தமிழ்த் தொலைக்காட்சியில் சோதிடரின் தனித் தவில்!

 

நக்கீரன்

 

ந்த வாரம் ஒரு செய்தி வந்திருக்கிறது.  மனிதனின் அடுத்த இலக்கு செவ்வாய்க் கோளாம். மனிதர்கள்  2031 ஆம் ஆண்டளவில் வேற்று கோள்ளில் குடியிருப்பவர்களைச்  சந்திக்க முடியும் என உருசிய வானியலாளர்  கூறியுள்ளார்.   உருசியாவில் மார்ஸ்500 என்ற விண் ஓட மாதிரி வில்லையில் இதற்கான பயிற்சிகள் இடம் பெற்று வருகின்றன.

அங்குள்ள விண்வெளி ஆய்வு கூடமொன்றில் இதற்கான ஒத்திகைகள் நடக்கின்றன. தற்போது ஆய்வு கூடத்தில் உள்ள இந்த மாதிரி வில்லையில் கடந்த யூன் மாதம் முதல் ஆறு பேர் செவ்வாயில் காலத்தைக் கழிப்பதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்
.

செவ்வாய்க் கோளில்  தண்ணீருக்கான ஆராய்ச்சியை நாசாவும் செய்து வருகிறது.  சென்ற டிசெம்பர் 2004 இல் நாசா Spirit,Opportunity னப்  பெயரிடப்பட்ட இரண்டு மனித இயந்திரங்களை வெற்றிகரமாக செவ்வாயில் இறக்கியது பலருக்கு நினைவிருக்கலாம்.  அந்த மனித இயந்திரங்கள் பயனுள்ள பல தகவல்களைப் புவிக்கு அனுப்பி இருந்தன.  அதன் அடிப்படையில் செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான சான்றுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த இயந்திர மனிதர்கள் தமது பணியை  நிறைவேற்றுவதற்காக செயற்கையான அறிவு அவற்றிற்கு [Artificial Intelligence (AI)] வழங்கப்பட்டிருந்தது.  முதன் முதலாக செவ்வாயினை நெருங்கிய பெருமை Mariner 4 என்ற விண்வெளிக் கலத்தைச் சாருகிறது.

 

பேரண்டத்தில் நாம் தனியாக வாழ்கிறோமா ? உயிரினங்கள் வேற்றுக் கோள்களில் வாழ்ந்தனவா ? அவை அழிந்து போயிருந்தால் அவற்றுக்கான காரணங்கள் என்ன? போன்ற வியப்பூட்டும்  தரவுகளை அறிந்து கொள்வது  வானியலாளர்களின் கனவாக உள்ளது. செவ்வாய் பற்றிய ஆராய்ச்சியினை ஆழமாக மேற்கொள்வதில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் NASA, அய்ரோப்பிய ஆய்வு மையம் ESA போன்றனவும் உருசியா, இங்கிலாந்து, இத்தாலி,  சீனா ஆகிய நாடுகளும் பெரு முயற்சி எடுத்து வருகின்றன.

செவ்வாய்க் கோள் புவியைப் போன்ற உயிரின வாழ்க்கைக்குச் சாதகமான ஒரு இடமாக பண்டைய காலத்தில் இருந்திருக்கலாம் என்ற அய்யம் வலுப்பட்டு வருகிறது.  செவ்வாய்
புவிவியல் இருந்து 56.00 மில்லியன் கிமீ (35.00 மில்லியன் கல்) தொலைவில்  காணப்படுகிறது.  ஞாயிறில் இருந்து  227.94 மில்லியன் கிமீ (141.55 மில்லியன் கல்) ஆகும்.   அதன் விட்டம் 6,794 கி.மீ (4,219 கல்).  செவ்வாய் ஞாயிறைச் சுற்றி வரும்போது புவிக்கு அண்மையாகவும் சேண்மையாகவும் இருக்கும். எனவே அதன் தொலை கூடிக் குறையும். இது ஏனைய கோள்களுக்கும் பொருந்தும். செவ்வாய் புவியைவிட நாலில் ஒரு பங்கு அளவாகும்.

 

இவ்வாறு வானியலாளர்கள் செவ்வாய் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போது நம்மவர்கள் சாதகத்தில் செவ்வாய்க் குற்றம் இருக்கிறது எனவே மணப் பொருத்தம் இல்லை என்று பத்தாம் வகுப்புப் படித்த சோதிடர் சொல்ல மணப் பேச்சு நின்றுவிடுகிறது. பெண்ணின் சாதகத்தில் செவ்வாய் எட்டில் இருந்தால் செவ்வாய் எட்டில் இருக்கும் மாப்பிள்ளையின் சாதகம்தானாம் அதோடு பொருந்தும். பெண்ணைப் பெற்றவர்கள் செருப்புத் தேய நாயாய் பேயாய் மாப்பிள்ளை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

 

சாதாரண மக்கள்தான் அப்படியென்றால் அறிவியல் கண்டு பிடித்த தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றும் இப்படியான மூடக்கொள்கைகளை மக்களிடம் சந்தைப் படுத்துவதில் மும்ரமாக ஈடுபட்டுள்ளது.

 

கடந்த ஞாயிற்றுக் கிழமை (யூன் 26,2011) மதியம் தமிழ்த்  தொலைக்காட்சியில் நடந்த Cross Roads   என்ற நிகழ்ச்சியில் சோதிடம் பற்றிய கருத்தாடல் நடந்தது. அதில் தோன்றிய பெண் சோதிடர் ஒருவர் மனிதனது நன்மை தின்மை, உடல்நலம் உடல்நலமின்மை, செல்வம், கல்வி, தொழில் எல்லாவற்றையும் ஒருவரது சாதகத்தை வைத்துத் துல்லியமாக  அறிந்து கொள்ளலாம் என அடித்துச் சொன்னார்.

 

வாழ்க்கை நிச்சயம் இல்லாததால் மனிதர்களுக்குத் தங்கள் வருங்காலம் பற்றி அறிவதில் அதீத ஆர்வம் காட்டுகிறார்கள்.   அந்த ஆர்வத்தை முதலீடாக வைத்து இந்தச் சோதிடர்கள் அவர்களை  ஏமாற்றிப் பிழைக்கிறார்கள்.

 

பண்டைய மனிதனுக்கு விண்வெளியும் அங்கு காணப்படும் கோடிக்கணக்கான விண்மீன்களும் (Stars)  சுற்றும் கோள்மீன்களும் (planets) பெரிய மலைப்பையும் வியப்பையும் அச்சத்தையும் கொடுத்திருக்க வேண்டும்.

அந்த மலைப்பு, வியப்பு, அச்சம் காரணமாக மனிதன் விண்மீன்களையும் கோள்மீன்களையும் அதிவலு படைத்த தேவதைகளாகவும் தெய்வங்களாகவும் கடவுளர்களாகவும் கற்பனை செய்து அவற்றைப் பய பக்தியோடு வழிபடவும் செய்தான்.

குறிப்பாக சூரிய வழிபாடு எகிப்து, இந்தியா போன்ற நாடுகளில் பரவலாக இருந்தது. தமிழ்நாட்டில் சூரியனார் கோயில்கள் இருக்கின்றன.

சூரியன் ஒரு தேவதை, சந்திரன் ஒரு தேவதை, நட்சத்திரம் ஒவ்வொன்றும் தனித்தனித் தேவதை, மலை ஒரு தேவதை, நதி ஒரு தேவதை, சமுத்திரம் ஒரு தேவதை, மழை ஒரு தேவதை, இடிமின்னல் ஒரு தேவதை. இப்படிப் கண்டது, கேட்டது, தொட்டது எல்லாம் தேவதை என்று எல்லாவற்றுக்கும்  வெவ்வேறு பெயர் வைத்து அவற்றைத் திருப்தி செய்யப் பூசாரிகளையும் மந்திரவாதிகளையும் மனிதன் நாடினான். மனிதனின் முட்டாள்த்தனம் தேவதைகளின் பேரால் பூசாரிகளும் மந்திரவாதிகளும் அவன் மடியில் கையை வைத்துப் பணத்தைக் கொள்ளையடிக்க வசதியாகப் போய்விட்டது.
சோதிடர்கள் தங்கள் சோதிடத் தொழிலைப்  பின்வரும் காரணிகளின் அடிப்படையில் வைத்துச் செய்துவருகிறார்கள்.

 

ஒரு குழந்தை பிறக்கும் போது வானவெளியில் காணப்படும் 12 இராசிகள், 9  கோள்கள், 12 வீடுகள், 27 நட்சத்திரங்கள் அகியவற்றின் இருப்பை வைத்தே சோதிடர்கள்  சாதகம் எழுதிப் பலன் சொல்கிறார்கள்.

