தில் குழப்பம் வந்ததே?

 

சீடன் - ஆம் குருவே! பரமாத்மா என்ற இறைவனும் ஜீவாத்துமா என்ற அவர் படைப்புக்களும் ஒன்று என்று  இந்துக்கள் கருதுகின்றனர் இது குறித்த  விவாதம் காலம் காலமாக இருந்துவருகிறது.

 

குரு - கொஞ்சம் விளக்கமாகச் சொல்?

 

சீடன் - கிறிஸ்த்தவம் மற்றும் இஸ்லாம் இரண்டையும் பொறுத்தவரை படைப்பு வேறு படைத்தவன் வேறு என்ற உறுதியான கொள்கையை அதன் வேதங்கள் விளக்குகிறது. ஆனால் இந்து மதத்தில்  துவைதம், அத்வைதம், விசிட்டாத்வைதம் என்ற மூன்று பெரும் பிரிவுகள் காணப்படுகின்றன. துவைதத்தைப் போதித்தவர் மத்வர். பிரம்மத்தையும் ஆன்மாவையும்  வேறாகப் பிரித்துச் சொல்வதால் மத்வருடைய தத்துவக் கூற்றுகளுக்கு துவைதம் என்ற பெயர் உண்டானது. ஆன்மா கடவுளின் ஒரு அணுவளவு பாகமாதலால், இவற்றின் வேற்றுமையை மரத்திற்கும் மரத்திலுள்ள ஒரு இலைக்கும் உள்ள வேற்றுமையாகச் சொல்லலாம்.  ஆயினும் கடவுள் நாராயணன் ஒருவர் தான் சுதந்திரர். மற்ற எல்லா உலகப்பொருள்களும் அவரிடமிருந்து வேறுபட்டு இருந்தாலும் சுதந்திரமில்லாமல் அவரால் ஆட்டிப் படைக்கப்படுகின்றன. அதனால் சுதந்திரர் ஒரு பகுப்பாகவும் சுதந்திரமற்றதெல்லாம் ஒரு பகுப்பாகவும் இரண்டு பகுப்புகள் எக்காலமும் இருந்தே தீரும். இதனாலும் இக்கொள்கை துவைதம் என்று கூறப்படுகிறது.

அத்வைதத்தை பரப்பிய   ஆதி சங்கரர்  என்றும் நிலைத்திருக்கும் பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுதான் பிரும்மம் அல்லது பரமாத்மா என்று அழைக்கப்படுகிறது. அதைத்தவிர வேறு எதுவும் மெய்ப்பொருளல்ல.  அனைத்துயிர்களுக்கும்! உயிருக்குயிராகவும் அறிவுக்கறிவாகவும் இருக்கும் ஜீவாத்துமா, வெறும் தோற்றமான அகில உலகிற்கும் அடிப்படை மெய்ப்பொருளாக இருக்கும் பரமாத்மா ஆகிய இரண்டும் இரண்டல்ல, ஒன்றே!  பரமாத்மா என்னும் இறைவன் எல்லா உயிர்களுக்குள்ளும் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்தவனாய் இருக்கிறான். எனினும் அவரால் படைக்கப்பட்ட ஜீவாத்துமாக்களாகிய மனிதர்களும் மற்ற உயிரினங்களும் நிலையில்லாதவைகள். ஆனால் பரமாத்மாவாகிய இறைவன் நிலையானவர்!  ஆதிசங்கரர் பவுத்தர்களின் மாயவாதத்தை புதிய ஞானமாகத் திரித்து அதை அத்வைதம் என அழைத்தார் என்கிறார்கள்.  அத்வைதம் முழுமுதற்கடவுள் என்று எதையும் காட்டவில்லை என்பதால் அத்வைதத்தை 'பிரசன்ன பவுத்தம்' அதாவது போலி பவுத்தவாதம் என்று பழித்தவர்களில் இராமனுஜரும் ஒருவர்.

 

குரு - பரமாத்மாவும் ஜீவாத்மாவும் இரண்டல்ல ஒன்றுதான் என்றால் பரிசுத்தமான ஒரு மனிதன் கடவுள் ஆகிவிட முடியுமா?

 

சீடன் - முடியாது.  பரமாத்தாவால் உருவான நிலையில்லாத உயிரினங்களாகிய ஜீவாத்மாக்கள் எல்லாம் பரமாத்மாவிலிருந்து புறப்பட்டு வந்திருந்தாலும் அவைகள் வேறுபட்டே இருக்கின்றன.  அவை பரமாத்மா அல்ல. எப்படியென்றால் ஒரு அணையாத மிகப்பெரிய அக்கினி குண்டத்திலிருந்து நெருப்பெடுத்து ஆயிரம் அகல்களை ஏற்றமுடியும். ஆனால் எத்தனை அகல்கள் சேர்ந்தாலும்  அக்கினி குண்டம் ஆகமுடியாது. ஏற்றப்பட்ட அனைத்து அகல்களும் ஒர் நாளில் அணைந்து போகலாம்ஆனால் பரமாத்மா என்னும் அக்கினி என்றென்றும் அணையாத ஜோதியானவர் மேலும் சமுத்திரத்திலிருந்து பாத்திரங்களில் நீரெடுத்துத் தனித்தனியே வைக்க முடியும். ஆனால் எத்தனை பாத்திரங்களிலும்  நீரைச் சேர்த்தாலும் அது சமுத்திரம் ஆகாது. பாத்திரத்தில் சேர்த்து வைத்த தண்ணீர் எல்லாம் ஒருநாள் இல்லாமல் போய்விடலாம் ஆனால் சமுத்திரமாகிய பரமாத்மா என்றும் நிலைத்திருக்க கூடியவர்!

 

குரு - மத்வரின் துவைதம் சங்கரரின் அத்துவைதம் மட்டுமல்ல இராமனுஜரின் விசிட்டாத்வைதமும் இருக்கிறது.   விசிஷ்டாத்வைதம் - இந்தச் சொல்லைப்  பிரித்துப் பார்த்தால் விசிஷ்ட- அத்வைதம் என்று வரும். ஆனால், சங்கரர் சொல்வதுபோல, இந்த உலகமே பொய் பிரம்மம் மட்டும் தான் மெய்.  பிரம்ம சத்யா ஜகன் மித்யா என்கிற மாயாவாதத்தை நிராகரித்து மெய்ப்பொருளைச் சுட்டுவது விசிஷ்டாத்வைதம்.  துவைதம், அத்வைதம், விசிட்டாத்துவைதம் மூன்றும்  வைதீக, சனாதன, வேத மார்க்கத்தின்  தத்துவப் பிரிவுகளே! 

 

சீடன் - நீங்கள் சொல்வது சரி குருவே!

 

குரு - துவைதம், அத்துவைதம், விசிட்டாத்துவைதம் என்கிற மூன்று பெரும் கோட்பாடுகளை ஆதரித்த ஆச்சாரியர்கள் மூவரும் தென்னிந்தியாவை - தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். விசிட்டாத்துவைதத்தை நிலைநாட்டிய இராமனுஜரே சாதிகளை உடைத்தெறிவதில் அதிக ஆர்வம் காட்டியவராகத் தெரிகிறது அரிசனங்களுக்கு திருக்குலத்தார் என மரியாதைப் பெயரைத் தந்ததோடு அரிசன குலத்துதித்த ஒருவரையே தமது முதல் குருவாக ஏற்றார். அந்தண ஆச்சாரியார் ஒருவர் அரிசனர் ஒருவரை குருவாக ஏற்றது இதுவே முதல் முறையாகும்.   அதுமட்டுமல்ல தமது குருபக்தி வெறும் சம்பிரதாயமானது அல்ல உண்மையானது என எண்பிக்கும் விதத்தில்  தமது வீட்டிற்கு வந்த குருவை அலட்சியமாக நடத்திய தமது மனைவியையும் உடனடியாகத் துறந்து காட்டினார். ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தை வெளியே சொன்னால் தலை வெடித்து நரகம் செல்வாய் என்று உபதேசம் செய்த குரு சொல்லியும் கேளாமல், தான் ஒருவன் நரகம் சென்றாலும் பரவாயில்லை அனைவரும் பரமபதம் அடைய வேண்டும் என எண்ணி கோபுரத்தின் மீதேறி ஊரறிய உரக்கச் சொல்லிய சமயவாதியும் இவரே!  பல மகான்கள் சொல்லியும் வாழ்ந்து காட்டியும்  அவர்களை மதிக்காமல் வளர்ந்துகொண்டு வருகிற ஒரு ஆணவப் போக்கே சாதி எனத் தெரிகிறது. வைணவ சமயத்தில் வடமொழி ஆதிக்கமும் சாதிசமய வேறுபாடும் பெருமளவு மண்டிக் கிடந்தன. இதனால் வைணவ சமய  பழமைவாதிகள் ஆழ்வார்களின் தமிழ் மொழிப் பாடல்களை (நாலாயிர திவ்ய பிரபந்தம்) எதிர்த்தனர் என்பது வரலாறு.

 

குரு - தத்துவம் என்ற சொல்லுக்கு உண்மை என்பது பொருள். எனவே, தத்துவ ஞானம் என்பது உண்மையை அறிவது எனப் பொருள்படும். உண்மை என்பதற்கு  என்றும் உள்ளது என்பதே கருத்து. நம் உடல் உட்பட நாம் காணும் பொருள்கள்யாவும் என்றும் உள்ளவை அல்ல. என்றுமே உள்ள பொருள் ஏதாவது உண்டா? உண்டாயின், அது எது? அதன் இயல்புகள் எவை என்பன போன்றவற்றை ஆராய்வதே தத்துவ ஞானம் எனக் கூறலாம். இது  இந்துக்களுக்குத் தெரியுமா?

 

சீடன் - தெரியாது.  மதங்கள் என்பது புத்தர் தொடங்கி சங்கரர் வரை தங்கள் தங்கள் அறிவாற்றலுக்கு ஏற்ப  கடவுள், மனிதன் மற்றும் உலகம் பற்றிய தமது கோட்பாடுகளை முன் வைத்தவையே. எல்லாம் குருடர் யானை பார்த்த கதைதான். இன்று அவைபற்றிய விசாரணை  கிடையாது. அதற்குப் பதில் இந்துக்கள் சடங்குகள் செய்தால் போதும் என நினைக்கிறார்கள். சைவக் கோயில்களில் சிவாகம விதிப்படி வழிபாடு நடைபெறுகிறது என்று சொன்னாலும் 90 விழுக்காடு  அருச்சனை, அபிசேகம், தேர், தீர்த்தம், ஓமம் போன்ற வழிபாடுகள் வேதவழிபாட்டுக்குரியவையே! சிவனை வேதத்தோடு இணைத்தும் வழிபாட்டினை ஆகமத்துடன் சேர்த்தும் சொல்வது சைவத்தின் பொதுப் போக்காகும். இதன் காரணமாகவே சைவத்துக்கு வேதம் பொது ஆகமம் சிறப்பு என்று சொல்லப்படுகிறது.

 

குரு - சிலைகளுக்கு பாலாபிசேகம் செய்வது, பட்டுச் சேலையை அக்னியில் போடுவதை சில சமயவாதிகள் கண்டிக்கிறார்கள். பட்டுச்சேலைகள் இந்திராணிக்குப் பிடிக்குமாம்! 

சீடன் - ஆமாம் பாலுக்கு பாலகன் வேண்டி அழும்போது அதனைக் கல்லுக்கு ஊற்றி வீணாக்குவதை ஏற்க முடியாது. அதே போலக் கட்டச் சேலை இல்லாது எமது மக்கள் வன்னியில் அல்லல்படும் போது இங்கே பட்டுச்சேலைகளை நெருப்பில் எரித்து கரியாக்குகிறார்கள் என்று ஒரு சைவ அன்பர் அண்மையில் மேடையேறிச் சொன்னார்.

குரு - சொல்லலாம்.  மக்கள் கேட்கிறார்கள் இல்லையே  

சீடன் - நீங்கள் சொல்வது முற்றிலும் சரி குருவே! இதற்கு மருந்து தேவார காலம் போல் சலம் பூவொடு தீபம் மறந்தறியேன் தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் என்றோ போதொடு  நீர் சுமந்தேத்தி புகுவார் அவர் பின் புகுவேன் என்ற வழிபாட்டு முறையை மீண்டும் திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்.  (May 30, 2011)

 


குரு சீடன்

பழமைவாதக் கட்சி தமிழ் ஏதிலிகளை "ஆட்கடத்தல்காரர்கள்"  "புலிகள்" "பயங்கரவாதிகள்" "கிறிமினல்ஸ்" என்று அர்ச்சிக்கிறது!

திருமகள்

சீடன் -  எங்கே பார்த்தாலும் தேர்தல் மயம். இலங்கையில் மார்ச் 17 இல் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தமிழ் நாட்டில் சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரில் 13 நடந்து முடிந்து விட்டது. கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் மே 2 இல் நடைபெற இருக்கிறது.

குரு - மக்களாட்சி முறைமையில்  தேர்தல் இன்றியமையாதது. முறைக்கு முறை தேர்தல் இல்லாவிட்டால் நாட்டில் சர்வாதிகாரம் தலை தூக்கிவிடும்.

சீடன் - நீங்கள் சொல்வது சரி குருவே! ஆனால் தேர்தல் நடந்தால் மட்டும் அது மக்களாட்சிக்கு அடையாளம் இல்லை. சீனாவில் கூட தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் அங்கு ஒரு கட்சி ஆட்சிதான் நடைபெறுகிறது. சிறிலங்கா போன்ற நாடுகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.  ஆனால் முறையான தேர்தல் நடைபெறுவதில்லை.  மக்களாட்சியின் நான்காவது தூணான ஊடக சுதந்திரம் இருப்பதில்லை. ஆளும் கட்சி அரச வளங்களையும் பணத்தையும் இறைத்து தேர்தலில் வென்றுவிடுகிறது!

குரு - கனடாத் தேர்தல் எப்படிப் போகிறது இரண்டு தமிழ் வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்களாமே?

சீடன் - ஒருவர் ஆளும் பழமைவாதக் கட்சியில் கேட்கிறார். மற்றவர் எதிர்க்கட்சியான புதிய மக்களாட்சி கட்சியில் கேட்கிறார்.

குரு -  ஆளும் கட்சியில் தமிழர் கேட்கிறாரா? அந்தக் கட்சிதானே வி.புலிகள் இயக்கத்தை ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களில் தடை செய்தது? பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து உலகத் தமிழர் இயக்கத்தைத் தடை செய்தது? இப்போது சன் சீ கப்பலில் வந்த 492 தமிழ் ஏதிலிகளை "பயங்கரவாதிகள்" "ஆட்கடத்தல்காரர்கள்" "கிறிமினல்ஸ்" என்று வசை பாடுகிறது. அதற்காகவே மிகவும் கொடூரமான சட்டமுன்வரைவு சி - 49  நாடாளுமன்றத்தில்  கொண்டுவந்தது. அந்தக் கட்சியில் எப்படி ஒரு தமிழர் போட்டி போடலாம் கார்ப்பரின் பழமைவாதக் கட்சி தீவிர வலதுசாரிக் கட்சி. முன்னர் பிறாயன் மல்றோனி தலைமையில் ஆட்சி செய்த முற்போக்கு பழமைவாதக் கட்சி வேறு இந்தப் பழமைவாதக் கட்சி வேறு. பிறாயன் மல்றோனி 1986 இல் கப்பலில் வந்த 155 தமிழர்களை இரு கை நீட்டி வரவேற்றவர் ஆயிற்றே?

சீடன் - நீங்கள் சொல்வதெல்லாம் சரி.  ஆனால் நாடாளுமன்ற நாற்காலி ஆசை பிறந்தால் எந்தப் பேயோடும் கைகுலுக்கச் சிலர் ஆயத்தமாக இருக்கிறார்கள்.  "புலிகள் கதை முடிந்து விட்டது (done and gone)   அவர்கள் பற்றிக் கவலைப் படுபவர்கள் யாரும் இல்லை.  நான் புலிகளுக்கு முன்னர் வேலை பார்த்ததே கிடையாது. இனிமேலும் பார்க்கப் போவதில்லை. நாங்கள் பழமைவாதக் கட்சியோடு வைத்திருக்கும் உறவு பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை....." இப்படி ஒருவர் இங்கு வெளியாகும் ஆங்கில செய்தித்தாளுக்கு செவ்வி கொடுத்துள்ளார்.

குரு - போகிற போக்கைப் பார்த்தால் "நாங்கள் புலிகளது போராட்டத்தை ஆதரித்தவர்கள்" என்று சொல்வதற்கு யாரும் இருக்க மாட்டார்கள் போல் தோன்றுகிறதே?

சீடன் - சரியாகச் சொன்னீர்கள். வெற்றியை சொந்தம் கொண்டாட அநேகம் பேர் முன்வருவார்கள் ஆனால் தோல்வி ஒரு அநாதை என்பது பழமொழி. ஸ்காபரோ தென் மேற்குத் தொகுதியில் பழமைவாதக் கட்சி சார்பில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர் "புலிகள் இயக்கம்  தடை செய்யப்பட்டதை ஆதரிக்கிறீரா?" என்ற கேள்விக்கு "ஆமாம்" என்று பதில் அளித்திருக்கிறார்! கடந்த மாவீரர் நாளன்று  மனமுருகும் வகையில் தமிழ்த் தொலைக்காட்சியில் மறைந்த விடுதலைப்புலிகளுக்காக  அஞசலி நிகழ்வொன்றை இவர் நடாத்தினார் என்றும் அந்தச் செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.

குரு - உரலுக்குள் தலையை விட்டுவிட்டு உலக்கைக்குப் பயப்பட்டால் எப்படி? தேர்தல் அரசியலில் இப்படியான குத்துக்கரணங்கள்  அடித்துத்தான் ஆக வேண்டும். அல்லது வெல்ல முடியாது. சரியான வேட்பாளர் பிழையான கட்சியில் கேட்கிறார் என வைத்துக் கொள்ளலாம்.

சீடன் - அப்படியொரு கேடு கெட்ட அரசியல் நடத்த வேண்டுமா?  இந்தக் கேள்விக்கு "நான் மட்டுமல்ல முழுத் தமிழ்மக்களும் வி.புலிகளை ஆதரிக்கிறார்கள்" என்று பதில் இறுத்திருக்கலாமே? அல்லது நான் வி.புலிகளை ஆதரிக்கிறேன், ஆனால் அதன் பொருள் அவர்கள் கையாளும் வழிமுறைகளை ஆதரிக்கிறேன் என்பது அல்ல" (I support the Tigers but not necessarily the means ) என்றாவது சொல்லியிருக்கலாமே?

குரு - அவர்தான் தான் ஒரு இனம்சார்ந்த வேட்பாளன் இல்லை. நான் ஒரு கனடியன் என்கிறாரே? பின் எதற்குத் தகராறு?

