குரு - சீடன்

 

பாலுக்குப் பாலகன் வேண்டி அழும்போது .....?

 

திருமகள்

 

சீடன் - தமிழினத்தின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பது இந்து மதந்தான்.  தமிழினத்தின் முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் தடையாக இருப்பது இந்து மதந்தான். இந்து மதம் மூடநம்பிக்கையைப் பரப்புகிறது.

 

குரு - இல்லையே! சைவம் இன்றேல் தமிழ் இல்லை, தமிழ் இன்றேல் சைவம் இல்லை என்றல்லவா சைவர்கள் முழங்குகிறார்கள்?

 

சீடன் - ஆமாம் அப்படித்தான் முழங்குகிறார்கள்.  அந்த முழக்கம் தேவார காலத்துக்குப் பொருத்தமாக இருக்கலாம்.  இன்றைய காலத்துக்கு பொருத்தமாக இல்லை.

 

குரு - சற்று விளக்கமாகச் சொல்?

 

சீடன் - முதலில் மூடநம்பிக்கையை எடுத்துக் கொள்வோம். அருச்சனை, அபிசேகம், தேர், தீர்த்தம், திருவிழா,  ஓமம் எல்லாமே மூடநம்பிக்கைதான். ஆரியர்கள் நாகரிகம் அடையாத காலத்தில் மனிதர்களைப் படைத்து, அழித்து, காக்கிற தெய்வம் ஒன்று இருக்கிறது.  அவருக்கு அருச்சனை, அபிசேகம், தேர், தீர்த்தம், திருவிழா,  ஓமம் எனப் பல சடங்குகளைச் செய்தால் மனிதருக்கு நன்மை உண்டாகும் புண்ணியம் கிடைக்கும் சொர்க்கத்துக்குப் போகலாம் என நினைத்தார்கள். தெய்வம்  கோபிப்பதால்தான் இடி, மின்னல், நிலநடுக்கம், எரிமலை, புயல், வெள்ளம் எல்லாம் இடம்பெறுகின்றன. எனவே தெய்வத்தைத்  திருப்திப்படுத்த பொங்கல், பூசை எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். வேதகாலத்தில மழை/நீர் - வருணன்,  மின்னல் - இந்திரன், நெருப்பு - அக்னி, காற்று - வாயு, மண் - பூமாதேவி. சந்திரன், சூரியன் ஆகியவை தெய்வங்களாக வணங்கப்பட்டன.  நால் வேதங்களில் உருத்ரன்,விஷ்ணு, பிரம்மா எல்லாம் கிடையாது.  உருத்திரன், விஷ்ணு, பிரம்மா இடைச் செருகல்கள். வேதகாலத்தில் சிவன் சிசுனதேவர் என்று பழிக்கப்பட்டார். வேதகாலத்தில் வேள்வி செய்வதே வழிபாடாக இருந்தது. இந்த வேள்வியில் விலங்குகள் பலிகொடுக்கப்பட்டன. அதன் மாமிசத்தை வேதியர் உண்டனர்.

 

குரு - இந்து மதத்தில் இரண்டு பிரிவுகள் இருக்கிறதாகச் சொல்கிறார்களே?

 

சீடன் - இரண்டல்ல.  பல பிரிவுகள் காணப்படுகின்றன.  அவற்றை ஆதி சங்கரர் என்பவர்தான் தொன்று தொட்டு நிலவி வந்த சிவனை வழிபடும் சைவம், திருமாலை வழிபடும் வைணவம், சத்தியை (சக்தியை_) வழிபடும் சாக்தம், வினாயகரை வழிபடும் காணபத்யம், முருகனை வழிபடும் கௌமாரம், சூரியனை வழிபடும் சௌரம் முதலியவற்றை முறைப் படுத்தி ஆறு சமயங்களாக (ஷண்மதங்கள்) வகுத்தளித்தார். அவர் குமுகத்திற்கு (சமூகத்திற்கு) ஒவ்வாத ஆதாரமற்ற, தேவையற்ற சமயப் பழக்க வழக்கங்களாக கருதியவைகளைச் சாடவும் செய்தார். சங்கரர் இயற்றிய நூல்கள் பிரகரணக் கிரந்தங்கள் எனப்படும். அவையாவன:
1. விவேகசூடாமணி
2. அபரேஷானுபூதி
3. தட்சணாமூர்த்தி தோத்திரம்
4. ஆனந்தலகரி
5. சொளந்தரியலகரி
6. ஆரியாசதகம்
7. பஜகோவிந்தம்
8. விவேக சூடாமணி
9. உபதேச சாயஸ்ரி
10. சிவானந்தலகரி

 

பகவத் கீதை, உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், ஆகியவற்றிற்கு ஒப்பற்ற விளக்கவுரைகள் (பாஷ்யங்கள்) எழுதிய பெருமையும் ஆதி சங்கரரைச் சாரும்.

