மகாவம்சம் பவுத்தர்களது மனக் கிளர்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் எழுதப்பட்ட புராணம்! நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் முனைவர் பாலசுப்பிரமணியம்

“முன்னாள் சட்ட விரிவுரையாளரான திரு.தம்பு கந்தையா எழுதியுள்ள மகாவம்சம் ஒரு மீளாய்வு என்ற நூலை வாசித்த பின்னர் மகாவம்சம் பற்றிய பல செய்திகளையும் உண்மைகளையும் நான் அறிந்து கொண்டேன். இலங்கையை ஒரு பவுத்த நாடாகக் காண்பிப்பதற்காக மகாநாம தேரரால் எழுதப்பட்ட நூலே மகாவம்சம். ஏக பவுத்தம் என்ற பொய்யான கருத்துடன் இது எழுதப்பட்டுள்ளது. மகாவம்சத்தின் கதை ஒரு அருவருக்கத் தக்க கதை. சிங்கத்துக்கும் ஒரு வங்க நாட்டு அரசிக்கும் இரண்டு பிள்ளைகள் பிறக்கின்றன.

அண்ணன் தங்கச்சி முறையுள்ள அந்தப் பிள்ளைகள் திருமணம் செய்து 16 இரட்டைப் பிள்ளைகளைப் பெறுகின்றனர். அந்தப் பிள்ளைகளில் மூத்தவன்தான் விஜயன். துட்டனான விஜயனும் அவனது 700 தோழர்களும் மொட்டையடிக்கப்பட்டு அவனது தந்தை சிங்கபாகுவால் நாடுகடத்தப்பட்டார்கள். அவர்கள் இலங்கையில் தம்பதெனியாவில் வந்து இறங்குகிறார்கள்.

பின்னர் விஜயன் இயக்க அரசியான குவேனியை மணந்து இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாகிறான். விரைவில் குவேனியைக் கைவிட்டு பாண்டிய நாட்டு அரசிளங்குமரியை மணம் செய்கிறான். அவனது தோழர்களுக்கும் பாண்டி நாட்டில் இருந்து பெண்கள் கொண்டு வரப்படுகிறார்கள். மகாவம்சத்தை ஒரு புராணம் என்றுதான் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் இந்த தொகுப்பு பவுத்தர்களது மனக் கிளர்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் ஆக எழுதப்பட்டது என மகாநாம தேரர் குறிப்பிடுகிறார்.

இந்தப் பாடநூலில் சோழ நாட்டுத் தமிழ் மன்னனான எல்லாளன் நீதி நெறிப்படி ஆண்ட மன்னன் எனவும் அவனிடம் நீதி வேண்டிப் போகிறவர்கள் அரண்மனை வாசலில் இருந்த ஆராய்ச்சி மணியை அடித்தால் நீதி கிடைக்கும் என மகாவம்சமே கூறுகின்றது. இந்தக் கதை மனுநீதி கண்ட சோழன் கதை போன்றது. தமிழ்மன்னன் எல்லாளன் அனுராதபுரத்தில் நீதி தவறாத செங்கோலாட்சியை நடாத்தினாலும் அவன் “புன்னெறி” (false beliefs) கொண்டவன் என்ற காரணத்தாலேயே அவன் மீது துட்டகைமுனு படையெடுத்தான் என மகாவம்சம் தெரிவிக்கிறது. இந்தப் புராணக் கதையைப் பள்ளிக் கூடங்களில் பாட நூலாகவும் வைத்திருக்கிறார்கள் ” எனப் பேராசிரியர் முனைவர் மு.ப. பாலசுப்பிரமணியன் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

முன்னாள் சட்ட விரிவுரையாளர் திரு. தம்பு கனகசபையால் எழுதப்பட்ட “மகாவம்சம் ஒரு மீளாய்வு” என்ற நூல் வெளியீட்டு விழா தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் ஆதரவில் கடந்த செப்தெம்பர் 19 (வெள்ளிக்கிழமை) மாலை ஸ்காபுறோ பொது மண்டபத்தில் நடைபெற்றது. திரு நக்கீரன் தங்கவேலு தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தலைவர்பேராசிரியர் முனைவர் மு.ப. பாலசுப்பிரமணியம் பிரதம விருந்தினராக வருகை தந்திருந்தார்.

செல்வி செலினா தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினார். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் அனுட்டிக்கட்பட்டது. திரு மு. தியாலிங்கம், செயலாளர் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் எல்லோரையையும் வரவேற்றுப் பேசினார். முனைவர் கவுசல்யா சுப்பிரமணியயம் வாழ்த்துரை நல்கினார்.

முனவைர் பேராசிரியர் மு.ப. பாலசுப்பிரமணியம் அவர்கள் தொடர்ந்து பேசுகையில் “மகாவம்சம் என்ற நூலை ஆய்வு செய்து அதன் உண்மை பொய்மைகளை அம்பலப்படுத்தியதற்காக நூலாசிரியருக்கு அவர்களுக்கு எனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தம்பு கனகசபை ஒரு சட்ட அறிஞர், இருந்தும் ஒரு வரலாற்று ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய ஆய்வை அவர் செவ்வனே செய்திருக்கிறார். அதையிட்டு நாம் பெருமைப் படவேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ் உணர்வோடு தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள். மகாவம்சத்தை ஏற்றுக் கொண்டால் அது சிங்களவரை ஏற்றுக் கொண்டதற்கு சமமாகும். அவ்வாறு செய்யக் கூடாதென திரு. தம்பு கனகசபை கூறியுள்ளார்” என்றார்.

திரு நக்கீரன் தங்கவேலு தனது தலைமையுரையில் பின்வரும் அம்சங்களை வலியுறுத்திப் பேசினார்.

(1) ஆங்கிலேயர் வரும் வரை பாலி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் என்ற நூல் இருப்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. 1837 இல் யோர்ஜ் ரேணர் (George Turnour) என்ற ஆங்கிலேயரே இலங்கை பொது சேவையில் (Ceylon Civil Service) இருந்த காலத்தில் மகாவம்சத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பின்னர் 1912 இல் வில்ஹெல்ம் கெய்க்கர் (Wilhelm Geiger) என்பவர் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். இந்த மொழி பெயர்ப்பை Mabel Haynes Bode ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதனை வில்ஹெம் கெய்க்கர் திருத்தி அமைத்தார். அதன் பின்னர் 1877 இல் ஆங்கில ஆளுநர் ஒருவர் மகாவம்சத்தை சிங்களத்தில் மொழிபெயர்ப்புப் செய்தார். அதன் பின்னரே மகாவம்சம் என்றொரு நூல் இருப்பது பெரும்பாலான சிங்கள- பவுத்தர்களுக்குத் தெரியவந்தது.

(2) மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் என்ற ஆய்வு நூலை 2003 இல் முனைவர் க.குணராசா எழுதி வெளியிட்டுள்ளார். ஆர்.பி.பாரதி மகாவம்சத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

(3) மகததேசத்தில் உள்ள உருவெல என்னும் இடத்திலுள்ள அரச மரத்தின் அடியில் ஒரு வைகாசி (விசாக) மாதத்துப் பௌர்ணமி நாளில் கவுதம புத்தர் (கிமு 560–480) அமர்ந்திருக்கின்றார். அப்போது அவருக்குச் சில நிகழ்ச்சிகள் புலனாகின்றன. பவுத்த மதம் பெரு வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கைத் தீவு என்பதும் ஆனால் அங்கு ஏற்கனவே வசித்து வருகின்ற இயக்கர்களை அங்கிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்றும் புத்தர் எண்ணுகின்றார்.

(4) புத்தர் 3 தடவை இலங்கை வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. முதல்முறை இயக்கர்கள் வாழ்ந்த மகியங்கன என்ற இடத்துக்கு வருகிறார். இலங்கைத்தீவு எங்கணும் வாழ்கின்ற இயக்கர்கள் குறிப்பிட்ட ஒரு தினத்தில் மகாவலி கங்கை அருகே உள்ள மகாநாக வனத்தில் வந்து கூடுவது வழக்கம். அந்த வேளையில் புத்தர் அங்கே வான்வழியாகப் பறந்து வந்து அந்தரத்தில் நின்றவாறு பயங்கரமான சூறைக்காற்றை உருவாக்கி இயக்கர்களைப் பயமுறுத்துகின்றார். உடனே இயக்கர்கள் இந்த இலங்கைத்தீவு முழுவதையுமே உமக்குத் தருகின்றோம், எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சப் புத்தர் அவர்களை மலைநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றார். அதன் பின் தேவர்கள் வந்து கூடினர். அப்போது அந்த சபையில் அவர் தமது சமயக் கொள்கையைப் போதித்தார். பல கோடி மக்கள் பவுத்த மதத்துக்கு மாறினர்.

இரண்டாம் முறை மணிபல்லவத்தை ஆண்ட மகோதரன் – குலோதரன் (மாமன் – மருமகள்) என்ற இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே இரத்தினக் கற்கள் பதித்த அரச கட்டிலுக்காகப் போர் புரிவதைத் தடுப்பதற்காக வருகின்றார். முன்பு சூறைக்காற்றை உருவாக்கி இயக்கர்களைப் பயமுறுத்தி அடிபணிய வைத்த புத்தர் இம்முறை பயங்கர இருளைப் பரவச்செய்து நாக மன்னர்களையும் அவர்களது வீரர்களையும் கிலி கொள்ள வைக்கின்றார். பின்னர் அங்கு வாழ்ந்த எட்டுக்கோடி நாகர்களுக்கு ‘புத்தம் – தர்மம் – சங்கம்’ என்ற போதனைகளை அருளுகின்றார்.

மூன்றாம் முறை மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புத்தர் மீண்டும் இலங்கைக்கு வருகிறார். கல்யாணி (இன்றைய களனி) என்ற நாட்டை ஆண்ட மகோதரன் தாயின் உடன்பிறப்பு மணியக்கியா மன்னனது வேண்டுதலை ஏற்று அங்கு சென்று அந்த இடங்களை ஆசீர்வதித்துத் திரும்புகின்றார்.

(5) புத்தர் இலங்கைக்கு வருகை தந்ததற்கு எந்தச் சான்றும் இல்லை. இது முழுக்க முழுக்க மகாநாம தேரரது கற்பனை. ஆனால் அதில் உண்மையும் பொதிந்துள்ளது. விஜயனுக்கு முன்னர் இலங்கை முழுதும் இயக்கர், நாகர், வேடர் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே அந்த உண்மையாகும்.

(6) வைகாசி மாதத்துப் பவுர்ணமி நாளில் கவுதம புத்தர் தனது 80 ஆவது அகவையில், குசி நகரத்தில் கிமு 483 பரி நிருவாணம் அடைந்தார். அதே நாள் லாலா நாட்டில் (வட இந்தியா) இருந்து நாடுகடத்தப்பட்ட விஜயனும் அவனது 700 நண்பர்களும் தம்பபாணி (தாமரபரணி) இல் கரை இறங்குகிறார்கள். திட்டமிட்டே இந்த இரண்டு நிகழ்வுக்கும் இடையில் மகாவம்ச ஆசிரியர் முடிச்சுப் போட்டுள்ளார்.

(7) தெய்வீக மாமுனிவரான புத்தர் பரிநிருவாணம் அடையு முன்னர் அரசகட்டிலில் வீற்றிருந்தவாறு தேவர்களது அரசனும் புத்த தர்மத்தின் (புத்தர் போதித்த போதனைகள்) தெய்வீக காவலனுமான இந்திரனை(சக்கா) அழைத்து “லாலா நாட்டு அரசனான சிங்கபாகுவின் மகனான விஜயன் தனது 700 கூடடாளிகளோடு லங்காவில் கரையிறங்கியுள்ளான். லங்காவில் எனது சமயம் நிலை நிறுத்தப்படும். எனவே அவனையும் அவனது பரிவாரத்தையும் லங்காவையும் கவனமாகக் பாதுகாப்பாயாக” எனக் கட்டளை இட்டார். அதனைச் செவிமடுத்த இந்திரன் அந்தப் பொறுப்பை தாமரை மலரின் நிறத்தை ஒத்த கடவுளிடம் (விஷ்ணு) ஒப்படைத்தான் (மகாவம்சம் – அத்தியாயம் V11). இந்தக் கதை இன்றைய சிங்கள – பவுத்த மக்களது நம்பிக்கைகளில் ஒரு தெய்வீக இடத்தைப் பிடித்துள்ளன.