சீடன் - அதுவும் சரிதான். தமிழ் வாக்காளர் வாக்குப் போட்டு அவர் வெல்லப் போவதில்லை. தமிழர் அல்லாதவர்களது ஆதரவு இருந்தால் மட்டுமே வெல்ல முடியும். அதற்கு இசைவாக அவர் தனது முதற் பெயரையும் வசதியாக மாற்றி விட்டார்! நல்லகாலமாக தனது கடைசிப் பெயரை மாற்றாமல் விட்டு விட்டார்.

குரு - இந்தத் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்தால் முதல் வேலையாக  இந்த சட்ட வரைவை மீண்டும் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப் போவதாக தலைமை அமைச்சர் கார்ப்பர் பகிரங்கமாகக் கூறியுள்ளாரே? அந்த சட்ட வரைவு என்ன சொல்கிறது?

சீடன் - இந்தச் சட்டமூலம் குறிப்பிட்ட ஒருவர் தனக்கு எதிர்மறையான தீர்ப்புக்கு எதிராக ஏதிலிகள் வாரியத்தின் ஏதிலிகள் மேன்முறையீடுப் பிரிவுக்கு மேன்முறையீடு செய்யும் உரிமையை மறுக்கிறது. ஒருவரது உயிர் மற்றும் சுதந்திரம் கேள்விக்குறியாகும் போது மேன்முறையீடு என்பது ஏதிலிகள் தொடர்பான முடிவுக்கு எதிராக அடிப்படைப் பாதுகாப்பு ஆகும். முதல் மட்டத்தில் பிழைகளைத் திருத்தும் வாய்ப்பை நீக்குவதன் மூலம் இந்தச் சட்ட மூலம் ஏதிலிகள் தொடர்பாக கனடா அதன் முக்கிய அடிப்படைக் கடப்பாடுகளை மீறும் இடர்பாட்டில் உள்ளது. அதாவது அவர்களை துன்புறுத்தலுக்கு மீண்டும் அனுப்பக் கூடாது என்பதாகும். (ஏதிலிகள் மரபு, விதி 33). மேலும் இந்தச் சட்ட வரைவு  குடும்ப மீள் இணைவுக்கு முட்டுக்கட்டை போடுகிறது.  5 ஆண்டுகளில் நிரந்தர வாழ்விடத்துக்கு விண்ணப்பம் செய்யும் சில ஏதிலிகளது உரிமையை அபகரிக்கிறது. இப்படி குடிவரவாளர்களுக்கு எதிரான பல அம்சங்கள் இந்த சட்ட வரைவில் இருக்கிறது.

குரு - பழமைவாதக் கட்சி தமிழர்களை இலக்கு வைத்து கீழ்த்தரமான முறையில் விளம்பரம் செய்கிறதாமே?

சீடன் - ஆமாம்.   சன் சீ கப்பலில் வந்தவர்களுக்கு எதிராக மிகவும் கீழ்த்தரமான விளம்பரத்தையும் அந்தக் கட்சி செய்கிறது.  நேரடியாக அவர்களை "ஆட்கடத்தல்காரர்கள்" "கிறிமினல்ஸ்"  "பயங்கரவாதிகள்" என வசை பாடுகிறது.  ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்கும் இந்த விளம்பரத்தில் இனவாத நெடில் அடிப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. யேசன் கெனி மற்றும் அவர் போன்றவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் "சட்டவிரோதிகள்" "பயங்கரவாதிகள்" என்ற பசப்புரை குடிவரவாளர்களை கீழ்மனிதர்களாக நடத்துவதை நியாயப்படுத்துவதற்கும் மக்கள் மனங்களில் ஒரு அச்ச சூழ்நிலையை உருவாக்கவும் பயன்படுகிறது. இவ்வளவிற்கும் இன்றைய கனடா குடிவரவாளர்களாலேயே கட்டியெழுப்பப் பட்டுள்ளது என்பது மனங்கொள்ளத்தக்கது.

குரு - பின் ஏன் அந்தக் கட்சிக்கு சில தமிழர்கள் வேலை செய்கிறார்கள்?  உதைக்கிற காலை எப்படி முத்தமிடலாம்?

சீடன் - பாம்புக்கு பால் வார்த்தாலும் அது கடிக்கும் என்பது தெரிந்தும் தங்கள் சுயநலத்துக்காக பழமைவாதக் கட்சியை ஆதரிக்கிறார்கள். ஆளுங்கட்சியோடு ஒத்துப் போனால்தான் எதையாவது பெறலாம் என்கிறார்கள்.  அதனை எந்த வெட்கமோ துக்கமோ இன்றி  "ஆய்வாளர்" என்ற போர்வையில்  வான் அலையில் வந்து ஆதரவு திரட்டுகிறார்கள்.  வேதனை என்னவென்றால் அதற்கு மண்ணையும் மனங்களையும் நேசிக்கும் வானொலி களம் அமைத்துக் கொடுக்கிறது!

குரு - இந்த இணக்க அரசியலைத்தானே நாட்டில் டக்லஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் செய்கிறார்கள்?  சிங்கள ஆட்சியாளர்களோடு மோதிப் பயனில்லை கெஞ்சி மன்றாடித்தான் எதையும் பெறலாம் என்பவர்களுக்கும் பழமைவாதக் கட்சியை ஆதரிப்போருக்கும் என்ன வேற்றுமை?

சீடன் - ஒரு வேற்றுமையும் இல்லை. இரண்டு தரப்பாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

குரு -  லிபரல் கட்சி தமிழர் ஒருவருக்கு தொகுதி கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்களே?

சீடன் - ஒரு அரசியல் கட்சியில் போட்டி போடுவதென்றால் அந்தக் கட்சியில் சேர்ந்து நீண்ட காலம் உழைக்க வேண்டும். கட்சி வளர்ச்சிக்கு பாடுபட்டிருக்க வேண்டும். தெருவாலே போகிறவர்களை எல்லாம் வலிந்து கூப்பிட்டு லிபரல் கட்சி தேர்தலில் நிறுத்தாது.  லிபரல் கட்சி நமு பொன்னம்பலத்தை நிறுத்தினால் அவர் பெயரளவில் ஒரு தமிழர் என்பதற்காக வாக்குப் போடுவீர்களா? நடந்து முடிந்த மாநகர சபைத் தேர்தலில் இவரைத்தான் லிபரல் கட்சி பொப் றே பரிந்துரை செய்திருந்தார்!

குரு - சரி. இந்தத் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

சீடன் - முதலில் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதைச் சொல்கிறேன். பழமைவாதக் கட்சிக்கு எந்தச் சூழ்நிலையிலும் வாக்களிக்கக் கூடாது. பழமைவாதக் கட்சிக்கு வாக்களிப்பது தெருவிலே போகிற சனியனை விலைக்கு வாங்கியதாக முடியும்.  அது ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுகளும் தமிழர்களுக்கு இருண்ட காலமாகவே இருக்கும். எஞ்சிய இரண்டு கட்சிகளில் புதிய மக்களாட்சிக் கட்சி உழைக்கும் மக்கள் சார்பாகவும்  அடிமட்ட மக்கள் சார்பாகவும்  புதிய குடிவரவாளர் சார்பாகவும் நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் குரல் கொடுக்கும் கட்சி. பெரும்பான்மையான தமிழர்கள் சாதாரண தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அந்தக் கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும்.  ஆனால் புதிய மக்களாட்சிக் கட்சிக்குப் போடுவதால் பழமைவாதக் கட்சி வெல்ல வாய்ப்பிருந்தால் அதைத் தடுக்குமுகமாக லிபரல் கட்சிக்குப் போட வேண்டும். நோக்கம் பழமைவாதக் கட்சி பதவிக்கு வருவதை எப்பாடு பட்டும் தடுக்க வேண்டும் என்பதே!

குரு - ஒரு கூடைக்குள் எல்லா முட்டைகளையும் வைக்கக் கூடாது. தமிழ்மக்கள் மூன்று கட்சியிலும் இடம் பிடிக்க வேண்டும் என்கிறார்களே? அதற்கு பிரித்தானியாவை மேற்கோள் காட்டுகிறார்களே?

சீடன் -  ஏன் இரண்டு தோணியில் கால் வைத்தால் இரண்டுக்கும் இடையில் விழ வாய்ப்புண்டு என்ற பழமொழியும் உண்டல்லவா? பிரித்தானியாவில் ஆட்சியில் இருக்கும் பழமைவாதக் கட்சி வேறு இங்கு கார்ப்பர் தலைமையில் உள்ள பழமைவாதக் கட்சி வேறு. இரண்டும் வெவ்வேறு. கார்ப்பர் தலைமையிலான பழமைவாதக் கட்சியை பிறாயன் மல்றோனியின் முற்போக்கு பழமைவாதக் கட்சியோடு சேர்த்துக் குழப்பக் கூடாது. 1986 இல் கப்பலில் வந்த 155 தமிழர்களை இருகை நீட்டி வரவேற்றவர் மல்றோனி.  கார்ப்பரின் பழமைவாதக் கட்சி கனடாவுக்கு அரசியல் அடைக்கலம் கேட்டு வந்த 492 தமிழ் ஏதிலிகளை "ஆட்கடத்தல்காரர்கள்"  "புலிகள்" "பயங்கரவாதிகள்" "கிறிமினல்ஸ்" என்று அர்ச்சிக்கிறது. ஏதிலிகளை சிறையில் அடைத்து அழகு பார்க்கிறது. இந்தக் கட்சி அல்பேட்டாவை தளமாகக் கொண்டு இயங்கிய பிரஸ்தன் மானிங்கின் (Preston Manning)  சீர்திருத்தக் கட்சியின் மறுவார்ப்பு!

குரு -  சரி, சரி.  எது எப்படி இருப்பினும் முதலில் தமிழர்கள் கட்டாயமாக தேர்தல் நாளன்றோ அதற்கு முன்னரோ வாக்களிக்க வேண்டும். எமக்குள்ள ஒரே ஆயுதம் இந்த வாக்குத்தான்! (April 04, 2011)

 


 

குரு - சீடன்

தொட்டிலையும் ஆட்டி பிள்ளையயையும் கிள்ளும் உலகத் தமிழர் பேரவை!

 குரு - உலகத் தமிழர் பேரவை சார்பாக அதன் தவைர் வண. எஸ் ஜெ. இமானுவேல் அடிகளார் எதிர்வரும் எட்டாம் திகதி இலங்கைத்தீவு முழுவதும் நடைபெறும் பொதுத்தேர்தல் பற்றி அறிக்கை விட்டுள்ளாராமே?

சீடன் - ஆமாம் இமானுவேல் அடிகளார் ஒரு அறிக்கை விட்டுள்ளார்.  இது  பொதுத் தேர்தல்  தொடர்பாக அவர் வெளியிட்ட இரண்டாவது  அறிக்ககை.  முதல் அறிக்கையை  கடந்த மார்ச் மாதம் 10 ஆம் வெளியிட்டிருந்தார். 

குரு - இந்த அறிக்கையில் என்ன சொல்கிறார்?

சீடன் -  முதல் அறிக்கையில் பட்டும்படாதவாறு சொன்னதை இந்த அறிக்கையில் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.   அதாவது முன்னைய அறிக்கையில் பொத்தாம் பொதுவாக "சிறீலங்காவிலும் வெளியேயும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழரது அடிப்படை வேட்கைகளில் பற்றுறுதியுடையோருக்கு ஆதரவு வழங்குமாறு நாம் பரிந்துரைத்து வலியுறுத்துகின்றோம். எமக்கு உள்ளார்ந்தமாக உள்ள தன்னாட்சி உரிமை, தமிழரது அடிப்படை வேட்கைகள், தமிழரது தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை ஆகிய கோட்பாடுகளுக்குத் துணிவுடன் நிலைத்தியங்கக்கூடிய அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் உலகத் தமிழர் பேரவையானது புலம்பெயர்ந்த தமிழரிடையுள்ள பல்வேறு வளங்களையும் திரட்டி ஆதரித்து அவர்களோடு சேர்ந்து பணியாற்றும்" என்று சொல்லப்பட்டது.

இப்போது வெளியிட்ட அறிக்கையில் "அரச ஆதரவு வேட்பாளர்களையும் மற்றைய சுயேட்சை வேட்பாளர்களையும் போலன்றி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளர்களும் தமிழ் மக்களின் விடுதலைக்காக இதயசுத்தியுடன் உழைத்துவருவதை உலகத்தமிழர் பேரவை நன்கறியும். எவ்வாறான வழிமுறையில் எமது இலக்குகளை அடையமுடியும் என்பதில்தான் வேறுபாடுகள் வந்திருக்கின்றன .............. ஆனால் சாதாரண வாக்காளர்களாகிய மக்கள் அதனை வேறுபடுத்தி அறிந்துகொள்ளமுடியாது. இவ்வாறான ஒற்றுமையற்ற தன்மையானது தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிரான சக்திகளுக்கு பலமானதாகப் போய்விடும் என அஞ்சுகின்றோம். அவ்வாறான நிலைமை, எமக்கு ஏற்படுகின்ற மிகப்பாரிய பின்னடைவாகவே இருக்கும். அதன்காரணமாக இந்த இறுதி நிமிடத்திலும் உங்கள் முடிவுகளை மாற்றிக்கொண்டு ஒரு அணியாக போட்டியில் தேர்தலை எதிர்கொள்வதன் மூலம், துணிவுடன் தமிழ் மக்களின் உரிமைகளை முன்னெடுக்கக்கூடிய வேட்பாளர்களை தெரிவுசெய்யப்படுவதை இலகுபடுத்துமாறு புலத்து தமிழ் மக்களின் சார்பாக, உலகத் தமிழர்களின் பேரவையானது வேண்டிக்கொள்கின்றது."

குரு - தேர்தலுக்கு இன்னும் மூன்று  நாள்களே எஞ்சியிருக்கின்றன. இப்போது அறிக்கை விட்டு என்ன பலன்? இரண்டு நாடாளுமன்ற நாற்காலிக்களுக்காகத்  தேசியக் கூட்டமைப்பை உடைத்தவர்கள் இந்த அறிக்கையை ஒரு பொருட்டாக எடுக்குமா?

சீடன் - உண்மை என்னவென்றால் இந்த ஒற்றுமையின்மைக்கு இதே உலகத் தமிழர் பேரவைதான் பேரளவு காரணம். அதனை மூடி மறைக்க தொட்டிலையும் ஆட்டி பிள்ளையயையும் கிள்ளும் திருப்பணியில் பேரவை இறங்கி இருக்கிறது.

குரு - கொஞ்சம் புரியும்படி சொல்?

சீடன் - திருமலையில் சம்பந்தரைத் தோற்கடிப்போம், யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராசா மற்றும் பிரேமச்சந்திரன் இருவரையும் தோற்கடிப்போம் என்ற உயரிய கோட்பாடுகளுக்காக  தோற்றுவிக்கப்பட்டு இரண்டு மாவட்டங்களில் மட்டும் போட்டியிடும் தேசியத்திற்கான மக்கள் முன்னணி என்ற காளான் கட்சியையும் அய்ந்து மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பையும் ஒரே தராசில்  போட்டு இமானுவேல் அடிகளார் நிறுக்கிறார்?

குரு - ஏன் அப்படிச் செய்கிறார்?

சீடன் - இந்தக் காளான் கட்சி உருவாகிறதுக்கு இதே உலகத் தமிழர் பேரவைதான் மூல காரணம். அதில் இருக்கும் சில கற்பனைவாதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதை மாறிவிட்டது. தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை, இறைமை ஆகிய அடிப்படைக் கோட்பாடுகளை கைவிட்டுவிட்டது என்று சொல்லி அதன் தலைமையைக் கவிழ்க்க தேர்தலில் இம்முறை நிற்பதில்லை என்று முடிவுகட்டியிருந்த  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு கொம்பு சீவி விட்டதே இந்த உலகத் தமிழர் பேரவைதான்.  குறிப்பாக அதில் உள்ள சுரேன் சுரேந்திரன்தான் இதன் சூத்திரதாரி!  நடந்து முடிந்த ஆட்சித்தலைவர் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றவரும் இவர்தான். அதனால்தான் கஜேந்திரகுமார் தேர்தலைப் புறக்கணிக்குமாறு  யாழ்ப்பாணம் சென்று விரல்விட்டு எண்ணக் கூடிய ஆதரவாளர்களைச் சந்தித்து விட்டு அறிக்கை விட்டார்.  ஆனால் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்ட வேண்டுகோளுக்கு இணங்க வட - கிழக்கில் உள்ள அய்ந்து மாவட்டங்களில மட்டுமல்ல நுவரேலியா மாவட்த்தில் வாழும் மக்களும் ஆட்சிமாற்றத்துக்குத் தங்கள் வாக்குகளைப் போட்டு வடக்கு கிழக்கு நுவரேலியா  என ஆறு மாவட்டங்களையும் பச்சை நிறத்தில்  தீட்டிக் காட்டினார்கள்! இதன் பொருள் தமிழ்மக்களின் ஆணையை மகிந்தா இராசபக்சே பெறவில்லை என்ற உண்மைதான்.

குரு -  ஆனால் செல்வராசா கஜேந்திரன் யாழ்ப்பாண மாவட்ட மக்களில் 75 விழுக்காடு வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்துவிட்டததாக அறிக்கை விட்டாரே?  அதெப்படி?

சீடன் - அவர் கணக்கில் நிரம்பச் சக்கட்டை!  யாழ்ப்பாணத்தில் மொத்த வாக்காளர் தொகை 721,359. வாக்களித்தவர்கள் தொகை 185,132 (விழுக்காடு 25.66). யதார்த்தம் என்னவென்றால் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வாழும் மக்கள் தொகை அண்ணளவாக அய்ந்து இலட்சம் மட்டுமே. வாக்காளர் தொகை இதைவிடக் குறைவே. அப்படியென்றால் 50 விழுக்காட்டினர் வாக்களித்தார்கள் என வைத்துக் கொள்ளலாம். மேலும் யாழ்ப்பாணக் குடாநாட்டு வாக்காளர்களை உதாரணம் காட்டினால் போதுமா? யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் குதிரை ஓட்டினால காணுமா?  ஏனைய நான்கு மாவட்டங்களில் விழுந்த வாக்கு விழுக்காட்டையும் சொன்னால்தானே தமிழ்வாக்காளர்கள் எப்படி வாக்களித்தார்கள் என்பது தெரிய வரும்?   வன்னி மாவட்டம் 40.33 விழுக்காடு, மட்டக்களப்பு 64.83 விழுக்காடு, அம்பாரை 73.54 விழுக்காடு, திருகோணமலை 68.22 விழுக்காடு, நுவரேலியா 77.19 விழுக்காடு வாக்களித்தார்கள்!

குரு -   சாதாரண வாக்காளர்களாகிய மக்கள் இரண்ட கட்சிகளின் கோட்பாடுகளை வேறுபடுத்தி அறிந்துகொள்ள மாட்டார்கள் என்று இமானுவேல் அடிகளார் சொல்கிறார்களே?