 

கோள்களின் நிலைகளையும் நகர்வுகளையும் குறிப்பதற்கு, சோதிட நூல் புவியை மையமாகக் கொண்ட முறைமை ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் (ஓரை வட்டம்   எனப்படும்.  ஆங்கிலத்தில் Zodiac) எனப்படுகிறது. இது பூமிக்குச் சார்பாக அதனைச் சுற்றியுள்ளதாகக் காணப்படும் ஞாயிற்றின் தோற்றுப்பாதைக்கு (ecliptic) இருபுறமும் 8 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும். இது கண்ணுக்கு புலப்படாத ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

 

(அ) இராசி  வட்டத்தின் (Ecliptic) இருபுறமும் காணப்படும் 12 இராசிகள்.


(ஆ) இராசிச் சக்கரத்தைப்
(Zadiac) பிரிப்பதால் வரும் 12 இராசி வீடுகள்.
 

(இ) இராசிச் சக்கரத்தை வலம் வரும் 9 கோள்கள்.
 

(ஈ) இராசி வட்டத்தின் பின்புலத்தில் காணப்படும் 27 நட்சத்திரங்கள்.

 

பன்னிரண்டு இராசி மண்டலங்களும் (விண்மீன் கூட்டங்கள் - Constellations) இராசிச் சக்கரத்தின் இருபுறமும் 8 பாகை எல்லைக்குள் காணப்படும் நட்சத்திரங்களை ஒன்றோடு ஒன்று செயற்கையாக இணைத்துப் பெறப்பட்ட நட்சத்திரக் கூட்டங்களாகும்.   அண்ட வெளியில் மொத்தம் 88 விண்மீன் கூட்டங்கள் காணப்படுகின்றன.

 

பன்னிரண்டு வீடுகளும் (Houses) 360 பாகை கொண்ட கற்பனையான இராசிச் சக்கரத்தைச் செயற்கையாக 12 ஆல் பிரிப்பதால் பெறப்படுகிறது.  முதலாவது வீடு (இலக்கினம்) தலையைக் குறிப்பதாகவும் அதற்கு அடுத்த 2 ஆவது வீடு முகம் கண்கள் ஆகியவற்றைக் குறிப்பதாகவும் இப்படியே வரிசையாக உடல் உறுப்புக்களை கீழ்நோக்கி 12  வீடுகளுக்கும் ஒதுக்குகிறார்கள்.

 

இந்த  இராசி சக்கரத்தில் காணப்படும் இராசிகளுக்குரிய சின்னங்களுக்கும் (மேடம், இடபம் .....)  வானத்தில் காணப்படும் இராசி மண்டலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக சோதிடர்கள் சொல்கிறார்கள்.  விண்வெளியில் தொலை தூரத்தில் நட்சத்திரக் கூட்டங்கள் இருப்பது உண்மை. ஆனால் அவற்றுக்கு கொடுக்கப்பட்ட பெயர்களும், சின்னங்களும் செயற்கையாக மனிதனால் கொடுக்கப்பட்டவை ஆகும்.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            விருச்சிகம் (தேள்)

 

இராசிச் சக்கரமும் ஞாயிறு செல்லுமாப்போல் தோன்றும் ஒரு கற்பனை வட்டமே! ஆதி மனிதன் விண்ணில் ஞாயிறு செல்லும் பாதையை (இராசி வட்டத்தை) அண்ணாந்து பார்த்த போது சில விண்மீன் தொகுதிகள் அல்லது கூட்டங்கள் அவனது கண்களுக்கு மேடம் (ஆடு) இடபம் (எருது) மிதுனம் (ஆண் பெண் உருவம்) கடகம் (நண்டு) சிம்மம் (சிங்கம்) கன்னி (பெண்) துலாம் (தராசு) விருச்சிகம் (நட்டுவக்காலி) தனுசு (வில்) மகரம் (கடற்குதிரை) கும்பம் (குடம்) மீனம் (இரட்டைமீன்) போன்று காட்சியளித்தன. எனவே இராசி என்பது வான வீதியில் மனிதன் தன் ஊனக் கண்ணால் பார்த்த விண்மீன் தொகுதிகளுக்கு அவன் கொடுத்த கற்பனை உருவமாகும்.

 

 கிரேக்கமொழியில் Zodiac  என்ற  சொல்லுக்கு விலங்குகள் என்பது பொருளாகும். இதனால்தான் இந்தியர்களது கண்ணுக்கு இடபமாகவும் விருச்சிகமாகவும்

 (நட்டுவக்காலி) தோன்றிய இராசிகள் சீனர்களது கண்ணுக்கு முறையே எலியாகவும் பாம்பாகவும் தோன்றியிருக்கிறது!

 

சோதிடத்தி்ல் இராசி சக்கரம் என்ற ஒரு பொறிமுறை இருக்கிறது. இதற்குள்தான்  இந்த சோதிடர்கள் 12 வீடுகள், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு இராசி என 12  இராசிகள்,  ஒன்பது கோள்கள் (கிரகங்கள்)  ஒரு இராசிக்கு இரண்டே கால் நட்சத்திரங்கள் என்ற கணக்கில் 27 நட்சத்திரங்கள் (108 பாதங்கள்) ஆகியவற்றை அடைத்துவிடுகிறார்கள். ஒவ்வொரு இராசிக்கும் ஒன்பது கோள்களில் நிழல் கோள்களான இராகு கேதுவை நீக்கிவிட்டு எஞ்சியவற்றை இராசிகளுக்கு ஒதுக்கி விட்டார்கள். எப்படி  ஏழு கோள்களை 12 இராசி வீட்டுக்குள் அடைப்பது? இந்தச் சிக்கலைத் தீர்க்க சோதிடர்களுக்கு வழியா தெரியாது?   ஞாயிறு (சூரியன்) சந்திரன் இரண்டுக்கும் தலைக்கு ஒவ்வொன்றாக ஒதுக்கிவிட்டு மிகுதி 5 கோள்களை தலைக்கு இரண்டு இரண்டாக ஒதுக்கியுள்ளார்கள்.  இவ்வாறு 7 கோள்களையும் 12 இராசி வீடுகளுக்குள் அடைத்துப் போட்டார்கள்.

 

ஒரு குழந்தை பிறக்கும் போது அண்ட வெளியில் காணப்படும் கோள்கள், இராசிகள், நட்சத்திரங்களை படம் பிடிக்கிற காட்சிதான் இந்த இராசி சக்கரம் என்கிறார்கள். இதனைத்தான் சாதகம் என்றும் சொல்கிறார்கள். பனை ஓலையில் வட்டம் கீற முடியாது. எனவே சாதகத்தை சதுர வடிவில் கீறி வைத்துள்ளார்கள். குழந்தை பிறக்கும் போது இந்த விண்  உடலிகளில்  (Heavenly bodies) இருந்து புறப்படும் காந்த அலைகள் அந்தக் குழந்தையில் பதிந்துவிடுகிறது. அதன் பின் அந்தக் குழந்தையின் இன்பம் துன்பம்,  உயர்வு தாழ்வு, கல்வி செல்வம், நோய் நொடி, திருமணம்,  குழந்தைப் பாக்கியம் ஆகிய  எல்லாவற்றுக்கும் காரணியாக அமைந்து விடுகிறது.  அதாவது சோதிடம் என்பது இந்த இராசி சக்கரத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்படுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறவும், கோள்களினால் தோசம் இருப்பின் அதற்குப் பரிகாரம் காண விழையும் ஒரு சாத்திரமாகும்.

 

இராசிகளை ஆண் பெண் அலி என்று எப்படிக் கண்டு பிடித்தார்கள்?