(8) துட்ட கைமுனு நாக வம்சத்தை சேர்ந்தவன். அவனது தந்தை பெயர் காகவண்ண தீசன். அவனது பாட்டன் பெயர் கோத்தபாய. அவனது பூட்டன் பெயர் யத்தகால தீசன் அவனது ஒட்டன் பெயர் மகாநாகன், மகானாகனது தந்தை பெயர் முத்துசிவன்! துட்ட கைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில், சிங்களவர்கள் என்று அடையாளம் காணக் கூடிய ஒரு இனம் வரலாற்றில் தோன்றியிருக்கவில்லை. மகாவம்ச கதைப்படியே துட்ட கைமுனு தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாக வம்சத்தைச் சேர்ந்தவன். அவனது தாய் விகாரமாதேவி கல்யாணியை ஆண்ட மணியக்கியா அல்லது களனி தீசன் என்ற அரசனின் மகள் ஆவாள்.

(9) எல்லாளன் மீது போர் தொடுக்கு முன்னர் கதிர்காமத்தில் உள்ள முருகனை வழிபாடு செய்துவிட்டே புறப்படுகிறான். அவனது போர் முழக்கம் “இராச்சியங்களைப் பிடிக்க அல்ல நான் போர் தொடுத்தது. புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே நான் போர் செய்தேன். இதுவே உண்மை என்பதை எண்பிக்க எனது படையினரின் மேனி தீயின் நிறத்தை எடுக்கட்டும்’ என சூளுரைத்ததாக மகாவம்சம் (அதிகாரம் 25) தெரிவிக்கிறது. “பவுத்த மதத்தை மீட்பதற்கான புனிதப்போரில் துட்ட கைமுனு என்ற சிங்கள மன்னன், எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வென்றான்” என்ற கதை பின்னாளில் புனையப்பட்டு சிங்கள பள்ளி மாணவர்களுக்கான சிங்கள மொழிப் பாட நூலில் சேர்க்கப்பட்டது.

(10) அனுராதபுரத்தைப் பிடிக்க படை நடத்தி வந்த துட்ட கைமுனு வழியில் 32 தமிழ்ச் சிற்றரசர்களோடு ஆறு மாத காலம் போரிட்டு அவர்களைத் தோற்கடித்தான் என மகாவம்சம் சொல்கிறது. ஒரே நாளில் 7 இளவரசர்களை வென்றான். ஆனால் தந்திரமும் திறமையும் வாய்ந்த திதம்பாவோடு 4 மாதங்கள் போரிட்டு முடிவில் சூழ்ச்சியால் வென்றான். அவன் தனது தாய் விகாரமாதேவியை திதம்பாவின் கண் முன் நிறுத்திப் பணிய வைத்தான்.

(11) எல்லாளன் – துட்ட கைமுனு போர் தமிழர் – சிங்களவர் போராகப் பார்ப்பது தவறானது. அன்று சிங்கள இனமோ மொழியோ தோன்றாத காலம். அந்தப் போர் இந்துக்களுக்கும் – பவுத்தர்களுக்கும் இடையிலான ஆட்சி அதிகாரப் போர். துட்ட கைமுனு பக்கத்தில் தமிழ் வீரர்கள் தமிழ் சேனாதிபதிகள் (நந்தமித்ரா, வேலுசுமணா) போரிட்டனர். அதே போன்று, எல்லாளனின் படையில் சிங்கள வீரர்கள் மட்டுமல்ல, சிங்கள சேனாதிபதிகளும் இருந்துள்ளனர். போர் முடியும் வரையில், சிங்கள தளபதிகளும், வீரர்களும் எல்லாளனுக்கு விசுவாசமாக இருந்துள்ளனர். ஒருவர் கூட எல்லாளனுக்குத் துரோகமிழைத்து விட்டு, “சிங்கள மன்னனான” துட்ட கைமுனுவிடம் போய்ச் சேரவில்லை. எல்லாளனின் படையில் முன்னணி அரங்கில் நின்று போரிட்ட சிங்கள சேனாதிபதிகளின் பெயர் விபரம் பின்வருமாறு: தீகபாய, தீகஜந்து, காமினி, நந்திதா …. இந்த சிங்கள சேனாதிபதிகளின் பட்டியலில், துட்ட கைமுனுவின் ஒன்று விட்ட சகோதரனான தீகபாய செனாவியின் பெயரும் இருப்பது குறிப்பிடத் தக்கது. இன்னொரு முக்கியமான தகவல். தீகபாய சேனாவி, துட்ட கைமுனு பக்கம் நின்ற (சிங்கள) குறுநில மன்னர்கள் மத்தியில், எல்லாளனுக்கு ஆதரவு திரட்டும் இராஜதந்திர நகர்வுகளை செய்துள்ளான்!

(12) கல்லாடநாகன் (கிமு 50 – 44) (2) சோரநாகன் (கிமு 3 – 9) (3) இளநாகன் (கிபி 96 – 103) (4) மாகலக்க நாகன் (கிபி196 – 203) (5) குஜ்ஜநாகன் (கிபி 246 – 248) (6) குட்டநாகன் (கிபி 248 – 249) (7) ஸ்ரீநாகன் I (கிபி 249 – 269) (8) அபயநாகன் (291 – 300) (9) ஸ்ரீநாகன் II (கிபி 300 – 302) (10) மகாநாகன் (கிபி 556 -568) எனப் பல அரசர்கள் நாக பின் ஒட்டோடு இலங்கையை 6 ஆம் நூற்றாண்டு வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுள்ளார்கள். தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே ஆகும். எடுத்துக் காட்டாக ஸ்ரீநாகன் II தந்தை பெயர் வீர தீசன். (The Early History of Ceylon by G.C.Mendis -pages 83-85). இவர்கள் யாரும் தங்களை ஹெல, சிகல அல்லது சிங்கள என அழைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

(13) இலங்கை ஒரு பவுத்த நாடு அது பவுத்த – ஆரிய சிங்களவர்களுக்கே சொந்தம் என்ற கூக்குரல் சென்ற நூற்றாண்டிலும் ஒலித்தது. அதை ஒலித்தவர் டொன் டேவிட் ஹேவவிதாரனே (Don David Hewawitharane – September 17th, 1864) என்ற இயற்பெயரைக் கொண்ட அநகாரிக தர்மபாலர் ஆவர். கொழும்பு மாளிகாகந்தவில் நடந்த அவரது 150 ஆண்டு பிறந்த நாள் விழாவில் பேசிய சனாதிபதி மகிந்த இராபக்சே “இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்கள் தாங்கள் சிங்கள – பவுத்தர்கள் எனப் பெருமையுடன் சொல்ல கூடிய நிலைக்கு அல்லது துட்ட கைமுனு குறித்துப் பெருமையுடன் பேசக் கூடிய நிலைக்கு நாட்டை நாங்கள் மாற்றியுள்ளோம். அநகாரிக தர்மபாலர் மீதும் இனவாதி என்ற முத்திரை குத்தப்பட்டது, ஆனால் அதனையும் நாங்கள் மாற்றியுள்ளோம். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் தாங்களைப் பவுத்தர்கள் எனச் சொல்வதற்கே தயங்கினர், நான் அவ்வாறு சொன்னவேளை பலர் என்னைக் கடிந்துகொண்டனர், யாரும் துட்ட கைமுமுனுவை நினைவுகூற விரும்பவில்லை. நாட்டிற்கு முதுகெலும்பை நாங்கள் வழங்கியுள்ளதால் இன்று மன்னர் குறித்தும் வரலாறு பற்றியும் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஏனைய நாடுகளுடன் சமமாக நிற்கக் கூடிய பெருமித உணர்வை நாங்கள் தேசத்திற்கு வழங்கியுள்ளோம்” எனப் பேசியுள்ளார்.

(14) தமிழர்களது எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து கொண்டு போகிறது. சென்ற நூற்றாண்டில் புத்தளம் நீர் கொழும்பு பகுதிகளில் கத்தோலிக்க பரதவ மக்கள் வாழ்ந்தார்கள். சிலாப மறைமாவட்டத்தின் ஆயர் ஆக இருந்த எட்மன்ட் பீரிஸ் ( (1897 -1989 ) பள்ளிகளில் படிப்பிக்கிற கற்கை மொழியைத் தமிழில் இருந்து சிங்களத்துக்கு மாற்றினார். அதன் விளைவாக அவர்கள் தமிழை மறந்து சிங்களவர்கள் ஆனார்கள். ஆயர் எட்மன்ட் பீரிஸ் அவர்களது தந்தையார் தமிழ், சிங்களம் இரண்டு மொழியிலும் புலமை பெற்றிருந்தார்.

(15) சிங்களக் குடியேற்றத்தினால் தமிழர்களது நிலம் பறிபோய்க் கொண்டிருக்கிறது. மலைநாட்டுத் தமிழர்கள் சிங்களவர்களாக மாறிவருகிறார்கள். வடக்கில் சிங்களக் குடியேற்றம் அதிகரித்து வருகிறது. இராணுவத்தில் சேரும் தமிழ் இளைஞர் இளைஞிகள் நாளடைவில் சிங்கள இராணுவத்தினரைத் திருமணம் செய்து சிங்களவர்களாக மாறிவிடுவார்கள்.

நூல் அறிமுகவுரை நிகழ்த்திய மூத்த ஊடகவியலாளர் திரு சிவநேயச்செல்வன் பேசும் போது மகாவம்சத்தை ஒரு வரலாற்று நூலாகக் கொள்ள முடியாது. சில வரலாற்று உண்மைகளை புராணங்களுக்குரிய கற்பனையோடு கலந்து மகாவம்சத்தை மகாநாம தேரர் எழுதியுள்ளார் எனக் குறிப்பிட்டார்.

நூல் நயவுரை ஆற்றிய முன்னாள் நா.உ. மா.க. ஈழவேந்தன் “சட்டத்தரணி தம்பு கனகசபை இத ற்கு முன்னர் ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும் என்ற நூலை தமிழ் – ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் எழுதி வெளியிட்டுள்ளார். “உண்மையில் மகாவம்சம் ஒரு குட்டி வம்சம், சிங்கள இனம் ஆரிய இனம் அன்று, அது ஒரு கலப்பு இனம்” என்று முனைவர் அசேந்திரன் தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். சிங்கள இனம் பற்றி ஜி.சி. மென்டிஸ் குறிப்பிடும் போது சிங்கள இனம் உருவாகுவதற்கு தமிழர்கள் உதவியுள்ளார்கள். சிங்களவர்களது குருதியில் தமிழ் குருதி ஓடுகிறது. சிங்கள மொழியின் கட்டமைப்பிலும் சொற்களிலும் தமிழின் தாக்கம் தெரிகிறது. அனுராதபுரத்தை ஆண்ட எல்லாளன் மீது படையெடுத்துச் சென்ற துட்ட கைமுனு வழியில் 32 தமிழ் சிற்றரசர்களோடு போரிட்டு அவர்களைத் தோற்கடித்தான் என மகாவம்சம் கூறுகிறது. இது தமிழர்கள் மகாவலி கங்கைக்கு வடக்கே செறிந்து வாழ்ந்ததைக் காட்டுகிறது” என்றார்.

ஆய்வுரை நிகழ்த்திய முனைவர் நா. சுப்பிரமணிய அய்யர் பேசும் போது ” மகாவம்சம் அல்லது மஹாவங்ஸ என்ற நூல் கவுதமபுத்தர் (கிமு 563-483) மற்றும் இலங்கையின் முதல் மன்னனாகப் பவுத்த சிங்களவர்களாற் கருதப்படும் விஜயன் (கிமு 483 – 445) ஆகியோர் முதல் மகாசேன மன்னன் (கிபி 325 – 352) காலம்வரையான வரலாற்றை வரிசைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. மஹாவங்ஸ நூலானது உண்மைத் தரவுகள் பலவற்றை உள்ளடக்கிய ஒரு புனைவு நூல். உள்ளடக்கப் பகுதியில் முதன்மைபெற்றுள்ள அம்சம் துட்ட காமினி என்ற மன்னன் பற்றிய செய்தியாகும். 37 இயல்கள் கொண்ட அவ்வாக்கத்தில் 11 இயல்கள் (22 – 32) அவனைப் பற்றியே பேசுகின்றன. அவ்வகையில் அவனே அதன் காவியநாயகன். எனவே அந்நூல் துட்டகாமினி காவியம் என்பதான கணிப்புக்கே உரியது(முனைவர் இந்திரபாலா கருத்து). அதிலே பொதுவாக இலங்கையின் வரலாற்றுக்கும் சிறப்பாக ஈழத்தமிழரின் வரலாற்றுக்குமான பல வரலாற்றுத் தரவுகள் உள்ளன. அந்தவகையில் அவ்வாக்கம் வரலாற்று முக்கியத்துவமுடையது.