சீடன் - ஆங்கிலத்தில் இந்தப் போக்கை படித்தவர்களின் அகந்தை (intellectual arrogance)  என்று சொல்வார்கள். எமது மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். இவர்கள் நினைப்பது  போல அவர்கள் அறிவிலிகள் அல்லர். ஆட்சித்தலைவர் தேர்தலில் பருத்தித்துறை முதல் திருக்கோயில் வரை ஒன்றுபட்டு ஒரேமாதிரி வாக்களித்தார்கள்.

குரு - கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்தத்  தேர்தலிலும் மக்கள் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களிப்பார்கள் என்கிறாய்?

சீடன் - பொறுத்திருந்து பாருங்கள். ஆட்சித்தலைவர்  தேர்தலில் மூக்குடை பட்டவர்கள் இந்தத் தேர்ததிலும் மூக்குடைபடுவார்கள் என்பது நிச்சயம்.

(April 06,2010)


குரு - சீடன்

தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்!
 

திருமகள்

சீடன் - முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன்
உறவுகள் விட்டகண்ணீரும் குருதியும் இன்னும்
காயவில்லைபரவாயில்லை..புலத்துத் தெருக்களில் தேர் இழு!
உன் தாயை தந்தையை உறவுகளை காப்பாற்றாமல்
கைவிட்டது பன்னாட்டுக்; குரங்குகள் மட்டுமல்ல .- உன்
அப்பனும் ஆத்தையும் அழுதுகும்பிட்ட சாமிகளும்தான்!
ஆற்றாது அழுதுதொழுத கண்ணீரைத் தேற்றாமல்விட்ட
தெய்வங்ளை தேரில் வைத்திழுத்து களிப்படை.!
இழடா தேரை..இறுக்கிக்கட்டு கச்சையை - கவனம்
அவிழ்ந்து விடும். சங்கிலிதெரியும் நெஞ்சை நிமிர்த்து.................

குரு - என்ன புதுக் கவிதை ஒன்றை அவிட்டுவிடுகிறாய்? உனக்கு புதுக் கவிதை கைவரும் என்பது
எனக்குத் தெரியாதே? இது யாருடைய கவிதை?

சீடன் - கவிதை எழுதியது யார் என்ற ஆராய்ச்சி வேண்டாம். கவிதையில் உள்ள கருத்தைக் கவனியுங்கள்! தங்கத்தேர், வெள்ளித்தேர் இழுத்தால் பாவம் தொலைந்து பணம், பதவிகள் பாய்ந்து தேடி ஓடி வரும் என்கிறார்கள். பக்தி என்ற பெயரால் நாக்கில் துளையிட்டு
வேல் குத்துகிறார்கள். முதுகிலே கொக்கி போட்டு தேர் இழுக்கிறார்கள்.  பறவைக் காவடி என்ற பேரில் பத்துப் பதினைந்து கொக்கிகளை முதுகில் மாட்டி அந்தரத்தில் தொங்குகிறார்கள். இதுவெல்லாம் கற்கால மனிதனின் மூட நம்பிக்கைகள் என சிவவாக்கியார் என்ற சித்தர் பாடி வைத்திருக்கிறார்.

ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே

ஊரிலே வாழும் பெரிய மனிதர்களே, நீங்கள் உங்களுக்குள் உள்ள கருத்து வேற்றுமைகளைக் களைந்து ஒரே மனதாக நின்று பெரிய தேரினை அலங்காரம் செய்து அதில் செப்புச் சிலையை வைத்து, அத்தேரின் வடத்தை இழுக்கிறீர்கள். ஒரு சிறிய உருவத்திற்கு இவ்வளவு பெரிய தேரா? நூற்றுக்கணக்கான மக்கள் உடல் வியர்வை சிந்தி, உள்ளம் வருந்தி இப்படி இருப்பது அறிவுடையமையாகுமா? இதனால் எவ்வளவு பொருள் விரயம்? எவ்வளவு நேரம் வீணாகிறது?

குரு - எத்தனை சித்தர்கள் எதைப் பாடி என்ன? ஆண்டுக்கு ஆண்டு கோயில்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. தேர், தீர்த்தத் திருவிழாக்களுக்கும் பஞ்சமில்லை! பொருளாதார தேக்கத்தினால் பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் மூடப்படுகின்றன. ஆனால் கோயில்கள் அப்படியில்லை. பக்தி வணிகம் ஓகோ என்று நடக்கிறது.

சீடன் - சரியாகச் சொன்னீர்கள். மழைக்கு முளைக்கிற காளான்கள் போல் ரொறன்ரோவில் எக்கச்சக்கமான கோயில்கள் கடந்த இருபது ஆண்டு காலத்தில் முளைத்துவிட்டன! எண்ணிக்கை நூறைத் தாண்டிவிட்டதாம். ஒவ்வொரு கோயிலிலும் தேர்த் திருவிழா மட்டுமல்ல. சப்பரத் திருவிழா, வேட்டைத் திருவிழா,  மாம்பழத் திருவிழா............... இப்படி ஏகப்பட்ட  திருவிழாக்கள். ஒவ்வொரு திருவிழாவுக்கும் குறைந்தது மூவாயிரம் டொலர்கள் செலவாகும்! இதைவிட கோடி நாம அருச்சனை, விளக்குப் பூசை என்று பணம் கறந்து விடுகிறார்கள்!  ஆதி பராசக்தி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி, அம்பாள், முருகன், வினை தீர்க்கும் வினாயகர் இவர்களைத்  தரிசித்தால் புண்ணியம் கிடைக்கும்  பாவம் தொலையும் அருள் கிடைக்கும் என இங்குள்ள செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில்  அட்டகாசமான விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்!

குரு - இதை ஆங்கிலத்தில் Multi-level Marketing என்பார்கள்!

சீடன் - எங்கடை மக்கள் வன்னியில் பட்டினியால் வாடும் போது இங்கே கல்லுக்கும் செம்புக்கும் பால்,  மோர்,  நெய்,  தயிர், இளநீர் அபிசேகம் செய்வது அநியாயம். யாகம் செய்யும் பிராமணர்கள் அதில் விலையுயர்ந்த பட்டுச் சேலைகளை ஆகுதி கொடுக்கிறார்களாம். நரகத்தில் விழாமல் சொர்க்கலோகத்தில் சேர வேண்டுமாயின் வேள்விகளை, யாகங்களை நடத்துங்கள, பருப்பில் ஊற்றவேண்டிய நெய்யை நெருப்பில் ஊற்றுங்கள், வயிற்றில் போடவேண்டிய நவதானியங்களை நெருப்பில  போடுங்கள் என்கின்றனர். சொர்க்கத்தில் இரம்பை உண்டு, மேனகை உண்டு, ஊர்வசி உண்டு, திலோத்தமை எல்லாம் உண்டு அவர்களோடு சல்லாபித்திருக்கலாம் என ஏமாற்றுகின்றனர்.

குரு - ஏனாம்? கட்டச் சீலை இல்லை என்று மக்கள் கதறும் போது பட்டுச் சேலைகளை நெருப்பில் எரிக்லாமா? இது பெரிய அநியாயமாக இருக்கிறதே?

சீடன் - பட்டுச் சேலைகளை நெருப்பில் போட்டால் இந்திரன் மனைவி இந்திராணி மகிழ்ச்சி அடைந்து கேட்டவரம் அத்தனையும் தருவாளாம்.  யாகத்தின் போது பல திரவியங்கள் யாகத்தீயில் இடப்படுகின்றன. அவற்றினால் உண்டாகும் புகை மனித  உடலின் பல நோய்களை தீர்க்கவல்லனவாம்! ஆரியர்கள் தங்கள் வருவாய் கருதி  இப்படியான மூடநம்பிக்கைகளை தமிழர்கள்  தலையில் கட்டிவிட்டுள்ளார்கள். மூளையில்லாத தமிழர்கள் அதனை நம்பி தங்களது பொருளை வீணாக்குகிறார்கள்!
கல்லைக் கடவுளாக்கி, சாணத்தைச் சாமியாக்கி குரங்கையும  நாயையும் எலியையும் தமிழர்கள் கும்பிட வைத்து விட்டார்கள்!

குரு - எந்த இந்திரனைச் சொல்கிறாய்? கௌதம முனிவரை போலவே தன்னை உருமாற்றி அகலியைக் கெடுத்த இந்திரனா? அதற்குப் பரிசாக உடல் முழுதும் ஆயிரம் யோனி பெறக்கடவை என்று கவுதம முனிவர் சபித்த இந்திரனா?

சீடன் - இதில் என்ன அய்யம் குருவே!  அவனேதான். அது போகட்டும். செல்வம் வேண்டுமா? உடல் நலம் வேண்டுமா? கிரக தோசம் நீங்க  வேண்டுமா? பிள்ளைப் பாக்கியம் வேண்டுமா?  வணிகத்தில் சிறப்படைய வேண்டுமா?  தானிய விருத்தியா? உலகில் எதுவானாலும் அருச்சனை, அபிசேகம், தேர், தீர்த்தம் திருவிழா, யாகங்கள் மூலம் எம்மால் பெற்றுத் தரமுடியும்.  எமகண்டம், இராகுகாலம், கரிநாள், தேய்பிறை பார்த்து நன்னாளில் நல்ல நேரத்தில் திருமணத்தை செய்தால் துன்பம், துயரம் ஏதும் அண்டா. வந்த வினையும் விலகிப்போம்  என பிராமணர்கள் புளுகுவதை தமிழர்கள் நம்பி ஏமாறுகிறார்கள்.

தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.

இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது
கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்
மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை
எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழ வேண்டும். (இருக்கு வேதம்  - 62 ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்)

குரு - பிராமணர்கள் தமிழர்களை ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்வதை விட  தமிழர்கள் அவர்களிடம் ஏமாந்து போனார்கள்  எனச் சொல்வதுதானே பொருத்தாக இருக்கும்?

சீடன் - நீங்கள் சொல்வது உண்மை குருவே! காசி, இராமேசுவரம் போனால் முக்தி கிடைக்கும்.  கங்கையில் நீராடினால் செய்த பாவம், சொல்லிய பொய், செய்த  பித்தலாட்டம், நடத்திய கொலை,  கொள்ளை, வஞ்சகம், சூது எல்லாமே விலகிப் போய்விடும் என்கிறார்கள்.   சபரிமலையில் மகரஜோதி தானாகத் தெரிகிறது தரிசித்து முக்தி அடையுங்கள் என்கிறார்கள்.  மகரஜோதியில் மின்னிடும் பொன்னம்பல மேட்டிற்கு ஏன்  மின்சார விளக்குகள் என்று பக்தர்கள் யாரும் கேட்பதில்லை!

குரு - தமிழ்ச் சித்தர்களும் உருவ வணக்கத்தையும் கோயில் வழிபாட்டையும் கண்டித்தும் பயன் இல்லை போல் தெரிகிறது?

சீடன் - ஆமாம் குருவே! தமிழர்கள் அவற்றைக் காதில் போடவில்லை.  திருமூலர்  தொட்டு  பட்டினத்தார் வரையிலும் சிவவாக்கியர் தொட்டு பத்திரகிரியார் வரையிலும சாதி, சமயம் மற்றும் உருவ வழிபாட்டை கடுமையாக சாடியுள்ளனர். சிவவாக்கியர்  என்ற சித்தர்  சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே! வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ?" என்று சாத்திரங்களின் பொய்த்தன்மையையும் அது மனிதனின் வாழ்விற்கு தேவையற்றது எனவும் பாடியிருக்கிறார். மேலும்  "கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா? கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே! கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே! ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே" என்று வழிபாட்டு முறையையே சாடுகிறார். பூசைமுறைகளில் எந்த உண்மையும் இல்லை என்பதை  பூசை பூசை என்று நீர் பூசை செய்யும் பேதைகாள்/ பூசையுள்ள தன்னிலே பூசை கொண்டது எவ்விடம் என்று எள்ளி நகையாடுகிறார்.

குரு - சரி தமிழர் முன்னேறுவதற்கு வழிதான் என்ன? அதைச் சொல்லு?

சீடன் - தமிழர் முன்னேற  வேண்டும் என்றால்  முதலில் புத்தியைத் தீட்ட வேண்டும்.  மெய்ப்பொருளை ஆராய்ந்து பார்க்கும் துணிவு வேண்டும்.  ஆராய்ச்சியின் முடிவை ஏற்கும் நாணயம் வேண்டும்.  பலருக்கு அறிவு இருக்கிறது.  ஆராயும் ஆற்றலும் உண்மை அறியும் ஆற்றலும் இருக்கிறது. இல்லாதது துணிவும் நாணயமும் தான்.   இதைக் கற்பிக்க  தமிழர்களுக்கு மதம் இல்லை, கல்வி இல்லை, கலை இல்லை. (செப்தெம்பர் 01, 2010)


 

குரு - சீடன்

சுரேஷ் வானவெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய சோலைக் கிளி!

சீடன் -  வெள்ளம் போல் தமிழர் கூட்டம்
                          வீரங்கொள் கூட்டம், அன்னார்
                  உள்ளத்தால் ஒருவரே மற்
                            றுடலினால் பலராய்க் காண்பார்!

குரு - புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாட்டு நல்லாகத்தான் இருக்கிறது. ஆனால் நாட்டு நிலைமை அப்படி இல்லையே!
தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை என்று ஆளுக்காள் சொல்லிக் கொள்கிறார்களே?

சீடன் - அது தவறு குருவே!  வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதுபோல தமிழர்கள் மட்டுந்தான் ஒற்றுமை இல்லாத இனம் என்பது தவறு. ஒற்றுமைக்கு யூதர்களை நாம் மேற்கோள் காட்டுகிறோமே? அவர்களிடத்திலும் நாம் நினைப்பது போல் பெரிய ஒற்றுமை கிடையாது. ஒற்றுமை இல்லாத காரணத்தால்தான் 1,800 ஆண்டுகள் நாடு நாடாக அடி உதை பட்டு ஏதிலிகளாக வாழ்ந்தார்கள்! இன்று கூட பத்து யூதர்கள் இருந்தால் பதினொரு கட்சிகள் இருக்கும் என்பார்கள்!

குரு - அப்ப இந்த நண்டுக் கதை எல்லாம் சொல்கிறார்களே?  எல்லா நண்டுகளையும் ஒரு குழிக்குள் அடைத்து வைத்திருப்பார்களாம்.  தமிழ் நண்டுகளை மட்டும் அடைக்காது திறந்து வைத்து விடுவார்களாம்.  காரணம் ஒரு நண்டு ஏற மற்ற நண்டுகள் அதைப் பிடித்து இழுத்து கீழே விழுத்தி விடுமாம்!

சீடன் - இந்த நண்டுக் கதையை ஒவ்வொரு இனத்தவனும் சொல்லிக் கொண்டிருக்கிறான். மலையாளத்தான் கதை சொல்லும் போது நண்டு மலையாள நண்டாக மாறிவிடும்!   தெலுங்கன் கதை சொல்லும் போது நண்டு தெலுங்கு நண்டாக மாறிவிடும்!

குரு - உன்னோடு வாதம் செய்ய முடியாது. நீ குருவை மிஞ்சிய சீடன்.  ஆனால் நீ சொல்வதை எல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது!

சீடன் - சென்ற ஞாயிற்றுக் கிழமை நீங்கள் "சுரேஷோடு பகல் உணவு" என்ற நிகழ்ச்சிக்கு வந்திருக்க வேண்டும். வந்திருந்தால் வெள்ளம் போல் தமிழர் கூட்டம் வீரங்கொள் கூட்டம், அன்னார் உள்ளத்தால் ஒருவரே மற்றுடலினால் பலராய்க் காண்பார் என்ற பாரதிதாசனின் கனவு பலித்த காட்சியை நீங்கள் கண்டு களித்திருப்பீர்கள்!

குரு -  அப்படியா?  அப்படி என்னதான் நடந்தது?

சீடன் - சுரேஷ் என்ற ஒரு துடிப்புள்ள  இளைஞன். மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒரு சிறந்த நாட்டுப்பற்றாளன்.  படிப்பு அவருக்குச்  சக்கரைப் பொங்கல்.  பல்கலைக் கழகப் பட்டங்களை முத்திரை சேகரிப்பது போல சேகரித்துக் கொள்கிறார். அவரது பேராசிரியர்களே அவரது திறமையை மனதாரப் பாராட்டுகிறார்கள்.  அப்படிப் பட்ட ஒரு இளைஞன்  தனக்கல்ல, தன் இனத்துக்கு உதவி செய்யப் போன போதுதான் அமெரிக்க நாட்டின் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் அவர் மீது பாய்ந்து விட்டது!

குரு - அவர் கனடிய குடிமகன்தானே?  பின் எப்படி அமெரிக்க பயங்கரவாதச் சட்டத்தின் பிடிக்குள் அகப்பட்டார்?

சீடன் - அப்படிக் கேளுங்கள் குருவே!  சில ஆண்டுகளுக்கு முன்னர் சுரேஷ் இரண்டொரு மின்னஞ்சல்களை தனது நண்பர்களுக்கு அனுப்பினார். அந்த மின்னஞ்சல் சேவையை வழங்கும் Hotmail   நிறுவனம் அமெரிக்காவில் இருக்கிறதாம். அதுதான் சிக்கல்.

குரு - அப்படியென்ன பயங்கரவாதச் சட்டத்தை மீறும் மின்னஞ்சல்கள்?  ஏதாவது பயங்கரவாதத் திட்டம் தீட்டியிருந்தாரா?

சீடன் - சேச்சே! அப்படியொன்றுமில்லை. ஒரு கணனியை எப்படி வன்னிக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பது, சந்தையில் பகிரங்கமாக விற்கப்படும் தொலைதொடர்பு கோபுரங்களை, இராடர்கருவிகளை எப்படி வாங்குவது போன்றவை தொடர்பாக தனது நண்பருக்கு மின்னஞ்சல் அனுப்பினார். அவ்வளவுதான்.

குரு - ஓ இவ்வளவுதானா? நான் என்னமோ ஏதோ என்று நினைத்தேன்! அது சரி இதெல்லாம் சமாதான காலத்தில் நடந்ததுதானே? அப்போது வி.புலிகள் இயக்கம் சிறிலங்காவில் சரி கனடாவில் சரி தடைசெய்யப்பட்ட இயக்கமாக இருக்கவில்லையே?

சீடன் - நீங்கள் சொல்வது சரி குருவே! ஆனால் வி.புலிகள் மீது அமெரிக்கா போட்ட தடை அப்படியே இருந்தது. அது நீக்கப்படவில்லை. அந்தச் சட்டத்தின் கீழ் ஒரு குண்டூசியை ஒருவர்  வாங்கிக் கொடுத்தாலும் போதும்.  சட்டம் அவர் மீது பாய்ந்துவிடும்.