 

இராசிகளையும், கோள்களையும், நட்சத்திரங்களையும் ஆண்  பெண் அலி என்றும் பிராமணன், சத்திரியன், வைசிகன், சூத்திரன் என்றும் ஆட்சி உச்சம், பகை நட்பு, சமம் நீச்சம், ஆரோகணம், அவரோகணம், பாதங்கள் என்றும் அதி தேவதைகள்   என்றும் மனம்போன போக்கில் எந்த விதிக்கட்டுப்பாடுமின்றி (Arbitrary)  பிரித்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக ஒவ்வொரு நட்சத்திரத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் குணாதிசியங்கள் கற்பிக்கப்படுகின்றன.  இரேவதி நட்சத்திரத்தில்  பிறந்தவர் பிறர் புத்திமதி கேட்பவர், தனது காலில் நின்று பெருமைப்பட வாழ ஆசைப்படுபவர், பின்புறம் மச்சம் உள்ளவர் எனப்படுகிறது.  (ஜோதிட அமுதம் பக்கம் 50)

 

மேலும் பெண்ணுக்கு ஆகாத சில நட்சத்திரங்கள் இருக்கின்றன. சில முதல்தர தோசம். சில இரண்டாம் தர தோசம்.  தோசம் உள்ள நட்சத்திரங்களில் பிறந்த பெண்களுக்கு (1) குழந்தை பாக்கியம் இல்லாமை (2) கணவர் முதலில் மரணம் அடைவார், (3) கணவன் - மனைவி பிரிவு ஊண்டாகும் (4) கர்ப்பமாக  உள்ள சமயத்தில் கணவனுக்கு மாரகம் காட்டும் என சோதிடம் பயமுறுத்துகிறது. 

 

அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்களுக்கு இந்த விளக்கம் மூடநம்பிக்கையாகத் தெரியும். ஆனால் சோதிடம் அறிவியல் அல்ல என்பது சோதிடர்களுக்குத் தெரியும். தெரிந்தும் அதனை நம்பச் சொல்கிறார்கள். மக்களும் நம்புகிறார்கள். கேட்டால் நம்பிக்கைதான் உலகம் என்று தத்துவம் வேறு பேசுகிறார்கள்.

 

சோதிடம் உருவாக்கப்பட்ட பண்டைக்காலத்தில் கதிரவனும் விண்மீன்களும் கோள்களும் நம் உலகை மையமாகக் கொண்டு இயங்கிக்கொண்டிருப்பதாக நம்பப்பட்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன் அறியப்பட வான் சார்ந்த தரவுகளும், அப்போதிருந்த நம்பிக்கைகளுமே சோதிடத்தின் அடிப்படை. அப் பண்டைக்கால அடிப்படைகளைக் கொண்டே சோதிடம் இன்றும் இயங்கிவருகிறது

 

சோதிடர்கள் கணக்கில் எடுக்கும் 9 கோள்களில் ஞாயிறு (சூரியன்) கோள் அல்ல அது ஒரு  நாண்மீன் ( நட்சத்திரம்). திங்கள் (சந்திரன்) கோள் அல்ல அது ஒரு உபகோள். ராகு, கேது  நிழல் கிரகங்கள்  (shadow planets)  எனக் கூறப்படும்.  இவை இரண்டும் கோள்கள் அல்ல.  அவை கற்பனைக் கோள்கள். வானில் ஞாயிறு  நம்மைச் சுற்றிவருவதாக நாம் புவியிலிருந்து காணும் தோற்றப் பாதையும் (ecliptic) சந்திரன்  நம்மைச் சுற்றி வருவதாக நாம் பூமியிலிருந்து காணும் பாதையும் ஒன்றையொன்று சந்திக்கும் /கடக்கும் இடங்கள் (Nodal points) ஆகும்.  இதனையே பலம் வாய்ந்த இராகு, கேது கோள்கள் என்கிறார்கள்.   செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி  இவைகளே உண்மையான கோள்களாகும். இவை சோதிடத்தில் சொல்லப்படுவது போல புவியைச் சுற்றி வருபவை அல்ல. புவியிலிருந்து பார்க்கையில் அவ்வாறு தோன்றினாலும் உண்மையில் அவை ஞாயிறை  சுற்றி வருபவை என்பதை நாம் இன்று அறிவோம்.  சோதிடர்கள் நாம் வாழும் புவியைக் கணக்கில் எடுப்பதில்லை.

 

இராசிகள் ஒவ்வொன்றும் 30 பாகை என்பது தவறு

 

வானியலாளர்கள் 12 அல்ல 13 இராசிகள் உண்டு என்கிறார்கள்.  இந்த இராசிகள் அண்டத்தில் வெவ்வேறு அளவில் காணப்படுகின்றன. ஆனால் சோதிடம் அவை ஒவ்வொன்றும் 30 பாகை அளவு கொண்டவை எனச் சொல்கிறது.  இதனால் 6.9 பாகை மட்டும் கொண்ட விருச்சிக இராசியில் ஒருவர் பிறந்தால் அவர் பெரும்பாலும் அதை அடுத்த இராசியான தனு இராசியில் (31.56 பாகை) பிறந்திருப்பார்.

 

சோதிடர்கள்  புவியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் தலைவிதியை அந்த நேரத்தில் விண்ணில் காணப்படும் சில குறிப்பிட்ட கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள் ஆகியன தீர்மானம் செய்கின்றன என்று சொல்லுகிறார்கள்.  இதனை அறிவியல் அடிப்படையில் எண்பிக்க முடியாது. சோதிடத்தின் அடிப்படை மத நம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கை போல் வெறும் மனத்தளவிலான நம்பிக்கை மட்டுமே.

 

இனி குழந்தை பிறந்த நேரம் எது? இதில் சோதிடர்களுக்குள் ஒற்றுமை இல்லை.  மேலும் ஒரு குழந்தை பிறந்த சரியான நேரம் எது? அந்தக் குழந்தை கருவில் உருவான நேரமா? பிறக்கும்போது தலை அல்லது கால் புவியில் தொட்ட நேரமா? தொப்புள் கொடி அறுக்கப்பட்ட நேரமா? குழந்தை முதல் மூச்சுவிட்ட நேரமா? குழந்தையின் முதல் 'குவா குவா' அழுகைச் சத்தம் கேட்ட நேரமா? இதில் எந்த நேரம் சரியான நேரம்?  தமிழ்த் தொலைக்காட்சி சோதிடர் பிறந்த குழந்தை முதல் மூச்சுவிடும் நேரம்தான் பிறந்த நேரம் என்கிறார்.

 

ஒரு மருத்துவமனையில் இரண்டு மூன்று மணித்துளி வேறுபாட்டில் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் சாதக பலன் ஒன்றாக இருக்க வேண்டும். அவர்களது கல்வி, செல்வம், தொழில், உடல் நலம் போன்றவை ஒரே மாதிரி இருக்க வேண்டும். அவர்களது திருமணம், இறப்புப் போன்றவை ஒரே நேரத்தில் இடம்பெற வேண்டும். அப்படி எங்கேயாவது நடக்கிறதா? அது சாத்தியமா?

 

சரி ஒரு குழந்தை பிறக்கும் போது அண்டவெளியில் காணப்படும் இராசிகள், கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றில் இருந்து எந்த ஆற்றல் (சக்தி) வந்து குழந்தையைத் தாக்குகிறது?  ஈர்ப்பு சக்தியா, அவற்றில் இருந்து புறப்படும் ஒளிக்கதிர்களா? அல்லது வேறு ஏதாவது ஆற்றலா?  ஒன்றுமில்லை என்பதே அறிவியல் உண்மை.கோள்களுக்கு சுய ஒளிகிடையாது. ஞாயிற்றின் ஒளி புவியை வந்தடைய சோதிடர்களுக்கு புவிக்கும் ஏனைய கோளுக்கும் இராசிகளுக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையில் உள்ள தொலைவுபற்றி எந்த அறிவும் கிடையாது.  ஞாயிறு புவியில் இருந்து 93,000,000 மைல்களுக்கு (149,597,890 கிமீ)  அப்பால் இருக்கிறது. அதன் ஒளி ஒரு நொடிக்கு 186,000  மைல் வேகத்தில் புவியை வந்து சேர 8.333 மணித்துளிகள் எடுக்கின்றன.  அதாவது குழந்தை பிறந்த நேரத்தில் இருந்து 8.333 மணித்துளி தாமதமாகவே ஞாயிற்றின் ஒளி வந்து சேருகிறது. இராசிகள், நட்சத்திரங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  இராசிகளும் நட்சத்திரக் கூட்டங்களே!

                                                                                                                                                                                                                                                                              

புவியைப் போல் அல்லாது அண்டத்தை அளக்க கிமீ அல்லது கல் தோதுப்படாது. எடுத்துக்காட்டாக எங்களது பால் வழி மண்டலத்துக்கு அடுத்த பால்வெளி மண்டலம் (Andromeda galaxy) 2.3 மில்லியன் (10 மில்லியன் ஒரு கோடி) ஒளி ஆண்டு தொலைவில் இருக்கிறது. இதை எண்ணில் எழுதுவது கடினம் ஆகும். எனவே விண்மீன்களின் தொலைவைக் குறிப்பிடுவதற்கு புவிக்கும் ஞாயிறுக்கும் உள்ள தொலைவை ஒரு வானியல் அலகாக (Astronomical Unit  -AU) எடுத்துக் கொண்டு குறிப்பிடுகின்றார்கள்.  இது புவிக்கும் ஞாயிறுக்கும் இடையில் உள்ள தொலைவாகும்.   