திரு தம்பு கனகசபை எழுதிய ஈழத் தமிழரின் வரலாறும் வாழ்வியலும் (2012) என்ற ஆக்கம் முக்கியமானது. இந்நூலை பேராசிரியர் சி. பத்மநாதன் மற்றும் நக்கீரன் மற்றும் பலரின் அணிந்துரை ஆய்வுரை முதலியன அணிசெய்கின்றன. அந்நூலின் தொடர்ச்சியே இந்த மகாவம்சம் ஒரு மீளாய்வு என்ற நூலாகும். திரு தம்பு கனகசபை அவர்களது நோக்கமும் செயற்பாடும் வாழ்த்தி வரவேற்கப்பட வேண்டியன. அதேவேளை இவ்வாறான முயற்சிகள் தனியொருவருடைய செயற்பாட்டால் மட்டும் நிறைவுபெற்று விடுவதில்லை என்பதையும் நாம் கருத்துள் கொள்ளவேண்டியதவசியமாகும். இந்நூலிலே பெயர்ப் பிழைகள் மற்றும் எழுத்துப் பிழைகள் என்பன இடம்பெற்றுள்ளன. இவற்றை மறுபதிப்பிலே நூலாசிரியர் திருத்திவெளியிடவேண்டும். நிறைவாக ஈழத்தமிழரின் வரலாற்றை எழுதுவதற்கான முயற்சிகள் ஒன்றுதிரட்டப்பட வேண்டும். அதற்காக ஈழத்தமிழரின் வரலாற்றுக் கழகம் என ஒரு அமைப்பை அனைத்துலக மட்டத்தில் நிறுவவேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

நூலை வெளியிட்டு வைத்துப் பேசிய பேராசிரியர் முனைவர் யோசேப் சந்திரகாந்தன் பேசும்போது “மகாவம்சம் ஒரு வரலாற்று நூலாக் கொள்ளப்படா விட்டாலும் வரலாற்றின் வெற்றிடங்களை நிரப்புகிற நூலாகக் கொள்ளலாம். ஒரு வழக்கறிஞர் ஆக இருந்தும் இப்படியான ஆய்வு நூலை ஒரு வரலாற்று ஆசிரியருக்கு இருக்க வேண்டிய நடுநிலமையோடு வரலாற்று உணர்வோடு அதன் கற்பனைகளையும் அதன் உண்மைகளையும் பகுத்து ஆராய்ந்து இருக்கிறார். அதனை நாம் பாராட்ட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

நூலின் முதல் படியை திரு கரி ஆனந்தசங்கரி சட்டத்தரணி (ஸ்காபரோ ரூச் பார்க் தொகுதி லிபரல் கட்சி வேட்பாளர்) பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவையோர் நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.

ஆசிரியர் சி. துரைராசா நூல்வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அறிஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக நிகழ்ச்சிக்கு நல்லாதரவு வழங்கிய TVI தொலைக் காட்சி, தமிழ் வண் தொலைக்காட்சி, கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், அனைத்துலக தமிழ் வானொலி, ஈழநாடு, தமிழ் மிறர், ஈகுருவி, தமிழ்சிஎன்என், செய்தி, தமிழ் 24 செய்தி சேவை முதலிய ஊடகங்களுக்கும் கழகம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சி முடிவில் எல்லோருக்கும் பாபு உணவகம் வழங்கிய சிற்றுண்டி வழங்கப்பட்டன.

நக்கீரன்-

Balasubramanian

Balasubramanian2jpg

Chandran

"                "

Crowd

"                "

Iyar

Kanagspic

Kavuslaya

"                "

Sekina

Sivaneyachchelvan

Thangabook

"                "

"                "

"                "

http://www.tamilcnnlk.com/canada/news/136612.html

 


படிமுறைத்தமிழ் நூல் வெளியீட்டு விழாவில் தனித்தமிழ் எதிர்ப்பாளர்கள்! – நக்கீரன்

டந்த சனிக்கிழமை 06.09.2014 மாலை கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற திரு.இராசரத்தினத்தின் “படிமுறைத் தமிழ்” நூல் வெளியீட்டு விழாவுக்கு போயிருந்தேன்.

இந்த நூல் தமிழ்ப் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் மூலம் தமிழ் கற்பிப்பதற்காக எழுதப்பட்டது. இங்கு பிறக்கிற குழந்தைகளுக்கு ஆங்கிலம்தான் முதல் மொழியாக இருக்கிறது. தமிழ் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

இந்த விழாவில் பேசியவர்களில் அநேகர் தங்களுக்குத் தனித் தமிழில் நம்பிக்கை இல்லை என்று சொன்னார்கள். நூலாசிரியர் சு.இராசரத்தினம் ஆவர்களும் எனக்கு ஒரு காலத்தில் தனித் தமிழில் நம்பிக்கை இருந்தது. இப்போது பட்டறிவின் அடிப்படையில் இல்லை என்றார்.

பேராசிரியர் பாலசுந்தரம் பேசும் போது நாட்டில் (வன்னியில்) இருந்த போது தனித்தமிழுக்காக இரவு இரவாக கண்விழித்து உழைத்ததாகவும் ஆனால் கனடாவில் தனித்தமிழ் சரிபட்டுவராது என்ற பொருள்படப் பேசினார்.

இதே கருத்தை அருள்சுப்பிரமணியம் எழுதி கடந்த ஆனி மாதம் வெளியிட்ட “தமிழ் படிப்போம்” “வாசிப்போம் எழுதுவோம்” என்ற நூல் வெளியீட்டு விழாவிலும் தெரிவித்தார்.

எனவே இது நாள்பட்ட நோய். ஆசிரியை இம்மனுவேல் மட்டும் தனித்தமிழ் வேண்டாம் என்பவர்களது கருத்தோடு தான் முரண்படுவதாக மேலெழுந்த வாரியாகப் பேசிவிட்டு அமர்ந்தார். ஆக தனித்தமிழ் வேண்டாம் தேவையில்லை என்பவர்களே மேடையை அலங்கரித்தார்கள்.

தனித்தமிழைச் சாடும்போது பேச்சாளர்கள் என்னைப் பார்த்து அதேசமயம் என்னைச் சுட்டாது பேசினார்கள். பண்டிதர் அலெக்சாந்தர் மட்டும் என்னைப் பார்த்து அதே சமயம் மறதி காரணமாக எனது பெயரைச் சுட்டுவதாக நினைத்து வேறு ஒரு பெயரைச் சொன்னார்.

தனித்தமிழ் என்றொரு தமிழ் இல்லை. தமிழ்மொழி என்ற ஒரு மொழிதான் உள்ளது. அந்த மொழியைத்தான் சமற்கிருதம் மற்றும் ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்களைக் கலவாது பேசுமாறு கேட்கிறோம். இல்லை, இல்லை தமிழில் மட்டும் பேசினால் அல்லது எழுதினால் தமிழ்ப் பிள்ளைகளுக்கு விளங்காது.

அதனால்தான் தனித்தமிழை எதிர்க்கிறோம் என்கிறார்கள். தமிழ்ப் பிள்ளைகள் பிறமொழியான ஆங்கிலத்தை படிக்க, எழுத முடியுமென்றால் ஏன் தனித்தமிழ் அல்லது தூயதமிழைப் படிக்க முடியாது? ஆங்கிலம் எவ்வளவு கடினமான சிக்கலான மொழி என்பதை அதைப் படித்தவர்களுக்குத்தான் விளங்கும். எனவே சிக்கல் எங்கே இருக்கிறது என்றால் அது தமிழ்ப் பிள்ளைகளிடம் அல்ல படிப்பிக்கிற ஆசிரியர்களிடம் இருக்கிறது!

அந்நிய ஆட்சியில் ஆங்கிலமொழி ஆட்சிமொழியாக இருந்த சூழலில் படித்தவர்களால் தனித் தமிழை உள்வாங்க முடியாமல் இருக்கிறது. இவர்கள் வரலாற்றின் பிழையான பக்கத்தில் நிற்கிறார்கள். உண்மையில் சைவசித்தாந்தி தமிழ்க் கடல் மறைமலை அடிகளாரால் 1916 ஆம் ஆண்டு தொடக்கி வைக்கப்பட்டு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், பாவலேறு பெருஞ்சித்திரனார், செந்தமிழ்க் காவலர் சி. இலக்குவனார் போன்றவர்களால் தனித் தமிழ் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.

அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கில் இருந்த தமிழுக்கும் இன்று நாம் பேசும் தமிழுக்கும் பெரிய வேற்றுமை உண்டு. தனித்தமிழ் பகைவர்கள் கூட 90 விழுக்காடு தனித்தமிழில்தான் பேசுகிறார்கள். விழாவில் பேசிய நூலாசிரியர் ஒரு இடத்தில் சம்பாஷணை என்ற சொல்லைச் சொல்லிவிட்டு அடுத்த கணம் அதனை உரையாடல் என்று (தனித்) தமிழில் சொன்னார்.

ஆறுகள் கடல் நோக்கித்தான் பாயும். எக்காலத்திலும் அது மலைநோக்கிப் பாயாது. தனித்தமிழ் இயக்கமும் அப்படித்தான். தனித் தமிழ் தேவையில்லை என்று சொல்பவர்களுக்கு ஈழவேந்தன் தனது பாணியில் கீழ்க்கண்டவாறு விடை இறுப்பார்.

“அக்கிராசனர் அகற்றப்பட்டுத் தலைவர் தலைமை தாங்குகிறார். காரியதரிசி காணாமல் போய்விட்டார் செயலாளர் செம்மையாக வீற்றிருக்கிறார். பொக்கிஷாரர் புதைக்கப்பட்டு பொருளாளர் பொலிவோடு விளங்குகிறார். போஷகர் போனயிடம் தெரியவில்லை. காப்பாளர் கனிவோடு வீற்றிருக்கிறார்.”

தமிழ்மொழி வரலாறு தெரியாதவர்களே தூய தமிழுக்கு எதிராக இருக்கிறார்கள். இடைக்காலத்தில் தமிழையும் வடமொழியையும் சமமாகக் கலந்து எழுதும் பழக்கம் இருந்தது. அதனை மணிப்பிரவாள நடை என அழைத்தார்கள். இது தமிழோடு 13 ஆம் நூற்றாண்டில் இணைந்தது.

இரத்தினம் – பவளம் என்ற நேரடிப் பொருளுடைய மணிப்பிரவாளம் என்னும் சொல், தென்னிந்தியாவில் சமஸ்கிருதமும், திராவிட மொழியொன்றும் கலந்து எழுதப்பட்ட ஒரு இலக்கிய நடையைக் குறிக்கும். மணியும், பவளமும் சேர்த்து உருவாக்கப்பட்ட மாலை போல இரண்டு மொழிகள் சமமாகக் கலந்து உருவான இலக்கிய நடை என்பது இதன் பொருளாகும்.

சங்க காலத் தொகைநூல்களில் ஒன்றான அகநானூறு மூன்று பகுதியாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று ‘மணிமிடைப் பவளம்’. இப்பகுப்பில் உள்ள 180 பாடல்களும் நீலநிற மணியோடு செந்நிறப் பவளம் சேர்த்துத் தொடுத்தாற்போன்ற அமைதியினைக் கொண்டிருப்பதால் இதற்கு மணிமிடைப் பவளம் எனப் பெயர் சூட்டினர். இந்த ‘மணிமிடைப் பவளம்’ என்னும் சொல் நாளடைவில் ‘மணிப்பிரவாளம்’ என மருவி வழங்குகிறது.