குரு - அமெரிக்காதானே உலகின் மிகப் பெரிய  பயங்கரவாத நாடு என்று சொல்கிறார்கள்.  இராக் மீது படையெடுத்த போது ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். நாற்பது இலட்சம் இராக்கியர் பக்கத்து நாடுகளுக்கு ஏதிலிகளாக இடம்பெயர்ந்தார்கள்.  ஆப்கானிஸ்தானிலும் பொதுமக்கள்  நாளொரு மேனி  குண்டு போட்டுக் கொல்லப்படுகிறார்கள்!

சீடன் - குரு செய்தால் குற்றமில்லை குருவே! இன்றைய உலக ஒழுங்கில் வல்லான் வகுத்ததே வாய்க்கால்! சுரேஷின் கைதுக்கு இனவெறி பிடித்த சிறிலங்கா அரசு அமெரிக்காவுக்குக் கொடுத்த அழுத்தமே காரணம்.  சுரேஷின் கைதுக்கு மட்டுமல்ல மற்றவர்கள் மீதும் பயங்கரவாதத் தடைச் சட்டம் பாய்ந்ததற்கும் சிறிலங்கா அரசின் அழுத்தமே  காரணம். குறிப்பாக அப்போது சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்த (2005 - 2007) மங்கள சமரவீராதான் காரணம்.

குரு -  உண்மைதான்!

சீடன் -  சுரேஷ்   யூன் 9  அன்று இங்குள்ள கனடிய  காவல்துறையிடம் சரண் அடைய வேண்டும். அதன்பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவார். நாடுகடத்தப்படுவதற்கு எதிராகக் கனடிய நீதி அமைச்சருக்கு அவர் செய்த முறையீடு நிராகரிக்கப்பட்டுவிட்டது.

குரு - அமெரிக்காவில் வழக்காட முடியாதா?

சீடன் - ஏன் முடியாது? ஆனால் அதற்குப் பெரும்தொகை பணம் வேண்டும். சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு அந்த விளக்கை சாதாரணமானவர்களால் பெற முடியாது. சுரேஷ் அதில் ஒருவர்.  கனடா, அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளில் நீதியின் விலை மிக மிக  ஒறுப்பு! எனவேதான் சுரேஷ் தமிழ்மக்களின் உதவியை நாடினார். தமிழ்மக்கள் அவரைக் கைவிட வில்லை. உடுக்கை இழந்தவன் கைபோல் அவரது இடுக்கண் கழைய ஞாயிற்றுக் கிழமை திரண்டார்கள்.

குரு - பெருந்தொகை பணம் வேண்டும் என்கிறாய். அப்படியென்றால் கிள்ளிக் கொடுத்து சரிவராது. அள்ளிக் கொடுத்தால்தான் ஆகும்.

சீடன் - அதைத்தான் மக்கள் செய்தார்கள்.  1500, 1000, 500 டொலர் என மக்கள் வரிசையாக நின்று அள்ளிக் கொடுத்தார்கள்.  அதன் சூத்திரதாரி மின்னல் புகழ் செந்தில்குமரன்! பூநகரி  முழங்காவில் வீடு கட்டும் பணிக்கு 600,000 டொலர் சேர்த்த அதே உத்தியை இங்கும் கடைப்பிடித்து வெற்றி பெற்றார். அவருக்கு அய்ந்து நிமிடம்தான் முதலில் கொடுக்கப்பட்டது. ஆனால் மனிதர் கண்ணன் வந்தான் என்ற பொருத்தமான பாட்டுக்களைப் பாடி மக்களின் மனங்களை கொள்ளை கொண்டுவிட்டார்.

குரு - சரி சேர்ந்த தொகையைச் சொல்லு?

சீடன் - செந்தில் 200,000 டொலரை இலக்காக வைத்தார். அதில் 170,000  டொலர் சேர்த்துவிட்டது!

குரு - நம்பமுடியவில்லையே? எங்கடை ஆட்கள் தேர், தீர்த்தம், திருவிழா என்றால்தான் கொடுப்பார்கள். காரணம் கொடுக்காவிட்டால் சாமி கண்ணைப் புடுங்கிவிடும் காலை முடக்கிவிடும் என்கிற  பயம். அல்லது ஆயிரம் செலவழித்தால் கடவுள் பத்தாயிரம் தருவார் என்ற ஆசை!

சீடன் - எங்கடை மக்கள் ஒற்றுமைக்குப் பெயர் போனவர்கள். அவ்வப்போது தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டாலும் அடிப்படையில் எல்லோரும் நல்ல தேசியவாதிகளாகவே இருக்கிறார்கள்.  இதனை செந்தில்குமரன் தனது பட்டறிவின் அடிப்படையில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். இன்னொரு அதிசயம குருவே!

குரு - என்ன அதிசயம்?

சீடன் - பெயரைச் சொல்ல விரும்பாத பெண்மணி ஒருவர் 50,000 டொலர்களை அன்பளிப்புச் செய்தார்!

குரு - உண்மையாகவா? தேர் செய்வதற்கு 50,000    கொடுப்பவர்களைப் பார்த்திருக்கிறேன்.  இப்படி ஒரு பொதுக் காரியத்துக்கு ஒருவர் 50,000  கொடுத்தது இதுதான் முதல் தடவை என நினைக்கிறேன்.

சீடன் - எனக்குக் கூட என் காதை நம்ப முடியவில்லை.  மனம் இருந்தால் இடம் உண்டு.  எதையும் சாதிக்கலாம். முள்ளிவாய்க்காலோடு கதை முடிந்துவிட்டது என்று எதிரிகள் நினைத்தார்கள். அப்படியில்லை, இப்போது மீண்டும் எழுந்து நிற்கிறோம்! நிமிர்ந்து நிற்கிறோம்! இதைக் கண்டு எங்கள் எதிரிகள் யோசிக்கிறார்கள்!

குரு - நீ சொல்வது சரிதான். ஒரே நாளில் (மே 17) நாடுகடந்த தமிழீழ அரசு மற்றும் நாம் தமிழர் இயக்கம் தோற்றம் பெற்றுள்ளது. பிலடெல்பியாவிலும் புலிக்கொடி! மதுரையிலும் புலிக் கொடி!

சீடன் - குருவே உங்களுக்கு பிந்திக் கிடைத்த ஒரு நல்ல செய்தியைச் சொல்கிறேன்.   சுரேஷின் நாடுகடத்தல் செப்தெம்பருக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளது!

குரு - அதுதானே பார்த்தேன். சுரேஷ் வானவெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய சோலைக் கிளி! அவரை யாரும் இலேசில்  கூண்டுக் கிளியாக்க முடியாது! தலைவன் வழிவந்த  தமிழ்மக்கள் அப்படி நடப்பதை விடமாட்டார்கள!  சேயைத் தாங்கும் தாய்போல சுரேஷைத் தாங்கிப் பிடிப்பார்கள்!

சீடன் - நல்லதே நடக்கும் என நம்புவோம்!


குரு - சீடன்

யாழ்ப்பாணத்தில் நாள் தோறும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல்!

சீடன் - யாழ்ப்பாணக் குடாநாட்டில் 40,000 சிங்களப் படை நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மேலாக காவல்துறையினரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். அப்படி இருந்தும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் நாள்தோறும் இடம் பெறுகிறது.

குரு - என்ன காரணம்?

சீடன் - வேலியே பயிரை மேய்வதுதான் காரணம். கடந்த மார்ச் மாதம் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த திருச்செல்வம் கபில்தேவ் என்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் கடத்தப்பட்டான். கடத்தியவர்கள் அவனை விடுவிப்பதற்கு மூன்று கோடி பணம் கேட்டு மிரட்டினர். இரண்டு கிழமை கழித்து அவனைப் பிணமாகத்தான் மீட்டனர். அடுத்த மாதம் 60 அகவைப் பெண் ஒருவர் கொல்லப்பட்டு அராலி கடல் பகுதியில் வீசப்பட்டார். ஏப்ரல் 10 ஆம் நாள்  யாழ் பல்கலைக்  கழக  மாணவியான ஜமேசலா, செம்மணி என்ற பகுதியில் கடத்தப்பட்டார். மறுநாள் அவர் வீட்டுக்கு அருகில் பிணமாகக் கிடந்தார்.  அதே நாளில் இளவாலை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த குணரத்தினம் இந்துமதி என்ற 44 அகவைப்  பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குத்திக் கொல்லப்பட்டார். ஏப்ரில் 15, நல்லூர் கச்சேரி வீதி  73 அகவை  சின்னையா செல்லத்துரையைக் கொலை செய்து அவர் வீட்டிலிருந்த நகைகளைக்   கள்ளர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள்.  17 ஆம் நாள் அத்தியடியில் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் மத்திய வித்தியாலய மாணவி இரவீந்திரன்  கலைச்செல்வி குத்திக் கொல்லப்பட்டார். 20 ஆம் நாள்  நவாலியைச்   சேர்ந்த இரு ஆண்களைக் கடத்திய பாசையூரைச் சேர்ந்த கும்பல் அவர்களை விடுவிக்க வேண்டுமானால் 50 இலட்சம் தரவேண்டும் என மிரட்டியது.

குரு - மாணவன் கபில்தேவ் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இபிடிபி கட்சியின் தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளர் சார்ல்ஸ் மற்றும்  ஜீவன்  ஆகியோரைக் காவல்துறை கைது செய்து வழக்குப் பதிவுசெய்தார்களே?

சீடன் - ஆமாம்.  ஆனால் இவர்களைக் கைது செய்ய உத்தரவிட்ட சாவகச்சேரி நீதிபதி  பிரபாகருக்கு ஏப்ரில் 27 அன்று  மிரட்டல் விடுக்கப்பட்டது.  மிரட்டல் விட்டது வேறு யாருமல்ல. அதே இபிடிபி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் யாழ்ப்பாண மாநகர சபை துணை மேயருமான துரைராசா இளங்கோ அல்லது றீகன்தான் அப்படி மிரட்டல் விட்டவர்.

குரு -  மே 10 ஆம் நாள் றீகனைக் காவல்துறை பிடித்து சிறையில் அடைத்ததாகச் செய்தி வந்ததே?

சீடன் -  ஆனால் அடுத்த நாள் றீகனை சிறையில் இருந்து 3 நாள்களில் விடுவிக்கப் படாவிட்டால் மாநகர சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதிப்பார்கள் என யாழ்ப்பாண மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவின் மிரட்டல் அறிக்கை ஒன்றை விட்டார்.  அடுத்த நாள் (மே 11)  ஊழியர்கள் அவரின் தூண்டுதலின் பேரில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொண்டார்கள்.

குரு - வேலியே பயிரை மேய்கிற கதையாக இருக்கிறதே? நீதித்துறைக்கே அறைகூவலா?

சீடன் - இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் யாருக்கும் அறைகூவல் விடலாம குருவே!  இபிடிபி கட்சித் தலைவர் தேவானந்தா  அமைச்சர் ஆயிற்றே! ஆளும் கட்சியின் செல்லப்பிள்ளை ஆயிற்றே!

குரு - அவர் என்ன சொல்கிறார்?

சீடன் - வழக்கம் போல் இப்படியான  சேறு பூசும் முயற்சியை தனது அரசியல் எதிரிகள் மேற்கொள்வதாகவும் தாங்கள் கொலை, கொள்ளை, கடத்தல், அடிதடி எதிலுமே ஈடுபடுவதில்லை "நாங்கள் தாவரபட்சிணிகள்" என்று பேசியிருக்கிறார்?

குரு - இந்தப் பூனையும் பால் குடிக்குமா?  என்ற தோரணையில் பேசியிருக்கிறார் என்று சொல்?

சீடன் - அதேதான் குருவே!  ஊடகவியலாளர் விமலராசன் ஒக்தோபர் 19, 2000 ஆண்டு கொலை செய்யப்பட்ட போதும் தான் ஒரு அப்பாவி என்றுதான் கதை விட்டார்.   விமலராசன் கொலையில் இபிடிபி கட்சியைச் சேர்ந்த கந்தசாமி  ஜெகதீஸ்வரன் அல்லது ஜெகன் என்பவர் கைது செய்யப்பட்டார்.  பின்னர் பிணையில் வெளிவந்த அவர் அமைச்சரின் துணையுடன் நாட்டை விட்டே ஒடிவிட்டார். 

குரு - றீகன் என்பவரை நீதிமன்றம் பிணையில் விட்டுவிட்டதாகச் செய்தி வந்திருக்கிறதே?

சீடன் - ஆமாம். சிறைக்குள் போன வேகத்தில் பிணையில் வெளியே வந்துவிட்டார்.   நீதிமன்ற நீதிபதிக்கு கொலை பயமுறுத்தல் விடுத்த ஆசாமியை  எப்படிப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது என்பது விளங்கவில்லை.

குரு - மகிந்த இராசபக்சேயின் ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி (Rule of law) என்பது கிடையாது. உச்ச நீதிமன்றம் கொழும்பு வீதித்தடைகளை நீக்குமாறு கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பை ஆட்சித்தலைவர் புறம்தள்ளிவிட்டார்.

சீடன் - ஆனால் றீகன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேளையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் செய்தித்தாள்களில் பிரசுரிக்கப்பட்ட விளம்பரம் தொடர்பாக நீதிமன்றம் மேயரை நீதிமன்றத்தில் தோன்றுமாறு கட்டளை பிறப்பித்துள்ளது.  அத்தோடு அந்த விளம்பரத்தை பிரசுரிப்பதில் முக்கிய பங்கு வகித்த மேயரின் செயலாளரும் அவரது கணவர் பற்குணராசாவைக்  கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தும்படியும் நீதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார்.

குரு - ஆளும்கட்சியில் இருப்பதால் நீதிபதிக்கு  கொலை பயமுறுத்தல் விடலாம் நீதிமன்றத்தை அவமதிக்கலாம் என்ற துணிச்சல் சிலருக்குத் தானாகவே வருகிறது.

சீடன் - அற்ப சலுகைகளுக்காக இவர்களுக்கு வாக்களித்த மக்களைத்தான் நோக வேண்டும். கடந்த மாதம் இதே இபிடிபி கட்சியினர் யாழ்ப்பாணம் முக்கிய வீதியில் புத்தர்  சிலையை வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார்கள். தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்புக் காரணமாக அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

குரு - இபிடிபி சோரம் போன கட்சி. அதற்குச் செக்கென்று இருக்கிறது சிவலிங்கம் என்றிருக்கிறது. எதுவானாலும் நக்க வேண்டியதுதான்!

சீடன் - இன்னும் கேளுங்கள் குருவே! யாழ்ப்பாண மாநகரசபை நூல்நிலையத்தின்  தேநீர் கடைக்கான குத்தகையை தென்னிலங்கைச் சிங்களவர்களுக்குக் கொடுத்துவிட்டது! அது கூடப் பருவாயில்லை.  யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் சங்கிலியின் அரண்மனை அமைந்திருக்கும் சங்கிலித்தோப்புக்கு அருகில் ஒரு நட்சத்திர ஹோட்டல் கட்ட இதே யாழ்ப்பாண மேயர் யோகேஸ்வரி அனுமதி வழங்கியுள்ளார். இதன் அருகிலேதான் வரலாற்றுப் புகழ்பெற்ற நல்லூர் கோயிலும் அமைந்துள்ளது. ஆனால் சைவ அடியார்கள், சைவகுருமார்கள், சைவ ஆதீனங்கள் இதுபற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படுவது கிடையாது. எல்லாம் சிவன் செயல் நம்மால் ஆவதொன்றும் இல்லை என இருந்துவிடுகிறார்கள்!

குரு - போகிற போக்கைப் பார்த்தால் யாழ்ப்பாணத்தை மொத்தமாகவும் சில்லறையாகவும் சிங்களவர்களுக்கு வித்துவிடுவார்கள் போல் இருக்கிறதே?

சீடன் - போல் அல்ல குருவே! இவர்களை விட்டுவைத்தால் உண்மையாகவே விற்றுவிடுவார்கள் குருவே!


குரு - சீடன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் இடத்தில்

திருமகள்

குரு - இன்று என்ன புதினம்?

சீடன் - அதை ஏன் கேட்கிறீர்கள் குருவே! சிலர் தடியைக் கொடுத்து அடி வாங்குவதில் விண்ணர்கள்!

குரு - விளக்கமாகச் சொல்?

சீடன் - சிரிஆர் வானொலியைத்தான் சொல்கிறேன். இன்று காலை வணக்கம் கனடா நிகழ்ச்சியல் தங்களது யாழ்ப்பாண செய்தியாளர் வேணிலை காற்றலைக்குக் கெர்ண்டு வந்தார்கள்.....

குரு - என்ன சொன்னார்?

சீடன் - சுரக்காய்க்கு உப்பில்லை என்று சொன்னார்? கொஞ்சம் பொறுங்கள் குருவே! எல்லாவற்றையும் விபரமாகச் சொல்கிறேன். முதல் கேள்வி - யாழ்ப்பாணத்தில் தேர்தல் கள நிலை எப்படி இருக்கிறது பதில் - சூடு பிடித்துள்ளது.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் டக்லஸ் தேவானந்தாவின் கட்சி இருக்கிறது. மூன்றாவது இடத்தில்தான் கஜேந்திரகுமாரின் காங்கிரஸ் இருக்கிறது.

குரு - நாலாவது இடத்தில் எந்தக் கட்சி இருக்கிறதாம்?

சீடன் - என்னைச் சொல்லவிடுங்கள் குருவே! நாலாவது இடத்தில் ஆனந்தசங்கரியாரின் தமிழர் விடுதலைக் கூட்டணி இருக்கிறதாம்!

குரு - கஜேந்திர குமாருக்குக் கொடி பிடிக்கிற சிரிஆருக்கு இது பெரிய ஏமாற்றமாக இருந்திருக்குமே?

சீடன் - இல்லாமல் பிரபல நட்சத்திரங்கள் கதாநாயகன் கதாநாயகி நடித்த படம் ஓடவில்லை என்றால் தயாரிப்பாளர் திருப்பதிக்குப் போய் மொட்டை போடத்தானே வேண்டும்? எனக்கு என்ன வியப்பாக இருக்கிறதென்றால் ஆட்சித்தலைவர் தேர்தலில் கஜேந்திரகுமார் தேர்தலைப் புறக்கணிக்கக் கேட்டதைப் புறந்தள்ளிவிட்டு   யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமல்ல, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை மற்றும் வன்னி மாவட்டங்களில் வாழும் தமிழ்மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்தார்கள். மலையகத்தில் தொண்டமான் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்தும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் ஆட்சி மாற்றத்துக்குத்தான் வாக்களித்தார்கள்!

குரு - எல்லோரும் பேசிப் பறைந்து வாக்களித்தார்கள் என்று சொல்? அப்படித்தான் நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டணிக்குத்தான் வாக்களித்து அமோக வெற்றியை ஈட்டிக் கொடுக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கலாமா?