 

குரு -  அமைப்பு அடிப்படையில் இந்த சமயங்களை ஒன்றுபடுத்தியது சரி. ஆனால் மத்ரின் துவைதக் கோட்பாட்டை தள்ளிவிட்டு அத்துவைத கோட்பாட்டை சங்கரர் முன்வைத்ததால் சனாதன மதத்தில் குழப்பம் வந்ததே?

 

சீடன் - ஆம் குருவே! பரமாத்மா என்ற இறைவனும் ஜீவாத்துமா என்ற அவர் படைப்புக்களும் ன்று என்று  இந்துக்கள் கருதுகின்றனர்.  இது குறித்த  விவாதம் காலம் காலமாக இருந்துவருகிறது.

 

குரு - கொஞ்சம் விளக்கமாகச் சொல்?

 

சீடன் - கிறிஸ்த்தவம் மற்றும் இஸ்லாம் இரண்டையும் பொறுத்தவரை படைப்பு வேறு படைத்தவன் வேறு என்ற உறுதியான கொள்கையை அதன் வேதங்கள் விளக்குகிறது. ஆனால் இந்து மதத்தில்  துவைதம், அத்வைதம், விசிட்டாத்வைதம் என்ற மூன்று பெரும் பிரிவுகள் காணப்படுகின்றன. துவைதத்தை போதித்தவர் மத்வர். பிரம்மத்தையும் ஆன்மாவையும்  வேறாகப் பிரித்துச் சொல்வதால் மத்வருடைய தத்துவக் கூற்றுகளுக்கு துவைதம் என்ற பெயர் உண்டானது. ஆன்மா கடவுளின் ஒரு அணுவளவு பாகமாதலால், இவற்றின் வேற்றுமையை மரத்திற்கும் மரத்திலுள்ள ஒரு இலைக்கும் உள்ள வேற்றுமையாகச் சொல்லலாம்.  யினும் கடவுள் நாராயணன் ஒருவர் தான் சுதந்திரர். மற்ற எல்லா உலகப்பொருள்களும் அவரிடமிருந்து வேறுபட்டு இருந்தாலும் சுதந்திரமில்லாமல் அவரால் ஆட்டிப் படைக்கப்படுகின்றன. அதனால் சுதந்திரர் ஒரு பகுப்பாகவும் சுதந்திரமற்றதெல்லாம் ஒரு பகுப்பாகவும் இரண்டு பகுப்புகள் எக்காலமும் இருந்தே தீரும். இதனாலும் இக்கொள்கைதுவைதம்’ என்று கூறப்படுகிறது.

அத்வைதத்தை பரப்பிய   ஆதி சங்கரர்  என்றும் நிலைத்திருக்கும் பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுதான் பிரும்மம் அல்லது பரமாத்மா என்று அழைக்கப்படுகிறது. அதைத்தவிர வேறு எதுவும் மெய்ப்பொருளல்ல.  அனைத்துயிர்களுக்கும்! உயிருக்குயிராகவும் அறிவுக்கறிவாகவும் இருக்கும் ஜீவாத்துமா, வெறும் தோற்றமான அகில உலகிற்கும் அடிப்படை மெய்ப்பொருளாக இருக்கும் பரமாத்மா ஆகிய இரண்டும் இரண்டல்ல, ஒன்றே!
 பரமாத்மா என்னும் இறைவன் எல்லா உயிர்களுக்குள்ளும் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்தவனாய் இருக்கிறான். எனினும் அவரால் படைக்கப்பட்ட ஜீவாத்துமாக்களாகிய மனிதர்களும் மற்ற உயிரினங்களும் ிலையில்லாதவைகள். ஆனால் பரமாத்மாவாகிய இறைவன் நிலையானவர்!  ஆதிசங்கரர் பவுத்தர்களின் மாயவாதத்தை புதிய ஞானமாகத் திரித்து அதை அத்வைதம் என அழைத்தார் என்கிறார்கள்.  அத்வைதம் முழுமுதற்கடவுள் என்று எதையும் காட்டவில்லை என்பதால் அத்வைதத்தை 'பிரசன்ன பவுத்தம்' அதாவது போலி பவுத்தவாதம் என்று பழித்தவர்களில் இராமனுஜரும் ஒருவர்.