 

        சிம்ம இராசி(சிங்கம்)Photo

ஒரு ஒளியாண்டு என்பது  ஒளி ஒரு நொடிக்கு
186,000 வேகத்தில் ஒரு ஆண்டைக் கடக்க எடுக்கும் நேரம்.  இது 9,460,536,000,000  கிமீ (6 திரில்லியன் மைல்) தொலைவாகும்.  சிம்மராசியில் 77 நட்சத்திரங்கள் இருக்கின்றன. இதில் உள்ள Regulus என்ற நட்சத்திரம் 85 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கிறது! (The Lion (also Great Lion, Leo major) is one of the constellations of the Zodiac. It comprises 77 stars that are visible to the 'unarmed' human eye. The brightest is Regulus (='Little King') at 85 light-years from Earth, the second brightest Denebola at 42 light-years. Eta Leonis, north from Regulus, looks weak, but it spreads a hundred times as much light as Regulus. This star is at a much greater distance from Earth: 1700 light-years.)

 

கன்னி இராசியில் உள்ள சித்திரை (Spica) நட்சத்திரம் (மொத்தம் 6 நட்சத்திரங்கள்) 262 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கிறது! மிதுன இராசி 2,700 ஒளி ஆண்டுக்கு அப்பால் இருக்கிறது.  கும்ப இராசி  37,500 ஒளி ஆண்டுக்கு அப்பால்.

 

இராசிகள் நட்சத்திரங்கள் போலவே கோள்களும் வெகுதொலைவில் இருக்கின்றன.  புவியின் மீது ஒரு கோளின் ஈர்ப்பு சக்தியைக் கண்டறிவதற்கு புவியிலிருந்து அக்கோளின் தூரமும், அதன் அடர்த்தியும் (Mass) தெரிந்தால் போதும். அடர்த்தி அதிகமானால் ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும், ஆனால் தூரம் கூடக் கூட ஈர்ப்பு சக்தி அதற்கு இரட்டை விகிதத்தில் குறையும். அறியப்பட்ட வானியல் அளவுகளை வைத்துத் தயாரிக்கப்பட்ட ஒரு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பூமியின் மீதான நிலவின் ஈர்ப்பு சக்தியை 'ஒன்று' என அடிப்படை அளவாக எடுத்துக்கொண்டு, கோள்களின் ஈர்ப்பு சக்தி அதனுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. கணிப்புக்கு கோள்களின் சராசரி  தொலைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் அவர் எழுதுகிறார் "ஒரு குறிப்பிட்ட வகையில் கிரகங்கள் இணைந்துள்ள போது அவற்றின் மொத்தக் கதிர் வீச்சு அளவு ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கும். எனவே அந்தக் கதிர் வீச்சு அளவின் ஆதிக்கம் அந்தக் குழந்தையின் வாழ்வில் ஆதிக்கத்தைச் செலுத்தும்."

இந்தக் "கதிர் வீச்சு அளவின் ஆதிக்கம்" வெறும் கற்பனை ஆகும். 

புவிக்கும் கோள்களுக்கும் இடையில் உள்ள தொலைவைக் கணக்கில் எடுத்தால் கோள்களின் மேலாண்மை ஒரு மிகைப்படுத்தப்பட்ட கற்பனை என்பது தெரியவரும். மேலும் சோதிடத்தில்
 கோள்களின் வரிசையே தவறானது. சோதிடத்தில் கிரகங்களின் இருப்பிடத்தை வைத்துப் பலாபலன் சொல்லப் படுகிறது. சோதிட நூலில் கோள்களின் வரிசையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் குரு (வியாழன்) சுக்கிரன் (வெள்ளி) சனி, ராகு, கேது என்று வரிசைப்படுத்தியுள்ளனர். சோதிடம் குறிப்பிட்டுள்ள இந்த வரிசையே தவறானது. சூரியன் என்ற நட்சத்திரத்தை மய்யமாகக் கொண்டு சுற்றிவரும் கோள்களின் நீள்வட்டப் பாதையில் சூரியனுக்கு அடுத்து இருக்கும் கிரகம் புதன் ஆகும். அதைத் தொடர்ந்து வெள்ளி, புவி,  செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டதியூன் ஆகிய கிரகங்கள் இருக்கிறது. சோதிடம் காட்டும் வரிசை தவறாக இருக்கும்போது அதன் கணிப்பும் தவறாகத்தானே இருக்க முடியும்! சோதிடத்தில் ஞாயிறை ஒரு கோளாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதே சமயம் யுரேனஸ், நெப்தியூன் விடுபட்டுப் போய்விட்டது.


ஞாயிறின் பேராற்றல்!

பேராற்றல் மிக்க ஞாயிறைக் கோள்கள் வரிசையில் வைத்துக் கணக்கிடுவது பெரிய தவறாகும்!
15 கோடி கிமீ  தொலைவில் இருக்கும் ஞாயிறில்  நீரகவாயும் ஹீலியமும் சேர்ந்து அணுக்கதிர் வெடிப்பு உண்டாகி ஒரு நொடியில் 60 கோடி தொன்  ஆற்றலை வெளியிட்டு பிரமிக்கத் தக்க தீப்பிழம்பாகவும் காந்தப் புயலாகவும் கதிர் வீச்சாகவும் பாய்ந்து 15 கோடி கிமீ தொலைவிலுள்ள பூமியில் பல விளைவுகளை உண்டாக்குகிறது.

வானவியல் ஆய்வுப்படி சூரியனின் வெப்பம் அதிகரித்துக் கொண்டேயிருப்பதால் இன்னும் சில நூற்றாண்டுகளில் புவியில் கடல் வற்றிப் போகுமாம்! புதன் வெள்ளி ஆகிய கிரகங்கள் ஆவியாகி விடுமாம்! இவ்வளவு பேராற்றல் மிக்க சூரியனை சோதிடத்தில் செத்துப்போன எரிமலையும், வறண்டு போன ஆறுகளும் கடுங்குளிரும் கொண்ட கோள்கள்  வரிசையில் சேர்த்துக் கணக்கிடுவது பிழையாகும்.  சோதிடத்தில் கோள்களின் வரிசையே தவறாக இருக்கும் போது சோதிடத்தின் கணிப்பு எப்படிச் சரியாக இருக்க முடியும்!

அறிவியலுக்கு மாறாத சோதிடர்கள்!

பூமியை மய்யமாக வைத்து சூரியனும் மற்றக் கிரகங்களும் சுற்றிவருவதாக ஆதியில் நம்பினார்களே அந்தத் தவறான நம்பிக் கையிலிருந்து சோதிடர்கள் அறிவியல் சிந்தனைக்கு இன்னும் மாறவில்லை. இதிலிருந்து அறிவியலுக்கும் சோதிடத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவாகிறது! ஊகத்தின் அடிப்படையில் பூமியை மையமாகக் கொண்டு சூரியனும் மற்றக் கிரகங்களும் சுற்றுவதாக நம்பி அதையே அடிப்படையாகக் கொண்டு ஊகத்தில் எழுதப்படு வதுதான் சோதிடம்!

 

கோள்களால் பாதிப்பா!