சீடன் - நிச்சயமாக அப்படித்தான் வாக்களிப்பார்கள். வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் வாக்களிப்பார்கள். மக்கள்  ஆளைப் பார்க்காமல் ஆட்டத்தைப் பார்க்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப்  பலப்படுத்தினால் மட்டுமே சிறிலங்காவோடு சரி, இந்தியாவோடு சரி, பன்னாட்டு குமுகாயத்தோடு சரி  எமது மக்கள் சார்பாகப் பேச முடியும்.

குரு - இந்தியாவோடு பேச வேண்டும் இந்தியாவின் தலையீடு இல்லாமல் இனச் சிக்கலுக்கு தீர்வு காண முடியாது என்று சிலர் சொல்கிறார்களே?

சீடன் - இந்தக் கேள்விக்கும் வேணில் பதில் சொன்னார். இந்தியாவைப் புறந்தள்ளிவிட்டு இனச் சிக்கலுக்கு யாரும் தீர்வு காணமுடியாது. இதுதான் அரசியல் யதார்த்தம் என்றார் வேணில். இந்தப் பதிலும் கேள்வி கேட்டவருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கலாம்.

குரு -  இந்தியா எந்தளவு தூரம் இலங்கையில் தலையிட முடியும்? இந்தியா இன்னொரு இறைமையுள்ள நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாது என்று இந்திய வெளியுறவுச் செயலர் நிருபாமா ராவ்  சொல்லியிருக்கிறாரே?

சீடன் - உண்மை குருவே!  இந்திரா காந்தி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் கையை முறுக்கினமாதிரி  மன்மோகன் சிங் இராஜபச்சேயின் கையை முறுக்க முடியாது.  இந்திரா காந்திக்கு இருந்த அரசியல் ஆளுமை நிச்சயமாக மன்மோகன் சிங் அவர்கட்கு இல்லை. மேலும் இந்திரா காந்திக்கு தமிழ்மக்கள் மீது இருந்த கரிசனை நிச்சயமாகச் சோனியா காந்திக்கு இல்லை.  காங்கிரஸ் கட்சிக்குள் சோனியாவின் கை ஓங்கிய பின்னரே இந்தியாவின் புலி எதிர்ப்பு கடுமை அடைந்தது.  1991 - -1996 வரை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசிடம் புலி எதிர்ப்பு அதிகமாக இருந்ததில்லை.

குரு - பெரிய சிக்கலாக இருக்கப் போகிறதே?

சீடன் - ஆம் குருவே! அங்கேதான் தமிழ்நாட்டின் தலையீடு அவசியமாகிறது. தமிழக அரசு தில்லி மீது கடுமையான அழுத்தம் கொடுத்தால் மட்டுமே இந்திய அரசு அசைந்து கொடுக்கும்.  அப்போதும் இந்தியாவால் சிறிலங்கா மீது ஓரளவுக்குத்தான்  அழுத்தம் கொடுக்க முடியும்.

குரு - உள்ளக தன்னாட்சி உரிமை கேட்டால் கூட கிடைக்காது என்கிறாய்?

சீடன் - அதுவேதான் குருவே! சிறிலங்கா அரசு உள்ளக தனனாட்சிக் கோரிக்கையை ஏற்கனவே நிராகரித்து விட்டது!

குரு - பின்னர் ஏன் சம்பந்தர் அடிப்படை கொள்கையை விட்டுக் கொடுத்து விட்டார். இந்தியாவின் கைப்பொம்மையாகப் போய்விட்டார். இந்தியாவின் கைக்கூலியாகப் போய்விட்டார் என்று அவரை அர்ச்சனை செய்கிறார்கள்?

சீடன் -  அப்படி அர்ச்சனை செய்கிறவர்கள் அரசனை நம்பி கணவனை இழந்த பெண்ணின் நிலையில் இருக்கப்போகிறார்கள். இன்று நாம் கந்தறுந்து போய் நிற்கிறோம். யாதார்த்தத்தைப் புரிந்து கொண்டு சாணக்கியமாக நாம் காய்களை நகர்த்த வேண்டும். இல்லை என்றால் தனது தாயார் போல் ஒரு பெண் கிடைத்தால்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடித்துக் கொண்டு அரச மரத்தின் கீழ் இருக்கும்  பிள்ளையார் போல் காலம் காலமாகப் பிரமச்சாரியாக இருக்க வேண்டியதுதான்.  ஆ........ சொல்ல மறந்து போனேன். சிரிஆர் எடுத்த வாக்குக் கணிப்பு பிழையாம். ஒரே கணினியில் இருந்து 300 பேர் வாக்களித்தார்களாம்.

குரு - கணினியைச் சரி செய்வதுதானே சரி செய்யாமல் இரண்டாவது கருத்துக் கணிப்பை ஏன் எடுக்க வேண்டும்? ஏனென்றால் முதலாவது கருத்துக் கணிப்பில்  ஆதரவு வாக்கு 88 விழுக்காடாக இருந்தது!

சீடன் - சரி விடுங்கள் குருவே!  இது வேலை சரியாகச் செய்யத் தெரியாத தொழிலாளி தனது கருவிகள் மீது பழி போட்ட கதை போன்றது. அல்லது  தேர்வில் கோட்டை விட்டதற்குக் காரணம்  தனது பிழையில்லை அது  வாத்தியார் பிழை என்று சொன்ன மாணவன் மாதிரி.  எப்படியும் வைத்துக் கொள்ளலாம். (March 11, 2010)


குரு -  சீடன்

இரண்டு இருக்கைகளுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைத்தவர்கள் கூண்டோடு கயிலாசம்!

சீடன் - ஆடிய ஆட்டமென்ன?  பாடிய பாட்டென்ன?  திட்டிய வார்த்தை என்ன? திரட்டிய நிதி என்ன? கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன. ...?

குரு -  நாடு கிடக்கிற நிலையிலே இப்படியான பாட்டுக்கு இப்போது என்ன அவசியம்?

சீடன் - அவசியம் இருக்கிறது குருவே?  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துக் கொண்டு வெளியே வந்து திருமலையில் சம்பந்தனைத் தோற்கடிப்போம் யாழ்ப்பாணத்தில் சேனாதிராசாவையும் சுரேஷ் பிரேமச்சந்திரனையும் தோற்கடிப்போம் என ஊழையிட்டவர்கள் கூண்டோடு கயிலாசம்  போய்விட்டார்கள்! குறிப்பாகச் செல்வராசா கஜேந்திரன்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆடிய ஆட்டம் சொல்லி மாளாது!

குரு -  கொஞ்சம் விபரமாகச் சொல்?

சீடன் - தமிழ்த்  தேசியக் கூட்டமை உடைத்ததன் மூலம் தமிழினத்தின் ஒற்றுமையைக் குலைத்தவர்களுக்கு தமிழ்வாக்காளர்கள் தக்க தண்டனை வழங்கியுள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் சரி,  திருமலையில் சரி தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சார்பாக போட்டியிட்ட 19 வேட்பாளர்களும் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள்! கட்டுக்காசும் பறிபோய்விட்டது!

குரு - நம்ப முடியவில்லையே! சிரிஆர் வானொலி நாளும் பொழுதும் செய்த பரப்புரையைப் பார்த்தால் யாழ்ப்பாணம், திருமலை இரண்டிலும் ததேமமுன்னணி பெரிய வெற்றிவாகை சூடப்போகிது என்ற தோற்றம் இருந்ததே?

சீடன் - அப்படியொரு மாயை அந்த வானொலி உருவாக்கியது.  தங்களோடு ஒத்தூதக் கூடிய ஆய்வாளர்களையும் அரசியல்வாதிகளையும் காற்றலைக்கு அழைத்து வந்து  பேச்சுக் கச்சேரி வைத்தது. ஆய்வாளர்கள் தங்கள் பங்குக்கு  துரும்பைத் தூணாக்கிக் காட்டினார்கள். நோஞ்சான்களைப் பயில்வான்களாக சித்தரித்துக் காட்டினார்கள். ஆய்வாளர்கள் நிலவன், துரைரத்தினம், வரதாசா போன்றோர்  மட்டும் சிரிஆர் வானொலி அறிவிப்பாளர்கள் சக்தி பரமலிங்கம் பொன்னையா விவேகானந்தன் விரித்த வலையில் விழ மறுத்தார்கள். அப்படி விழ மறுத்தவர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள்!

குரு - எப்படித்தான் உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது என்பது சரியாகத்தான் இருக்கிறது!

சீடன் - அதைவிட சிறுபிள்ளை வேளாண்மை விளைந்தும் வீடு வந்து சேராது என்பார்களே? அந்தப் பழமொழிதான் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

குரு -  சரி தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கிறது?

சீடன் - தேர்தல் முடிவுகள் இன்னும் முழுதாக வந்து சேரவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சி 5 இருக்கைகளும், ஆளும் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3 இடங்களையும், அய்க்கிய தேசியக் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியள்ளது. தமிழ்க் காங்கிரஸ் கட்சி நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. உடுப்பிட்டி, பருத்தித்துறை தொகுதிகளில் மட்டும் சொற்ப வாக்குகளைப் பெற்று  முக்கித்தக்கி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது!

குரு - திருமலையில் சம்பந்தரைத் தோற்கடித்து விட்டுத்தான் மறுவேலை என்று கொக்கரித்தார்களே? அங்கே என்ன நடந்தது?

சீடன் -  திருமலையில் சம்பந்தரைத் தோற்கடிப்பது என்பது கிழக்கே உதிக்கும் ஞாயிறு மேற்கே உதித்தால்தான் சாத்தியமாகும்! சம்பந்தனது வெற்றிபற்றி தொடக்கம் முதலே  யாருக்கும் அய்யுறவு இருக்கவில்லை. முதலாவதாக வந்து  மேலதிக இருக்கையையும்  கைப்பற்ற முடியுமா என்பதுதான் கேள்விக் குறியாக இருந்தது. ஆளும் கட்சியைச் சேர்ந்த வெளிமாவட்ட சிங்களக் காடையர்கள் அங்கு தமிழ்மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை துப்பாக்கிகளைக் காட்டிப் பயமுறுத்தித் தடுத்துவிட்டார்கள்! அதனால் வெறுமனே 2000 வாக்கில் ஒரு இருக்கையை இழக்க வேண்டிவந்து விட்டது.

குரு - சம்பந்தருக்கு பாவ மன்னிப்புக் கொடுத்துவிட்டதாக உயிருக்குப் பயந்து கனடாவில் அரசியல் புகலிடம் கேட்டுள்ள ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொன்னாரே?

சீடன் - சம்பந்தனுக்குப் பாவமன்னிப்புக் கொடுக்க அவர் என்ன யேசுநாதரா? உண்மையைச் சொன்னால் அவர் ஒரு அரசியல் கோமாளி. அவரை யாரும்  பொருட்படுத்துவதில்லை. நாட்டில் மேடையில் பேசிப் பேசி தொண்டை வரண்டு களைத்துப் போனவர்.   இங்கு வந்து சிரிஆர் வானொலியில் கத்திக் கத்தி தொண்டை வரண்டு போனவர்.

குரு - 2004 இல் ஒரு இலட்சம் விருப்பு வாக்குகள் பெற்ற கஜேந்திரன் என்னவானார்?  வெறுமனே 49,000 விருப்பு வாக்குகள் பெற்ற சம்பந்தர் எப்படி கஜேந்திரனுக்கு நியமனம் கொடுக்க மறுத்தார் என அவரை இங்கு பலர் வறுத்தெடுத்தார்களே?

சீடன்  - கஜேந்திரனுக்கு கிடைத்த வாக்குகள் வி.புலிப் போராளிகள் வீடு விடாகச் சென்று சேகரித்த வாக்குகள். அது மட்டுமல்ல சஜேந்திரனுக்குக் கிடைத்த விருப்பு வாக்குகளை சம்பந்தருக்குக் கிடைத்த விருப்பு வாக்குகளோடு ஒப்பிடுவது முட்டாள்த்தனம். திருமலை  மாவட்டத்தில்  விழுந்த மொத்த வாக்குகள் 191,657  ஆகும். அதே சமயம் யாழ்ப்பாண  மாவட்டத்தில் விழுந்த மொத்த வாக்குகள் 284,026 ஆகும்.

குரு -  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இப்படிப் படுதோல்வி அடைந்ததற்கு என்ன காரணம்?

சீடன் - இதென்ன கேள்வி குருவே! அவர்களிடம் மூலோபாயத் திட்டம் (Strategic Planning) இருக்கவில்லை. கனடாவில் அந்த மூலோபாய திட்ட்டத்தை கையில் வைத்திருக்கும் ஒரு அரசியல் ஞானி இருக்கிறார். என்ன காரணமாகவோ  அந்த ஞானியிடம் அந்த மூலோபாயத் திட்டத்தைக்  கேட்டுப் பெற்று தேர்தலைச் சந்திக்க அந்த இரண்டு அரசியல் கற்றுக் குட்டிக்களான கஜேந்திரனும் கஜேந்திரகுமாரும் தவறிவிட்டார்கள்!

குரு -  2004 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது இன்று யாழ்ப்பாணம், திருமலை, வவுனியா எங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறைந்த வாக்குகளைப் பெற்றிருக்கிறது, குறைந்த இருக்கைகளைப் பெற்றிருக்கிறது என்று அரசியல் ஞானி சொல்கிறாரே?

சீடன் - 2004 ஆம் ஆண்டில் தமிழ்மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தார்கள். இன்று 400,000 இலட்சம்  மக்கள் முகாம்களில் அல்லது நலன்புரி சங்கங்களில் இரக்கிறார்கள். இந்த அடிப்படை உண்மையை  இந்த அரசியல் ஞானி கணக்கில் எடுக்க வசதியாக மறந்து விட்டார்.

குரு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா கோடி கோடியாக பணம் கொடுத்தது என்று இங்குள்ள ஓர் ஆய்வாளர் சொன்னாரே?

சீடன் - இந்தியா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கோடி கோடியாக கொடுத்தால் அது நல்லதுதானே?  அது பலவீனத்தை அல்ல தேசியக் கூட்டமைப்பின் பலத்தைக் காட்டுகிறது என்றுதானே அறிவுடையோர் எண்ணுவர்.

குரு - கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நினைக்கத்தான் பரிதாபமாக இருக்கிறது. சம்பந்தனுக்கு சவால் விடப் போய் உள்ளதும் கெட்டதடா கொள்ளிக் கண்ணா என்றது போலக் கட்டுககாசையும் இழந்து வெறுங்கையோடு கொழும்பு திரும்பியுள்ளார்.

சீடன் - அவர் தோற்றது தனிப்பட்ட முறையில் எனக்குக் கவலை. உலகத்தமிழர்,  தமிழ்நெட், பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை போன்றவை அவரைப் பப்பாசி மரத்தில் ஏற்றிச் சறுக்கி விழ வைத்துவிட்டார்கள். நம்ப வைத்துக் கழுத்தை அறுத்துவிட்டார்கள்!

குரு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இனித்தான் பொறுப்பு அதிகம். குறுக்குச்சால் ஓட்டுபவர்கள்  தொல்லை  இனி இருக்காது.  எனவே ஒற்றுமையுடன் அவர்கள் இனி அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தலாம்.  அதற்கு முதல் வாழ்வாதரங்களை இழந்து  முகாம்களில் முடங்கிக் கிடக்கும் எமது மக்களயும் விடுவிக்க நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியும் பாரிய போராட்டங்களை நடத்த வேண்டும்.

சீடன் -  அதுதான் குருவே அடியேன் விருப்பமும்!

குரு - பிந்தி வந்த செய்தி ஏதாவது உண்டா?

சீடன் - தமிழ்த்  தேசியக் கூட்டமைப்புக்கு மொத்தம் 14 இருக்கைகள் கிடைத்துள்ளன. யாழ்ப்பாணம் 5, திருமலை 1, மட்டக்களப்பு 3, வன்னி 3, அம்பாரை 1,  தேசியப் பட்டியல் 1.


 குரு - சீடன்

இந்த ஞானம் எல்லாம் பெப்ரவரி 24 மட்டும் வரவில்லை.  அதன் பின்தான் கஜேந்திரனுக்கு இந்த ஞானம் பிறந்தது!

குரு - தேர்தல் திருவிழாவுக்கு இன்னும் அயந்து நாள்களே இருக்கிறது. நாளையேர்டு பரப்புரை முடிகிறது என நினைக்கிறேன். கள நிலவரம் எப்படி இருக்கிறது?

சீடன் - தமிழ்மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் நடந்த அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணிக் கூட்டத்தில் தமிழில் பேசிய மகிந்த இராசபக்சேயை மக்கள் கூக்காட்டி அவமானப் படுத்தியுள்ளார்கள். அதனால் ஆத்திரம்  அடைந்த அவர்   மனதில் இருந்ததை அப்படியே கொட்டித் தீர்த்துவிட்டார்?

குரு - வியப்பாக இருக்கிறதே? மக்களுக்கு இந்தத் துணிச்சல் எங்கிருந்து எப்படி வந்தது? மகிந்தர் அப்படியென்ன பேசினார்?

சீடன் -  அந்தக் கண்றாவியை ஏன் கேட்கிறீர்கள்? "நாங்கள் சிங்களம். நானும் சிங்களவன். அதனால் கேட்டுக்கொண்டு இரு, தமிழா. தலைதெறித்து நடந்துகொள்ளாமல்.... கேட்டுக்கொண்டு இருக்க முடியாவிட்டால் போ!" இவ்வாறு இராசபக்சே சிங்களத்தில் திடடடிய பேர்து அதனையும் புரிந்து கொள்ளாத தமிழ்மக்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால் "நான் நிறுத்த மாட்டேன். நீங்கள் சத்தம் போடப் போட இன்னும் இன்னும் நான் தமிழில் பேசத்தான் போகிறேன்" என இராசபக்சே ஆவேசப்பட்டார்.

குரு - இராபச்சேயின் கைக்கூலி டக்லஸ் தேவானந்தா என்ன செய்தார்? அவர் அவருக்குப் பக்கத்தில் இருந்திருப்பாரே?

சீடன் - இருந்தார். ஆனால் அவருக்குத்தான் எப்போதோ குளிர் விட்டுப்  போச்சே! மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் இணைப்பாட்சி என்றுமே பிரிக்க முடியாத வடக்கும் கிழக்கும் என்பதை மனிதர் எப்போதோ காற்றில் பறக்க விட்டு விிட்டார். இப்போது அவர் இராசபக்சேயின் எடுபிடி. யாழ்ப்பாணம் வந்த இராசபக்சேக்கு நிலப்பாவாடை விரித்து ஆலவட்டம் பிடித்து மேளதாளத்தோடு வரவேற்பதுதான் அவரது முழுநேர வேலை.

குரு - வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதற்குப் பதில் அடியேன் வீணைச் சின்னத்தில் போட்டியிட்டால் இரண்டு மூன்று இருக்கைகளைக் கைப்பற்றலாம் பிரபு"  என்று இராபக்சேயிடம் டக்லஸ் மண்டியிட்டு கேட்டாரமே?