 

குரு - பரமாத்மாவும் ஜீவாத்மாவும் இரண்டல்ல ஒன்றுதான் என்றால் பரிசுத்தமான ஒரு மனிதன் கடவுள் ஆகிவிட முடியுமா?

 

சீடன் - முடியாது.  பரமாத்தாவால் உருவான நிலையில்லாத உயிரினங்களாகிய ஜீவாத்மாக்கள் எல்லாம் பரமாத்மாவிலிருந்து புறப்பட்டு வந்திருந்தாலும் அவைகள் வேறுபட்டே இருக்கின்றன.  அவை பரமாத்மா அல்ல. எப்படியென்றால் ஒரு அணையாத மிகப்பெரிய அக்கினி குண்டத்திலிருந்து நெருப்பெடுத்து ஆயிரம் அகல்களை ஏற்றமுடியும். ஆனால் எத்தனை அகல்கள் சேர்ந்தாலும்  அக்கினி குண்டம் ஆகமுடியாது. ஏற்றப்பட்ட அனைத்து அகல்களும் ஒர் நாளில் அணைந்து போகலாம்ஆனால் பரமாத்மா என்னும் அக்கினி என்றென்றும் அணையாத ஜோதியானவர்மேலும் சமுத்திரத்திலிருந்து பாத்திரங்களில் நீரெடுத்துத் தனித்தனியே வைக்க முடியும். ஆனால் எத்தனை பாத்திரங்களிலும்  நீரைச் சேர்த்தாலும் அது சமுத்திரம் ஆகாது. பாத்திரத்தில் சேர்த்து வைத்த தண்ணீர் எல்லாம் ஒருநாள் இல்லாமல் போய்விடலாம் ஆனால் சமுத்திரமாகிய பரமாத்மா என்றும் நிலைத்திருக்க கூடியவர்!

 

குரு - மத்வரின் துவைதம் சங்கரரின் அத்துவைதம் மட்டுமல்ல இராமனுஜரின் விசிட்டாத்வைதமும் இருக்கிறது.   விசிஷ்டாத்வைதம் - இந்தச் சொல்லைப்  பிரித்துப் பார்த்தால் விசிஷ்ட- அத்வைதம் என்று வரும். ஆனால், சங்கரர் சொல்வதுபோல, இந்த உலகமே பொய் பிரம்மம் மட்டும் தான் மெய்.  பிரம்ம சத்யா ஜகன் மித்யா என்கிற மாயாவாதத்தை நிராகரித்து மெய்ப்பொருளைச் சுட்டுவது விசிஷ்டாத்வைதம்துவைதம், அத்வைதம், விசிட்டாத்துவைதம் மூன்றும்  வைதீக, சனாதன, வேத மார்க்கத்தின்  தத்துவப் பிரிவுகளே! 

 

சீடன் - நீங்கள் சொல்வது சரி குருவே!

 