கிபி 9 ஆம் நூற்றாண்டுக்கு முன் சேரர்கள் ஆண்ட சேரநாட்டில் தமிழ் மொழியே பேசப்பட்டது. இதன் பின்னர் தென்னாட்டில் மணிப்பிரவாளம் பெருக்கெடுத்தபோது சேர நாட்டுத் தமிழ் மாற்றம் பெறத் தொடங்கியது. பாட்டு என்னும் உள்ளூர் இலக்கிய வழக்கு ஒரு பிரிவினரிடையே பயின்று வந்தபோதிலும் சமூகத்தின் உயர் மட்டத்தினர் மத்தியில் மணிப்பிரவாள நடை பரவலாகக் கைக்கொள்ளப்பட்டது.

சிறப்பாக நம்பூதிரி பார்ப்பனர்கள் மணிப்பிரவாளத்தை வளர்ப்பதில் முன்னணியில் இருந்தனர். கேரளத்தில், 14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் லீலாதிலகம் என்னும் இலக்கண நூல், பாட்டு மரபுக்கும் மணிப்பிரவாளத்துக்கும் இடையிலுள்ள தொடர்புகளை வரையறுப்பதுடன், இசைவாகக் கலக்கக்கூடிய உள்ளூர், சமற்கிருதச் சொல் வகைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது.

மணிப்பிரவாளப் பாடல்களில் சமற்கிருத இலக்கணமே பின்பற்றப்படவேண்டும் என்றும் இந்த நூல் கூறுகிறது. இவ்வாறு சேரநாட்டில் மணிப்பிரவாளம் மூலம் சமற்கிருதம் படிப்படியாக ஆதிக்கம் செலுத்தி மலையாளம் என்ற ஒரு புதிய மொழியைப் பிறப்பித்தது. தனித்தமிழ் எதிர்ப்பாளர்களும் மலையாளம் போல் மேலும் ஒரு மொழி பிறப்பதற்கு அறிந்தோ அறியாமலோ மெத்தப் பாடுபடுகிறார்கள்.

மேலே கூறிய வண்ணம் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், பரிதிமாக்கலைஞர் (சூரியநாராயண சாத்திரி) பாரதிதாசன், பாவலேறு பெருஞ்சித்திரனார், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், செந்தமிழ்க் காவலர் சி. இலக்குவனார் போன்ற தமிழ் உணர்வாளர்கள்தான் ‘தனித்தமிழ் இயக்கம்’ என்ற ஒரு மாபெரும் இயக்கத்தைத் தொடங்கி தமிழ்ப் பயிரோடு முளைத்த வடமொழிக் களையைக் களையெடுத்தனர்.

தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக்கால கட்டத்தில் வழக்கத்திலிருந்த பல சமற்கிருத சொற்கள் வழக்கொழிந்து போயின. நமஸ்காரம், ஜலம், சந்தோஷம், அபேட்சகர், பிரஜை போன்ற வடமொழி சொற்கள் முறையே வணக்கம், நீர், மகிழ்ச்சி, வேட்பாளர், குடிமகன் என்றாயின. பாராளுமன்றம் நாடாளுமன்றம் ஆயிற்று.

நான் தமிழ்ப் பள்ளியில் படிக்கும் போது வகுப்பறைக்குள் நுழையும் ஆசிரியாரை ‘நமஸ்காரம் வாத்தியாரே’ என்றுதான் சொல்வோம். ஆனால் இன்று வணக்கம் வழக்கத்தில் வந்துவிட்டது. அதேபோல் ஸ்ரீ, ஸ்ரீலஸ்ரீ, ஸ்ரீமஸ்து, சுபமஸ்து திருவாக, திருத்திருவாக மாற்றப்பட்டு விட்டன. மேலும் ‘ஸஷ்டியப்த பூர்த்தி’ மணிவிழா என்றும், ‘ருதுமங்கள ஸ்நானம்’ பூப்பு நீராட்டு விழா என்றும் ‘கிருஹப்பிரவேசம்’ புதுமனை புகுவிழா என்றும் தூய தமிழாக மாற்றப்பட்டு விட்டன.

அய்ம்பது – நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அச்சிட்ட கல்யாண விஞ்ஞாபனத்தையும் இன்று அச்சிடப்படும் திருமண அழைப்பிதழையும் ஒப்பு நோக்கினாலே தனித்தமிழ் வளர்ச்சியைத் தெரிந்து கொள்ளலாம்.

மாதிரிக்கு ஒன்றைக் கீழே தருகிறேன்.

ஸ்ரீ ராம ஜெயம்

“விவாஹ சுப முகூர்த்தப் பத்திரிகை”

ஸ்ரீ பிரகதாம்பாள் கடாஷத்தால் நாளது விக்ருதி வருஷம் சித்திரை மாசம் 13 – ந் தேதி புதவாரம் பூசநஷத்திரமும் பஞ்சமி திதியும் கூடிய சுபயோக சுபதினத்தில், சூரியோதயாதி நாழிகை 6 க்கு மேல் தனுசு லக்கினத்தில்,

எனது திருச்சிராப்பள்ளி மகா ஸ்ரீ – ஸ்ரீ

சேஷ்ட குமாரன் லேட் கோபாலகிருஷ்ண கோனாரவர்கள்

சிரஞ்சீவி கனிஷ்ட குமாரத்தி சௌபாக்கியவதி

குப்பு சாமிக்கும் லோகநாயகிக்கும்

பாணிக்கிரஹணம் செய்து கொள்ள சர்வேஸ்வரன் கிருபையை முன்னிட்டு, பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு மேற்படி முகூர்த்தம் திருச்சிராப்பள்ளியில் நடைபெறுவதால் அதற்குத் தாங்கள் இஷ்டமித்ர பந்துக்களுடன் நான்கு நாள் முன்னதாகவே வந்திருந்து வைபவத்தை விமரிசையாக நடத்தி குழந்தைகளை ஆசீர்வதித்து சிறியேனையும் கௌரவிக்க வேணுமாய்க் கோருகிறேன்.

13-4-1887 இப்படிக்கு

புதுக்கோட்டை காத்தக்கோனான்

இன்று திருமண அழைப்பிதழ் கொஞ்சு தமிழில் எழுதப்படுகின்றன. விவாஹ சுப முகூர்த்தப் பத்திரிகை அல்லது கல்யாண விஞ்ஞாபனம் என்று யாரும் எழுதுவது கிடையாது.

திருமண அழைப்பிதழ் என்றே எல்லோரும் எழுதுகிறார்கள். அதுபோலவே வருஷம் – ஆண்டு, மாசம் – திங்கள், சுபயோக சுபதினத்தில் – நல்வேளை, சேஷ்ட அல்லது சிரேஷ்ட புத்திரன் – தலைமகன், கனிஷ்ட புத்திரி அல்லது குமாரத்தி – இளைய மகள், சிரேஷ்ட புத்திரி – தலைமகள், கனிஷ்ட புத்திரன் – இளையமகன். சிரஞ்சீவி – திருநிறைச்செல்வன், சௌபாக்கியவதி – திருநிறைச்செல்வி, பாணிக்கிரஹணம் – கைப்பிடித்தல், இஷ்டமித்திர பந்துமித்திரர் – சுற்றமும் நட்பும், தம்பதியினரை ஆசீர்வதித்து – மணமக்களை வாழ்த்தியருளி என மாற்றம் அடைந்துள்ளன.

அறிஞர் அண்ணா கதை உரையாடல் எழுதி வெளிவந்த நல்லதம்பி திரைப்படத்தில் மறைந்த கலைவாணர் கிருஷ்ணனைப் பார்த்து ஒரு அய்யர்:

“ஐயா கெட்டிக்காரக் கோமாளியாரே, இன்னைக்கு நடக்கப் போகும் இந்திரசபா எனும் கூத்திலே ஆசீர்வாதம் தாங்கும்படியா உம்மைக் கேட்டுக்கொள்கிறேன். நமஸ்காரம். ஆசீர்வாதம்” என்பார்.

உடனே கலைவாணர் ‘ஆசி’ எனக்கு ‘வாதம்’ உமக்கு என்று பதில் இறுப்பார்!

ஆனந்த விகடன் இன்று பல ஆங்கில மற்றும் வடமொழிச் சொற்களைப் பெய்து எழுதுகிறது.

ஆனால் 1961 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் நடத்திய நாடக, இலக்கியப் போட்டி பரிசளிப்பு விழா அறிவித்தல் 98 விழுக்காடு தூய தமிழில் வெளிவந்தது.

பேரன்புடையீர், நாளது ஆவணி மாதம் 29 ம் நாள் (14-9-61) வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஆனந்த விகடன் 25,000 ரூபாய் பரிசு நாடகப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற எழுத்தாளர்களுக்குப் பரிசுத் தொகை ஆனந்த விகடன் அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் நேரில் வழங்கப்படும். அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் இவ் விழாவுக்குத் தலைமை வகிப்பார். டாக்டர் பி.வி. ராஜமன்னார் அவர்கள் பரிசுகளை வழங்குவார்.

தாங்கள் அவசியம் வந்து விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.

தங்கள் அன்புள்ள

எஸ்.எஸ்.வாசன்
ஆசிரியர், ஆனந்த விகடன்

நிகழ்ச்சி நிரல்

14-9-61 வியாழன் மாலை 5.30 மணிக்கு

தேனீர் விருந்து, தமிழ் வணக்கம், வரவேற்பு, பரிசுகள் வழங்கல், பாராட்டுரைகள், தலைவர் உரை, நன்றி உரை.

அய்ம்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆனந்த விகடன் ஆசிரிருக்கு இருந்த தனித் தமிழ்ப் பற்று இன்று சிலரிடம் காணாமல் இருக்கிறது. கொச்சைத் தமிழும் பச்சை ஆங்கிலமும் சிதைந்த வடமொழியும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

மந்திரி என்ற சொல்லுக்குத் தனித் தமிழ் ‘அமைச்சார்’ என்பதாகும். திருவள்ளுவர் “படை குடி கூழ் அமைச்சு அரண் ஆறும் உடையான் அரசு” என்றுதான் கூறியுள்ளார். “படை குடி கூழ் மந்திரி சபை…..” என்று கூறவில்லை. பாஷை என்பதை மகாகவி பாரதியார் “யாமறிந்த மொழிகளிலே……..” என்றுதான் பாடியிருக்கிறார். “யாம் அறிந்த பாஷைகளிலே….” என்று அவர் பாடவில்லை. மொழிபெயர்ப்பு என்பதுதான் தமிழ் வழக்கு. “பாஷை பெயர்ப்பு” என்று யாரும் – தனித்தமிழ் எதிர்ப்பாளர்களும் – எழுதுவதில்லை. வருஷம் என்பதற்குப் பதில் ஆண்டு என்ற தனித் தமிழ்ச் சொல்லை நாம் பயன்படுத்துகிறோம். “யாண்டு பலவாக நரையில வாகுதல்…… ” என்ற பிரிராந்தையாரின் பாடல் இரண்டாயிரம் ஆணடுகளுக்கு முந்தியது. பல்லாண்டு கூறி வாழ்த்துவதே தமிழர் பண்பாடு. “நாளும் கோளும், நாளொரு மேனி பொழுதொரு வண்ணமும்” என்ற சொற்றொடர்களில் வரும் நாள் என்ற சொல்லுக்குத் தினம் என்ற வடசொல்லைப் பயன்படுத்தினால் இனிமை இருக்காது.

இது போலவே சங்கீதம் – இசை (இயல், இசை, நாடகம்) சேவை – தொண்டு, (தொண்டர்தம் பெருமை சொல்லவும் கூடுமோ) நதி – ஆறு (ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்) என மாற்றம் பெற்று விட்டன.

பாரதியார் நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து மறைந்தவர். அவர் காலம் சமற்கிருதம் தேவமொழி என்று போற்றிய காலம். தமிழ் நீசமொழி என்று தூற்றிய காலம். சிட்டுக்குருவியைப்பற்றி அவர் எழுதிய உரைநடைத் தமிழைப் படித்துப்பாருங்கள்.

“சிறிய தானியம் போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத்தலை; வெள்ளைக்கழுத்து; அழகிய மங்கல வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை, துளித் துளிக் கால்கள்….”