சீடன் - கேட்டார். ஆனால் இராபச்சே சொன்ன மறுமொழியைக் கேட்ட தேவானந்தா ஆடி அலமலந்து வியர்த்துப் போனாராம்.

குரு - அப்படி என்ன சொன்னார்?

சீடன் - மேலதிக இருக்கை வேணுமா? அல்லது அமைச்சர் பதவி வேணுமா? மாதம் 30 இலட்சம் ரூபாயையும் இழக்கத் தயாரா?

குரு - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய இராசபக்சே "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை  வாசித்துப் பாருங்கள். அவர்கள் இன்னும் பிரிவினைவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. அவர்கள் இன்றும் தனிநாடு பற்றிப் பேசுகிறார்கள். அதிகாரத்தைப் பகிர்வது பற்றிப் பேசுகிறார்கள். இன்றும் வடக்கு கிழக்கு இணைப்பதைப் பற்றிப் பேசுகிறார்கள். காவல்துறை அதிகாரம் பற்றிப் பேசுகிறார்கள். இவ்வாறு விஷமமான விடயங்களை மக்கள் மத்தியில் பரப்பி இனவாதத்தைத் தூண்டுகிறார்கள். நாங்கள் முப்பது ஆண்டு  காலமாகப் பல்வேறு இழப்புகளைச் சந்தித்து நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை இல்லாதொழித்தோம். இனியும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்க மாட்டோம். இவ்வாறு இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும்"  என்று பேசியிருக்கிறாரே?    அதனை வேளாண் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வழிமொழிந்திருக்கிறாரே?

சீடன் - வி.புலிகளது பின்னடைவோடு இனச் சிக்கல் தீர்ந்துவிட்டதாக கோத்தபாயா கனவு காண்கிறார். அதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கை அவரது கோபத்தைக் கிளறியுள்ளது.  வேடிக்கை என்னவென்றால் இதுவெல்லாம் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் நாடகம் என்று கஜேந்திரன் வழக்கம் போல் உளறியிருக்கிறார்.

குரு - தமிழீழ நாட்டு அரசியல் நிலைமை எப்படி இருக்கு?

சீடன் - யாழ்ப்பாணத்தில் சுவரொட்டி விளம்பரத்தில் முதலிடம் இபிடிபிக்கு. இரண்டாவது இடம் இலண்டனில் இருந்து பண மூட்டையுடன் இறக்குமதி செய்யப்பட்டு நேரடியாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் கேட்கும் செவ்வேள். மூன்றாவது இடம் அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்டு அதே கட்சியில் போட்டியிடும் அனோஜன்.

குரு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக்கு இந்தியா கோடி கோடியாக பணத்தை அள்ளிக் கொடுததிருக்கிறதாமே? யார் சொன்னது என்று கேட்காதே. சிரிஆர் வானொலியில் அதன் ஆஸ்தான ஆய்வாளர் மன்னிக்கவும் அரசியல்வாதிதான் சொன்னார்.

சீடன் - அது நல்லதுதானே?  பாவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.   அதற்கு யார் இருக்கிறார்கள் நிதி வழங்க? கஜேந்திரகுமார் போன்ற  கோடீசுவரர்கள் யாரும்  அதில் இல்லை. அதுதான் பரிதாபத்தில் இந்தியா கோடி கோடியாகக் கொடுக்கிறது போலும்.

குரு - தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு நிதி சேர்க்க தமிழ்ப் பல்கலைக் கழக பட்டதாரிகள் ஓன்றியம் முருகன் கோயிலில் கடந்த வியாழக் கிழமை ஏப்ரில் முட்டாள்த் தினம் அன்று மாபெரும் கூட்டம் நடத்தியதாமே?

சீடன் - என்னுடைய வாயைக் கிளறுவது என்று முடிவு செய்து விட்டீர்கள் போல் தெரிகிறது. இருந்தாலும் சொல்கிறேன். 'அலை அலையாகத் திரண்டு வாரீர்" என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிரிஆர் வானொலியில் கெஞ்சிக் கேட்டும் கூட்டத்துக்கு வருகை தந்தவர்கள் தொகை வெறுமனே 41 பேர்தான்! ஆனால் கூட்ட அமைப்பாளர் விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்பது போல் "கடுகு சிறிது என்றாலும் காரம் பெரிது என்று" விட்டுக் கொடுக்காமல் பேசினார்.

குரு - எவ்வளவு பணம் சேர்ந்ததாம்?

சீடன் - அது சிதம்பர இரகசியம்.  நதி மூலம் ரிஷி மூலம் கேட்கப்படாது என்பார்களே? அதுபோல இந்த நிதி மூலம் பற்றியும் கேட்கக் கூடாது! ஆனால் வருவாயை விட செலவு கூடவாம்!

குரு - கடந்த வெள்ளிக்கிழமை அரசியல் களத்தில் கலந்து கொண்ட செல்வராசா கஜேந்திரன் எல்லோரையும் வறுத்தெடுத்தாராமே?

சீடன் - அதை ஏன் கேட்கிறீர்கள் குருவே?  உதயன் ஆசிரியர் வித்தியாதரன் றோவின் கையாள்.   சம்பந்தன் தமிழினத்தை விற்றுப் போட்டார்,  புலம்பெயர் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.  வால்பிடிகிறார்கள்.... இப்படி சகட்டு மேனிக்கு எல்லோரையும் ஒரு பிடிபிடித்தார்.  வித்தியாதரனுக்கு செய்யப்பட்ட அர்ச்சனையைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

"உதயன் பத்திரிகை சுடரொளி பத்திரிகை எங்களை நாங்கள் ராஜபக்சாவினுடைய ஆட்கள் என்பது போலவும் ராஜபக்சாவுடன் ஒப்பந்தம் செய்துவிடடு வந்து இங்கிருந்து  நாங்கள் செயற்படுவது போன்றும் கதைகளை தொடர்சியாக எழுதிக்கொண்டிருக்கின்றது. அது மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டிருக்கின்றது. பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் உதயன் பத்திரிகையின் இந்த  எழுத்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இது றோவினுடைய ஒரு ஒழுங்கு.  உதயன் பத்திகை கூட றோவினுடைய ஏற்பாட்டில் இருந்து கொண்டு தான் விடுதலைப் புலிகளையும் கேவலப்படுத்தி அதன் கொள்கைகளையும் கேவலப்படுத்தி எங்களையும் கேவலப்படுத்தி எழுதுகின்றது ஏனென்று சொன்னால் நாங்கள் எடுத்துக்கொண்டிருக்கின்ற கொள்கைகளை மக்கள் மத்தியில் இருந்து பிரித்து எடுக்க முடியாமல் இருக்கின்றது. இந்த நேரத்தில் எங்களை கேவலப்படுத்துவதன் மூலம் மக்களை குழப்பிவிட முடியும். மக்கள் இதற்குள் இருந்து தெளிவு பெறுவதற்கு முதல் தேர்தல் முடிந்துவிடும் ஆகவே அப்படியான பிரச்சனை ஒன்று இருக்கிறது.  ஊதயன் பத்திரிகையை பொறுத்தவரை அதனுடைய ஆசிரியர் வித்தியாதரன் திட்டமிட்டு எங்களை கேவலப்படுத்த வேண்டும் என்றுதான் இந்த கட்டுரைகளை எல்லாம் எழுதியிருக்கிறார். இணையத்தளங்களில் அவர் அல்லது அவர் நண்பர்கள் சிலர் எங்களைப்பற்றி எழுத அதனை அப்படியே கொப்பி பண்ணி உதயன் பத்திரினை சுடரொளி பத்திகையிலும் போட்டு கொள்வார்கள். எங்களுடைய அறிக்கைகள் விளம்பரங்களை கூட பிரசுரிப்பதற்கு தயாராகவில்லை. அதாவது தமிழ் தேசிய கட்சியின் துரோகத்தனங்களை அம்பலப்படுத்துகின்ற வகையிலே நாங்கள் எழுதுகின்ற கொடுக்கின்ற விளம்பரங்களை கூட போடமுடியாதென்று யாழ்பாணத்திலுள்ள உதயன் பத்திரினை மறுப்பு தெரிவித்து திருப்பிவிடுகின்றது.  அப்டியான ஒரு நிலைமை தான் காணப்படுகின்றது."

இந்த ஞானம் எல்லாம் பெப்ரவரி 24 மட்டும் வரவில்லை.  அதன் பின்தான் இந்த ஞானம் கஜேந்திரனுக்குப் பிறந்தது. எந்த அரசமரம் என்பதுதான் தெரியவில்லை! 

குரு - தாம் ஒரு சமூகம் சார்ந்த நடுநிலை வானொலி என்று சொல்லிக் கொள்ளும் சிரிஆர் வானொலி எப்படி இந்த சேறுவாரிப் பூசும் திருப்பணியை அனுமதிக்கிறது?

சீடன் - படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் என்பார்களே? அது மாதிரித்தான் சிரிஆர் வானொலி நடந்து கொள்கிறது. கேட்டால் நாம் இரு தரப்புக்  கருத்துக்கும் வாய்ப்புக் கொடுக்கிறோம் என்று இனிமையாகப் பேசுகிறார்கள். ஆனால் நடைமுறையில் தங்கள் தாளத்து ஆடக் கூடியவர்களை காற்றலைக்கு அழைத்து வருகிறார்கள். இப்போதெல்லாம் ஆய்வாளர்கள் நிலவன், துரைரத்தினம் போன்றோரை கைவிட்டு விட்டார்கள். தமிழ்நாட்டில் இருந்து அய்யாநாதன் என்றொரு ஆய்வாளரைக் கொண்டு வருகிறார்கள். அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் கைப்பொம்மை, சம்பந்தன் இந்தியாவின் கைக் கூலி என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி திட்டுகிறார். அதனை உங்களின் இனிமையான ஒருவர் இரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறார். நான் கேட்கிறேன். சம்பந்தரைத் தூற்றுவதற்கு இந்த அய்யாநாதன் யார்? இந்தத் தூற்றலுக்குப் பெயர் ஆய்வா? அவர் ஆய்வாளரா?  அல்லது இங்குள்ள ஆய்வாளர்கள் போல் அவரும் ஒரு அரசியல்வாதியா? இந்த நிந்தனையை  எப்படி சிரிஆர் முகாமை அனுமதிக்கிறது?

குரு - நிலவன் நல்ல ஆய்வாளர் ஆயிற்றே? அவரோடு என்ன தகராறு?

சீடன் - வேறொன்றும் இல்லை. அவர் உண்மை பேசுகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை இன்றைய உலக ஒழுங்கின் பின்னணியில் நியாயப்படுத்திப் பேசுகிறார். அது சிரிஆரின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்து வரவில்லை. எனவே சக்தியான ஒருவர் அவருக்கு ஒரு மின்னஞ்சல் எழுதியுள்ளார். "எமக்குப் பழைய நிலவன்தான் தேவை! அதாவது எம்மோடு ஒத்தூத வேண்டும். நாம் பாடும் பல்லவிக்கு அவர் அனுபல்லவி பாட வேண்டும்! என்பது இதன் பொருள்.

குரு - அதெப்படி தலையிருக்க வால் ஆட முடியும்?

சீடன் - என்னைக் கேட்டால்?  இதற்கான பதிலை சிரிஆர் முகாமைதான் தரவேண்டும்!


குரு - சீடன்

மகள் தாலி அறுந்தாலும் பருவாயில்லை மருமகள் சாகவேண்டும்!

திருமகள்

குரு - சனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அதற்கான தேர்தல் ஏப்ரின் 8 ஆம் நடைபெறப் போகிறது. வரலாறு காணாத வேட்பாளர்கள் களத்தில் குதித்திருக்கிறார்களாமே?

சீடன் - ஆமாம் குருவே! சனாதிபதித் தேர்தல் முடிவு இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் இருப்பதை துல்லியமாக எடுத்துக்காட்டியது. வட - கிழக்கு மட்டுமல்ல மலையகத்தில் நுவரேலியா மாவட்டமும் தேர்தல் திணைக்களத்தின் இணைய தளத்தில் பச்சை நிறம் பூசப்பட்டிருந்தது! இந்த ஆறு மாவட்டங்களும் தமிழர் - முஸ்லிம்கள் செறிந்து வாழும் மாவட்டங்களாகும். கிழக்கில் சேருவில மற்றும் அம்பார தேர்தல் மாவட்டத்தில் மட்டும் இராசபக்சே வென்றிருந்தார். இந்த இரண்டும் கண்மண் தெரியாத சிங்களக் குடியேற்றங்கள் மூலம் உருவாக்கப்பட்ட தேர் மாவட்டங்களாகும்.

குரு - தனி ஆவர்த்தனம் வாசித்த சிவாஜிலிங்கம் படு தோல்வி அடைந்து விட்டாரே?

சீடன் - சிவாஜிலிங்கம் நல்ல இனவுணர்வாளர். தேசியவாதி. ஆனால் அவரிடம் வேகம் இருக்கிற அளவுக்கு விவேகம் இருக்கவில்லை. இந்தியாவில் இருந்து கொண்டு ஆளும் கட்சிகளை ஒரு பிடி பிடித்தால் இந்தியா அதைப்பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா? அதுதான் அவர் துபாயிலிருந்து திருச்சிக்கு வானூர்தியில் சென்று இறங்கிய போது திருப்பி அனுப்பட்டார். ஈழவேந்தன் 2000 இல் நாடுகடத்தப்பட்டதற்கும் இதுதான் காரணம். ஒரு அமைப்பில் இருந்தால் பெரும்பான்மை முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும். குழுமாடு போல நடந்து கொண்டால் மொத்தம் 9662 வாக்குகளைப் பெற்று கட்டுக்காசை இழக்க வேண்டியதுதான்!

குரு - ஆட்சித்தலைவர் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று தேர்தலுக்கு முன்னர் அஇதகா பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார், உலகத் தமிழர் பேரவை போன்றவை வேண்டுகோள் விடுத்திருந்தன. ஆனால் மக்கள் அவர்களைப் புறக்கணித்து அவர்களது முகத்தில் கரி அப்பி விட்டார்களே?

சீடன் - சரியாகச் சொன்னீர்கள். தேர்தலுக்குப் பின்னர் செல்வராசா கஜேந்திரன் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களில் 75 விழுக்காட்டினர் தேர்தலை புறக்கணித்து விட்டார்கள் என ஒரு குழந்தைத்தனமான அறிக்கை விட்டார்! யாழ்ப்பாணத்தில் மொத்த வாக்காளர் தொகை 721,359. வாக்களித்தவர்கள் தொகை 185,132 (விழுக்காடு 25.66). யதார்த்தம் என்னவென்றால் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வாழும் மக்கள் தொகை அண்ணளவாக அய்ந்து இலட்சம் மட்டுமே. வாக்காளர் தொகை இதைவிடக் குறைவே. அப்படியென்றால் 50 விழுக்காட்டினர் வாக்களித்தார்கள் என வைத்துக் கொள்ளலாம்.

குரு - யாழ்ப்பாணக் குடாநாட்டு வாக்காளர்களை உதாரணம் காட்டினால் போதுமா? ஏனைய நான்கு மாவட்டங்களில் விழுந்த வாக்கு விழுக்காட்டையும் சொன்னால்தானே தமிழ்வாக்காளர்கள் எப்படி வாக்களித்தார்கள் என்பது தெரிய வரும்?

சீடன் - சரியாகச் சொன்னீர்கள் குருவே? வன்னி மாவட்டம் 40.33 விழுக்காடு, மட்டக்களப்பு 64.83 விழுக்காடு, அம்பாரை 73.54 விழுக்காடு, திருகோணமலை 68.22 விழுக்காடு, நுவரேலியா 77.19 விழுக்காடு வாக்களித்தார்கள்!

குரு - அப்படியென்றால் தமிழர் தாயகம் என்பது யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் மட்டும் என்பது முட்டாள்த்தனம் எனச் சொல்ல வருகிறாய்? அதை விடுவம் நாடாளுமன்றத் தேர்தல் பற்றி என்ன சொல்கிறாய்?

சீடன் - அதே கதைதான். ஆட்சித்தலைவர் தேர்தலின் முன்பும் அதற்குப் பின்னும் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ்மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து மூக்குடைபட்டவர்கள் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறக்கணிக்குமாறு அதே யாழ்ப்பாணத்தில் நின்று அறிக்கை விடுகிறார்கள்.
குரு - விபரமாகச் சொல்.

சீட்ன் - குண்டுச் சட்டிக்குள் குதிரை விடுவதை வரலாறாகக் கொண்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மறைந்த மாமனிதர் சிவராம் அவர்களது முயற்சியினால் உருவாகிய தமிழ்த் தேசியக் கூட்டணியை உடைத்துக் கொண்டு தனியாகக் களம் இறங்கியிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் கட்சித்தலைவர் அப்பாத்துரை வினாயகமூர்த்தி விலக மறுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலுக்கு நிற்கிறார்.

குரு - காங்கிரஸ் இன்னும் உயிரோடு இருக்கிறதா?

சீடன் - அது பாருங்கோ அந்தக் கட்சி பரம்பரை பரம்பரையாக ஜி.ஜ. பொன்னம்பலம் குடும்பச் சொத்தாக இருந்து வருவதால் அதற்கு இறப்பில்லை! பொதுச் செயலாளர் பதவியை தங்களுக்குள் வைத்துக் கொண்டு தலைவர் பதவியை அலங்கரிக்க தங்கள் குடும்பத்தின் நெருங்கிய உறவினர்களை அமர்த்திவிடுவார்கள். அவர்களில் யாராவது முரண்பட்டால் இன்னொருவரை அந்த நாற்காலியில் உட்கார வைத்துவிடுவார்கள்! இப்போது கூட ஒரு மீன்பிடி அமைச்சர் பதவிக்காக பத்து இலட்சம் மலையகத் தமிழர்களது குடியுரிமை, வாக்குரிமை பறிபோவதற்கு காரணமாக இருந்த அஇதகாங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டால் கட்டுக்காசைப் பறிக்க கொடுக்க வேண்டும் என்ற பயத்தில் புதிதாக ஒரு முகமூடியை போட்டுக்கொண்டு அரங்குக்கு வந்திருக்கிறார்கள்.

குரு - என்ன முகமூடி?

சீடன் - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி! விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சம் என்பார்களே? அதுதான் இது!

குரு - கட்சி என்றால் உறுப்பினர் பட்டியல், செயல்குழு, பொதுக்குழு, ஆண்டு மாநாடு என்றெல்லாம் இருக்க வேண்டுமே?