குரு - துவைதம், அத்துவைதம், விசிட்டாத்துவைதம் என்கிற மூன்று பெரும் கோட்பாடுகளை ஆதரித்த ஆச்சாரியர்கள் மூவரும் தென்னிந்தியாவை - தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். விசிட்டாத்துவைதத்தை நிலைநாட்டிய இராமனுஜரே சாதிகளை உடைத்தெறிவதில் அதிக ஆர்வம் காட்டியவராகத் தெரிகிறது.  அரிசனங்களுக்கு திருக்குலத்தார் என மரியாதைப் பெயரைத் தந்ததடு அரிசன குலத்துதித்த ஒருவரையே தமது முதல் குருவாக ஏற்றார். அந்தண ஆச்சாரியார் ஒருவர் அரிசனர் ஒருவரை குருவாக ஏற்றது இதுவே முதல் முறையாகும்.   அதுமட்டுமல்ல தமது குருபக்தி வெறும் சம்பிரதாயமானது அல்ல உண்மையானது என எண்பிக்கும் விதத்தில்  தமது வீட்டிற்கு வந்த குருவை அலட்சியமாக நடத்திய தமது மனைவியையும் உடனடியாகத் துறந்து காட்டினார். ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தை வெளியே சொன்னால் தலை வெடித்து நரகம் செல்வாய் என்று உபதேசம் செய்த குரு சொல்லியும் கேளாமல், தான் ஒருவன் நரகம் சென்றாலும் பரவாயில்லை அனைவரும் பரமபதம் அடைய வேண்டும் என எண்ணி கோபுரத்தின் மீதேறி ஊரறிய உரக்கச் சொல்லிய சமயவாதியும் இவரே!  பல மகான்கள் சொல்லியும் வாழ்ந்து காட்டியும்  அவர்களை மதிக்காமல் வளர்ந்துகொண்டு வருகிற ஒரு ஆணவப் போக்கே சாதி எனத் தெரிகிறது. வைணவ சமயத்தில் வடமொழி ஆதிக்கமும் சாதிசமய வேறுபாடும் பெருமளவு மண்டிக் கிடந்தன. இதனால் வைணவ சமய  பழமைவாதிகள் ஆழ்வார்களின் தமிழ் மொழிப் பாடல்களை (நாலாயிர திவ்ய பிரபந்தம்) எதிர்த்தனர் என்பது வரலாறு.

 

குரு - தத்துவம் என்ற சொல்லுக்கு உண்மை என்பது பொருள். எனவே, தத்துவ ஞானம் என்பது உண்மையை அறிவது எனப் பொருள்படும். உண்மை என்பதற்கு  என்றும் உள்ளது என்பதே கருத்து. நம் உடல் உட்பட நாம் காணும் பொருள்கள்யாவும் என்றும் உள்ளவை அல்ல. என்றுமே உள்ள பொருள் ஏதாவது உண்டா? உண்டாயின், அது எது? அதன் இயல்புகள் எவை என்பன போன்றவற்றை ஆராய்வதே தத்துவ ஞானம் எனக் கூறலாம். து  இந்துக்களுக்குத் தெரியுமா?

 

சீடன் - தெரியாது.  மதங்கள் என்பது புத்தர் தொடங்கி சங்கரர் வரை தங்கள் தங்கள் அறிவாற்றலுக்கு ஏற்ப  கடவுள், மனிதன் மற்றும் உலகம் பற்றிய தமது கோட்பாடுகளை முன் வைத்தவையே. எல்லாம் குருடர் யானை பார்த்த கதைதான். இன்று அவைபற்றிய விசாரணை  கிடையாது. அதற்குப் பதில் இந்துக்கள் சடங்குகள் செய்தால் போதும் எ நினைக்கிறார்கள். சைவக் கோயில்களில் சிவாகம விதிப்படி வழிபாடு நடைபெறுகிறது என்று சொன்னாலும் 90 விழுக்காடு  அருச்சனை, அபிசேகம், தேர், தீர்த்தம், ஓமம் போன்ற வழிபாடுகள் வேதவழிபாட்டுக்குரியவையே! சிவனை வேதத்தோடு இணைத்தும் வழிபாட்டினை ஆகமத்துடன் சேர்த்தும் சொல்வது சைவத்தின் பொதுப் போக்காகும். இதன் காரணமாகவே சைவத்துக்கு வேதம் பொது ஆகமம் சிறப்பு என்று சொல்லப்படுகிறது.

 

குரு - சிலைகளுக்கு பாலாபிசேகம் செய்வது, பட்டுச் சேலையை அக்னியில் போடுவதை சில சமயவாதிகள் கண்டிக்கிறார்கள். பட்டுச்சேலைகள் இந்திராணிக்குப் பிடிக்குமாம்!

 

சீடன் - ஆமாம் பாலுக்கு பாலகன் வேண்டி அழும்போது அதனைக் கல்லுக்கு ஊற்றி வீணாக்குவதை ஏற்க முடியாது. அதே போலக் கட்டச் சேலை இல்லாது எமது மக்கள் வன்னியில் அல்லல்படும் போது இங்கே பட்டுச்சேலைகளை நெருப்பில் எரித்து கரியாக்குகிறார்கள் என்று ஒரு சைவ அன்பர் அண்மையில் மேடையேறிச் சொன்னார்.