கோள்கள்  இருக்கும் நிலையைக் கொண்டு தனி மனிதனின் வாழ்க்கையில் நன்மை தின்மை, ஏற்றத் தாழ்வு உண்டாகுமென்று சோதிடர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு கோளுக்கும் ஈர்ப்பு விசை உண்டு! பூமியின் ஈர்ப்புவிசை கூட சிறிது உயரத்திற்கேயுண்டு! புவியின் ஈர்ப்பு விசையில்
6 இல் 1 பங்குதான் துணைக் கோள் திங்களுக்கு. அதுபோலவே மற்றக் கோள்களுக்கும் ஈர்ப்பு விசை மாறுபடும்! துணைக் கோள் திங்களள் புவிக்கு மிக நெருக்கமாக இருப்பதால் அதன் ஈர்ப்பு விசையால் சில பாதிப்புகள் புவியில் ஏற்படுகிறது.  மற்றக் கோள்கள்  எல்லாம் வெகு தொலைவில் இருப்பதால் அக்கிரகங்களின் ஈர்ப்பு விசை சிறிது தூரத்திற்கேயுண்டு. புவியை எட்ட வாய்ப்பில்லை. எனவே புவியில் இருக்கும் மனிதர்களுக்கு கோள்களால் எந்த மாற்றத்தையும் ஏற்றத்தையும் உண்டாக்குவதற்கு வாய்ப்பு சிறிதும் இல்லை. வெகு தொலைவிலுள்ள செவ்வாய் கோளும் சனிக்கோளும் புவிக்கு மிக நெருங்கி வந்தாலும் எந்தப் பாதிப்பும் புவிக்கு ஏற்படாது என்கிறது அறிவியல்! 2003 ஆம் ஆண்டு ஓகஸ்ட்  ஆம் தேதி 38 கோடி கிமீ (23.6 கோடி மைல்)  தூரத்திலுள்ள செவ்வாய்க் கோள் புவிக்கு அருகில் 5 1/2
 கோடி கிமீ (3.41 கோடி மைல்)  தூரத்திற்கு வந்தது. பூமியில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. சனிக்கோள் 2003 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 ஆம் நாள் 120 கோடி கிமீ (74.5 கோடி மைல்) தொலைவிலிருந்து புவிக்கு  மிக அருகில் வந்தது.  புவியை விட 755 மடங்கு பெரிய சனிக் கோளினால்  கூட எந்தவொரு  பாதிப்பையும்  ஏற்படுத்த முடியவில்லை. சனிக் கோளை முழுமையான பாபக்கிரகம் என்றும் சனி தசை 19 ஆண்டுகள் பாடாய் படுத்துமென்றும் செவ்வாய் தோசமென்றும் சனி கெட்ட கோள் என்றும்  கூறிப் பயங்காட்டி தோசபரிகாரம் என்று பணத்தை புடுங்குகிறார்கள்!

புவியில் இருந்து கோள்களின் (ஞாயிறு கோள் அல்ல) பொதுமேனி அடர்த்தி,  தொலைவு, ஈர்ப்புச் சக்தி பின்வருமாறு -
 

கோள் /              அடர்த்தி /    தூரம் (மில்லியன் கி.மீ)/ ஈர்ப்புசக்தி

 

புதன்      /                 33                /92                                      /0.00008
வெள்ளி /              490              / 42                                      /0.006
செவ்வாய் /            64              /  56                                     /0.0002
வியாழன் /    200,000        /  630                                    /0.01
சனி /                 57,000         /1280                                    / 0.0007
யுரேனஸ் /       8,700         / 2720                                  / 0.00002
நெப்டியூன் /   10,000        / 4354                                    /0.00001
நிலவு /                  7. 4          /0.384                                   /1.0
 

இவ்வளவு தொலைவில் உள்ள கோள்களின் கதிர் வீச்சு ஒன்று சேர்ந்து புவியில் ஒரு நாட்டில், ஓர் ஊரில், ஒரு வீட்டில், ஓர் அறையில், நான்கு சுவர்களுக்கு இடையில், ஒரு குறிப்பிட்ட நாளில், நேரத்தில் பிறந்த குழந்தையின் மீது வீசுமா? தாக்குமா? அதனால் குழந்தை பாதிக்கப்படுமா? அறிவியல் இல்லை என்கிறது.

அப்படியே அந்தக் கதிர் வீச்சு தாக்குவதற்கும் அந்தக் குழந்தையின் உடல்நலம், வளர்ச்சி, நுண்ணறிவு, கல்வி, வேலைவாய்ப்பு, வயது, ஆளுமை, வறுமை, செல்வம், கணவன்-மனைவி உறவு, மணமுறிவு, கடன்தொல்லை, மலட்டுத்தன்மை, தேர்தலில் வெற்றி தோல்வி, மாமியார் மருமகள் சண்டை போன்றவற்றுக்கும் என்ன தொடர்பு?

 

இயற்கையில் நால் வகை அடிப்படை விசை மட்டுமே விண்வெளியில் இருந்து கிடைக்கின்றன. அவையாவன வன்விசை (strong force) மின்காந்த விசை (electromagnetic force) மென் விசை (weak force) விசை (gravitational  force)  என்பனவாகும். இவற்றுக்கு மேலாக தெய்வீக ஆற்றல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தனி மனிதனின் வாழ்வியல் கூறுகள், அவனின் பண்பு நலன்கள், கேடுகள் இவற்றுக்கு அவனது மரபியலும்
(
genetics)  சூழலும் (environment) காரணிகள் என்பதே உளவியல் சமூகவியல் அறிவியல் ஆய்வுகளின் முடிவாகும்!

புவியின் மீது நிலவின் ஈர்ப்பு சக்தியின் அளவு ஒன்று' என்றால் அனைத்துக் கோள்களின் ஈர்ப்புச் சக்தியும் சேர்ந்து அதில் 0.017 அளவு தான் உள்ளது எனக் காண்கிறோம். நிலவின் ஈர்ப்புச் சக்திதான் மிக அதிக அளவில் உலகைப் பாதிப்பது. நிலவின் ஈர்ப்பு சக்தியின் பாதிப்பை புவியில் வழக்கமாக நிகழும் கடல் ஏற்றம்
(High tide) கடல் இறக்கம் (Low tide) மூலம் அறியலாம். இதைத் தவிர நிலவினால் பாதிப்பு என்பது ஏதும் இல்லை. ஒரு பிள்ளை பிறக்கும் போது பக்கத்தில் நிற்கும் மருத்துவர்,  செவிலி,  மருத்துவமனை போன்றவற்றுக்கு கோள்களைவிட கூடிய ஈர்ப்பு் சக்தி அதிகம். நிலா மட்டுமே விதிவிலக்கு.

கோள்கள் அனைத்தும் ஈர்ப்புசக்தி உள்ளவை. ஆனால் புவிக்கும் அவற்றுக்கும் இடையேயுள்ள தொலை  மிகவும் அதிகம். கோளின் ஈர்ப்புசக்தி பல கோடி கிலோமீட்டர் கடந்து பூமியை எட்டும்போது முற்றிலும் திறனற்று நீர்த்து விடுவது இயற்கை. மிக அருகிலிருக்கும் நிலவின் அதிக அளவு ஈர்ப்பு சக்தியே நம்மை ஏதும் செய்யமுடியாதபோது பல கோடி கிமீ தொலலைவிலுள்ள கோள்களிலிருந்து பூமியை அடையும் நீர்த்துப்போன ஈர்ப்பு சக்தியால் புவிக்கோ எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பது  அறிவியல் உண்மைாகும். புவியுடன் ஞாயிறு வலம் வந்து கொண்டிருக்கும் இந்த இயற்கையின் சலனங்களைக் கண்டு எவரும் அஞ்சவேண்டிய அவசியமில்லை. ஞாயிறின் வலுவான ஈர்ப்புச் சக்தியின் விளைவாகவே பூமி உட்பட எட்டுக் கோள்களும் ஞாயிறை  அதனதன் சுற்றுப் பாதையில் சுற்றி வருகின்றன
.

 

வானியல் பற்றிய அறிவு வளரும் போது கோள்கள், ஓரைகள், விண்மீன்கள் பற்றி சோதிடம் சொல்வது  பொய் என்பது புலப்படும்.

 

ஒரைகளை சரம், ஸ்திரம், உபயம் என்றும் ஆண், பெண் என்றும் பகல் இரவு ஓரைகள் என்றும்,  உச்ச நீச்சம் என்றும் சோதிடர்கள் பிரிப்பதற்கு வானியல் அடிப்படை இல்லை.  விண்மீன்களைப் பெண்களுக்கு மட்டும் ஆகாத விண்மீன்களாப் பிரிப்பதும் அவற்றால் முதல்தர தோசம், இரண்டாம்தர தோசம் இருக்கிறதென்பதும் அவற்றைத் தேவ கணம், மனித கணம், இராட்சத கணம் என்று பிரிப்பதும் அவை ஒன்றுக்கு ஒன்று பொருந்தாது என்று கூறுவதும்  மூலம் மாமனாருக்கு ஆகாது, ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது, கேட்டை மூத்த மைத்துனருக்கு ஆகாது, விசாகம் இளைய மைத்துனருக்கு ஆகாது என்றும் சித்திரிப்பதற்கும் வானியல் அடிப்படை கிடையாது. இந்த 27 விண்மீன் கூட்டத்தை ற்பனையாக உருவமைப்பை (pattern)  வரைந்து அவற்றுக்குப் பெயர் வைத்ததே மனிதன்தான்.