சீடன் - அப்படியொரு மண்ணாங்கட்டியும் இல்லை. 1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் யாழ்ப்பாணத் தொகுதியை குமார் பொன்னம்பலத்துக்கு ஒதுக்கித் தருமாறு கேட்டது. யாழ்ப்பாணத்திற்குப் பதில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிடுமாறு த.வி. கூட்டணி கேட்டது. அதற்குச் சம்மதிக்காத குமார் பொன்னம்பலம் கோபித்துக் கொண்டு கூட்டணிpயல் இருந்து வெளியேறி யாழ்ப்பாணத்தில் தனித்துப் போட்டியிட்டு கட்டுக் காசை இழந்தார். வட்டுக்கோட்டையில் த.வி. கூட்டணியில் போட்டியிட்ட மு.திருநாவுக்கரசு அமோக வெற்றிபெற்றார்.

குரு - அதே குமார் பொன்னப்பலம் சிங்களப் பேரினவாதிகளால் கொல்லப்பட்ட போது தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவருக்கு மாமனிதர் பட்டம் கொடுத்து மேன்மைப்படுத்தினாரே? அதெப்படி?

சீடன் - நீங்கள் சொல்வது உண்மை குருவே! அவர் பிற்காலத்தில் தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக் கோட்பாடுகளை வலியுறுத்தியதோடு வி.புலிகளை சிங்கத்தின் குகைக்குள் நின்று கொண்டு ஆதரித்துப் பேசினார். எனவே அவருக்கு பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது. அது மட்டுமல்ல கஜேந்திரகுமாரை களம் இறக்கி வி.புலிகள் அவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.

குரு - பொது எதிரியான சிங்கள பேரினவாதத்தையும் அதன் அடிவருடிகளையும் தீவிரமாக எதிர்க்க வேண்டிய கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் என்ன சொல்கிறார்கள்?
சீடன் - அப்படிப் கேளுங்கள் குருவே! அவர்களது இலக்கு ஆளும் கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவைத் தோற்கடிப்பது அல்ல. அவர்களது இலக்கு திருகோணமலையில் சம்பந்தரைத் தோற்கடிக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராசாவையும் சுரேஷ் பிரேமச் சந்திரனையும் தோற்கடிக்க வேண்டும். அதற்காக அங்கு சிங்கள இனவாத கட்சியான அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நாலு கால் பாய்ச்சலில் தாவிய ஒரு குழுவை தாங்கள் நிறுத்தியுள்ளதாக கஜேந்திரன் முழங்கி இருக்கிறார். அதாவது திருமலையில் தமிழ்மக்கள் வாக்குகளைப் பிரித்து தமிழர் பிரதிநித்துவத்துக்கு வேட்டு வைப்பதுதான் திட்டம். அதனை எந்த ஒளிவுமறைவுமின்றிச் சொல்லி இருக்கிறார்.

குரு - மகள் தாலி அறுந்;தாலும் பருவாயில்லை மருமகன் சாகவேண்டும் என்று நினைத்த மாமியார் கதையாக இருக்கிறதே?

சீடன் - அதேதான் குருவே! சிங்களவன் வென்றாலும் பருவாயில்லை சம்பந்தர் தோற்க வேண்டும்! வேடிக்கை என்னவென்றால் பசில் இராசபக்சேயின் இலக்கும் சம்பந்தரைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். யாழ்ப்பாணத்தில் யார் வென்றாலும் தமிழர் பிரதிநித்துவம் குறையாது. ஆனால் திருகோணமலை அப்படியல்ல. 2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழ் வாக்குகள் பிரிந்ததால் ஒரு தமிழ் வேட்பாளரும் வெல்ல முடியவில்லை. இம்முறை அங்கு 14 கட்சிகளும் 17 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. மற்ற மாவட்டங்களிலும் இதே கதைதான். தமிழர்களது வாக்கைப் பிரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலத்தைக் குறைக்க வேண்டும் என்பது மகிந்தாவின் திட்டம். திட்டம் நிறைவேற சுயேட்சைக் குழுக்களுக்குப் பெருந்தொகை பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

குரு - அதாவது தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியும் அய்க்கிய சுதந்தி மக்கள் முன்னணியும் சம்பந்தரைத் தோற்கடிக்க தேர்தல் களத்தில் கைகோர்த்துள்ளன என்று சொல்?

சீடன் - ஆமாம் குருவே! ஆனால் எங்கள் மக்கள் மகா புத்திசாலிகள். விபரம் தெரிந்தவர்கள். எது தங்கம் எது பித்தளை என உரசிப் பார்க்கத் தெரிந்தவர்கள். அதனால்தான் ஆட்சித்தலைவர் தேர்தலில் இராசபக்சேக்கு எதிராக வாக்களித்து அவர் முகத்தில் கரி பூசினார்கள். வெளிநாட்டில் இருந்து கொண்டு சநஅழவந உழவெசழட மூலம் அரசியல் நடத்த ஆசைப்படுவர்கள் முகத்திலும் கரி பூசினவர்கள். இந்தத் தோதலிலும் அவர்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்கள் தீர்ப்புத்தானே மகேஸ்வரன் தீர்ப்பு! (ஏப்ரில் 2010)
 


 

குரு சீடன்

நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது?

குரு நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது?

சீடன் - நாட்டு நடப்பு நல்லாகத்தான் இருக்கிறது. முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின்னரும் மக்கள் தமிழ்த் தேசியத்தையே நேசிக்கிறார்கள் என்பது நடந்து முடிந்த ஆட்சித்தலைவர் தேர்தல் முடிவுகள் துல்லியமாக எடுத்துக் காட்டிவிட்டது.

குரு ஆட்சித்தலைவர் தேர்தலில் ஒருவர் போட்டியிட்டே தீருவேன். எதுவரினும் அஞ்சேன் துஞ்சேன் என்று மார்தட்டினாரே? அவருக்கு என்ன நடந்தது?

சீடன் - முட்டாள் நெருப்புச் சுடும் என்பதை கைவைத்துப் பார்த்துத்தான் தெரிந்து கொள்கிறான். ஆனால் புத்திசாலி மற்றவர்களது அனுபவத்தைக் கொண்டு நெருப்புச் சுடும் என்பதைத் தெரிந்து கொள்கிறான். தனியே ஆவர்த்தனம் வாசித்த சிவாஜிலிங்கம் தனிமரம் தோப்பாகாது என்ற உண்மையை கட்டுக்காசை இழந்துதான் படித்துள்ளார் என நினைக்கிறேன்.

குரு வி.புலிகளிடம் சிக்கியுள்ள தமிழ்மக்களை விடுவிக்கவே "மனிதாபிமான நடவடிக்கை" மேற்கொள்ளப்பட்டது என்று மார்தட்டிய மகிந்தர் வட-கிழக்கில் மண்கவ்வியுள்ளாரே?

சீடன் - மகிந்தர் அப்படித்தான் நம்பினார். தனது கைக் கூலிகளான தேவானந்தா, கருணா, பிள்ளையான், சித்தார்த்தன் தனக்கு வெற்றி தேடித்தருவார்கள் என நம்பி மகிந்தர் ஏமாந்து போனார்.

குரு தேர்தலைப்; புறக்கணிக்க வேண்டும். வட கிழக்கு நீங்கலாக ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்கள் தங்கள் வாக்கை விக்கிரமபாகு கருணரத்தினாவுக்குப் போட வேண்டும் என்று கோட் சூட் போட்ட புலம்பெயர் தமிழ்த்தலைவர்கள் அறிக்கைகள் விட்டார்களே?

சீடன் - தமிழ்மக்கள் அதனைப் புறக்கணித்துவிட்டார்கள். நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் இந்தத் தமிழ்த் தலைவர்களுக்கு சாதாரண தமிழ்மக்களது நாடித் துடிப்புத் தெரிந்திருக்கவில்லை. அவர்களது உணர்வு புரியவில்லை.

குரு அவர்கள் சொல்லைக் கேட்டுத் தேர்தலைப் புறக்கணித்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

சீடன் - என்ன நடந்திருக்குமா? இலங்கை வரைபடத்தில் வடக்கும் - கிழக்கும் நீல நிறமாகப் போயிருக்கும். அப்டியில்லாமல் அரச தேர்தல் ஆணையமே இலங்கை வரைபடத்தில் வட-கிழக்கை பச்சை நிறமாகக் காட்டியது!

குரு - இலங்கையின் மத்தியில் உள்ள நுவரேலியா கூட பச்சை நிறம் பூசப்பட்டிருக்கிறதே?

சீடன் - அங்கும் மகிந்தருக்குப் படுதோல்வி. அவருக்கு முண்டு கொடுத்த ஆறுமுகம் தொண்டமானுக்கும் தோட்டத் தொழிலாளர்கள் பட்டை நாமம் போட்டிருக்கிறார்கள். குருவே ஒரு உண்மை தெரிகிறது. அது என்னவென்றால் தமிழ்வாக்காளர்கள் எங்கிருந்தாலும் - வடக்குக் கிழக்கு, மத்திய மாகாணம், கொழும்பு மாவட்டம் - அவர்கள் ஒரே மாதிரிச் சிந்திக்கிறார்கள். மகிந்தருக்கு எதிராகவும் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாகவும் பலத்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தங்கள் வாக்குகளைத் துணிச்சலோடு போட்டார்கள்! யாழ்ப்பாணத்தில் டக்லஸ் வழங்கிய மது, பதவி, வேலை, பணம், மிதிவண்டிகள், கழிவறைகள், கோயில் புனருத்தாரணம் என எதற்கும் விலைபோகாமல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.

குரு - இலங்கைத் தீவில் இரண்டு இனங்கள், இரண்டு தேசங்கள் இருப்பது மீண்டும் பன்னாட்டுச் சமூகத்திற்கு எண்பிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு வலுவான செய்தி சொல்லப்பட்டிருக்கிறது என்கிறாய்?

சீடன் - ஆமாம் குருவே! . இரண்டு கொலைஞர்களில் யார் நல்ல கொலைஞன்? இரண்டும் பிசாசுகள் இரண்டும் வேண்டாம என்று கட்டுரை எழுதியவர்கள் இப்போது தேர்தல் முடிவு வெளியாகிய பின்னர் "இலங்கைக்குள் இரு நாடுகள்" "நாங்கள் வேறு நாடய்யா! நீங்கள் வேறு நாடய்யா? நிலத்தைப் பிரித்தவர்களால் தமிழர் மனதைப் பிரிக்க முடியவில்லை என்றெல்லாம் தலைப்புச் செய்தி போட்டும் இலங்கைப் படத்தில் தமிழீழத்தை பச்சை நிறத்திலும் சிங்களத்தை நீல நிறத்திலும் போட்டும் தங்கள் மகிழ்ச்சியைக் காட்டியுள்ளார்கள்.

குரு - இது திருமணம் செய்து வைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு பேரன் பிறந்ததும் அள்ளிவாரி கண்ணே, மணியே, கற்கண்டே, என் செல்வமே என்று கொஞ்சி மகிழ்வது போல இருக்கிறது என்று சொல்? அல்லது இரவல் புடவையில் இது நல்ல கொய்யகம் என்பது மாதிரி?

சீடன் - அதுதான் சொல்வது ஒன்றில் ஈணத்தெரிய வேண்டும் அல்லது நக்கத் தெரிய வேண்டும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் ஒருவரால் எந்தப் பயனும் சமூகத்திற்கு இல்லை!

குரு வேறென்ன புதினம்?

சீடன் - கடந்த காலங்களில் தமிழ்மொழிக் கிழமை கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு தமிழ் மரபுத் திங்கள் என்ற பெயரில் தைமாதம் முழுதும் நிகழ்ச்சிகளை நடத்தி தைக் கடைசி நாளை பெரிய விழாவாக இளையோர் கொண்டாடினார்கள்.

குரு சனம் எப்படி?

சீடன் - பருவாயில்லை. ஆனால் மக்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். குறிப்பாக நடன ஆசிரியர்களும் அவர்களது மாணவர்களும் தங்கள் நடனம் முடிந்தவுடன் மண்டபத்தை விட்டு ஒரே ஒட்டம். சும்மா சொல்லக் கூடாது விழா ஏற்பாட்டாளர்கள் ரொறன்ரோவில் உள்ள அத்தனை நடனப்பள்ளிகளையும் மேடையேற வைத்தார்கள்!

குரு கனடாவில் தமிழ் வளருது என்று சொல்?

சீடன் - அப்படியும் சொல்லிவிட முடியாது. மூன்று பிள்ளைகளில் ஒரு பிள்ளைதான் தமிழ் படிக்குது. மிச்சம் இரண்டு பிள்ளைகள் தமிழ் படிப்பதில்லை. விழா தொடர்பாக வெளியிட்ட தமிழ் மரபுத் திங்கள் என்ற கையேடு சுத்தமாக ஆங்கிலத்தில் இருந்தது. அறிவிப்புக்கள் கூட ஆங்கிலத்திலும் இருந்தது. தமிழ்விழாக் கொண்டாடினாலும் சரி, வேறெந்த விழா கொண்டாடினாலும் சரி நம்மாக்கள் ஆங்கிலத்தை விட மாட்டார்கள்!

குரு பட்டிமன்றம் நடந்ததாமே?

சீடன் - அதை ஏன் கேட்கிறீர்கள். தமிழ் மரபுத் திங்களுக்கு எள்ளளவேனும் பொருத்தமில்லாத தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது.

குரு என்ன தலைப்பு?

சீடன் - தமிழ்மக்களின் அடையாளத்தைப் பேணுவதில் தமிழ்மொழி இன்றியமையாதது? இது ஒரு பாமரத்தனமான கேள்வி. தமிழ்மொழி அல்ல என்று பேசவந்தவர்கள் முட்டாள்த்தனமான வாதங்களை முன்வைத்தார்கள். சீக்கியனது குடுமியையும் முஸ்லிம்களது தொப்பியையும் மேற்கோள் காட்டி மொழி அல்ல இன்றியமையாதது என வாதிட்டார்கள். சீக்கியர், முஸ்லிம்கள், யுதர்கள் இவர்களது அடையாளம் மதம். மொழி அல்ல. ஆனால் தமிழர் கதை வேறு. அவர்களது அடையாளம் மொழிதான்.

குரு - தமிழ்மக்களின் அடையாளத்தைப் பேணுவதில் தமிழ்மொழி இன்றியமையாதது? என்ற தலைப்புக்குப் பதில் புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? அல்லது மெல்லச் சாகுமா? என்று போட்டிருக்கலாம்.

சீடன் - ஆமாம். நல்ல காலம் நடுவர் தமிழ்மக்களின் அடையாளத்தைப் பேணுவதில் தமிழ்மொழி இன்றியமையாதது என்று சொல்லாடல் புரிந்த கன்னை வென்றதாக அறிவித்து நிலமையை சரிசெய்து கொண்டார். இன்னொரு வேடிக்கை. அவ்வையார் எழுதிய ஆத்திசூடிப் புத்தகம் வீட்டில் வைத்திருப்பவர்கள் கையை உயர்த்துங்கள் என்று கேடடபோது........

குரு பல கைகள் உயர்ந்திருக்குமே?

சீடன் - அப்படித்தான் நான் நினைத்தேன். ஆனால் ஒரு கையும் மேல் எழவில்லை. பிள்ளைகளுக்கு பட்டும் பொன்னும் போட்டு அழகு பார்க்கும் பெற்றோர்கள் சின்னப் பிள்ளைகளுக்காகவே எழுதப்பட்ட ஒழுக்க நூல்களான ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை போன்ற நூல்களை வாங்கிக் கொடுப்பதில்லை. சொல்லிக் கொடுப்பதும் இல்லை!

குரு ஒழுக்கம் இல்லாத வீரம், கல்வி, செல்வம் இவற்றால் பயனில்லை. அதனால்தான் வள்ளுவர் ஒழுக்கம் விழுப்பம் தருவதால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்றார். சரி போகட்டும். இது முதல் முயற்சிதானே? அடுத்த ஆண்டு தமிழ் மரபத் திங்களை குறைகள் கழைந்து நிறைவாகக் கொண்டாடுவார்கள் என எதிர்பார்ப்போம்.  (February 05, 2010)
 


ஆசிரியர்
உலகத்தமிழர்

வணக்கம். இரண்டு கொலைஞர்களில் யார் நல்ல கொலைஞன், இரண்டும் பிசாசுகள் இரண்டும் வேண்டாம், சரத் பொன்சேகா  வேண்டாம் என்ற கருத்துப்பட எழுதிய கட்டுரைகளை வெளியிட்ட உலகத்தமிழர் இப்போது தேர்தல்  முடிவு வெளியாகிய பின்னர் "இலங்கைக்குள் இரு நாடுகள்" தமிழீழம் சிங்கள தேசம்" தாயகத் தமிழரால் மகிந்த நிராகரிப்பு, நிலத்தைப் பிரித்தவர்களால் தமிழர் மனதைப் பிரிக்க முடியவில்லை என்றெல்லாம் தலைப்புச் செய்தி போட்டும் இலங்கைப் படத்தில் தமிழீழத்தை பச்சை நிறத்திலும் சிங்களத்தை நீல நிறத்திலும் போட்டு மகிழ்வது என்ன நியாயம்? 

இரா. சம்பந்தனுக்கு முதல் வாக்கையும் சரத்பொன்சேகாவுக்கு விருப்பு வாக்கையும்  போடுங்கள் என்ற எனது கட்டுரையை வெளியிட்டால்  'அரசியல் கற்பு கெட்டுவிடும்' என்பதற்காக நிராகரித்துவிட்டு இப்போது தேர்தல் முடிவைப் பார்த்து மகிழ்ச்சி தெரிவிப்பது என்ன அறம்? 

திருமணம் செய்து வைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு பேரன் பிறந்ததும் அள்ளிவாரி கண்ணே, மணியே, கற்கண்டே, செல்வமே  என்று கொஞ்சி மகிழ்வது என்ன நியாயம்? இரவல் புடவையில் இது நல்ல கொய்யகம் என்பது மாதிரி இல்லையா?  

தமிழ்மக்கள் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்காது தேர்தலைப் புறக்கணித்திருந்தால் அல்லது மதில்மேல் பூனையாக தமிழ்மக்கள் இருந்திருந்தால் இலங்கை முழுவதுக்கும் நீல நிறம்  அல்லாவா பூசப்பட்டிருக்கும்? அது உலகளாவிய அளவில் எப்படியான அரசியல், இராசதந்திர  பாதிப்பைத் தமிழர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும?  

ஒன்றில் ஈணத்தெரிய வேண்டும் அல்லது நக்கத் தெரிய வேண்டும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் ஒருவரால் எந்தப் பயனும் இல்லை!

  

நக்கீரன்

(ஏப்ரில் 2010)


 

(1) இலங்கையில் நடைபெறவுள்ள ஐனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என எடுத்துள்ள முடிவு பற்றியும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரட்டை வேடம் பற்றியும் எனது கருத்துக்களை முன்வைக்க வேண்டிய கட்டாயத் தேவை ஏற்பட்டுள்ளது.