 

குரு - சொல்லலாம்.  மக்கள் கேட்கிறார்கள் இல்லையே? 

 

சீடன் - நீங்கள் சொல்வது முற்றிலும் சரி குருவே! இதற்கு மருந்து தேவார காலம் போல் சலம் பூவொடு தீபம் மறந்தறியேன் தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் என்றோ போதொடு  நீர் சுமந்தேத்தி புகுவார் அவர் பின் புகுவேன் என்ற வழிபாட்டு முறையை மீண்டும் திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
 

 

குரு - சீடன்

 

புதிய மக்களாட்சிக் கட்சிக் காட்டில் மழை!

(April 30, 2011)

குரு - தேர்தல் திருவிழாவுக்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் எஞ்சியிருக்கின்றன.

 

சீடன் - ஆமாம் குருவே! கடந்த ஏழு ஆண்டுகளில் நடக்கும் 4 ஆவது தேர்தல் இது. அப்படியிருந்தும் கனடிய மக்கள் இந்தத் தேர்தலில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள்.

 

குரு - என்ன காரணம்?

 

சீடன் - 2008 இல் நடந்த தேர்தலில் 13,929,093  பேர் (58.8 விழுக்காடு) வாக்களித்தார்கள். 2006 தேர்தலோடு ஒப்பிடும் போது இது 5.9 விழுக்காடு குறைவு. 2006 இல் 14,908,703  பேர் (64.7 விழுக்காடு) வாக்களித்திருந்தார்கள். இம் முறை முன்னதாக வாக்களித்தவர்கள் தொகை கூடியுள்ளது. 2008 ஓடு ஒப்பிடும் போது 427,221 (34 விழுக்காடு)  கூடியுள்ளது. சென்ற முறை 1,528,720 வாக்குகள் போடப்பட்டன. இம்முறை 2,056,001 வாக்குகள் விழுந்துள்ளன. இந்த அதிகரிப்புக்கு உண்மையான காரணம் தெரியவில்லை. வாக்களிப்பதில் பல்கலைக் கழக மாணவர்கள் காட்டிய ஆர்வம் காரணமாக இருக்கலாம்.

குரு - கருத்துக் கணிப்புக்கள் என்ன சொல்கின்றன?

 

சீடன் - அதையேன் கேட்கிறீர்கள் குருவே? ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு முடிவை வெளியிடுகின்றன. ஒன்று மட்டும் தெரிகிறது. புதிய மக்களாட்சிக் கட்சிக் காட்டில் மழை சோ என்று பெய்கிறது. தேர்தல் நாள் குறிக்கப்பட்ட போது (மார்ச்சு 27) 19 விழுக்காட்டு ஆதரவோடு இருந்த பு.ம. கட்சி ஒரு மாதம் கழித்து 31.2 விழுக்காடு ஆதரவு பெற்று  இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கீழ்க் கண்ட அட்டவணை  ஏப்ரில் 28 ஆம் நாள் அன்று கட்சிகளின் வாக்குப் பலத்தைக் காட்டுகிறது.  ஏப்ரில் 28 இல் தேசிய அளவில்  எடுத்த கணிப்பு பின்வருமாறு இருக்கிறது.

 

DATE

BQ

CON

GRN

LIB

NDP

Error±

FIRM

2011.04.28

5.7

36.4

4

22

31.2

3.1

Nanos Research

2011.04.28

6.3

34.5

6.9

20

29.7

1.8

EKOS Research

2011.04.28

7

38

4

18

33

2.4

Ipsos Reid

 

குரு -  தேசிய அளவை விட மாகாண அளவில் பார்ப்பதுதான் சரியாக இருக்கும்?

 

சீடன் -  நீங்கள் சொல்வது சரி குருவே. எடுத்துக்காட்டாக புளக் கியூபெக்குவா கட்சிக்கு தேசிய அளவில் 5.7 விழுக்காடு இருந்தாலும் கியூபெக் மாகாணத்தில் அந்தக் கட்சிக்கு 23.6 விழுக்காடு இருக்கிறது. ஆனால் கியூபெக் மாகாணத்தில்தான் பு.ம.கட்சிக்கு உச்சகட்ட ஆதரவு (41.4 விழுக்காடு) காணப்படுகிறது. அதனை கீழ்க்கண்ட அட்டவணை காட்டுகிறது.