 

 

ஞாயிறு, மதி உட்பட கோள்களுக்கு ஆட்சி, உச்ச, நீச்ச, பகை, சம, நட்பு வீடுகள் இருக்கிறது என்றும்,  கோள்கள் ஆண், பெண், பிராமணன், சத்திரியன், வைசிகன், சூத்திரன், சத்துரு - மித்திரு, நிலம், நீர், காற்று, நெருப்பு, வான் என பகுப்பதற்கும் வானியல் அடிப்படை அடியோடு கிடையாது.

 

தொலைக்காட்சியில் தோன்றிய சோதிடர் சோதிடத்தை அறிவியல் என எண்பிக்க மெத்தப் பாடுபட்டார்.  திருமணத்தன்று காலில் மெட்டிபோடுவது கருத்தரிக்க ன்றார். மெட்டி போட்டவர்களுக்கு எல்லாம் குழந்தைப் பாக்கியம் கிடைத்திருக்கிறதா?  காது குத்தல், மூக்குத்தி போடுவது அக்கியூபங்சர் முறை என்றார். காது குத்துவது மூக்குத்தி போடுவது உடல்நலத்துக்கு உகந்தது என்றால் கடவுள் அவற்றில் ஓட்டை போட்டு படைத்திருப்பானே? ஏன் அப்படியில்லை?  முள்ளிவாய்க்காலில் 40,000 மக்கள் செத்தார்களே? அது அவர்களது ாதக பலனா? என்று கேட்டதற்கு இராம - இராவண இடையிலான போரைச் சொல்லி அது இராகு - கேது கோள்களால் ஏற்பட்டவை என்றார். சோதிடர்கள் சொல்லும் ஆரூடங்கள் பலிப்பதில்லையே என்று கேட்டதற்கு அதற்கான காரணம் அந்த மனிதருடைய சாதகம் சரியாகக் கணிக்கப்படவில்லை என்றார்.

 

சோதிடருக்கு எண்சாத்திரமும் தெரியும் என்பதைக் காட்ட 3 எண் காரர்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு மாதிரியும் ாழை, பலா, மாம்பழம் போலவும் நன்றாக இருப்பார்கள் என்றார். இப்படியே எல்லா  எண்களுக்கும் மகிமை உண்டு என வாதிக்கலாம்.

 

ஒன்றானவன், உருவில் இரண்டானவன், உருவான செந்தமிழில் மூன்றானவன், நன்கான வேதத்தில் நான்கானவன், நமச்சியவாய என அய்ந்தானவன், இன்பச்சுவைகளுக்குள் ஆறானவன், இன்னிசை சுவரங்களில் ஏழானவன், சித்திக்கும் பொருள்களில் எட்டானவன், தித்திக்கும் நவரச வித்தானவன், பத்தானவன் நெஞ்சில் பற்றானவன் இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம்!

 

உலகில் 700 கோடி மக்கள் இருக்கிறார்கள். பத்து எண்கள்தான் இருக்கின்றன. எனவே 70 கோடி மக்களது பலன்கள் ஒன்றாக இருக்க வேண்டும்? அப்படி எங்காவது இருக்கிறதா?

 

இன்னொரு கேள்விக்கு கனடா போக பூமி (Consumerism)  பலன்கள் அப்படித்தான் இருக்கும் என்றார். அப்படியென்றால் இந்த சோதிடர் புண்ணிய பூமியில் இருந்து எதற்காக போக பூமிக்கு வந்தார்?  சாதகப் பலனா? தலையெழுத்தா? சுகபோக ஆசையா?

 

 புண்ணிய பூமியின் யோக்கியதை

 

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் (110 கோடி)  52. 6 கோடி குடும்பங்களது (59 விழுக்காடு) பொதுமேனி ஆண்டு வருமானம் ரூபா 12,500 மட்டுமே!

இந்தியாவில் ஆண்டுக்கு
25 மில்லியன் ( 2.5 கோடி) குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 2.7 மில்லியன் பிள்ளைகள் 5 வது அகவை நிறையு முன்னர் இறந்து போகின்றார்கள்.  இருபத்தாறு விழுக்காடு  பிறப்பு எடை விழுக்காட்டைவிட மிகக்குறைவான எடையோடு பிறக்கின்றன இந்தியாவில் வறுமை நிலையை மதிப்பீடு செய்த பொருளாதார வல்லுநர்கள் இந்தியாவில் 4 அகவைக்குக் குறைவான 60 மில்லியன் (6 கோடி)   குழந்தைகள் ஊட்டவலுப் பற்றாக் குறையால் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்கிறார்கள். இந்தியாவில் ஆயிரத்தில் 7 குழந்தைகள் காச நோயால் பீடிக்கப் பட்டுள்ளார்கள்.

 

உலகிலேயே நோயுற்றோர் மற்றும் அதிக இறப்பு  விழுக்காட்டைக் கொண்டிருக்கும் நாடாக  இந்தியா  திகழ்கிறது. இ‌ந்‌தியா எ‌ச்அய்வி பா‌தி‌ப்‌பி‌ல் இர‌ண்டா‌ம் இட‌த்‌தி‌ல்

இரு‌க்‌கிறது.  இந்தியாவில் எச்அய்வி தொற்று உள்ள 24 லட்சம் பேரில் 9 லட்சம் பேர் பெண்கள். (http://www.luxinfonew.com/ta/technology/news.php?) ஒவ்வொரு நாளும்

 7,000 பேர் புதிதாக  எச்அய்வி நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் 70,000 குழந்தைகளுக்கு எச்அய்வி பாதிப்பு உள்ளதாக யுனிசெஃப் அமைப்புத் தெரிவித்துள்ளது.

 2009 ஆம் ஆண்டில் எச்அய்வி நோயால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 7,700 ஆகும். (http://new.vikatan.com/article.php?aid=7633&sid=214&mid=1)

 

காஞ்சி காமாட்சி,  மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, நாகை நீலாயதாட்சி இருக்கும்  தமிழகத்தில் 1.84  இலட்சம் பேருக்கு எச்அய்வி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டுக்கு 600,000 குழந்தைகள் வயிற்றோட்டத்தால் ஏற்படுகிற நீர்வரட்சியால் (dehydration)  இறக்கின்றார்கள்.

கிட்டத்தட்ட
8.5 மில்லியன் இந்தியர்கள் காசநோயால் துன்புறுகின்றனர். ஒவ்வொர்  ஆண்டும் 87,000 நோயாளிகள் காசநோயை எதிர்த்து போராடிக் கொண்டு உள்ளனர்.  மொத்தம் 3,70,000 பேர்கள்  ஒவ்வொரு ஆண்டும்  காச நோயால் இறக்கின்றனர்.

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்தி
யாவில் எலும்பு தேய்மான நோய் 45 வயதில் இருக்கும் பெண்களில் முன்றில் ஒருவருக்கு உள்ளது என்பது இந்திய வாதநோய் அமைப்பு நடத்திய ஆய்வு சொல்கிறது. வைட்டமின் D பற்றாக்குறை காரணமாக பெரும்பான்மையான (90 விழுக்காடு) இந்தியர்களுக்கு எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது. (http://tamilthamarai.com/medicine/207-bone-problem-tamil.html)

 

தொழுநோயால் உலகில் 25 இலட்சம் முதல் 28 இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 80 விழுக்காட்டினர் (20 -22 இலட்சம்)  இந்தியாவில் வாழ்கின்றனர் என்று உலக நல்வாழ்வு நிறுவனம் கூறுகிறது (http://www.radiovaticana.org/in3/articolo.asp?)

 

புண்ணியபூமி  என்று சோதிடர் போற்றும் இந்தியக் குடிமகனுடைய அகவை எதிர்பார்ப்பு ணுக்கு 64.7 ஆண்டு பெண்ணுக்கு 66.4 ஆண்டு.  அவர் போகபூமி  என்று தூற்றும் கனடியக் குடிமகனுடைய அகவை எதிர்பார்ப்பு ஆணுக்கு 78.3 பெண்ணுக்கு 82.9 ஆண்டு. ஏன் இப்படி? கோள்கள், இராசிகள், நட்சத்திரங்கள் தங்களுக்குள் கூடிப் பறைஞ்சு இந்தியாவுக்கு எதிராகச் சதி செய்கின்றனவா?

 

மும்மூர்த்திகள், முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெண்ணாயிரம் இருடிகள், கின்னரர், கிம்புருடர் இந்தியாவில் இருந்தும் கண்ட பலன் என்ன? உண்மை என்னவென்றால் நீண்ட அகவைக்கு  இராசிகள் கோள்கள் நட்சத்திரங்கள் காரணம் இல்லை.  நல்ல உறையுள், சத்துள்ள உணவு, சுத்தமான குடிநீர்,  தூய்மையான காற்று, உடற்பயிற்சி, ஒய்வு, மரபு போன்றவைதான் காரணம்.