வன்னியில் வி.புலிகளது நிழல் அரசு இருந்த காலத்தில் எதிலும் தமிழ் எங்கும் தமிழ் எனத் தமிழ் கோலோச்சியது. போராளிகளின் வடமொழிப் பெயர்கள் தூய தமிழுக்கு மாற்றப்பட்டன. அவர்களது பாட நூல்கள் தூய தமிழில் இருந்தன. வணிக நிறுவனங்களின் பெயர்கள் தனித்தமிழில் இருந்தன. தமிழ்மொழியைப் பொறுத்தளவில் அது ஒரு பொற்காலம்.

தபால் என்ற போர்த்துக்கேயச் சொல்லை அஞ்சல் என்றும், பொலீஸ் என்ற ஆங்கிலச் சொல்லை காவல்துறை என்றும் சப்பாத்தை காலணி என்றும் ரொறன்ரோ கல்விச் சபையின் பாட நூலில் காணப்பட்ட பிறமொழிச் சொற்களை மாற்றினால் “அய்யகோ! இது அடாது! இது தமிழில்லை! இந்தத் தமிழ் எங்களுக்குத் தெரியாது” என ஆசிரியர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்கள். (வளரும்)

`படிமுறைத்தமிழ் “ நூல் வெளியீட்டு விழாவில் தனித்தமிழ் எதிர்ப்பாளர்கள்! நக்கீரன் (2)

முன்னரே கூறியவாறு தனித்தமிழ் பற்றிய சிக்கல் ஆசிரியர், பேராசிரியர்கள் மட்டுமே உண்டு. தமிழ்ப் பிள்ளைகளிடம் அந்தச் சிக்கல் இல்லை. தூய தமிழில் படிப்பித்தால் அதுவே தமிழ் என்று நினைத்துப் படிக்கிறார்கள்.

எனது நண்பர் ஒருவரின் மகள் இங்கே பிறந்தவர். நன்றாகத் தமிழ் பேசக் கூடியவர். அவர் நாட்டில் வாழ்ந்த தனது பாட்டன், பாட்டியைப் பார்க்கப் போயிருந்தார். ஒரு நாள் பாட்டிக்கு உடல் நலம் சரியில்லை. வீட்டில் இருந்தவர்கள் அவரை “ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போய் டாக்குத்தரிடம் காட்ட வேண்டும்” என்று பேசிக் கொண்டார்கள். அந்தப் பேச்சு அந்தப் பிள்ளைக்கு விளங்கவில்லை. அதன் பொருள் என்ன என்று தந்தையிடம் கேட்டார். அதற்கு அவர் “வேறொன்றும் இல்லை. பாட்டியை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று மருத்துவரிடம் காட்ட வேண்டும்” என்கிறார்கள் என விளக்கினார். மருத்துவர், மருத்துவமனை என்று கனடாவில் தமிழ்ப் பாடம் படித்த அந்தப் பிள்ளைக்கு யாழ்ப்பாணத்தில் பேச்சு வழக்கில் உள்ள ஆஸ்பத்திரி, டாக்குத்தர் என்ற சொற்கள் விளங்காதது வியப்பில்லை.

அய்ம்பது கடைசியில் நான் திருகோணமலை அரச அதிபர் அலுவலகத்தில் பணியில் இருந்த போது காணிக்கு விண்ணப்பம் கேட்கும் படிவத்தில் அதுவரை காலமும் வழக்கில் இருந்த சில வடமொழிச் சொற்களை நீக்கிவிட்டு அந்த இடங்களில் தனித்தமிழ் சொற்களைப் பயன்படுத்தினேன். விலாசம் என்ற சொல்லை நீக்கிவிட்டு முகவரி என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். விண்ணப்பங்கள் வந்த போது முகவரிக்கு நேராக ‘இல்லை’என்று எழுதியிருந்தார்கள். பின்னர்தான் அந்தச் சொல்லைத் தெரிந்திராத ஊர்மக்கள் முகத்தில் வரியில்லை என்ற பொருளில் இல்லை என்று எழுதிவிட்டது தெரிந்தது.

தமிழில் ஒரு தனிப் பாடல் உண்டு. அவ்வையார் பாடியது.

“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.”

வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்க குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே இருந்தால்தான் வரும்.

இவ்வாறு எழுதுவதால் தவிர்க்க முடியாத இடங்களில் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது எனப் பொருள் கொள்ளக் கூடாது. தமிழில் பொருத்தமான சொற்கள் இருக்க ஏன் இரவல் புடவை என்பதுதான் தனித்தமிழ் ஆர்வலர்களின் கேள்வியாகும். எனவே மீண்டும் கூறுகிறேன். தனித்தமிழ் வேண்டாம் அது பிள்ளைகளுக்கு விளங்காது என்று புலம்புவோர்கள் வரலாற்றின் பிழையான பக்கத்தில் நிற்கிறார்கள்.

நீண்டகாலமாக சமற்கிருத மொழியில் இருந்து தமிழ்மொழி சொற்களைக் கடன் வாங்கியது, ஆனால் தமிழில் இருந்து சமற்கிருத மொழி கடன் வாங்கவில்லை என்ற எண்ணம் இருந்தது. வடசொற்கள் என ஒதுக்கப்பட்ட சொற்களுள் பல தமிழ் மொழியிலிருந்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வடமொழிக்குச் சென்றவை ஆகும். அப்படிச் சென்ற சொற்கள் பல காலப்போக்கில் பேச்சுவழக்கில் பல்வேறு திரிபுகளுடன் பிறமொழிகளில் வழங்கப்படுகின்றன.

உலகம் என்ற சொல் லோகா என்ற சமற்கிருத சொல்லில் இருந்து பிறந்தது என்று சொல்லப்பட்டது. ஆனால் உலகம் என்ற சொல் தனித்தமிழ் சொல்லே என மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் (தேவநேயப்பாவாணர் எழுதியுள்ள சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் என்னும் நூலைப் பார்க்கவும்) நிறுவியிருக்கிறார். உல் > உலகம் என்பது போல் உகம் என்றாலும் உலகம்தான். குவலயம், குவவு, ஞாலம், பார், பொழில், புடவி, பூழில், பொறை, நீரகம், கூ, கோ, கிடக்கை, மண்ணுலகு, மண்ணகம், இருநிலம் (இரு = பெரிய, பெருமை உடைய – இரண்டு என்பதல்ல இங்கு பொருள்), வையம், மேதினி, அகிலம், அவனி, தரணி, தரை, காசினி, புவி, புவனம், பூவுலகு, பூமி, நிலம், உலகம், அகம், அகலிடம், அகலுள், அளக்கர், அசலை (அசையாதது), ஆர், இடை, இளை, கிடக்கை, தகர் (மேடு புடைத்திருப்பது என்னும் பொருள்), தாங்கல், திணி, திணை, திரை, நடு, நிலை, பவனம், பாரி, பாரிடம், புரை, பூதியம், பூழில், வயம், கடலகம் ஆக மொத்தம் 53 க்கும் குறையாத ஒரு பொருள் குறிக்கும் சொற்கள் தமிழில் உண்டு.

உலகம் போலவே நீர், மீன், தாமரை,கமம், மிருதங்கம், பயணம், அமணம், பார்ப்பனர், பரமம், பிசனை(பிரச்சனை) பதிட்டை, அவை, அங்கு, அங்கம், அதம், தானம், தலம் போன்ற சொற்கள் தமிழில் இருந்து சமற்கிருதமொழிக்குச் சென்ற சொற்கள். (http://ta.wikipedia.org/wiki/%).

விழாவில் சிறப்புரை ஆற்றிய வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தமிழ்ச் சொற்களான ஆடு, குட்டி, வேட்டி என்ற சொற்களை ஆஷ்டு, குஷ்டி, வேஷ்டி என்று சிலர் சொல்வதால் அவை தமிழ் அல்ல என்று பொருள்படாது எனக் கூறினார்.

சரி, இனி சு. இராசரத்தினம் எழுதிய நூல்களைப் பற்றிப் பார்ப்போம். படிமுறைத்தமிழ் பாடநூல், பயிற்சிநூல் 2, 3, 4, என மொத்தம் 6 நூல்கள் வெளியிடப்பட்டன. இதே வரிசையில் மேலும் பல நூல்கள் வெளிவர இருப்பதாக சொல்லப்பட்டது. மேடையில் நூலை வாங்கினவர்களுக்கு பாடநூல், பயிற்சிநூல் என இரண்டு நூல்களே கொடுக்கப்பட்டன. எஞ்சிய நான்கு நூல்களை மண்டப நுழைவாசலில் 40 வெள்ளிக்கு விற்பனை செய்யப்பட்டன.

வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் சிறப்புரை ஆற்றினார். ஜெர்மனி போன்ற அய்ரோப்பிய நாடுகளில் பிள்ளைகளுக்கு தமிழ்சொல்லிக் கொடுக்க 500 க்கும் அதிகமான பள்ளிக்கூடங்களும் ஆசிரியர்களும் இருப்பதாகக் கூறினார்.

“உலகெங்கும் உள்ள மொழிகளில் எட்டு மொழிகள் செம்மொழிகள் எனக் கூறப்படுகின்றது. ஆனால் அவற்றுள் ஆறு மொழிகள் தான் செம்மொழிகள் எனச் சிலர் கூறுகின்றனர். அவற்றில் தமிழ்தான் உயர்தனிச் செம்மொழி. திருக்குறள் மற்றும் சிறந்த இலக்கிய நூல்கள் இதற்குச் சான்றாகும். இத்தகைய சிறப்பு மிக்க தமிழ் மொழியைக் கற்க வேண்டும் என்ற ஆசை மாணவர்களுக்கு ஏற்பட்டு விட்டால் அவர்கள் தாமாகத் தமிழைக் கற்க முன்வருவார்கள். அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழ்மொழி கற்பிக்கப்பட வேண்டும்.

இளைய சமுதாயத்தினருக்கு நாம் வழிவிட்டுக் கொடுக்க வேண்டும். அய்ரோப்பிய நாடுகளில் ஒரேமாதித் தமிழ்ப் பாட நூல்கள் உள்ளன. சிறப்பாகத் தமிழ் போதிக்கப்பட்டு, தேர்வும் நடாத்தப்பட்டு வருகின்றது. பல அறிஞர்கள் இதில் ஈடுபாடு கொண்டு செயலாற்றி வருகின்றனர். அதே நிலை ஏனைய நாடுகளிலும் ஏற்படுத்தப் பட வேண்டும்” என்றார். மேலும் அவர் பேசுகையில் அழியப் போகும் மொழிகளில் தமிழ் எட்டாவது இடத்தை வகிப்பதாக சிலர் கூறி வருகின்றனர். இருந்தாலும் நாம் எமது பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்பித்தே ஆக வேண்டும். பெற்றோர்களும் அதில் கவனம் செலுத்த வேண்டும். அதற்குத் திரு. இராசரத்தினத்தினம் எழுதிய இந்நூல்கள் ஊக்கம் கொடுக்கும்” என்றார்.

பேராசிரியர் சண்முகதாஸ் குறிப்பிட்டது போல அய்ரோப்பாவில் உள்ள 21 நாடுகளில் மட்டுமல்ல அவுஸ்திரேலியா, நியூசீலந்து, கனடா (அறிவகம்) போன்றவற்றில் இளம்மழலை, முதுமழலை மற்றும் 1 – 8 ஆம் வகுப்புவரை தமிழ்வளர் நிலை என்ற பெயரில் தமிழ்சொல்லிக் கொடுக்க ஒரேமாதிரியான பாடநூல் இருக்கிறது. இதனை தமிழ் மேம்பாட்டுப் பேரவை இந்தப் பாடப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. பாடப் புத்தகத்தை ஆக்குவதற்கு தமிழகம் (முனைவர் க.ப.அறவாணன்) இலங்கை (பேராசிரியர் க.சிவத்தம்பி) மலேசியா, சிங்கப்பூர், புதுச்சேரி போன்ற நாடுகளில் இருந்து வந்த அறிஞர்கள் ஒன்றுகூடி கலந்துரையாடினார்கள். கனடாவில் இருந்து சு. இராசத்தினம், கதிரவேலு குகதாசன் கலந்து கொண்டார்கள்.

கனடா தமிழ்க் கல்லூரியில் 9 தொடக்கம் 12 ஆம் வகுப்புவரை தொடக்கநிலை, உயர்நிலை இரண்டு நிலையில் தமிழ் படிப்பிக்க தமிழியல் என எட்டுப் புத்தகங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை தமிழில் சிறப்புச் சித்திபெற விரும்பும் மாணவர்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கப் பயன்படுகின்றன.