 

DATE

BQ

CON

GRN

LIB

NDP

Error±

FIRM

2011.04.28

23.6

15.8

1.9

16.1

41.4

6.3

Nanos Research

2011.04.28

26

15

 

13

42

 

Ipsos-Reid

2011.04.28

26.2

13.6

4.3

13

39.6

3.3

EKOS Research

 

குரு - பழமைவாதக் கட்சிக்கு இம்முறையும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது போல் தெரிகிறதே?

 

சீடன் - நீங்கள் சொல்வது சரி. சென்ற தேர்தலில் 144 இருக்கைகளைப் பெற்ற கட்சி இம்முறை 130 யை தாண்டாது என நினைக்கிறேன். பு.ம. கட்சி இரண்டாம் இடத்தைப் பிடிக்கப் போகிறது.  லிபரல் கட்சிதான் பாவம். மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்படப் போகிறது.

 

குரு - முன்னாள் பிரதமர்கள் யேன் கிரச்சியான், போல் மாட்டின் லிபரல் கட்சித்தலைவர் மைக்கல் இக்நேட்டிவ்வுக்கு ஆதரவாக பரப்புரை செய்தார்களே?

 

சீடன் - ஆமாம் செய்தார்கள். ஆனால் குதிரை ஓட மாட்டேன் என்கிறது. 

 

குரு - ஒரு சில தமிழர்கள் பழமைவாதக் கட்சி பதவியில் இருக்கும் கட்சி. காரியம் ஆக வேண்டும் என்றால் அந்தக் கட்சிக்கு வால் பிடித்தால் மட்டுமே முடியும் என்கிறார்களே?

 

சீடன் - இதைத்தான் அரசியல் பரத்தமை என்பது. ஒரு கட்சியை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ அந்தக் கட்சியின் கொள்கை, கோட்பாட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும். அதை விடுத்து சந்தர்ப்பவாத அரசியல் செய்தால் ஒரு நாள் நடு வீதியில் நிற்க வேண்டிவரும். கார்ப்பர் தலைமையிலான பழமைவாதக் கட்சி சீர்திருத்தக் கட்சியின் (Reform Party) மறு அவதாரம். கொஞ்சமேனும் மானமுள்ள தமிழன் அல்லது மூளையுள்ள தமிழன் அந்தக் கட்சியை நீண்ட தடியால்த் தன்னும் தொடமாட்டான்.

 

கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவரும் பழமைவாதக் கட்சி தமிழர்கள் நலன்களுக்கு மாறாக நடந்துள்ளது. ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் வி.புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் எனத் தடைசெய்தது. 2008 ல் உலகத்தமிழர் இயக்கத்தை தடைசெய்தது. சன் சீ கப்பலில் வந்தவர்களை "பயங்கரவாதிகள்" "குற்றவாளிகள்" "ஆட்கடத்தல்காரர்கள்" "பயங்கரவாதிகள்" என முத்திரை குத்தி அவர்களை தடுப்புச் சிறையில் அடைத்தது.  பொதுவாக புதிய கனடியர்களது நலன்களையும் சிறப்பாக கனடிய தமிழர்களது நலன்களையும் பாதிக்கும் சி-49 சட்ட வரைவை முன்மொழிந்த கட்சி பழமைவாதக் கட்சி. எதிர்க்கட்சிகளின் கூட்டு முயற்சியின் பலனாகவே இந்த சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் தலைமை அமைச்சர் கார்ப்பர் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தால் முதல் வேலையாக நாடாளுமன்றத்தில் சடட மூலம் சி -49 கொண்டுவரப் போதவதாக சூளுரைத்துள்ளார்.

 

மேலும் முப்பது பில்லியன் செலவில்  65 போர் விமானங்களை இந்தக் கட்சி வாங்க இருக்கிறது. இங்கு நடந்த ஜி-20 மாநாட்டுக்கு மக்களின் வரிப்பணத்தில் ஒரு  பில்லியன் டொலரைச் செலவழித்தது. இந்தக் கட்சிக்குப் புதிய கனடியர்கள் வாக்களிக்கக் கூடாது என 49 வழக்கறிஞர்கள், அறிஞர்கள் முன் எப்பொழுதும் இல்லாதவாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனவே இந்தக் கட்சிக்கு தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது.