 

இந்தச் சோதிடரிடம் நான் கேட்கும் கேள்வி. சோதிடர்களால் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்தையும் துல்லியமாகக் கணித்துச் சொல்ல முடியும் என்றால் உலக உத்தமர் காந்தி,  இந்திரா காந்தி, இராசீவ் காந்தி சுட்டுக்கொலை செய்யப்பட்டதை ஏன் ஒரு சோதிடராவது முன்கூட்டியே சொல்லவில்லை?

 

தமிழ்த் தொலைக்காட்சி சோதிடம், கைரேகை, எண்சாத்திரம் பற்றிய விளம்பரங்களை வெளியிடுவதில்லை என்ற பகுத்தறிவுக் கொள்கையை மிக கெட்டியாகக் கடைப்பிடித்து வரும் ஊடகம்.  அப்படியிருக்க சோதிடம் ஒரு அறிவியல் என்பதை நிலைநாட்ட ஏன் முயற்சிக்க வேண்டும்? அடுத்து என்ன? பணத்துக்காக சோதிட விளம்பரங்களை வெளியிடப் போகிறதா?

 

சோதிடம் ஒரு மனிதனது வெற்றியையும் தோல்வியையும் வானத்தில் உள்ள கோள்கள் இராசிகள் நட்சத்திரங்கள் ஆகியனவையே தீர்மானிக்கின்றன, எனவே அவனது தன்வினைக்கு (freewill)       அல்லது  தன்முயற்சிக்கு (free-effort)  இடம் இல்லை என்கிறது!

 

 இந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு சோதிடம் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்பது அவரது கேள்விகளில் இருந்து அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. தெரியாத பொருளை ஏன் கையில் எடுப்பான்?  சோதிடம் அறிவியலா அல்லது போலியா என்பதை விவாதிக்க வேண்டும் என்றால் சோதிடருக்கு ஈடாக வானியல் தெரிந்த ஒருவரை அல்லவா சேர்த்திருக்க வேண்டும்? சோதிடரை மட்டும் தனித் தவில் வாசிப்பதற்கு ஏன் அனுமதிக்கப்பட்டது?

 


 


 

Natkeeran on June 26, 2008 at 8:40 pm

வணக்கம் அரவிந்தன்:

சோதிடம் என்பது அறிவியலா? ஆம் என்று நீங்கள் வாதிட முயற்சி செய்கிறீர்கள்
 

இங்கு சோதிடம் வேத மரபா, தமிழ் மரபா, அல்லது இரண்டும் கலந்ததா என்ற ஆய்வு இரண்டாம் பட்சம்.

இயற்கையை ஆய்ந்து எதிர்வு கூற முடியும் என்பதே அறிவியலின் அடிப்படை.
Hypothesis, Experimentation, Theory, Prediction, Consistency and Replication, Improvement due to Falsification of contradictory evidence என்பதே அறிவியல் முறையின் சாரம் எனலாம்.

அந்த வகையில் சோதிடம் ஒரு பல இடங்களில் சறுக்கிறது. சோதிடம் ஒரு பூரண முறை போன்றே தன்னை வெளிப்படுத்துகிறது. எங்கு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன? எங்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு, இந்த இந்த சோதிட அணுகுமுறைகளை பிழை என்று ஏடுகளில் பகிரப்படுகின்றன? மேலும், சோதிடம் எதிர்காலத்தைப் பற்றி அல்லது ஒன்றின் தன்மையைப் பற்றி கூறுகையில் consistent ஆக இல்லை. மேலும் வேறு வேறு சோதிடர்கள் ஒரே தகவலைக் குடுக்கும் பொழுது வேறு வேறு மாதிரி சோதிடம் சொல்லுகிறார்கள்.

மேலே நீங்கள் மைக்கேல் ஷெர்மர் ஒரு குறும்படத்தை தந்துள்ளீகள். நீங்கள் தந்த பாகத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் அதின் ஆய்வு முறையில்
(Methodology) பல குறைபாடுகள் உண்டு. இங்கு முக்கிய குறைகள் சிலவற்றை சுட்ட விரும்புகிறேன்.

முதலாவதாக இவர் ஒரே ஒரு வேத சோதிடரின் கூற்றுக்களை மட்டுமே ஆய்வுகு உட்படுத்துகிறார். அடிப்படையில் பல வேத சோதடர்களின் கூற்றுக்களை பெற்று ஒப்புடுவது, consistency வலுச் சேர்த்திருக்கும்.

இரண்டாவது கூற்றுக்கள்
உள்ளுணர்வு (subjective) ஆக அமைந்துள்ளன.


இந்த நபர் அழகானவர். இந்த நபர் கலைகளில் ஈடுபாடு உள்ளவர். இந்த நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரியும். இந்த நபருக்கு சமிபத்தில் ஒரு பாரிய இழப்பு ஏற்பட்டது.

இவை எல்லாம்
உள்ளுணர்வு கூற்றுக்கள். அதை அந்த நபர்களிடமே எவ்வளவு பொருந்துகிறது என்று கேட்பதும் இங்கு உள்ளுணர்வு ஆக அமைகிறது. இந்த நபர் அழகானவர் என்ற கூற்றை யார் மறுதலித்து இல்லை இல்லை நான் அழகற்றவர் என்று ஒத்துக்கொள்வர்! இந்த நபர் கலைகளில் ஈடுபாடு உடையவர் என்றால், ஆமாம் ஓவியம், இசை, நடனம் என்ற எண்ணற்ற கலைகளில் ஒன்றில் ஈடுபாடு இருக்கத்தானே செய்யும்.

இந்த ஆய்வு எவ்வாறு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றால் துல்லியமான தகவல்களைக் கேட்டிருக்கலாம். இவர் எந்த இனம்? இவர் எந்த மொழியைப் பேசுகிறார்? எவர் எந்த தொழிற்துறையில் வேலை செய்கிறார்? இவரின் என்ன படிப்பு படித்து இருக்கிறார்? போன்ற கேளிவிகள். இந்த கேள்விகளுக்கு முதலே நபர்களிடம் இருந்து பதிலை எடுத்து பின்னர் ஒப்பிட்டு பாத்திருக்க வேண்டும்.

மேலும் இந்த ஆய்வில் ஒரு
Control Group இல்லை. அதாவது வேறு ஒரு நபர் வேத சோதிடம் இல்லாமல் கூற்றுக்களை முன்வைத்திருக்கலாம். மேலும் வேறு சோதிட முறைகளுடன் ஒப்பிட்டும் பாத்திருக்கலாம்.

உங்களின் ஜடாயு போன்றோரின் ஆக்கங்களை ஆர்வத்தோடு வாசிக்கிறேன். பல இடங்களில் கருத்துக்கள் உடன்படவிட்டாலும், நிச்சியமாக ஒரு வேறு பட்ட பார்வையைத் தருகிறீர்கள். நன்றி.

  

நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கருத்து
 

சென்னை, டிச.30, 2009

 

சென்னையில் நேற்று பகுத்தறிவு அறிவியலா ளர் என்ற தலைப்பில் நோபல் பரிசு பெற் றுள்ள டாக்டர் வெங் கட்ராமன் ராமகிருஷ் ணன் பேசியது சிலருக்கு கோபத்தையும், பலருக்கு உற்சாகத்தையும் ஏற் படுத்தியுள்ளது. ஜோதி டமும், செம்பை பொன் னாக்கும் வித்தையும் கருத்தாற்றலை மட்டுமே நம்பியுள்ள வெறும் புரட்டு என்றும், ஹோமி யோபதி மருத்துவமும் நம்பிக்கையின் அடிப் படையிலானதுதான் என்றும் அவர் பேசியுள் ளார்.

ஆக்கபூர்வமான ஆற்றல், எதிர்மறை ஆற் றல் என்ற சொற்றொடர் களை பல போலி மருத் துவர்கள் கூறுவது வெறும் பிதற்றல் என் றும், அவற்றிற்கு உண் மையான பொருள் எதுவும் இல்லை என் றும் அவர் கூறினார். ஆனால் அறிவியலோ ஒரு ஆற்றலைப் பற்றி ஒரு குறிப்பிட்ட விளக் கம் அளிக்கிறது என்று அவர் கூறினார்.

லண்டன் கேம் பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் எம்.ஆர்.சி. அணுஉயிரியல் சோதனை சாலையில் கட்டுமான ஆய்வுப் பிரிவு இணைத் தலைவ ராக இருப்பவர் ராம கிருஷ்ணன். இவர் தமிழ் நாட்டிலுள்ள சிதம் பரத்தில் பிறந்தவர்.