கனடாவில் நூலாசிரியர் இராசரத்தினம் போன்று மேலும் சிலர் தொடக்கநிலை தமிழ் படிப்பிக்க நூல்கள் எழுதியுள்ளார்கள். அருள் சுப்பிரமணிம் “தமிழ் படிப்போம்” “வாசிப்போம் எழுதுவோம்” என இரண்டு நூல்களை எழுதியுள்ளார். திருமதி விமலா பாலசுந்தரம் தமிழ் பயில்வோம் என்ற நூலை எழுதியுள்ளார்.

கனடிய மண்ணில் பிறந்த பிள்ளைகளுக்குத் தமிழ் படிப்பிக்க முயற்சிகள் நடைபெற்றாலும் மறுபுறம் பெரும்பாலான தமிழ் மாணவர்கள் வசதி, வாய்ப்புகள் பல இருந்தும் தமிழை விரும்பிக் கற்காத நிலைமை தொடர்கிறது. அதற்கான பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

(1) இங்குள்ள ஆங்கில மயச் சூழல். குழந்தையாக இருக்கும் போது நன்றாகத் தமிழ் கதைக்கும் பிள்ளை இளம்மழலைப் பள்ளிக்குப் போகத் தொடங்கிய பின்னர் தமிழை படிப்படியாக மறந்து ஆங்கிலத்தில் மட்டும் பேசுகிறது.

(2) பெற்றோர்களது ஆர்வம் இன்மை. ஒரு பிள்ளை தமிழைப் பேச, எழுத, வாசிக்க பெற்றோர்கள் முயற்சி எடுக்க வேண்டும். ஒரு பிள்ளை தமிழ் படிப்பதும் படியாமல் விடுவதும் பெற்றோர்களின் கையில்தான் உள்ளது. அவர்கள்தான் செவி வழியாகக் கேட்கவும் வாய் வழியாகப் பேசவும் வாசிக்கவும் கையால் எழுதவும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

(3) ஆங்கிலம் போல் போதிய சிறுவர் நூல்கள், இயங்குபடங்கள், விளையாட்டுக்கள் தமிழில் இல்லாமை.

(4) இணையத்தை, தகவல் தொழில்நுட்பத்தைச் சரிவரப் பயன்படுத்தாமை.

(5) தமிழ் சோறு போடுமா என்ற அலட்சியம்.

இவற்றால் கனடாவில் மூன்றில் ஒரு பங்கு பிள்ளைகளே தமிழ் படிக்கின்றன. எஞ்சிய இரண்டு பங்குப் பிள்ளைகள் தமிழைப் படிப்பதில்லை. பெற்றோர்களுக்கும் அதுபற்றிய அக்கறையோ கவலையோ இல்லை. இதே சமயம் சீனர்கள் தங்கள் தாய்மொழியை தலைமுறை தலைமுறையாகப் பேசி வருகிறார்கள். பிள்ளைகள் தமிழைப் படிப்பது வில்லங்கம் என்பதால்தான் ஆங்கில மூலம் தமிழைப் படிப்பிக்க ஆசிரியர் இராசரத்தினம் முயற்சி செய்கிறார். ஆனால் சீனர்கள் பிள்ளை, தாய், பாட்டி என்று எல்லோரும் சீனமொழி பேசுகிறார்களே? அது எப்படி? அவர்களும் சீனமொழியை ஆங்கில மூலம் படிக்கிறார்களா? உண்மை என்னவென்றால் அவர்களுக்கு இருக்கிற மொழிப்பற்று எமக்கில்லை. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என முழங்குபவர்களது வீட்டுப் பிள்ளைகளுக்கே தமிழ் தெரியாது. விதி விலக்குண்டு.

முனைவர் பாலசுந்தரம் அறிமுகவுரை நிகழ்த்தினார். “திரு.இராசத்தினம் அவர்கள் முதன் முதலாக ஆங்கில மொழி மூலமாக தமிழ் கற்பிக்கும் “படிமுறைத் தமிழ்” நூலை வெளியிட்டுள்ளார் அது வரவேற்கத்தக்கது என்றார். தாயக மக்களைப் பற்றிப் பேசும்போது எல்லோரும் யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் பேசுகிறார்கள், மட்டக்களப்பு, திருகோணமலை? மன்னார், வன்னி பற்றி யாரும் பேசுவதில்லை என்று குறைபட்டுக் கொண்டார்.

நூலை ஆய்வு செய்த மெலினி இமானுவேல் மற்றும் கோதை அமுதன் நூல்களில் எழுத்துப் பிழைகள் இருப்பதைச் சுட்டிக் காட்டினர். நூலுக்கு அட்டவணையில்லாத குறையை கோதை அமுதன் எடுத்துச் சொல்லி அடுத்த பதிப்பில் அதனைச் சேர்த்தால் நல்லது எனக் கூறினார். இராசரத்தினம் செய்வதைத் திருந்தச் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர். அப்படியிருந்தும் அவரையும் மீறி பல எழுத்துப் பிழைகள் மொழிபெயர்ப்புப் பிழைகள் இடம்பெற்றது மிகவும் வியப்பாக இருக்கிறது.

1)Draw pictures and colour must read Draw pictures and colour them.

2) Make boat with colour (not colourful) paper……..

3) Study,dance and sing happily (not with happiness)

4) There is a sign of lion living in the jungle(?)

5) That is a apple tree – That is an apple tree

6) He drinks neither milk or juice – He drinks neither milk nor juice

7) Way of liveing – Way of living

8) காகம் கரையும் – caws, காகம் கரையும் – Crow crows

9) வண்டு ரீங்காரமிடும் – bws hum, வண்டு ரீங்காரமிடும் – bee buzz

10) சளி ஆங்கிலத்தில் Hall என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சளி என்றால் ஆங்கிலத்தில் phlegm அல்லது mucous என்றிருக்க வேண்டும்.

11) மாரி – Rain season என்பது Rainy season என்றிருக்க வேண்டும்.

12) வாடை – North wind என்பதற்குப் பதில் Northern/Northerly wind என்று இருக்க வேண்டும்.

13) நன்றி – Thank – Thank you அல்லது Thanks.

13) கரம் வடமொழிச் சொல். கை என்ற தமிழ்ச் சொல் இருக்க பழக்கத்தில் இல்லாத கரம் என்ற சொல் ஏன் பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவில்லை. பிதா,வனம், கீதம், இரத்தம், சனம், அங்கம், கல்யாணம், பிராணி, திகதி போன்ற வட சொற்களையும் தவிர்த்திருக்கலாம்.

இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். இந்தப் பிழைகள் திருத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அவற்றை அச்சகக்காரர் பார்க்கவில்லை போல் தெரிகிறது.

விழாவுக்கு கவிநாயகம் கந்தவனம் தலைமை தாங்கினார். உண்மையில் அதிபர் பொன். கனகசபாபதி அவர்களே தலைமை தாங்க இருந்ததாகவும் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அந்தப் பணியைச் தான் செய்ய வேண்டி வந்துவிட்டது எனக் குறிப்பிட்டார்.

பண்டிதர் அலெக்சாந்தர் நூலினை வெளியிட்டு வைத்தார். முதல் படியை சோபனா லோறன்ஸ் பெற்றுக் கொண்டார்.

வாழ்த்துரை வழங்கிய ஸ்காபரோ ரூச் பார்க் லிபரல் கட்சி வேட்பாளர் கரி ஆனந்தசங்கரி தான் கனடாவுக்கு வந்த காலத்தில் (1983) தமிழ்மொழி படிக்க வசதிகள் இல்லாமல் இருந்ததால் தமிழைச் சரளமாகப் பேசமுடியாமல் போய்விட்டது என்றார். இதனால் அவரது பேச்சு வழமைபோல் தமிங்கிலத்தில் இருந்தது. மனைவியை wife என்றும் பிள்ளைகளை kids என்றும் சொன்னார். இதைக் கவனித்த தலைவர் கவிநாயகம் கந்தவனம் அன்று வெளியிட்ட நூல்களைக் கட்டாயம் படிக்க வேண்டியவர்களில் கரியும் ஒருவர் எனப் பகிடி பண்ணினார்.

1710 இல் இல் இத்தாலி நாட்டிலிருந்து கிறித்துவத்தைப் பரப்ப தமிழகம் வந்த கொன்ஸ்ரான்டின்ஸ் ஜோசப் பெச்சி முனிவர் தமிழைத் துறையறக் கற்றுத் தமிழ் உரைநடையில் பல புதுமைகளைப் புகுத்தினார். எழுத்துச் சீர்திருத்தத்தை மேற்கொண்டார். தேம்பாவணி என்ற காப்பியத்தை இயற்றினார். இவர் எழுதிய “பரமார்த்த குரு” தமிழில் வந்த நகைச்சுவை இலக்கியமாகும்! தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணருமாறு திருக்குறள் (காமத்துப்பால் நீங்கலாக)) தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற அய்ரோப்பிய மொழியில் வெளியிட்டார். இவர் இலத்தீன் மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்ததன் மூலம், அய்ரோப்பிய அறிஞர்கள் பலரையும் தமிழ் மொழி பக்கம் பார்வையை திரும்பச்செய்தார்! ஒரு இத்தாலி நாட்டவர் தமிழைப் படித்து தமிழில் இலக்கண நூல் எழுத முடியும் என்றால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் தமிழில் ஏன் பேச முடியாது? சரி பெச்சி முனிவரை விட்டு விடுவோம். ஜெர்மன் நாட்டுப் பெண் ஒருவர் யாழ்ப்பாணத் தமிழில் பேசுவது மட்டுமல்ல தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழும் சொல்லிக் கொடுக்கிறார்!

தமிழுக்கு யார் தொண்டு செய்தாலும் அவர்களைத் தட்டிக் கொடுத்து போற்ற வேண்டியது எமது கடமை. நூலாசிரியர் இராசரத்தினம் போன்றவர்களது முயற்சி இல்லையென்றால் ஒரு அய்ந்து விழுக்காட்டினர் தானும் கனடாவில் தமிழ் படித்திருக்காது.

அடுத்த பதிப்பில் சொற்பிழை, இலக்கணப் பிழை, மொழிபெயர்ப்புப் பிழைகள் போன்றவற்றைக் களைந்து நல்லமுறையில் நூல்கள் பதிப்பிக்கப்பட வேண்டும்.

thamill

http://www.tamilcnnlk.com/canada/news/136268.html

 


கனடாவில் ‘தமிழ் படிப்போம்’ ‘வாசிப்போம் எழுதுவோம்’ நூல்கள் வெளியீட்டு விழா

திருமகள்

‘பிள்ளைகள் தமிழ் படிக்க வேண்டுமென்றால் பெற்றோர்களும் வீட்டில் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டும். தமிழ் ஆசிரியர் ஒரு வாரத்தில் 2 மணித்தியாலம் தமிழ் சொல்லிக் கொடுப்பதாலேயே பிள்ளைகள் தமிழைக் கற்றுவிட முடியாது. பெற்றோர்களது ஒத்துழைப்பும் தேவை. பல பிள்ளைகள் வீட்டு வேலை கொடுத்தால் அவற்றைச் செய்யாமல் வகுப்புக்கு வருகிறார்கள். காரணம் பெற்றோர்கள் அது பற்றி அக்கறை செலுத்துவதில்லை. தமிழ்மொழிக்கு செம்மொழி தகைமை வழங்கப்பட்டுள்ளது. மொழி அழிந்தால் இனம் அழிந்துவிடும்’ என ‘தமிழ் படிப்போம்’ ‘வாசிப்போம் எழுதுவோம்’ நூல்கள் வெளியீட்டு விழாவில் வெளியீட்டுரை ஆற்றிய எழுத்தாளர், ஆசிரியர் குரு. அரவிந்தன் குறிப்பிட்டார்.

‘தமிழ் படிப்போம்’ ‘வாசிப்போம் எழுதுவோம்’ நூல்கள் வெளியீட்டு விழா கடந்த வாரம் கனடா ஸ்காபரோ பொதுநகர அரங்கில் இடம்பெற்றது. வழக்கம் போல் மங்கள விளக்கேற்றல், தமிழ்மொழி வாழ்த்து, கனடா தேசியப் பண், அகவணக்கம் இடம்பெற்றன.