 

குரு - நீ இப்படிச் சொல்கிறாய். ஆனால் வி.புலிகள் அமைப்பையும் உலகத்தமிழர் அமைப்பையும் தடைசெய்த பழமைவாதக் கட்சிக்கு தங்களைப் புலிகள் என்று சொன்னவர்கள் குடை, கொடி, ஆலவட்டம் பிடிக்கிறார்களே?

 

சீடன் - கேட்டால் அது இராசதந்திரம் என்று சொல்லித் தப்பித்துக் கொள்கிறார்கள். என்னைக் கேட்டால் இது உதைக்கிற காலுக்கு முத்தமிடும் கேவலமான அரசியல்! இதற்குப் பதில் தெருவில் நின்று "அம்மா தாயே! பிச்சை போடுங்கள்" என்று பிச்சை கேட்கலாம்! அறிவும் மானமும் மனிதர்க்கு அழகு என்று அடித்துச் சொன்னவர் பெரியார்!

 

குரு - புத்திசாலி மற்றவர்களது பட்டறிவை வைத்து நெருப்புச் சுடும் எனத் தெரிந்து கொள்கிறான். முட்டாள் கைவைத்துப் பார்த்துத்தான் தெரிந்து கொள்கிறான். நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம்!

 

சீடன் - குருவே! வழக்கத்துக்கு மாறாக லிபரல் கட்சிக்குப் பதில் பு.ம. கட்சிக்கு வாக்களிக்குமாறு இங்கு வெளியாகும் புகழ்பெற்ற ரொறன்ரோ ஸ்ரார் நாளேடு பரிந்துரை செய்துள்ளது. இது அந்தக் கட்சிக்கும் அதன் தலைவர் யக் லேய்ட்ரனுக்கும் கிடைத்த தார்மீக வெற்றி! சும்மா சொல்லக் கூடாது. சராசரி கனடிய உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி பு.ம. கட்சி மட்டும்தான். தமிழர்களைப் பயங்கரவாதிகள் என மைக்கல் இக்நேட்டிவ்வும் ஸ் ரீவன் கார்ப்பரும தீண்டாமை பாராட்டியபோது யக் லேய்ட்ரன் ஒருவரே மேடையேறிப் பேசினவர்.

 

குரு - ஆமாம் இராணி பூங்காவில் 2004 செப்தெம்பர் 25 அன்று நடந்த பொங்கு தமிழ் நிகழ்ச்சியில் யக் லேய்ட்ரன் மிதிவண்டியில் வந்து மேடையேறிப்   பேசியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.   அது சரி. எந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போறாய்?

 

சீடன் - இதென்ன கேள்வி குருவே! இந்த நாட்டுக் குடிமகனாக மாறிய பின்னர் மழையானாலும் சரி வெய்யிலானும் சரி பு.ம. கட்சிக்கே வாக்களித்து வருகிறேன். இம்முறை ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

 

குரு - விளக்கமாகச் சொல்.

 

சீடன் -  பு.ம.கட்சிக்குப் போடுவதால் அந்தக் கட்சிக்கும் வெற்றி! அந்தக் கட்சி சார்பில் போட்டியிடும் இராதிகா சிற்சபேய்சனுக்கும் வெற்றி!

 

குரு - பழமைவாதக் கட்சி  மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் போல் தெரிகிறதே?

 

சீடன் - ஆனால் அந்தக் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது. கிடைத்தால் புதிய கனடியர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகள் இருண்ட காலமாக இருக்கும்.

 

குரு -  லிபரல் கட்சி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்படுவதால் கடுமையாக போட்டி நிலவும் தொகுதிகளில் பழமைவாதக் கட்சி வெல்லக் கூடிய வாய்ப்பு இருக்கிறதே?

 

சீடன் - ஆமாம். நீங்கள் சொல்வது சரி. அப்படியான தொகுதிகளில் லிபரல் கட்சிக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும்.  அந்தத் தொகுதிகள் பின்வருமாறு.

 

Ruby Dhalla in Brampton-Springdale; Andrew Kania in Brampton West; Rob Oliphant in Don Valley West; Joe Volpe in Eglinton-Lawrence; Paul Szabo in Mississauga South; and Ken Dryden in York Centre.

 

குரு - சரி.  யாருக்கு மாலை, யாருக்கு மொட்டாக்கு என்பதை அறிய திங்கட்கிழமை மாலை வரை காத்திருப்போம்.