பாரதிய வித்யா பவனால் ஏற்பாடு செய் யப்பட்ட இரண்டாவது எஸ்.வி.நரசிம்மன் நினைவு சொற்பொ ழிவை ஆற்றிய ராம கிருஷ்ணன், ஒரு நல்ல அரசு எவ்வாறு மக்களை அவர்களின் மோசமான உணர்வுகளில் இருந்து பாதுகாக்கிறதோ, அது போலவே நம்மை நமது பாகுபாடு நிறைந்த கண் ணோட்டத்தில் இருந் தும், மூடநம்பிக்கைகளி லிருந்தும் அறிவியல் காப்பாற்றுகிறது. அறி வியல் நடைமுறைகள் மூடநம்பிக்கைகளின் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது.

முறை யான சோதனையினால் மெய்ப்பிக்கப்பட முடி யாத எந்த ஒரு நடை முறையோ, உயர் குடி மக்களின் விமர்சனமோ மற்றும் நவீன அறிவியல் மீதான கட்டுப்பாடு களோ எந்த அறிவியல் பெயரைக் கொண்டி ருந்தாலும், அறிவியல் என்று அவற்றைக் கருத முடியாது. அறையின் வெப்பத் தில் அணுவைப் பிளப் பது என்பது போன்ற ஃப்ளைச்மேன்-பான்ஸ் கருத்துகளும், அதிக அளவு வைட்டமின்-சி புற்றுநோய் வராமல் தடுக்கும் என்ற லைனிங் பாலிங்சின் கருத்தும் தவறானவை என்று மெய்ப்பிக்கப்பட்டுள் ளதை அவர் எடுத்துக் காட்டாகக் குறிப்பிட் டார்.

சோதனைகள் மூலம் வெற்றி!

புள்ளிவிவரங்கள் வேறுவிதமான முடிவு களை அளிக்கும்போதும், தவறான மூடநம் பிக்கைகள் தொடர்ந்து நிலவுகின்றன என்று கூறிய அவர், குளிர்ந்த வெப்பநிலையில் அணு வைப் பிளப்பது மற்றும் வைட்டமின் சி-யின் பயன்பாடுகள் பற்றி, நூற்றுக்கணக்கான இணைய தளங்களும், செய்திக் கட்டுரைகளும் தொடர்ந்து வெளி வந்துகொண்டுதான் இருக்கின்றன. சோதனையில் வெற்றி பெற்ற மருந்தோ அல் லது குறிப்பிட்ட சிகிச் சையோ நோய் குணமா வதற்கு முக்கியமான காரணமாக இருக்க முடியுமேயன்றி, தற் செயலாக நடைபெற்ற ஒரு நிகழ்வு அல்லது தொடர்பே இல்லாத ஒரு நிகழ்வு காரணமாக இருக்க முடியாது.

எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய் போன்ற உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோய் களுக்கு ஹோமியோபதி மருத்துவம் பரிந் துரைக்கப்படுவது பற்றி குறிப்பிட்ட டாக்டா ராமகிருஷ்ணன் இந் நோய்களுக்கு உண் மையில் பயன்தரும் வேறு மருந்துகள் உள் ளன என்று கூறினார். இது பற்றி முடிவெடுப் பதில் சோதிடம் தவ றாகப் பயன்படுத்தப் படுகிறது என்றும் அவர் கூறினார். நியாய உணர்வு, ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில் பய னுள்ள நடவடிக்கை களை மேற்கொள்ள விடாமல் மக்களை ஹோமியோபதியும், சோதிடமும் தடுத்து வேறு தவறான பாதை யில் செலுத்தி விடு கின்றன.

மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாச் சாரம் எப்போதுமே மிகுந்த அளவிலான கேட்டினை உருவாக்கும் என்று அவர் கூறினார். என்றாலும் தாங்கள் அளிக்கும் மருந்துகளின் பாதிப்பை உயர்த்தும் ஆற்றல் படைத்த ஆலோ சனைகளை மருத்துவர் கள் அளிக்கலாம் என் றும் அவர் கூறினார்.

எதனையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பி விடாமல், அதனை சோதனை செய்து பார்ப்பது, கருத்தூன்றி ஆய்வு செய்வது, சிறு நிகழ்ச்சிகள் பற்றிய கதைகளை விட சோதனை செய்து பார்ப்பதை நம்புவது ஆகிய கருத்துகளே நவீன அறிவியல் உருவாக்கத்தின் மய்யக் கருத்தாக இருப்பவை என்பதுடன், மிகவும் முக்கியமான வழிகாட்டும் கொள்கையாக இருக்கின்றது என்றும் ராமகிருஷ்ணன் கூறினார்.

நம்பிக்கை மோசமானது

16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காலம் முதற்கொண்டு அறிவியல் முன்னேற்றத்துக்கு மிகவும் இன்றியமையாத, முக்கியமான சிந்தனை சுதந்திரமின்றி நல்ல அறிவியல் வளர்ச்சி பெற இயலாது. முழு சிந்தனை சுதந்திரம் இன்றி, தொடர்ந்த காலங்களில் மிகச் சிறந்த அறிவியல் இருப்பதும் இயலாதது என்று அவர் கூறினார்.

ரிபோசோம்ஸ் என்னும் புதிய பாதை படைக்கும் அவரது புதிய கண்டுபிடிப்புக்காக வேதியிய லுக்கான நோபல் பரிசு அவருக்கு 2009 இல் வழங்கப்பட்டது. கோபர்நிகஸ், கலீலியோ ஆகியோரின் காலங்களில்தான் அறிவியல் நவீன தோற்றம் பெற்றது என்று அவர் குறிப்பிட்டார். உற்று அறிவதும், நம்பிக்கையும் மொத்தமாகத் தவறாகிப் போகும்போது, உற்று அறிவதை விட அதிக அளவில் தவறாகிப் போவது நம்பிக்கைதான் என்ற கருத்தை அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

அய்ரோப்பாவில் 16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சி உணர்வு இக்கருத்துக்கு ஆதரவளிப்பதாக இருந்தது. யார் எவ்வளவு அழகாக சொன்னாலும், அது சோதனையால் மெய்ப்பிக்கப்பட முடியாவிட்டால், அது நிராகரிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாடு நிலைபெற்றது.

இறுதியில் சோதனையில் மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கருத்து வெற்றி பெற்று சமூகங்களிடையே மாற்றத்தை ஏற்படுத்த வல்ல நவீன அறிவியலை உருவாக்கியது. இந்த உலகின் மிகப் பழைமையான அறிவியல் நிறுவனமான பவுன்டேஷன் ஆப் ராயல் சொசைடியின் எவரது சொல்லின்படியும் அல்ல என்ற கொள்கையே நவீன அறிவியலை விளக்குவதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

சோதனையில் தோல்வி அடைந்த பிறகும்கூட உலவும் மூடநம்பிக்கை

சோதனையில் தோல்வியடைந்த பிறகும் சில பரவலான மூட நம்பிக்கைகள் தொடர்ந்து சமூகங்களில் நிலவுகின்றன. உண்மையான காரணத்தையும், தற்செயலாக நடைபெறுவதையும் பிரித்துக் காண முடியாத மனிதரின் இயல்பான தன்மைதான் இதன் காரணம். கணிதம், இசை, கலை போன்ற நல்ல விளைவுகளை ஏற்படுத்திய நடைமுறைகளை அங்கீகரிக்க விரும்பும் மனநிலை, அத்தகைய நடைமுறைகள் இல்லாத இடங்களிலும் அவை இருப்பது போன்று நம்மை கற்பனை செய்து கொள்ளச் செய்கிறது.

தனது குறைகளைத் திருத்திக் கொண்டு தன்னைத்தானே சரி செய்து கொள்ள இயன்றதுதான் அறிவியல். புதிய ஆதாரங்கள், கண்டுபிடிப்புகள் வந்த பிறகு, அறிவியலாளர்கள் தங்கள் கருத்துகளை, கொள்கைகளை மாற்றிக் கொள்கின்றனர்.

இவ்வாறு தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் அறிவியலின் பண்புதான், மற்ற மூடநம்பிக்கை நடைமுறைகளில் இருந்து அதனைப் பிரித்து அடையாளம் காட்டுவதாகும். அறிவியலில் தவறு நேர்வது கேடுபயப்பதில்லை; ஆனால் தவறான விளக்கம் அளிப்பது உண்மையிலேயே பெருங்கேடு விளைவிப்பதாகும்.