தொடக்க உரை ஆற்றிய இளைப்பாறிய விரிவுரையாளர், எழுத்தாளர் சிந்தனைப் பூக்கள் எஸ். பத்மநாதன் நூலாசிரியர் சபா. அருள்சுப்பிரமணியத்தின் முயற்சியை பாராட்டினார். ‘நீண்ட காலம் ஆசிரியராகப் பணிபுரிந்த அருள் சுப்பிரமணியம் போன்றவர்களால்தான் இப்படியான நூல்களை எழுத முடியும். நேரத்தையும் காலத்தையும் செலவழித்து தமிழ்ப் பிள்ளைகள் தமிழை இலகுவாகப் படிக்கக் கூடிய பயனுள்ள இரண்டு நூல்களை எழுதியுள்ளார்’ எனக் கூறினார்.

இந்த நூற்றாண்டுக்குள் மறைந்து விடும் மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று என ஐ.நா. கல்வி, அறிவியல், பண்பாடு நிறுவனம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆனால் அது உண்மையல்ல. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அழிந்துவிடும் மொழிகள் பற்றி 2009 இல் ஐ.நா கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள வரைபடத்தில் சுமார் 2,473 மொழிகள் அழிவின் எல்லையில் உள்ளன என்றும் 1950 க்குப் பின் இந்தியாவில் 5 மொழிகள் அழிந்துவிட்டன என்றும் கூறியது. மேலும், 42 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. உலகளாவிய அளவில், 63 மொழிகள் நிச்சயம் மறைந்துவிடும். 82 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன என்று பட்டியலிட்டுள்ளது. அதில் தமிழ் இல்லை. அடுத்த தலைமுறைக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் கடத்தப்படும் மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும்.

எஸ். பம்மநாதன் இளைப்பாறிய தமிழ் விரிவுரையாளர். அப்படியிருந்தும் அவர் பேசும் போது வடமொழிச் சொற்களை பயன்படுத்தினார். அஞ்சலி, நிமிஷம், அர்ப்பணிப்பு, ஆரம்பம், சேவை, தம்பதிகள், கஷ்டம், வருஷம், கரகோஷம் போன்ற வட சொற்களை தாராளமாகப் பயன்படுத்தினார். இந்த வடமொழிச் சொற்களுக்கு ஏற்ப தூய தமிழ்ச் சொற்கள் இருந்தும் அவற்றை ஏன் அவர் பயன்படுத்தவில்லை என்பது விளங்கவில்லை. ஏனைய பேச்சாளர்களும் தங்களது உரையில் சர்வதேசம், சந்தோஷம், நாசம், பாரியார் என்ற வடமொழிச் சொற்களைக் கையாண்டார்கள். சிலர் தூய தமிழ் தேவையில்லை என்றும் பேசினார்கள்.

மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் தமிழ்மொழிக்குத் தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என்ற பதினாறு பண்புகள் இருக்கின்றன எனக் கூறியுள்ளார்.

தூய தமிழ், கலப்புத் தமிழ் இந்த இரண்டில் எதைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது பற்றி விழாவில் பேசியவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு காணப்பட்டது. ‘ஆசியுரை’ வழங்கிய பேராசிரியர் அ.யோசேப் சந்திரகாந்தன் அடிகளார் பேசும் போது குழந்தைகளுக்கு தூய தமிழில் படிப்பிக்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது – திணிக்கக் கூடாது – வழக்கத்தில் உள்ள மொழிநடையில் சொல்லிக் கொடுத்தல் நல்லதென்றார். விடா முயற்சியோடு தமிழ்மொழியை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆங்கிலத்தில் உள்ள குழந்தை இலக்கியம் போல் தமிழ்மொழியில் இல்லை. இது ஒரு குறைபாடு. அதனை நாம் சீர்செய்ய வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்களது குழந்தைகள் இப்போது பல மொழிகளைக் கற்கின்றன. ஆங்கிலம் மட்டுமல்லாமல் பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலி, ஒல்லாந்து என பல ஐரோப்பிய மொழிகளை அவர்கள் கற்கிறார்கள். இதனை நாம் வரவேற்க வேண்டும். உலகில் 7,000 மொழிகள் இருக்கின்றது எனவும் இதில் 40 விழுக்காடு இந்த நூற்றாண்டின் முடிவில் மறைந்து விடும் எனவும் சொன்னார். யேசுநாதர் பேசிய எரேமியம் இப்போது மறைந்து விட்டது என்றார்.

உண்மையில் உலகில் உள்ள வாழும் மொழிகளின் எண்ணிக்கை 7,105 என மொழியியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்த 7105 வாழும் மொழிகளில், அமெரிக்க நாடுகளில் 1060, ஆப்பிரிக்கா நாடுகளில் 2146, ஐரோப்பிய நாடுகளில் 284, ஆசிய நாடுகளில் 2304, ஒஸ்ரேலிய பசிபிக் நாடுகளில் 1311 மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் எழுதவும் பேசவும் வல்லமை கொண்ட மொழிகள் 700 க்கு உட்பட்டவையாகும். சொந்த வரிவடிவத்தில் எழுதப்படும் மொழிகள் 100 மட்டுமே. இவ்வாறு பல்வேறு தன்மைகளுடன் மொழிகள் இருந்தபோதும் இவற்றுக்கெல்லாம் தாயாகத் திகழும் மூலமொழிகள் ஆறு என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அவை ஈபுரு மொழி, கிரேக்க மொழி, இலத்தீன் மொழி, சமற்கிருத மொழி, சீனமொழி, தமிழ்மொழி என்பனவாகும். இவற்றுள் யேசுநாதர் பேசிய எரேமிய மொழி, சோக்ரடீஸ் பேசிய (ஆதி) கிரேக்க மொழி, சீசர் பேசிய இலத்தின் மொழி, வால்மீகி பேசிய வடமொழி (சமற்கிருதம்) என்பன இன்று பேச்சு வழக்கில் இல்லாது இறந்துவிட்டன. ஆனால் கொன்பூசியஸ் பேசிய சீன மொழியும் தொல்காப்பியர், திருவள்ளுவர் ஆகியோர் பேசிய தமிழ்மொழியும் இன்றும் சிறப்புடன் வாழ்கின்றன.

ஆடு, மாடுகள் நுழையா திருக்கத் தோட்டத்துக்கு வேலி எவ்வளவு இன்றியமையாததோ அதேபோல் மொழிக்கும் இலக்கணக் கட்டுப்பாடு இன்றியமையாயது. தமிழ் ஆரியம் போல் உலகவழக்கழிந்து ஒழிந்து சிதையாது அன்று போல் இன்றும் சீரிளமையோடு எத்திசையும் புகழ்மணக்க இருப்பதற்கு ஒரே காரணம் அதன் இலக்கணக் கட்டமைப்பே. இலக்கணக் கட்டமைப்பில்லாது விட்டால் மொழி குலைந்துவிடும். தமிழை எப்படி எழுதினால் என்ன? பொருள் விளங்கினால் போதும் என்ற வாதம் பொருத்தமற்றது. தொல்காப்பியர் கண்ட மொழி இலக்கணத்தை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த கல்வியில் பெரிய கம்பன் அப்படியே பின்பற்றியிருக்கிறான்.

வடவெழுத்தை நீக்கியபின் எவ்வாறு தமிழ் எழுத்தில் எழுத வேண்டும் என்பதை எழுத்தொடு புணர்ந்த சொல் எனும் தொடரால் தொல்காப்பியர் விளக்குகிறார். அதனால் தக்ஷிணம் என்பதை தக்கணம் என எழுதுகிறோம். க்ஷ எழுத்து க்க எழுத்தோடு புணர்ந்து சொல்லாகிறது. விக்ரமன் என்பதில் க்ர என்பதுக்கு க்கிர என்பதொடு புணர்ந்து சொல்லாகிறது. எழுத்தோடு புணர்ந்து சொல்லாக மாற்றாவிட்டால் வடமொழிக்குரிய எழுத்துக்கள் சொற்களில் புகுந்துவிடும். தீங்குநேரும் ஒருமொழி வேற்றுமொழிச் சொற்களைக் கடன்பெற்றாலும் வேற்று மொழி எழுத்துக்களை எக்காரணத்தைக் கொண்டும் உள்ளே புகவிடலாகாது. இது தலையாய தமிழ்காப்பு முயற்சி என்பதை தொல்காப்பியர் தெளிவாக்கி இருக்கிறார்.

தொல்காப்பியருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய கம்பன் தொல்காப்பியரது சிதைந்தன வரினும் இயைந்தன வரையார் என்ற இலக்கணத்தைப் பின்பற்றியே லஷ்மணன் என்பதை இலக்குவன் என்றும் விபீஷணனை விபீடணன் என்றும் சீதாவை சீதை என்றும் ராமனை இராமன் என்றும் வடமொழி எழுத்துக்களைக் களைந்து தமிழ்ப்படுத்தி பாடியுள்ளார்.

இன்றைய தமிழில், ஸ, ஷ, ஜ, ஹ போன்றவற்றைப் பயன்படுத்துவது தொல்காப்பிய நெறிமுறைக்கு முற்றிலும் மாறானது. கல்லாத மக்களும் ராஜா என்பதை ராசா என்று எழுத்தொடு புணர்ந்த சொல்லாக்குகிறார்கள். கல்லாத மக்களுக்கு இருக்கும் தெளிவு கூட, படித்த தமிழர்களுக்கு இல்லாதது வருந்தத்தக்கது.

மொழித் தூய்மை கெட்டதால்த் தான் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகள் பிறந்தது என்பது பலருக்குத் தெரிவதில்லை. வடமொழிக் கலப்பால் மலையாள மொழி ஓராயிரம் ஆண்டுகளுக்கு முந்தித்தான் தோற்றம் பெற்றது. கிபி 6 ஆம் நூற்றாண்டுகளில் கேரள நாட்டில் நம்பூதிரி பிராமண குழுமங்கள் குடியேறத் தொடங்கின. இவர்களிடம் இருந்து சமற்கிருதம் பொதுமக்களின் மொழியில் கலந்தது. இதனால் தமிழும் சமற்கிருதமும் கலந்து மலையாளம் என்ற புதுமொழி உருவம் பெற்றது. தமிழில் உள்ள சிறப்பு ழ எழுத்து மலையாள மொழியில் மட்டும் உண்டு. இன்றைய மலையாளிகள் சேரன் செங்குட்டுவன் வழி வந்தவர்கள். சேரன் தம்பி இளங்கோவின் சொந்தக்காரர்கள். ஆனால் அந்த வரலாற்று உண்மையை அவர்கள் மறுக்கிறாகள்.

நூல் வெளியாட்டு விழாவுக்கு தலைமை தாங்கிய தகைசார ;வாழ்நாட் பேராசிரியர் அ. சண்முகதாஸ் ஜேர்மனி நாட்டில் 60,000 தமிழ்மக்கள்தான் வாழ்கிறார்கள். அங்கே 600 தமிழ்ப் பள்ளிக் கூடங்களை நிறுவி அதில் 50 க்கும் மேலான ஆசிரியர்கள் தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்கள்’ என்றார். இதே கருத்தை செல்வம் சிறிதாஸ் அவர்களும் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

சிகாகோவிலே 1988 இல் தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டது. மலேசியாவில் இருந்து வந்திருந்த தமிழ் ஆசிரியை தமிழ் சொல்லிக் கொடுத்தார். இன்று 400 க்கும் மேற்பட்ட 7 பள்ளிகள் சிறப்பாக இயங்குகின்றன. ஆசிரியர்கள் அன்போடும் ஆர்வத்தோடும் படிப்பிப்பதன் காரணமாக மழலைத் தமிழ் பேசிய நிலை மாறி இன்று அழகிய தமிழ் உச்சரிப்புடன் தமிழைப் பேசுகிறார்கள். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த 5 அகவை சிறுவன் 100 திருக்குறள்களை ஒப்புவிக்கின்றான். பல பிள்ளைகள் 200, 300, 700 என்று ஒப்புவிக்கின்றனர். இல்லினாய் மாநிலத்தின் கல்வித் திட்டத்தில் குழந்தைகள் தமிழ் படிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பெரு நகரங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் சனி, ஞாயிறு நாட்களில் நடக்கின்றன. கனடாவில் இதே பணியை தமிழ்ப் பூங்கா ஆற்றிவருகிறது.