நான் முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஒரு பகிரங்க மடல் எழுதியிருந்தேன். அதை அனைவரும் வாசித்திருப்பீர்கள் என நம்புகின்றேன். தவிர்க்க முடியாத காரணத்தினால் அடிக்கடி என்னால் கருத்துக்களை வெளிக்கொணர முடியவில்லை. காரணம் தற்போதைய சூழ்நிலையில் மறைவிட வாழ்க்கையும் இக்கட்டான சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதால் தாயகத்தில் ஒரு பகுதியில் இருந்து கொண்டே செயற்பட வேண்டி உள்ளது.

நான் மாத்திரமின்றி என்னைப்போன்ற பலர் இவ்வாறான நிலையில் மறைந்திருந்தும் மக்களோடு மக்களாக இருந்தும் செயற்பட வேண்டியுள்ளது. எமது விடுதலை என்ற வேட்கை இன்னும் எம்மை விட்டு அகல வில்லை. வீழ்ந்துவிட்டோம் ஆனால் மீண்டும் எழுவோம் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிக்கின்றோம்.

இனி விடயத்திற்கு வருவோம். எதிர்வரும் இலங்கையின் ஐனாதிபதி தேர்தல் தொடர்பாக கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு மக்களுக்கு திருப்தி கரமாக இருக்கின்றதோ இல்லையோ ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வசதிக்கும் தமது சொந்த தேவைக்கும் ஏற்ற வகையில் முடிவுகளை எடுத்துள்ளனர். இரு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் தங்களது சொந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டே செயற்பட்டுள்ளனர். அந்த இருவர் பற்றி பின்னர் பார்ப்போம்.

முதலில் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐயா சம்பந்தன் அவர்களின் வழிகாட்டலில் அவரின் பின்னால் சென்றுள்ளனர். சம்பந்தன் ஐயா ஆட்சி மாற்றம் வேண்டும் என்றும் அதற்காக சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்று கூறியுள்ளார். மகிந்தவின் ஆட்சி முடிவுக்கு வரவேண்டுமென கூறுகின்றார். ஆனால் அது உண்மைதான் இத்தனை கொடுமைகளைச் செய்த மகிந்தவின் ஆட்சியை இல்லாமல் செய்வதே நல்லது. ஆனால் அவர் சரத்பொன்சேகா நல்லவர் மாதிரியும் அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என நம்புகின்றாரா? அவர் துணிந்து நின்று மகிந்தவின் ஆட்சியை கலைக்க வேண்டுமென கூறும் அளவிற்கு அவருக்கு தனித்துவமான துணிவு கிடையாது. அவர் வாய் வீரம் பேசினாலும் உள்ளுர பயந்தவர். நான் வன்னியில் வைத்து அவரைச் சந்தித்தபோதும் அவருடன் கதைத்தபோதும் இன்னும் சில எம்.பிக்களின் கதைகளை வைத்தும் அவரின் பல பக்கங்களை அறிந்து கொண்டவன். இது எமக்கு எல்லோருக்கும் அப்போதே தெரிந்திருந்தது.

பதில் - நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியாது. முன்னாள் போராளி என நினைக்கிறேன். ஆனால் இப்போது விரக்தி காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்கோ எல்லோர் மீதும் சேறு பூசுகிறீர்கள். உள்நோக்கம் கற்பிக்கிறீர்கள். எண்பிக்க முடியாத குற்றச்சாட்டுக்களை அடுக்கிறீர்கள். நீங்கள் ஒருவரே உத்தமர், சத்தியவான் என்று நினைக்கிறீர்கள். மகிந்த இராசபக்சேயின் ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என சம்பந்தர் கூறுகிறார் அது உண்மைதான் என்கிறீர்கள். அப்படியென்றால் சரத் பொன்சேகாவுக்கு வாக்குப் போடாமல் அது சாத்தியமாகுமா? ஆட்சிமாற்றமும் வேண்டும் சரத் பொன்சேகாவும் வேண்டாம் என்பதில் உள்ள முரண்பாட்டை நீங்கள் கவனிக்கத் தவறிவிட்டீர்கள். அதாவது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றவன் கதைமாதிரி.

(2) எனவே மகிந்தவை எதிர்ப்பது என்பது அவரால் மாத்திரம் எடுத்த முடிவு அல்ல. அவருக்கு பின்னால் சில சக்திகள் உள்ளன. பொன்சேக்கா ஐனாதிபதியாக வரவேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பம். இதற்கு இந்தியாவும் எதிர்ப்பல்ல. எனவே இந்த வெளிநாடுகளின் துணையுடன்தான் அவர் இந்த முடிவுக்கு வந்தார். இவருடன் சுரேஸ் பிறேமச்சந்திரன் மாவை ஐயா ஆகியோருக்கும் தொடர்புள்ளது. இவர்கள் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்தனர். இதற்காக பல கோடி ரூபா டொலர்களும் கைமாறியுள்ளது. இந்த விசயம் புரியாமல் ஏதோ சம்பந்தன் ஐயா மக்களுக்காக சரத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார் என நம்பி அவரின் பின்னால் சில எம்.பி;க்கள் சென்றுள்ளனர்.

பதில் - இதெல்லாம் உமது கற்பனை அல்லது பிரேமை. முன்பு சம்பந்தர் இந்தியாவின் கைப்பொம்மை என்றீர்கள் இப்போது அவர் அமெரிக்காவின் கைப் பொம்மை என்றும் சொல்கிறீர்கள். நான் அறிந்தவரை இந்தியா தனது பொருண்மிய - பூகோள நலன்காரணமாக இராசபக்சே தேர்தலில் வெற்றி பெற்று வருவதை விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. எனவே சம்பந்தரின் முடிவு அவர் மற்றவர்கள் குற்றம்சாட்டுவது போல் இந்தியாவின் கைப்பொம்மையாக இருக்க முடியாது. இந்த முடிவுக்குக் காரணம் "இதற்காக பல கோடி ரூபா டொலர்களும் கைமாறியுள்ளது" என எந்த அடிப்படையும் இல்லாத குற்றச்சாட்டை முன்வைக்கிறீர்கள். இதையிட்டு நீங்கள் வெட்கப்பட வேண்டும். கோடி ரூபா டொலர் அல்ல ஒரு ரூபா டொலர் கைமாறியதாக உங்களால் எண்பிக்க முடியுமா? யார் கொடுத்தார்கள்? எந்த வைப்பகம் மூலம் கொடுக்கப்பட்டது? என்பதை அருள் கூர்ந்து சொல்ல முடியுமா? இப்படியான அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதையிட்டு நீங்கள் வெட்கப்பட வேண்டும்.

(3) இதில் தங்கேஸ்வரி, அரியநேந்திரன், கனகசபை போன்ற எம்.பிக்களுக்கு அரசியல் தெரியாது. இவர்கள் தற்செயலாக கருணாவின் செல்வாக்குடன் வந்தவர்கள். தற்போதும் அவருக்கு நன்றிக் கடனாக உள்ளனர். இதை வெளிப்படையாகவே கனகசபை ஐயா கூறியுள்ளார். இவர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிடுவது என்றால் சம்பந்தரின் பின்னால் சென்றே ஆகவேண்டும். இதுதான் இவர்கள் இந்த முடிவுக்கு வந்தனர். இவர்களுக்கு எங்கே மக்களை பற்றிய சிந்தனை உள்ளது.

பதில் - அப்படியே இருக்கட்டும். அரசியல் தெரிந்தவர்கள் யார் யார் என்பதை சொல்லமுடியுமா?

(4) சிறில் அண்ணை தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்தவர். இதனால் சம்பந்தரின் விசுவாசி அவரின் பின்னால் செல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது என்ற பயமும் இவருக்கு உண்டு. இவரைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அவர் எம்.பியாக முன்பு பல தடவைகள் சந்தித்துள்ளேன். சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரி வாழ பழகிக் கொண்டவர். எப்படியாவது வாழ்ந்து கொள்வார். ஆனந்தன் எம்.பியும் இவரைப்போன்றவர்தான்.

பதில் - இப்படி எதற்கெடுத்தாலும் உள்நோக்கம் கண்டு பிடித்து அவதூறு சொல்வது அழகல்ல. அது உங்கள் விரக்தியை தீர்க்கமட்டுமே உதவும்.

(5) இனி இந்த தேர்தலில் இரண்டு பேரையும் ஆதரிக்கக் கூடாது என்று கூறியவர்கள் என்ன காரணத்திற்காக அப்படி முடிவெடுத்தார்கள் என்றும் பார்க்க வேண்டும். இந்த முடிவை எடுத்தவர்கள் மட்டும் சளைத்தவர்களா.

இதில் சிறிகாந்தா மற்றும் கிசோர் போன்றோர் ராஐபக்சவின் செல்லப்பிள்ளைகள். அவர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று விரும்புபவர்கள். எனவேதான் ஆட்சி மாற்றம் பற்றி பேசாமல் இரண்டு பிரதான வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை என கூறியுள்ளனர். இவ்வாறு கூறினால் கட்சி எடுத்த முடிவுக்கும் தலை சாய்த்துவிட்டு ராஐசக்சவையும் சமாளித்துச் செல்லலாம். அல்லது இருவரையும் ஆதரிப்பதில்லை என கூறிவிட்டு ராஐபக்சவை மறைமுகமாக ஆதரிக்க திட்டமிட்டிருக்கலாம். இதன் சூத்திரம் அவர்களுக்கும் இறைவனுக்கும் தான் தெரியும்.

பதில் - நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். சிறிகாந்தா பட்டிக்குள் இருக்க மறுக்கும் கறுப்பு ஆடு என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது.

(6) சிறிகாந்தா பெரும் தொகை பணத்தை ராஐபக்சவிடம் பெற்றுவிட்டே சிவாஜிலிங்கத்தை தேர்தலில் இறக்கியதாகவும் ஒரு நண்பர் எனக்கு சொன்னார். இதிலும் பிழை இருப்பதாகத் தெரியவில்லை.

பதில் - இது கதைதான். நீங்களே சொல்லி விட்டீர்கள்.

(7) இனி இரண்டு வேட்பாளர்களையும் ஆதரிக்கக் கூடாது என விரும்பும் கஜேந்திரன், செல்வன் அடைக்கலநாதன், பத்மினி சிதம்பரநாதன், சிவாஐpலிங்கம் ஆகியோர் பற்றி பார்க்க வேண்டும். இவர்கள் அனைவரும் நீண்டகாலம் வெளிநாடுகளில் இருந்தவர்கள். அங்கு பல கூட்டங்களிலும் பேசியிருந்தவர்கள். இவர்களுக்கு இங்கு வந்தால் பெரும் ஆபத்தும் காத்திருந்தது. எனினும் வன்னியில் போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது இவர்கள் எதுபற்றியும் வாய் திறக்கவில்லை.

முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்குப் பின் எல்லாமே முடிவடைந்துவிட்டது என்று நினைத்துக் கொண்ட பத்மினி அக்கா முதன்முதலாக இங்கு வந்து சேர்ந்தார். பின் அவர் ஐனாதிபதி ராஐபக்சவை நேரடியாகச் சந்தித்து கை குலுக்கிக் கொண்டார். அவரின் கையைக் குலுக்குவதற்கு அவரால் எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை. அரசியலில் நீண்ட அனுபவமோ போராட்டத்தில் எந்தவித பற்றோ பக்குவமோ இல்லாத இவரை அரசியலுக்குக் கொண்டுவந்ததே நாம் விட்ட தவறுதான். இவரை தேர்தலுக்கு வேட்பாளராக போட்டபோதே எமக்கு சந்தேகம் இருந்தது. அப்போது நாங்கள் சிலர் இது பற்றி பொறுப்பாளர்களுடன் விவாதித்திருந்தோம். இவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பல சலுகைகள் வழங்கப்பட்டன. மிக முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அதனால் பெரியளவில் எமது போராட்டத்திற்கோ சமுகத்திற்கோ நன்மை கிடைக்கவில்லை. ஆனால் அவரின் குடும்பத்திற்கே நன்மை கிடைத்தது.

இவர் ஐனாதிபதியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இங்கு வந்ததும் அவருக்கு ஆதரவாகவே செயற்பட வெண்டியிருந்தால் இரு வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

பதில் - உடன்பாடு செய்து கொண்டார் என்பது நீங்கள் வீசும் அடிப்படையில்லாத குற்றச்சாட்டு.

(8) சிவாஐpலிங்கம், செல்வன் அடைக்கலநாதன், கஜேந்திரன் ஆகியோரும் பசில் ராஐபக்சே மூலம் ஐனாதிபதியுடன் கதைத்து ஒப்பந்தம் செய்தே இங்கு வந்து சேர்ந்தனர். இவர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு நாங்கள் நாட்டுக்குச் சென்றால் எங்களை கொன்றுவிடுவார்கள் சிறையில் அடைத்துவிடுவார்கள் என்று வீராப்பு பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்கள் இங்கு வந்ததும் நடந்தது என்ன? எந்தவித விசாரிப்போ விசாரணைகளோ தொல்லைகளோ இல்லாமல் வரவேற்புக் கிடைத்தது. செல்வன் அடைக்கலநாதனை விசாரணை செய்தது கூட சிறிகாந்தாவினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நாடாகமாகத்தான் உள்ளது.

இவர்கள் எக்காரணம் கொண்டும் ஆட்சி மாற்றம் வேண்டுமென கேட்கமாட்டார்கள். அதற்காக செயற்படவும் மாட்டார்கள். அப்படி ஏதும் செய்தால் அல்லது கதைத்தால் இவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதாக பசில் உள்ளே போட்டுவிடுவார். இதனால் தங்களையும் காப்பாற்றி தங்கள் கதிரையையும் காப்பாற்றிக் கொள்வதென்றால் இரு பிரதான வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை என அறிவிப்பது பின்னர் பசில் ஊடாக ஐனாதிபதிக்கு விசயத்தை விளங்கப்படுத்தி அவருக்கு மறைமுகமான ஆதரவை வழங்குவது என்ற திட்டமே இவர்களிடம் உள்ளது.

பதில் - பதில் - உடன்பாடுகள் செய்து கொண்டார் என்பது நீங்கள் வீசும் அடிப்படையில்லாத குற்றச்சாட்டு. மற்றவர்களைத் தூற்றுவதே உங்கள் முழு நேர வேலையாக இருக்கிறது.

(9) இவர்கள் நாங்கள் பலமாக இருந்தபோது எமது பக்கமும் தற்போது சிங்கள பேரினவாதத்தின் பக்கமுமாக இருப்பதைப் பார்க்கும்போது தமிழ் மக்களின் தலைவிதியை நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

பதில் - கவலையை விடுங்கள். மக்கள் முடிவெடுக்கட்டும்.

(10) சிங்கள நாட்டின் ஐனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. ஒவ்வொரு வேட்பாளர்களும் தாம் வெற்றி பெறுவதற்காக எமது தயவையே நாடுவார்கள். வெற்றி பெற்ற பின்பு எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். இதுதான் வரலாறு இதற்காக நாம் எமது இனத்தை விற்க முடியுமா? தமிழினத்தின் இரத்தத்தில் தோய்ந்த சரத் பொன்சேக்காவின் கரத்தை பலப்படுத்துமாறு இவர்கள் எந்த முகத்துடன் தமிழ் மக்களிடம் செல்ல உள்ளனர்.

பதில் - எத்தனை காலத்துக்குப் பழைய காலத்திலேயே நீங்கள் பயணிக்கப் போகிறீர்கள்? ஒரு மக்களாட்சி முறைமை - அது எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் - மக்கள் தங்கள் துருப்புச் சீட்டான வாக்குரிமையை பயன்படுத்த வேணடும். இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஆட்சித்தலைவரின் அதிகாரம் வவுனியாவோடு நின்றுவிடாது. நின்றால் அந்தத் தேர்தலைப் பற்றி நாம் கவலைப்படாது இருக்கலாம். ஆனால் யதார்த்தம் அதுவல்ல.

(11) கNஐந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென கூறியிருந்தார். அவர் தனது கட்சி எடுத்த முடியிலேயே நின்று கொண்டார். அவரைப் பொறுத்த வரையில் கொள்கையுடன் செயற்பட்டார் என்றே கூறவேண்டும். ஏனெனில் அவர் ஏனையவர்களைப் போல் எந்த பக்கத்திற்கும் அடிபணிய வேண்டிய தேவை இல்லை.

பதில் - மெத்த நல்லது.

(12) அடுத்து சிறையில் அடைபட்டிருக்கும் கனகரெத்திம் ஐயா. இவர் தேசியத்தில் ஊறிப்போன ஒருவர். அவர் இன்று நேற்று அல்ல நான் கட்ட காலத்தில் இருந்தே போராட்டத்திற்கென தன்னை அர்ப்பணித்தவர். முள்ளிவாய்கால்வரை தனது மக்களோடு மக்களாக இருந்து தற்போது அதற்காக சிறையில் அடைபட்டுள்ளார். அவர் நினைத்திருந்தால் சண்டை தொடங்கியவுடன் தனது குடும்பத்துடன் வெளியேறி இருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்தது கிடையாது. இறுதிவரை அந்த மண்ணிலேயே இருந்தவர். இவரைப்போல் எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் நடந்தது கிடையாது.

பதில் - சதாசிவம் கனகரத்தினம் சிறையில் வாடுவதற்கு மகிந்த இராசபச்சே தான் காரணம். ஆட்சியை மாற்றினால்தான் அவரைச் சிறை மீட்கலாம்.

(13) அடுத்து தற்போதும் வெளிநாட்டில் தங்கியுள்ள nஐயானந்தமூர்த்தி அண்ணையை எடுத்துக் கொண்டால் அவர் இரண்டு பிரதான வேட்பாளர்களையும் எதிர்த்திருந்தார். அவரைப்பொறுத்த வரையில் அவர் ராஐபச்சாவிடமோ பொன்சகாவிடமோ மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இரண்டு பேரையும் அவர் ஆதரிக்கவில்லை. இவரும் எமது இலட்சியப் போராட்டத்திற்காகவும் தேசியத்திற்காகவும் நிறையவே அர்ப்பணிப்புகளைச் செய்தவர். இதனால் இன்று இங்கு வரமுடியாத நிலையில் உள்ளவர். இன்னும் இவரைப் பற்றிச் கூறுவதனால் 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிந்தவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவு படும் அபாயம் ஏற்பட்ட போது அதை மிகவும் சாதுரியமாக எதிர்கொண்டு முறியடித்தவர். மட்டக்களப்பு எம்.பிக்கள் கருணாவின் பக்கம் இருந்தபோது அதை உடைத்துக் கொண்டு வெளியேறியவர். அன்றிலிருந்து இன்று வரை தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டு வரும் ஒருவர்.

பதில் - நீங்கள் சொல்வது எனக்கும் உடன்பாடுதான்.

(14) எனவே இந்த நிலையில் தமிழ் மக்களின் விடிவுக்காக