ஆளாளுக்கு நூல்கள் எழுதாமல் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க ஒரே பாடத்திட்டம் இருந்தால் நல்லது என்ற கருத்து பலரால் முன்வைக்கப்பட்டது.

அடுத்து ‘ஆசியுரை’ வழங்கிய கவிநாயகம் வி.கந்தவனம் ‘ஆசியுரை போன்று வாழ்த்துரையும் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளது. இரண்டுக்கும் என்ன வேறுபாடு? முன்னது வடமொழி பின்னது தமிழ். பேசுவதற்குப் பலருக்கு இடம் கொடுப்பதற்கு இது ஒரு உத்தியாக இருக்கலாம்’ என்றார். இராமன் 14 ஆண்டு காட்டுவாழ்க்கையை முடித்தக் கொண்டு அயோத்தி திரும்பிய போது எல்லோரும் அவனை வாழ்த்தினார்கள். ஒருவர் மட்டும் வாழ்த்தவில்லை. அவர்தான் கூனி என்று அழைக்கப்பட்ட மந்தரை. சிறு வயதில் இராமன் கூனியின் முதுகில் அம்புவிட்டு அவளை அவமானப்படுத்தியவன். இராமனை மந்தரை வாழ்த்தாதற்கு அதுதான் காரணம். ஆனால் நான் ஆசிரியர் அருள் சுப்பிரமணியமும் அவரது பாரியாரும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ வாழ்த்துகிறேன்’ என வாழ்த்தினார்.

பண்டிதர் சா.வே. பஞ்சாட்சரம் பேசும் போது வடமொழிக் கலப்புக் கூடாது என பேசுவோர்களை ஒரு பிடி பிடித்தார். தனக்கு மொழித் தூய்மையில் நம்பிக்கை இல்லை என்றார். தான் பண்டிதராக இருந்தாலும் ஆங்கிலமொழியில் பயிற்றப்பட்ட ஆசிரியர் என்றார். தமிழ்ப் பண்டிதர்கள்தான் தமிழைக் கெடுத்தார்கள் என்ற பழிச் சொல் இருக்கிறது. அவரது பேச்சை செவி மடுத்தவர்கள் அதனை வழிமொழிவார்கள்.

தமிழ்மொழி வரலாறு தெரியாதவர்களே தூய தமிழுக்கு எதிராக இருக்கிறார்கள். ஒரு காலத்தில் தமிழையும் வடமொழியையும் சமமாகக் கலந்து எழுதும் பழக்கம் இருந்தது. அதனை மணிப்பிரவாள நடை என்று அழைத்தார்கள். தமிழ்க் கடல் மறைமலை அடிகள், பரிதிமாக்கலைஞர் (சூரியநாராயண சாத்திரி) பாரதிதாசன், பாவலேறு பெருஞ்சித்திரனார் போன்ற தமிழ் உணர்வாளர்கள்தான் ‘தனித்தமிழ் இயக்கம்’ என்ற ஒரு மாபெரும் இயக்கத்தைத் தொடங்கி தமிழ்ப் பயிரோடு முளைத்த வடமொழிக் களையைக் களையெடுத்தனர். தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக்கால கட்டத்தில் வழக்கத்திலிருந்த பல சமற்கிருத சொற்கள் வழக்கொழிந்து போயின. நமஸ்காரம், ஜலம், சந்தோஷம், அபேட்சகர் போன்ற வடமொழி சொற்கள் முறையே வணக்கம், நீர், மகிழ்ச்சி, வேட்பாளர் என்றாயின.

இந்த மாற்றத்தை ஈழவேந்தனும் சுட்டிக் காட்டினார். அக்கிராசனர் அகற்றப்பட்டு தலைவர் தலைமை தாங்குகிறார். காரியதரிசி காணாமல் போய்விட்டார் செயலாளர் செம்மையாக வீற்றிருக்கிறார். பொக்கிஷாரர் புதைக்கப்பட்டு பொருளாளர் பொலிவோடு விளங்குகிறார். போஷகர் போனயிடம் தெரியவில்லை. காப்பாளர் கனிவோடு வீற்றிருக்கிறார்.

தமிழ்ப் பள்ளியில் படிக்கும் போது ‘நமஸ்காரம்’ வாத்தியாரே என்றுதான் சொல்வோம். இன்று வணக்கம் வழக்கமாகிவிட்டது. அதேபோல் ஸ்ரீ, ஸ்ரீலஸ்ரீ, ஸ்ரீமஸ்து, சுபமஸ்து திருவாக, திருத்திருவாக மாற்றப்பட்டு விட்டன. மேலும் ‘ஸஷ்டியப்த பூர்த்தி’ மணிவிழா என்றும், ‘ருதுமங்கள ஸ்நானம்’ பூப்பு நீராட்டு விழா என்றும் ‘கிருஹப்பிரவேசம்’ புதுமனை புகுவிழா என்றும் தூய தமிழாக மாற்றப்பட்டு விட்டன.

இன்று ஒரு 50 ஆண்டுகளுக்கு முந்தி அச்சிட்ட கல்யாண விஞ்ஞாபன பத்திரிகைக்கும் இன்று அச்சிடப்படும் திருமணை அழைப்பிதழையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தனித்தமிழ் இயக்கத்தின் அருஞ்செயல் தெரியும். திருமண அழைப்பிதழ் இன்று கொஞ்சு தமிழில் எழுதப்படுகின்றன. கல்யாணம் – திருமணம், வருஷம் – ஆண்டு, சிரேஷ்ட புத்திரன் – தலைமகன், சிரேஷ்ட புத்திரி – தலைமகள், கனிஷ்ட புத்திரன் – இளையமகன். கனிஷ்ட புத்திரி – இளையமகள். சிரஞ்சீவி – திருநிறைச்செல்வன், சௌபாக்கியவதி – திருநிறைச்செல்வி, இஷ்டமித்திர பந்துமித்திரர் – சுற்றமும் நட்பும். தம்பதியினரை ஆசீர்வதித்து – மணமக்களை வாழ்த்தியருளி என மாற்றம் அடைந்துள்ளன.

இப்படி எழுதுவதால் தவிர்க்க முடியாத இடங்களில் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தக கூடாது எனப் பொருள் கொள்ளக் கூடாது. தமிழில் பொருத்தமான சொற்கள் இருக்க ஏன் இரவல் புடவை என்பதுதான் எமது கேள்வி.

அடுத்துப் பேசிய செல்வம் ஸ்ரீதாஸ் பிள்ளைகளுக்கு அகரத்தைத்தான் முதலில் கற்பிக்க வேண்டும் என்றார். அதாவது சுழி எழுத்துக்களை கற்பிக்க வேண்டும் என்றார். பிள்ளைகள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைப் பயிலும் ஆற்றல் உடையவர்கள். மொழிக்கலப்பு பிள்ளைகளைக் குழப்பிவிடும் என்றார்.

பேராசிரியர் இ. பாலசுந்தரம் பேசும் போது ரொறன்ரோ கல்விச் சபையை கடுமையாகச் சாடினார். அவர்கள் தமிழை நாசமாக்கி விட்டார்கள் எனக் குற்றம் சாட்டினார். ரொறன்ரோ கல்விச் சபை நாற்பதற்கும் மேற்பட்ட மொழி பேசும் பிள்ளைகளுக்கு ஒரே பாடத் திட்டத்தைத்தான் பயன்பாட்டிற்கு விட்டிருக்கிறது. இங்கேதான் சிக்கல் எழுகிறது. ஒவ்வொரு மொழிக்கும் அந்த மொழி பேசுவோர் பண்பாட்டுக்கு ஏற்ப பாடநூல்களை ரொறன்ரோ கல்விச் சபை எழுதுமா? இது பெரிய கேள்வியாக உள்ளது.

நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் எழுத்துக்களைப் பிள்ளைகளுக்குச் சுழித்து எழுதக் கற்றுக் கொடுக்க வேண்டுமா அல்லது கோடு போட்டு எழுதக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்பதில் பேச்சாளர்கள் ஆளுக்காள் முரண்பட்டார்கள். தமிழ் அரிச்சுவடியில் அகரம் முதல் எழுத்து, அப்பா, அம்மா, அத்தை போன்ற சொற்கள் அகரத்தில்தான் தொடங்குகின்றன என்பது செல்வம் சிறிதாஸ் அவர்களுடைய வாதம். இல்லை அம்மா, அப்பா என்பதற்குப் பதில் படம், பப்படம், மடம் என்ற எழுத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதக் கற்பிப்பது எளிதானது என்பது வேறு சிலரது வாதம். நூலாசிரியர் ‘தமிழ் படிப்போம்’ என்ற நூலில் கோடு போட்டு எழுதும் முறையைக் கற்பிக்கிறார்.

தமிழ்த் தொலைக்காட்சி அரும்புகள் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி வாசுகி நகுலராசா தமிழ் படிப்பிப்பதை ஒரு தவமாக நினைத்து பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றார்.

தமிழ் கற்றல், கற்பித்தல் பற்றி இளைய தலைமுறையைச் சேர்ந்த இருவர் பேசினார்கள். ஒருவர் ஆசிரியர் கு. இராஜ்குமார் மற்றவர் சயனிகா சுரேஸ். சயனிகா சுரேஸ் தனது இரண்டாம் அகவையில் தாயகத்தைவிட்டு பெற்றோருடன் வந்தவர். அவர் பேசும் போது ‘ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களே இருக்கின்றன. ஆனால் தமிழில் 247 எழுத்துக்கள் இருக்கின்றன. எனவே தமிழ் மாணவர்கள் 247 எழுத்துக்கள் உள்ள தமிழைப் படிக்க விரும்புகிறார்கள் இல்லை. ஆனால் நூலாசிரியர் அருள்சுப்பிரமணியம் அவர்கள் இந்த நூலில் தமிழின் அடிப்படை எழுத்துக்கள் 12 உயிர், 18 மெய், 18 அகரமேற்றிய மெய் ஆக மொத்தம் 48 எழுத்துக்களையும் கற்றாலே மொழியின் அத்திவாரத்தை புரிந்து கொள்ளலாம்’ என்கிறார். சயனியா ஆசிரியர் அருள்சுப்பிரமணியத்திடம் தமிழ் கற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நூலாசிரியர் அருள்சுப்பிரமணியம் விழாவைச் சிறப்பித்த எல்லோருக்கும் நன்றி கூறினார். தமிழ் மிறர் உட்பட பல செய்தித்தாள்களுக்கு நன்றி தெரிவித்தார். எல்லோருக்கும் மேலாக தனது துணைவியாரும் தமிழ்ப் பூங்கா அதிபருமான யோகா அருள்சுப்பிரமணியத்து நன்றி கூறினார். குறிப்பாக அறிவகத்துக்கு நன்றி கூறினார். அறிவகத்தில் இருந்து வெளியில் வந்த காரணத்தாலேயே இந்த நூல்களை எழுத நேரம் கிடைத்ததாகவும் அதற்காக அவர்களுக்குச் சிறப்பாக நன்றி கூறுவது தனது கடமை என்றும் கூறினார். நூலாசிரியரின் இந்தப் பேச்சு வஞ்சகப் புகழ்ச்சி என்பதை அவையோரில் பலர் புரிந்து கொண்டிருக்க மாட்டார்கள்.

இனப்பற்று, மொழிப்பற்று என்று வரும்போது நூலாசிரியர் அருள்சுப்பிரமணியத்தை விஞ்ச யாரும் இல்லை. தனது வீட்டுத் திருமணத்தை அய்யர் இல்லாமல் அருந்ததி பாராமல் தமிழில் நடத்தியவர். திருமணத்துக்கு வருகை தந்தவர்களுக்கு திருக்குறள் நூலைப் பரிசாகக் கொடுத்தவர்.

கனடா மண்ணில் தமிழ் மெல்லச் சாகும் என்ற அச்சம் இருக்கிறது. ஆனால் இப்படியான விழாக்களில் கலந்து கொள்ளும் போதுதான் தமிழ்மொழி நீடித்து வாழும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.


IMG_2205IMG_2210IMG_2268IMG_2302IMG_2376 (2)IMG_2308 (3)IMG_2223 (3)

 

http://www.thinakkathir.com/?p=59058

Published on June 20, 2014